ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை கைப்பற்ற
27-வது நாளாகத் தொடரும் முற்றுகை போராட்டம்
திருவொற்றியூர், ஏப்.20: திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள காலியிடத்தை துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் மறு குடியமர்த்தல் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் கடந்த கடந்த 27 நாள்களாக இதே இடத்தில்
இருப்பினும் இப்பிரச்னையில் தொடர்புடைய மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மீனவர்கள், பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.
பிரச்னையின் பின்னணி என்ன?
துறைமுக இணைப்புச் சாலை திட்டத்தினால் வீடுகளை இழக்கும் என்.டி.ஓ. குப்ப மீனவ குடும்பங்களை மறுகுடியமர்த்தல் செய்வதில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும்
மேலாக பிரச்னை இருந்து வருகிறது. எர்ணாவூரில் ஒதுக்கப்பட்ட வீடுகளை
ஏற்க மறுத்து வருவதே இதற்கு காரணம். இதனையடுத்து என்.டி.ஓ.குப்பம் பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான 3.34 ஏக்கர் நிலத்தில் என்.டி.ஓ.குப்பத்தைச் சேர்ந்த 446 குடும்பங்களுக்கு சுமார் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி வீடுகள் அமைப்பதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை கடந்த மார்ச் 28-ம் தேதி நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்.
திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு:
என்.டி.ஓ.குப்பம் மீனவர்களுக்கு கோயில் நிலம் ஒதுக்கப்பட்டதையறிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தியாகராஜர் கோயிலில் சாமி தூக்கும் சேவையில் பாரம்பரியாக ஈடுபட்டு வரும் இக்குப்பத்தைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மனையையோ அல்லது வீடுகள் அமைத்துத் தரும்படி பல ஆண்டுகளாகக் கோரி வருவதாகவும், இந்நிலையில் சாலை விரிவாக்க மறுகுடியமர்த்தல் திட்டத்தின்கீழ் இந்நிலத்தை ஒதுக்கி இருப்பதை ஏற்க முடியாது எனவும் இவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் அறிவிப்பின் அடுத்த நாளே ஒதுக்கப்பட்ட இடத்தில் குவிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அங்கே பந்தல்கள் தங்கக் தொடங்கினர். போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட சமாதானங்களை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் கடந்த 23 நாள்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அவசரகதியில் அமைச்சர் எடுத்த முடிவு?:பொதுமக்கள் குற்றச்சாட்டு
இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுமக்கள் கூறியது,
அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு அளிப்பதில் கடுமையான பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகளின்படி அவ்வளவு எளிதாக கோயில் நிலத்தை ஒதுக்கிவிட முடியாது. காரணம் கோயில் நிலங்கள் என்பது பெரும்பாலும் முன்னோர்களால் தானம் வழங்கப்பட்டதும், இதனை நோக்கம் ஆன்மீகம், தர்ம காரியங்களுக்கு இந்நிலம் உதவும் என்பதுதான். இந்த நிலத்தை பொறுத்தவரை முறையான எவ்வித அனுமதியோ அல்லது உத்தரவோ
அளிக்கப்படவில்லை என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அப்படியே இந்ந நிலம்தான் தேவையெனில் அதற்கான இழப்பீட்ட கோயிலுக்கு வழங்கிவிட்டுத்தான் மறு குடியமர்த்தல் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். இதனைவிடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மறுகுடியமர்த்தல் திட்டத்திற்கு அறிவித்ததில் அவசர கதியும், முன்யோசனையின்மையும்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பொறுப்பான மாவட்ட ஆட்சியர், மூத்த அமைச்சரே ஈடுபட்டிருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது என்றனர்.
27 நாள்களைக் கடந்தும் அசையாத அதிகாரிகள்:
ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தில் மீனவ கிராம மக்கள் புகுந்து கடந்த 23 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இப்பிரச்னையில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர், அறநிலைய, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித சலனமும் இன்றி மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மீனவர்கள், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிலத்தை அளிக்க எவ்வித உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் அமைச்சர் எவ்வாறு தன்னிச்சையாக அறிவித்தார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. மேலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாதது அனைவரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. மீனவர்களைப் பொறுத்தவரை
நிலத்திற்கான உரிமையை விட பாரம்பரிய உரிமையை முன்னிறுத்துகின்றனர். மேலும் இந்நிலத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என்பதுதான் பொதுமக்களின் பெரும்பாலான கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் கடும் வெயில், விஷப் பூச்சிகளின் அபாயத்திற்கிடையே கடந்த 27 நாளாக சிறியவர், பெரியவர் என ஒட்டுமொத்தக் கிராமமும் வரும் நிலையில் இவர்களைச் சமாதானப்படுத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு கெடும் எனக் கூறி இடைத்தேர்தலை காரணம் காட்டிய அதிகாரிகளின் அடுத்த சாக்குப்போக்கு என்னவாக இருக்கப்போகிறதோ?
மக்கள் தொடங்கும் எந்த போராட்டமும் நாளாக நாளாக தானாகவே செயலிழந்துவிடும், எனவே போராட்டம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதே சரியானது என்பது தற்போதைய அரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளாக இருக்கின்றன. இதில் தற்போது திருவொற்றியூரும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
