கண்டெய்னர் லாரிகளை குடிபோதையில் ஓட்டுவோர் 40 சதவீதம் உள்ளனர்
தொடரும் விபத்துகளால் அலறும் பொதுமக்கள்
திருவொற்றியூர், அக்.14:சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு இயக்கப்படும் கண்டெய்னர் லாரிகளை குடிபோதையில் ஓட்டும் டிரைவர்கள் சுமார் 40 சதவீதம்வரை உள்ளதாக சமீபத்தில் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னையில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் இயங்கி வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தின் அச்சாணியாக இருக்கக் கூடிய இந்த கண்டெய்னர் லாரி போக்குவரத்துத் தொழில் சென்னைத் துறைமுகத்தில் பல ஆண்டுகளாகத் தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் படிப்படியாக
சிக்கலை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் தகுதியான டிரைவர்களுக்கு கடும் கிராக்கி இருந்து வரும் நிலையில் இத்தொழிலால் நட்டத்திற்கு ஆளான பலர் லாரிகளை விற்றுவிட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனர். மேலும் டிரைவர்கள் தட்டுப்பாட்டினால் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இருக்கும் டிரைவர்களில் பெரும்பாலானவர்கள் குடிபோதையில்
வாகனங்களை இயக்குவதாகக் கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் பொதுமக்கள் செத்து மடிவது வடசென்னை பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஐந்து பேர் திருவொற்றியூரில் மட்டும் கண்டெய்னர் லாரிகளால்
உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் 40 சதவீத டிரைவர்கள்:
இப்பிரச்னை குறித்து அதானி காட்டுப்பள்ளி தனியார் துறைமுக முக்கிய நிர்வாகி கூறியது,
அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கப்பல்கள் வந்து செல்வது அதிகரித்து வருவதையொட்டி கண்டெய்னர் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே
லாரி ஓட்டுனர்கள் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வருவதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து சமீபத்தில் ஒருநாள் திடீர் சோதனை நடத்தினோம். இதில் சுமார் 40 சதவீதம் பேர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவர்களை எச்சரித்து இனி குடிபோதையில் வந்தால் லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படாது என அறிவித்துள்ளோம். துறைமுகத்தில் கனரக கிரேன்கள் அங்குமிங்கும் நகர்ந்து செல்லும் நிலையில்
குடிபோதையில் உள்ளே செல்வதைத் தடுப்பதால் பெரும் விபத்துகளை தவிர்க்க இயலும் என்றார் அவர்.
ஓட்டுனர் பற்றாக்குறையே காரணம்:
இது குறித்து டிரைலர் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா கூறியது,
ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இத்தொழில் படிப்படியாக நலிவடைந்து வருகிறது. முன்பெல்லாம் ஒரு கண்டெய்னர் லாரியில் ஒரு டிரைவர், ஒரு கிளீனர் இருப்பார்கள். கிளீனராக இருந்து கனரக ஓட்டுனர் உரிமம் பெற்று டிரைவாக வருவார்கள். ஆனால் 8 வது படித்தவர்களுக்கு மட்டுமே வணிக வாகன ஓட்டுனர் உரிமம் என மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டுப்பாடு விதித்தது. இதனையடுத்து படித்தவர்கள் யாரும் கிளீனர் வேலைக்கு வருவதில்லை. இதனால் டிரைவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. லாரி ஓட்டுபவர்கள் போதிய பயிற்சியின்றி கண்டெய்னர் லாரிகளை ஓட்டிவிட முடியாது. எனவே பயிற்சி பெற்ற டிரைவர்களுக்குப் பதிலாக லாரி டிரைவர்களே வாகனங்களை ஓட்டுகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. மதுவிற்கு அடிமையான டிரைவர்கள் கூட வேலையில் சேரும்போது குடிபழக்கம் இல்லை என்றுதான் கூறுகின்றனர். எனவே ஏற்கனவே டிரைவர்கள் தட்டுப்பாடு இருக்கிற நிலையில் கிடைக்கிற டிரைவர்களை வைத்து ஓட்டவேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே போதிய கண்டெய்னர் லாரி டிரைவர்களை உருவாக்கித் தரவேண்டியது அரசின் கடமையாகும் என்றார் ராஜா
தகுதிச் சான்று, காப்பீடு இல்லாமல் ஓடும் வாகனங்கள்:
இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியது,
தமிழகத்தில் சுமார் 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இவைகளில் சுமார் 1400 பணியிடங்கள் காலியாக உள்ளன. உயர் அதிகாரிகள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. தினமும் அதிகரித்து வரும் வாகனப் பதிவுகள், தகுதிச் சான்றுகளை அளிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தகுதிச் சான்று பெற கொண்டுவரப்படும் வாகனங்கள் அனைத்தும் வரிசையாக நிற்க வைத்து ஆய்வு செய்வதோடு கடமை முடிந்து விடுகிறது. ஒவ்வொரு வாகனமும் தகுதியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனில் போதிய ஆய்வாளர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பெருமளவு ஊழல்கள் நடைபெறுவதை அனைவரும் அறிவார்கள். மேலும் வாகனச் சோதனை என்பது அரிதாகி விட்டது. சென்னை மாநகரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தகுதிச் சான்று, வாகன காப்பீடு இல்லாமல் ஓடுகின்றன.
மேலும் முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. சென்னை நகரச் சாலைகள் போதுமான பாதுகாப்பு நிறைந்தவைகளாக இல்லை. நடைபாதைகள் அனைத்தும் சிறுவணிகர்களால் ஆக்கிமிக்கப்பட்டுள்ளன. இதனை போக்குவரத்து போலீஸார், மாநகராட்சி அதிகாரிகள் மாமூல் பெற்றுக் கொண்டு வேடிக்கை பார்க்கின்றனர். எச்சரிக்கை பலகைகள், நடைபாதை குறியீடுகள், சமிஞ்சை கருவிகள் முறையாக இல்லை. பொதுமக்களும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில்லை. எனவே வெறும் ஓட்டுனர்கள் மட்டுமே விபத்துகளுக்குக் காரணமாக்க முடியாது. இது குறித்து போக்குவரத்து, காவல், மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலைத் துறை, லாரி உரிமையாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார் சுகுமார்.
போதைக்குக் காரணம் மன உளைச்சலே:
கண்டெய்னர் லாரி டிரைவர்கள் குடிபோதையில் ஓட்டுவதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து சென்னைத் துறைமுக கண்டெய்னர் லாரி டிரைவர், கிளீனர் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் ஆசைத்தம்பி கூறியது,
கண்டெய்னர் லாரிகளை ஓட்டுவது என்பது எளிதானதல்ல. சென்னைத் துறைமுகத்தில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் இருந்து வருவதே
டிரைவர்கள் தட்டுப்பாட்டுக்குக் காரணம். மாதவரம், மணலி, மீஞ்சூர் பகுதிகளிலிருந்து சென்னைத் துறைமுகம் சுமார் 30 கி.மீ. தூரத்தில்தான் உள்ளது. முன்பு இதனை சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக
இதே தூரத்தைக் கடக்க குறைந்தபட்சம் 24 மணி நேரம் முதல் மூன்று நாள்கள்வரைகூட ஆகிறது. இவ்வாறு வரிசையில் செல்லும் போது வாகனங்கள் விட்டுவிட்டுச் செல்ல இயலாது. இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட செல்ல முடியாது. குளிக்க முடியாது. வழியில்தான் எல்லாம். போதிய தூக்கம் இல்லாமல்
வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதால் சில நேரங்களில் மது குடிக்கத் தொடங்கிய டிரைவர்கள் படிப்படியாக மதுவிற்கு அடிமையாகிவிட்டனர். இதனால் அவர்களின் குடும்பமும்தான் பாதிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும். மது குடிப்பதை நியாயப்படுத்தவில்லை என்றாலும் போதிய தொழில் சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவேண்டியது யாருடைய பொறுப்பு? என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
கனரக வாகன ஓட்டுனர் தொழிலுக்கு சமூக அங்கீகாரம் வழங்க வேண்டும். மேலும் தேவையான இவ்வகை ஓட்டுனர்களை உருவாக்கி அவர்களுக்கு விழிப்புணர்வுடன் பணியமர்த்தினால் இப்பிரச்னையை எதிர்காலத்தில் தவிர்க்கலாம். வெறும்
தண்டனைகள், அபராதம் மட்டுமே இப்பிரச்னையைத் தீர்க்க இயலாது என்றார் ஆசைத்தம்பி.
படித்த இளைஞர்களை இத்தொழிலில் ஈடுபடும் வகையில் திறன் பயிற்சியுடன் கூடிய ஓட்டுனர் உரிமங்களை வழங்கி சமூக அந்தஸ்துடன் கூடிய தொழிலாக இதனை மாற்றுவதன் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். இது குறித்து போதிய ஆலோசனைகள் நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதே
சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.