Monday, 15 December 2014

வடசென்னையில் மார்கழி தெய்வத் தமிழிசை விழா

திருவொற்றியூர், டிச.14: வடசென்னையில் 27-ம் ஆண்டு மார்கழி தெய்வத் தமிழிசை விழா டிச.16 தொடங்கி ஒரு மாதம் வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. 
 இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா.கி.இரமணன், டாக்டர் மகாலிங்கம் கூறியது,
 மார்கழி மாதத்தில் இசை விழாக்கள் என்றாலே தென்சென்னையில் மட்டுமே பெருவாரியாக நடத்தப்படுகின்றன.  வடசென்னையிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற என்ற ஆர்வம் காரணமாக இசை அன்பர்கள் இணைந்து இவ்விழாவினை கடந்த 27 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.  மார்கழி மாதம் தொடங்கும் டிச.16 செவ்வாய்க்கிழமை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமர் ஆலயத்தில் நடைபெற உள்ள முதல் இசைவிழாவை பத்மபூஷன்  டி.எச்.வினாயகராம் தொடங்கி வைக்கிறாம். தினமும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் டெல்லி மகாலட்சுமி, சுவாமிநாதன், சீர்காழி சிவசிதம்பரம், டி.கே.எஸ்.கலைவாணன், பேராசிரியர் ஆனந்தராமன் உள்ளிட்ட முன்னணி கலைஞர் கலந்து கொள்ள உள்ளனர்.  தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ள இத்தொடர் நிகழ்ச்சிகளில் பக்தர்களும், இசை ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் என்றனர். 
திருவொற்றியூரில் ஊழியரின் சடலத்துடன் போராட்டம்: ரூ.20 லட்சம் இழப்பீடு

திருவொற்றியூர், டிச.14:திருவொற்றியூரில் உள்ள தனியார் டயர் ஆலை ஊழியர் தனஞ்செழியன் (34) வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கி இறந்து போனார். இவருக்கு ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்கக் கோரி ஊழியரின் சடலத்துடன் தொழிலாளர்கள் சனிக்கிழமை நள்ளிரவுவரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இறந்து போனவரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. 
     திருவொற்றியூரில் தனியார் டயர் தொழிற்சாலை உள்ளது. மீஞ்சூர் அருகே உள்ள திருவெள்ளவாயல் கிராமத்தைச் சேர்ந்த தனஞ்செழியன் இத்தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தனஞ்செழியன் வெள்ளிக்கிழமை வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஊருக்கு அருகாமையில் எதிரில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தனஞ்செழியன் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர ஏற்கனவே இறந்து போய்விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
   இதனையடுத பணிமுடித்து வீடு திரும்போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளதால் ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தனஞ்செழியனின் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஆலை வளாகத்திற்கு கொண்டுவந்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 
தொழிலாளர்கள் தரப்பில் ஒரு நாள் சம்பளப் பணம் சுமார் ரூ.10 லட்சமும்,  இதற்கு இணையாக ரூ. 10 லட்சம் ஆலை நிர்வாகம் சார்பிலும் இழப்பீடாக அளிக்க இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதையடுத்து தனஞ்செழியனின் சடலமும் அவரது சொந்த ஊரான திருத்தணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
     இறந்து போன தொழிலாளரின் சடலத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Wednesday, 10 December 2014


இலங்கையில் சீனாவின் முதலீடுகள் குறித்து கூர்ந்து கவனிக்கப்படும் 
 செய்தி மட்டும்.....
இந்திய கடற்படை அதிகாரி அமர் கே.மகாதேவன் 

திருவொற்றியூர், டிச.2:  இலங்கையில் சீனா செய்து வரும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே சீனா குறித்து பீதியடையத் தேவையில்லை என கடற்படை அதிகாரி (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) அமர் கே.மகாதேவன் திங்கள்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
    டிச.4 அன்று கொண்டாடப்பட உள்ள கடற்படை தினம் குறித்து திங்கள்கிழம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமர் கே.மகாதேவன் கூறியது,
    1971-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் கராச்சி துறைமுகத்தை டிச.4 அன்று இந்திய கடற்படை கைப்பற்றியது. இந்நாளை கடற்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி சென்னை போர் நினைவுச் சின்னத்தில் டிச.4 வியாழக்கிழமை போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் முப்படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 
     இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பு, கண்காணிப்பை பலப்படுத்தும் பணியில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் 
15 சதவீத நிதியிலிருந்துதான் கடற்படை செயல்பட்டு வருகிறது.  தற்போது 20 முதல் 30 சதவீதம்வரை ஆள் பற்றாக்குறை உள்ளது. 
500 கடல் மைல் தூரம் பாதுகாப்பு:
   2008-ஆண்டிலிருந்துதான்  சோமாலியா கடற்கொள்ளையர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனையடுத்து வணிக கப்பல்களுக்கு சர்வதேச அளவில் கூட்டுப் பாதுகாப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஏடன் வளைகுடாவிலிருந்து சுமார் 500 கடல் மைல் தூரத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு இந்திய கடற்படைக்கு அளிக்கப்பட்டது. இவ்வழியே செல்லும் சுமார் 3 ஆயிரம் கப்பல்களுக்கு ஆயுதப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் கடல் சிப்பந்திகளில் சுமார் 7 சதவீதம் இந்தியர்கள் உள்ளனர். எனவே ஏதேனும் ஒரு கப்பல்  கொள்ளையர்களால் கடத்தப்படும்போது அதில் இந்தியர்களும் சிக்கிக் கொள்கின்றனர். 
இலங்கையில் சீனாவின் முதலீடுகள்:
    சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்காற்றி வருகிறது. இதன் அடிப்படையில் இலங்கையிலும் சீனா தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பன்னாட்டு வணிகத்திற்கு உதவும் வகையில் பெரிய துறைமுகங்களை 
இலங்கையில் சீனா அமைத்து வருகிறது. இந்த வசதிகளை எதிர்காலத்தில் ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நிலை வரலாம். எனவே இத்திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து இந்திய கூர்ந்து கவனித்து வருகிறோம். எவ்வித அச்சுறுத்தலையும் 
எதிர்கொள்ளும் ஆற்றல் இந்திய ராணுவத்திற்கு உண்டு. எனவே சீனாவின் முதலீடுகள் குறித்து பயப்படத் தேவையில்லை. 
தூத்துக்குடியில் கடற்படை துறைமுகம்:
   எதிர்காலத்தில் தெற்கு பகுதியை பலப்படுத்தும் வகையில் அதி நவீன கடற்படை தளம் ஒன்றை தூத்துக்குடியில் அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு வசதியாக தற்போதைய தூத்துக்குடி துறைமுகம் விரிவுபடுத்தப்படும்.  இதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு இப்பணிகள் முழுமையடையும்.
மீனவர்கள் பிரச்னை:
   தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. சர்வதேச ஒப்பந்த விதிகளின்படி ஒரு நாட்டின் கடல் எல்லையில் மற்றொரு நாடு உள்ளே செல்ல முடியாது. எனவே இந்திய கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் யாரும் தாக்கப்படுவதில்லை. இலங்கை கடல்பகுதியில் இந்திய மீனவர்களை நாங்கள் பாதுகாக்க முடியாது என்றார் அமர்.கே. மகாதேவன்.
   பேட்டியின்போது கடற்படை அதிகாரி கே.வி.மகாதேவன், பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி ஆண்டவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
திருவொற்றியூரில் ரயில் மோதி வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் சாவு 

திருவொற்றியூர், டிச.9:திருவொற்றியூரில் ரயில்பாதையைக் கடக்க முயன்றவர்கள் மீது செவ்வாய்க்கிழமை ரயில் மோதியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த கபில்தேவ் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் உள்ளிட்ட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


    திருவொற்றியூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிக்கும், மேற்கு பகுதிக்கும் இடையே சென்னை சென்ட்ரல்-கல்கத்தா ரயில்பாதை அமைந்துள்ளது. இங்கு ரயில்வே சுரங்கப் பாதை இருந்தாலும் நடந்து செல்லும் சிலர் ரயில்பாதை வழியேதான் கடந்து செல்கின்றனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் இவ்வாறு சிலர் ரயில்பாதையைக் கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து கும்மிடிபூண்டி நோக்கிச் சென்ற மின்சார தொடர் வண்டி அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். மேலும் இறந்து போனவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் குறித்த விபரங்கள் ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையை அடுத்து இறந்து போனவர்களில் ஒருவர் பெயர் 
                                                                                     
கபில்தேவ் என்பதும், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் விம்கோநகர் அருகே தங்கி கூலி வேலை செய்து வருவதாகவும் தெரியவந்தது. இன்னொருவர் குறித்த விபரங்கள் இரவுவரை தெரியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இதே ரயில்பாதையில் ரயில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
     இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து இறந்து போனவர்களின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத இன்னொருவர் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tuesday, 9 December 2014

கண்டெய்னர் லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் அவலம்

                     
கண்டெய்னர் லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் அவலம் 

கேள்விக் குறியாகும் சென்னைத் துறைமுக எதிர்காலம் 

திருவொற்றியூர், டிச.09::சென்னைத் துறைமுகத்தில் தொடர்ந்து இருந்து வரும் நெரிசல் பிரச்னையால் கண்டெய்னர் லாரிகள் வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 
    சென்னைத் துறைமுகத்தில் இரண்டு சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. இவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகின்றன. 
ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. இதுதவிர கண்டெய்னரில் செல்லாத ஏராளமான சரக்குகள் கையாளப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்குள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இதற்கேற்ப உள்ளேயும், வெளியேயும் போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை. மேலும் மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டம் உள்ளிட்ட திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் பல பிரச்னைகள் துறைமுகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளன. 
சுங்கத்துறை அதிகாரிகள் ஒத்துழையாமை:
    வெளிநாட்டு வர்த்தகம் என்பதால் துறைமுகத்தின் செயல்பாடுகளில் 
சுங்கத்துறையின் பங்கு முக்கியமானதாகும். இத்துறையில் சுமார் 40 சதவீத அதிகாரிகள் பற்றாக்குறை கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறைவாக உள்ள அதிகாரிகளை வைத்துக் கொண்டு நிறைவாகப் பணியாற்ற முடியவில்லை. 
இதனால் நான்கு அதிகாரிகள் பணி செய்ய வேண்டிய இடத்தில் இரண்டு பேர்தான் பணியாற்றுகின்றனர். பணியில் உள்ள அதிகாரிகளும் விரைவாக பணியாற்றுவதில்லை. இது குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால் சோதனையில் ஏதேனும் பிரச்னை என்றால் யார் பொருப்பு என அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ. நடத்திய அதிரடி நடவடிக்கையை அடுத்து சுங்கத் துறை கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்ப்பு தெரிவித்த சுங்கத்துறை அதிகாரிகள் சுணக்கமான வேலைகள் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதனால் துறைமுக நுழைவு வாயில்களில் கண்டெய்னர்கள் செல்வதில் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. இதுவே லாரிகள் பல கி.மீ. தூரத்திற்கு வரிசைகட்டி நிற்பதற்கு 
முக்கிய காரணமாக உள்ளது. 
சரக்குப் பெட்டக முனையங்கள்:
   துறைமுகத்தில் உள்ள இரண்டு முனையங்களுக்கும் கப்பல்கள் வந்து செல்கின்றன. கப்பல் கட்டப்படும் கால அளவிற்கு ஏற்ப துறைமுகத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் எந்த முனையத்தில் முனையத்தில் விரைவாக கப்பல்கள் வந்து திருப்பி அனுப்பப்படுகிறதோ அந்த முனையத்திற்கு கப்பல்களை அனுப்ப பன்னாட்டு கப்பல் நிறுவனங்கள் விரும்புகின்றன. இதில் இரண்டு முனையங்களுக்கிடையே போட்டி நிலவுகிறது. இதனால் லாரிகளில் பெட்டகங்களை இறக்கும்பணியை  நிறுத்திவிட்டு கப்பல்களில் பெட்டகங்களை ஏற்றி இறக்குவதில் முனையங்கள் சுறுசுறுப்பு காட்டுகின்றன. கப்பல்கள் கட்டப்படும் நாள்களிலெல்லாம் இவ்வாறு பல மணி நேரங்களுக்கு லாரிகளை முனையத்தின் உள்ளே அனுமதிப்பது கீடையாது. இது குறித்து கண்காணிக்க வேண்டிய துறைமுக நிர்வாகம் முனையங்களின் அடாவடிகளைக் கண்டு கொள்வதில்லை என்கிறார் கண்டெய்னர் லாரி உரிமையாளர் பிரபாகரன். 
 முன்பு சாலைகள் குறுகலாக இருந்தபோது பொதுப் போக்குவரத்து ஸ்தம்பிக்காமல் இருக்க சில இடங்களில் போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது சாலைகள் அனைத்தும் ஆறு வழி அளவிற்கு அகலப்படுத்தப்பட்டுவிட்டன. எனவே ஒரு வழியில் லாரிகள் வரிசை கட்டி நின்றால் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. போக்குவரத்தும் ஸ்தம்பிக்காது. 
    எனவே எண்ணிக்கையில் போலீஸ் பூத்துகளை குறைப்பதை விடுத்து பூத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.  லாரிகள் அவசரமாக முந்திச் செல்ல வேண்டும் எனில் பூத்தில் உள்ள போலீஸாரைக் கவனித்தால் போதுமானது. இதன் மூலம் நாள் கணக்கில் வரிசையில் காத்திருக்கும் லாரிகள் சில மணி நேரங்களில் துறைமுகத்தைச் சென்றடைய முடியும். இது குறித்த சமீபத்தில் பத்திரிகை செய்திகள் வெளியானதையடுத்து இதில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
அவசர நடவடிக்கை தேவை:
   ஆண்டுக் கணக்கில் தொடரும் இப்பிரச்னையால் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. சென்னைக்கு அருகாமையில் அதிநவீன தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்னையால் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் வேறு துறைமுகங்களை நாடத் தொடங்கிவிட்டனர். தென்னிந்தியாவின் தொழில் வளர்ச்சியில் சென்னைத் துறைமுகத்தின் பங்கு வரலாற்றுச் சிறப்பு உடையது. இந்த சிறப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனில் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பது உண்மை.

       இது மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்பதே துறைமுக உபயோகிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது