திருவொற்றியூரில் ரயில் மோதி வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் சாவு
திருவொற்றியூர், டிச.9:திருவொற்றியூரில் ரயில்பாதையைக் கடக்க முயன்றவர்கள் மீது செவ்வாய்க்கிழமை ரயில் மோதியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த கபில்தேவ் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் உள்ளிட்ட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவொற்றியூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிக்கும், மேற்கு பகுதிக்கும் இடையே சென்னை சென்ட்ரல்-கல்கத்தா ரயில்பாதை அமைந்துள்ளது. இங்கு ரயில்வே சுரங்கப் பாதை இருந்தாலும் நடந்து செல்லும் சிலர் ரயில்பாதை வழியேதான் கடந்து செல்கின்றனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் இவ்வாறு சிலர் ரயில்பாதையைக் கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து கும்மிடிபூண்டி நோக்கிச் சென்ற மின்சார தொடர் வண்டி அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். மேலும் இறந்து போனவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் குறித்த விபரங்கள் ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையை அடுத்து இறந்து போனவர்களில் ஒருவர் பெயர்
கபில்தேவ் என்பதும், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் விம்கோநகர் அருகே தங்கி கூலி வேலை செய்து வருவதாகவும் தெரியவந்தது. இன்னொருவர் குறித்த விபரங்கள் இரவுவரை தெரியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இதே ரயில்பாதையில் ரயில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து இறந்து போனவர்களின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத இன்னொருவர் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment