முகவை.க.சிவகுமார்.
திருவொற்றியூரில் கண்டெய்னர் வாகன நிறுத்த மையம் திறக்கப்பட்டதன் மூலம் இப்பகுதியில் நிலவி வரும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஓரளவு தீரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்மையம் கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்ட அன்றே மூடப்பட்டு விட்டது.
இது குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் துறைமுக நிர்வாகம் தொடர்ந்து தனது பொறுப்பினைத் தட்டிக் கழித்து வருவதே இதற்குக் காரணம் எனக் குறப்படுகிறது.
சென்னைத் துறைமுகம் ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் கண்டெய்னர்களைக் கையாண்டு வருகிறது. இதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாததால் கடந்த பல ஆண்டுகளாக துறைமுக இணைப்புச் சாலைகளில் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து இருந்து வருகிறது. இப்பிரச்னையைத் தீர்க்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பல்வேறு தரப்பினரும் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுவந்தனர். இதனையடுத்து ரூ. 600 கோடி மதிப்பீட்டிலான
இணைப்புச் சாலைகள் திட்டம், ரூ.1450 கோடியில் மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டம், திருவொற்றியூரில் சுமார் 11 ஏக்கரில் வாகன நிறுத்த மையம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதில் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டப்பணிகள் பெருமளவு நிறைவு பெற்றிருந்தாலும் நெரிசல் ஏற்பட காரணமாக உள்ள காசிமேடு பகுதியில் பணிகள் நடைபெறவில்லை. மாநில அரசின் எதிர்ப்பு, உயர்நீதி மன்ற வழக்கு நிலுவை போன்றவைகளால் மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவொற்றியூரில் 11 ஏக்கர் பரப்பளவில் ரூ. 6 கோடி செலவில் அமைக்கப்பட்ட வாகன நிறுத்த மையத்தை கப்பல்த் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கடந்த நெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். இதன் மூலம் இப்பிரச்னைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் திறப்பு விழா கண்ட அன்று இரவே இம்மையம் மூடப்பட்டு விட்டது. ஒரிரு நாளில் மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்கப்பட்டிருந்த நிலையில் இம்மையம் செயல்படுவதற்கான
சாத்தியக் கூறுகளே தற்போதைக்கு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் சென்னைத் துறைமுகம்:
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத சென்னைத் துறைமுக உயர்அதிகாரி ஒருவர் கூறியது,
போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில்தான் திருவொற்றியூர் நகராட்சியிடமிருந்து இந்த நிலம் பெறப்பட்டது. இந்நிலம் குத்தகைக்கு 2007-ஆண்டு ஜூன் மாதம் சென்னைத் துறைமுகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இங்கு வாகன நிறுத்த மையத்தை அமைப்பதில் துறைமுக நிர்வாகம்
பல்வேறு குழப்பமான முடிவுகளையே மேற்கொண்டு வருகிறது. முதலில் இந்த இடத்தை சென்னை கண்டெய்னர் டெர்மினல் (சி.சி.டி.எல்) நிறுவனத்திடம் ஒப்படைத்தது. மேலும் இந்நிறுவனத்திடமிருந்து மூன்று ஆண்டுகளாக ரூ.4 கோடிவரை வாடகையாக வசூலித்து அதனை நகராட்சியிடம் துறைமுக நிர்வாகம் வழங்கியது. மேலும் இந்நிறுவனம் இங்கு சர்வதேச தரத்தில் வாகன நிறுத்த முனையம் அமைக்கவும், இதற்கு வசதியாக குத்தகை காலத்தை 30 ஆண்டுகளுக்கு நீடித்துத் தரும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டுது. மிகுந்த காலதாமதத்திற்கு பிறகு தமிழக அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் 3 ஆண்டு குத்தகை காலமே முடிவுக்கு வந்தவுடன் இந்த நிலமே துறைமுகத்திற்குத் தேவையில்லை என திரும்பவும் திருவொற்றியூர் நகராட்சியிடமே ஒப்படைத்துவிட்டது. இதனையடுத்து சி.சி.டி.எல். நிறுவனமும் அங்கிருந்து வெளியேறியது.
இதனையடுத்து இந்த இடத்தை 30 ஆண்டு குத்தகைக்குப் பெற்று வாகன நிறுத்த மையத்தை அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதை அடுத்து இத்திட்டத்தைச் செயல்படுத்துமாறு சென்னைத் துறைமுகத்திற்கு கப்பல்த்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் இடத்தைப் பெற்றுக் கொண்ட துறைமுக நிர்வாகம் மீண்டும் தனது குளறுபடிகளை தொடங்கியது. முறைப்படி ஏற்கனவே வாடகை செலுத்தி, 30 ஆண்டு குத்தகைக்குக் கோரிய சி.சி.டி.எல் நிறுவனத்திற்கு இந்த இடத்தை ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு செய்யாமல் மையம் அமைப்பதற்காக 3 முறை கோரியது. ஆனால் இந்த டெண்டர்களில் எவரும் பங்கேற்கவில்லை. நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத விதிகள் டெண்டரில் சேர்க்கப்பட்டதே இதற்கு காரணம் புகார் கூறப்பட்டது. இதற்கிடையே தொடரும் நெரிசல் பிரச்னையால் வாகன நிறுத்த மையத்தை உடனடியாக அமைக்க வேண்டிய நிர்பந்தம் துறைமுக நிர்வாகத்திற்கு ஏற்பட்டது.
தீர்வு கூறும் சாத்தியமான அம்சங்கள்:
துறைமுகத்தில் நிலவும் ஆவணப் பரிசோதனைகளில் ஏற்படும் கால தாமதம்தான் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் ஆகும். இதனால் திருவொற்றியூரில் இம்மையம் அமைக்கப்பட்டு, இங்கு துறைமுக நுழைவுச் சீட்டு வழங்கும் மையம், துறைமுகத்தில் உள்ள தனியார் சரக்குப் பெட்டக முனையங்களின் அனுமதிச் சீட்டு வழங்குவது, கண்டெய்னர் சர்வே, சுங்கத்துறை சோதனை உள்ளிட்ட அனைத்துவிதமான சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு துறைமுக நுழைவு வாயிலில் தாமதமின்றி எளிதாகவும், விரைவாகவும் செல்வதற்குத்தான் முதலில் திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் சில உயர் அதிகாரிகளின் தவறான பரிந்துரைகளால் இந்த இடம் மத்திய கிடங்கு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆனால் அனைத்து தரப்பினரையும் வழி நடத்துவது என்பது மத்திய கிடங்கு நிறுவனத்திற்கு எளிதான விசயம் இல்லை. இதில் ஏற்பட்டுள்ள கால தாமதமே இம்மையம் மூடப்பட்டதற்கான காரணம் எனறார் அவர்.
விரைவில் மீண்டும் செயல்படுமா?
இது குறித்து மத்திய கிடங்கு நிறுவன மண்டல மேலாளர் ஏ.டி.சங்கர் கூறியது,
துறைமுக நிர்வாகம் எங்களிடம் தற்போதுதான் ஒப்படைத்துள்ளது. இதன் பிறகுதான் இங்கு என்னென்ன வசதிகளை ஏற்படுத்துவது என்பது குறித்து விரைவில்ஆலோசனை நடத்த உள்ளோம். மேலும் சுங்கத்துறை அனுமதி பெற விண்ணப்பிக்கபட உள்ளது. மேலும் கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தேவையான ஒப்புதல்களைப் பெற வேண்டும். இதற்கு காலக் கெடு ஏதும் கூற இயலாது என்றார்.
துறைமுகத் தலைவர் பதில்:
இது குறித்து துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா கூறியது,
திறப்புவிழா அன்றே இம்மையம் மூடப்பட்டுள்ளது குறித்து தகவல் ஏதும் இல்லை. இம்மையம் மத்திய கிடங்கு நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுவிட்டது. இனி வாடகை, நிர்வாகம், கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் மத்திய கிடங்கு நிறுவனம்தான் மேற்கொள்ளும். யாரேனும் புகார் தெரிவித்தால் இந்நிறுவன அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது துறைமுகத்தின் பொறுப்பு என்றார் மிஸ்ரா.
ஆக, இம்மையம் இப்போதைக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வருவதாகத் தெரியவில்லை. கண்டெயர்னர் லாரிகள் சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு வரிசை கட்டி நிற்கின்றன. ஒரு கண்டெய்னர் லாரி துறைமுகத்திற்குள் சென்று திரும்ப 5 நாட்கள் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது. இது குறித்து துறைமுக நிர்வாகமோ, அமைச்சகமோ கவலைப்படுவதாகத் தெரியவில்லை. பொறுப்பைக் தட்டிக் கழிக்கும் துறைமுக நிர்வாகத்தை தட்டிக் கேட்பது யார்?
திறப்புவிழா காண்பதில் ஆர்வம் காட்டும் கப்பல்த்துறை அமைச்சகம் அவை தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகிறதா? அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளனவா? உள்ளிட்டவைகளில் காட்ட வேண்டும் என்கிறார் இப்பிரச்னையைக் கூர்ந்து நோக்கும் சமூக நல ஆர்வலர் ஒருவர்.
