Saturday, 11 February 2017

எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியை 
முதல்வர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டார் 

திருவொற்றியூர், பிப்.5:விபத்துக்குள்ள கப்பலிலிருந்து வெளியேறி கடற்கரையில் படிந்துள்ள எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை நேரில் பார்வையிட்டார். 
     கரை ஒதுங்கிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் கடலோரப் பாதுகாப்புப் படையினர், மத்திய, மாநில அரசுத் துறைகள், நிறுவனங்கள், மீனவர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மொத்த எண்ணிக்கையில்  5,700 பேர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.  இந்நிலையில் எண்ணெய் படலம் அகற்றும் பணி நடைபெற்று வரும் எர்ணாவூருக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். அவருடன் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.சி.கருப்பண்ணன், பெஞ்சமின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு துறை செயலாளர்கள் வந்தனர். 
பின்னர் பணிகள் குறித்து கடலோரக் காவல்படை கமாண்டர் ராஜன் பர்கோத்ராவிடம் கேட்டறிந்தார். அப்போது மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரை பகுதி முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டுவிட்டது எனவும், மீதமுள்ள கடற்கரைப் பகுதிகள் இன்னும் ஓரிரண்டு நாட்களில் முழுமையாக தூய்மைப்படுத்தப்படும் எனவும் 
அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பின்னர் எர்ணாவூர் பகுதியிலுள்ள கடலோர தடுப்புச் சுவர் பாறைகளில் படிந்துள்ள எண்ணெய் படலத்தை தூய்மைப்படுத்தும் பணி நிபுணர்கள் குழு மேற்பார்வையில் மேற்கொண்டு விரைவில் முடித்திடுமாறு முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மீன் மாதிரிகளை  தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம் உடனடியாக ஆய்வுகள் மேற்கொண்டு  பொதுமக்கள் சாப்பிடுவதற்கு தகுதியானதென 
அளித்துள்ளது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து ஆய்வறிக்கை தயார் செய்து கப்பல் நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறுவதற்கான வழிமுறைகளை செயல்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.  பின்னர் தலைமைச் செயலகத்தில் இப்பிரச்னை குறித்து விரிவான ஆலோசனை முதல்வர் தலைமையில் நடைபெற்றது. 

No comments:

Post a Comment