Sunday, 31 January 2016

சென்னைத் துறைமுகத்தில் ரூ.1.15 கோடியில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் 

துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்,ஜன.29:சென்னைத் துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன ரக கண்காணிப்பு கேமராக்களை துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
    சென்னைத் துறைமுகத்தில் தற்போது 10 வாயில்கள் செயல்பாட்டில் உள்ளன. வாயில்கள் மற்றும் துறைமுகத்தின் முக்கிய இடங்களில் ஐ.பி. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு இயங்கி வந்தன. இவை 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்டவை என்பதால் அடிக்கடி பழுதடைந்து விடுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து புதிய தொழில்நுட்பத்துடன் (HD PTZ CCTV) கூடிய 30 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அடங்கிய புதிய கட்டமைப்பு ரூ.1.15 கோடி செலவில் 
அமைக்கப்பட்டுள்ளது. இதனை வெள்ளிக்கிழமை துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தொடங்கி வைத்தார். புதிய கட்டமைப்புடன் பழைய கேமராக்கள் இணைக்கப்படும் எனவும், இதனை தொழில்பாதுகாப்புப் படை கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
     இந்நிகழ்ச்சியில் துறைமுகத் துணைத் தலைவர் சிரில் ஜார்ஜ் மற்றும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். 
திருவொற்றியூரில் கடலில் மூழ்கி மாணவர்கள் உள்ளிட்ட மூவர் சாவு

திருவொற்றியூர், ஜன.25:திருவொற்றியூரில் கடலில் மூழ்கி பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட மூன்றுபேர் திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தனர். 
   திருவொற்றியூர் சாத்துமாநகர் வரதராஜர் தெருவைச் சேர்ந்த சேர்ந்த மணி (17), ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சூர்யா (14), எட்டாம் வகுப்பு படிக்கும் யுவனேஷ் (13) மற்றும் தினேஷ் (16) ஆகிய நால்வரும் நண்பர்கள். இவர்கள் அனைவரும் திங்கள்கிழமை பிற்பகல் திருச்சினாங்குப்பம் அருகே கடலில் குளித்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் நால்வரும் சிக்கி கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் தினேஷ் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். மீதி மூவரும் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போயினர். இதில் சூர்யா, மணி ஆகியோரின் சடலங்கள் உடனடியாக மீட்கப்பட்டன. யுவனேஷின் சடலத்தை தொடர்ந்து தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக  அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 
    இது குறித்து திருவொற்றியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே தெருவைச் சேர்ந்த மூன்று பேர் இறந்து போன சம்பவம் இப்பகுதி வசிப்போரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Monday, 25 January 2016

திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் தைப்பூச தெப்பத் திருவிழா

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருவொற்றியூர், ஜன.24:திருவொற்றியூர் தியாகராஜசுவாமி தைப்பூச தெப்பத் திருவிழா 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
    திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்குவும், கடந்த டிசம்பர் மாதம் புதிதாக அமைக்கப்பட்ட தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றன. இந்நிலையில் தைப்பூசத்தையொட்டி தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் திருக்குளத்தில் உலா வந்தது. இதில் உற்சவரான சந்திரசேகரசுவாமி வீற்றிருக்க திருக்குளத்தில் நான்கு பக்கமும் தெப்பம் சுற்றி வந்தது. இதனை நான்கு புறமும் குளக்கரையில் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து வணங்கினர். மூன்று முறை சுற்றி வந்த தெப்பம் 
பின்னர் நிலை நிறுத்தப்பட்டது. திங்கள், செவ்வாய்க்கிழமை மாலை இதே போல் தொடர்ந்து தெப்பம் உலா வரும் பக்தர்கள் பார்த்து மகிழலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
   இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், அறநிலையத்துறை சென்னை மண்டல இணை ஆணையர் தி.பரஞ்ஜோதி, 
கோயில் செயல் அலுவலர் ந.லதா பங்கேற்றனர். விழாவினையொட்டி 
பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை 
அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
 திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையும்  தொடர்ந்து தெப்பம் தத் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் போலீஸார் 
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும் தெப்பத்திருவிழாவிற்கான விரிவான
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.லதா தலைமையில் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் ஆகம விதிகள் மீறப்படுகிறதா?

நம்பூதிரிகள்-சிவாச்சாரியார்கள் இடையே வலுக்கும் உரிமை போராட்டம் 

திருவொற்றியூர், ஜன.22:திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் நீண்ட காலமாக  பூஜை செய்து வந்த நம்பூதிரிகள் வியாழக்கிழமை திடீரென கேரளா திரும்பிச் சென்றதையடுத்து வெள்ளிக்கிழமை இங்கு பூஜை செய்யும் பணியி்ல் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் நீண்ட காலமாக இரு தரப்பினரிடையே  இருந்து வந்த உரிமைப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 
   திருவொற்றியூர் தியாகராஜர்சுவாமி கோயில் என அழைக்கப்பட்டாலும் வடிவுடையம்மன் கோயில் என்றால்தான் உடனடியாக நினைவுக்கு வரும். சிவன் கோயிலான இங்கு அனைத்து பிரகாரங்களிலும் பூஜை, வழிபாடு செய்யும் பணியில் சிவாச்சாரியார்கள் உள்ளனர்.  ஆனால் வடிவுடைம்மன் கோயிலில் மட்டும் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள் பூஜை, வழிபாடு செய்யும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதுவும் திருமணமாகதவர்கள் மட்டுமே தீட்சை பெற்று வடிவுடையம்மன் கோயிலில் பூஜை செய்ய முடியும். ஆதிசங்கரர் காலத்திலிருந்தே இவ்வாறான வழக்கம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பணியில் இருந்த மூன்று நம்பூதிரிகளும் வியாழக்கிழமை திடீரென  கேரளாவிற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். இதனையடுத்து வெள்ளிக்கிழமை வடிவடையம்மனுக்கு பூஜை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து வடிவுடையம்மன் கோயிலில் சிவாச்சாரியார்களைக் கொண்டு வழக்கமான பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பிரச்னை திருவொற்றியூர் பகுதி ஆன்மீகவாதிகள், பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
ஆகம விதிகள் புறக்கணிப்பு: பக்தர்கள் கருத்து
    இங்குள்ள சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து, தீட்சை வழங்கினால் மட்டுமே புதிய நம்பூதிரிகளைச் சேர்க்க முடியும் என்ற நிலையில் இதற்கும் இங்குள்ள சிவாச்சாரியார்கள் தடையாக இருந்துள்ளனர். இதனால் நம்பூதிரிகளுக்கும், சிவாச்சாரியார்களுக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வந்துள்ளது. இதற்கு காரணம் அதிகமான பக்தர்கள் வடிவுடையம்மன் கோயிலுக்குத்தான் வரும் வழக்கம் உள்ளதால் தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என சிவாச்சாரியார்கள் கருதுகின்றனர். மேலும்  வருவாய் ஈட்டுவதில் நம்பூதிரிகளுக்கும், சிவாச்சாரியார்களுக்கும் இடையே ஏற்ற தாழ்வுகள் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நம்பூதிரிகள் பூஜை செய்யும் நடைமுறை நீண்ட நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கும் நிலையில் இரு தரப்பினரையும் இணக்கமாகச் செயல்பட வைப்பதில் கோயில் நிர்வாகம் போதிய முயற்சி மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் நீண்ட காலமாக இருந்து வரும் ஆகம விதிகள் கோயில் நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது என பக்தர்கள் சிலர் தெரிவித்தனர்.   
ஆகக விதி மீறல் இல்லை:கோயில் நிர்வாகம்
கோயில் செயல் அலுவலர் ந.லதா கூறியது,
     வடிவுடையம்மன் கோயிலில் நம்பூதிரிகள் மட்டுமே பூஜை செய்யும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருவது உண்மைதான். தற்போது அவர்களுக்கு வயதாகிவிட்டதால் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்வதாகக் கூறிவிட்டு திடீரென சென்றுவிட்டனர்.  கோயில் பூஜை நடைமுறைகளில் கோயில் நிர்வாகம் தலையிடுவதில்லை. இருப்பினும் ஊருக்குச் செல்லவிருந்த நம்பூதிரிகளை அழைத்து சமாதானப்படுத்தினோம். ஆனால் நம்பூதிரிகள் தங்கள் முடிவினை மாற்றுவதாக இல்லை. புதிய நம்பூதிரிகளை அழைத்துவரவும் இல்லை. தீட்சை வழங்க மறுக்கப்படவும் இல்லை. கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் வடிவுடையம்மன் கோயிலில் சிவாச்சாரியார்கள்தான் சிறப்பு பூஜைகள் செய்துள்ளனர். எனவே பூஜை செய்ய ஒரு நம்பூதிரியும் இல்லாத நிலையில் சிவாச்சாரியார்களைக் கொண்டு பூஜை செய்வதில் என்ன தவறு? இதில் எவ்வித ஆகம விதி மீறலும் இல்லை. தெப்பத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் சிலர் வேண்டுமென்றே பிரச்னையை திசை திருப்புகின்றனர் என்பதே உண்மை என்றார் லதா. 
    நிர்வாக நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம் என கோயில் நிர்வாகம் தெரிவித்தாலும் ஆகம விதிகள் மீறப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் பக்தர்கள், ஆன்மீகவாதிகளின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் அறநிலையத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. 
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் தைப்பூச தெப்பத் திருவிழா

10 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெறுகிறது

திருவொற்றியூர், ஜன.22:திருவொற்றியூர் தியாகராஜசுவாமி தைப்பூச தெப்பத் திருவிழா 10 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 
    திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் புதிதாக அமைக்கப்பட்ட தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் தைப்பூச தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 
 இதன்படி  தெப்பத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதேபோல் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து தெப்பத் திருவிழா நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதால் போலீஸார் 
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும் தெப்பத்திருவிழாவிற்கான விரிவான
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ந.லதா தலைமையில் அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். 
இந்திய கடலோரக் காவல் படை நடத்திய 'கடலில் ஒரு ஒரு நாள்'

சென்னை அருகே நடுக்கடலில் நடைபெற்றது


திருவொற்றியூர், ஜன.17:இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்தியம் சார்பில் சார்பில் கடலில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி சென்னை அருகே நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
     இந்திய கடற்படையிலிருந்து கடலோரக் காவல்படை பிப்.1, 1977 ம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்  பிப்.1 ம் தேதியை கடலோரக் காவல்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடலோரக் காவல்படையின் அன்றாட செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள், படையினரின் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் அறிந்து கொள்வதற்காக 'கடலில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி ஆண்டுதோறும்  நடத்தப்பட்டு வருகிறது. மும்பையில் கடந்த ஆண்டு நீர்மூழ்கிக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதால் கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆண்டு கடலோரக் காவல்படை தினத்தையொட்டி கடலில் ஒரு நாள் நிகழ்ச்சி 
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
செயல்விளக்க நிகழ்ச்சிகள்:
     சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கடலோரக் காவல் படையின் கப்பல்களில் பொதுமக்கள், படைவீரர்களின் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள் 
நடுக்கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் கடலோரக் காவல் படையினரின் 
செயல்பாடுகள் குறி்தது பல்வேறு கள செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. 
ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு வின்ச் மூலம் தகவல், பொருள்கள் பரிமாற்றம் செய்வது, கடத்தல்காரர்களை விரைந்து சென்று பிடிப்பது, தீ விபத்து ஏற்பட்ட வணிகக் கப்பல் ஒன்றை தீயணைத்து மீட்பது, கடலில் தத்தளிக்கும் மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்பது, டோர்னியர் விமானம் மூலம் 
கடலோரப் பகுதிகளை விரைந்து சென்று கண்காணிப்பது, கப்பலில் உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது உள்ளிட்ட பல்வேறு செயல் விளக்க நிகழ்ச்சிகள் இதில் நடத்திக் காண்பிக்கப்பட்டன. 
அணி வகுத்த கப்பல்கள்:
    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பி.சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இந்திய கடலோரக் காவல் படையின் சாரங், சாகர், சமுத்ரா பகீரதர், விஸ்வாஸ்த், அபீக், அனாக், ராஜ் கமல், ராஜ் தரங் ஆகிய 8 ரோந்துக் கப்பல்கள், சி 415, சி 412 ஆகிய சிறிய கப்பல்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள், இரண்டு டோர்னியர் விமானங்கள் உள்ளிட்டவை கலந்து கொண்டன. சிறப்பு நிகழ்ச்சியாக அனைத்து கப்பல்களும் வரிசையாக அணிவகுத்து சென்றன. அப்போது கப்பல்களில் இருந்த வீரர்கள் சிறப்பு விருந்தினர்களுக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். 
இந்திய-ஜப்பான் கடலோரக் காவல் படை கூட்டுப் பயிற்சி 

சென்னை அருகே நடுக்கடலில் நடைபெற்றது

திருவொற்றியூர், ஜன.17:இந்திய, ஜப்பான் நாட்டின் கடலோரக் காவல்படையினர் பங்கேற்ற கூட்டுப் பயிற்சி சென்னை அருகே நடுக்கடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
    இரு நாடுகளின் கடலோரக் காவல்படையினரிடையே உள்ள பல்வேறு திறன்களைப் பரிமாறிக்கொள்வதற்காகவும், நல்லெண்ணப் பயணமாகவும் நடத்தப்படும் இக்கூட்டுப் பயிற்சி கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற கூட்டுப்பயிற்சியில் இந்திய கடலோரக் காவல்படையினர் பங்கேற்ற நிலையில் வெள்ளிக்கிழமை சென்னைக்கு அருகே நடைபெற்ற கூட்டுப் பயிற்சியில் ஜப்பான் நாட்டின் கடலோரக் காவல் படையினர் பங்கேற்றனர். 
ஆறு கப்பல்கள் அணி வகுப்பு:
    இக்கூட்டுப் பயிற்சியில் இந்திய கடலோரக் காவல்படையின் சமுத்ரா பகீரதர்,  விஸ்வாஸ்ட், ராஜ்கமல், ராஜ்தரங் ஆகிய நான்கு பெரிய கப்பல்களும், சி-417, சி-415 ஆகிய இரண்டு சிறிய அதிவேக கப்பல்களும் பங்கேற்றன. மேலும் இரண்டு டோர்னியர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. ஜப்பான் கடலோரக் காவல்படை சார்பில் ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய எசிகோ என்ற கப்பலும் பங்கேற்றன. பயிற்சியின்போது கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வணிகக் கப்பலை மீட்பது, 
கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்பது, தீவிபத்தில் சிக்கும் கப்பலை காப்பாற்றுவது உள்ளிட்ட பல்வேறு சாகசப் பயிற்சிகளில் இரு நாட்டு வீரர்களும் இணைந்து ஈடுபட்டனர். மேலும் இருநாட்டினரின் தொழில் நுட்ப வளர்ச்சி, தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவைகள் குறித்தும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றன. பயிற்சியின் நிறைவில் கப்பல்களில் அணிவகுத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.
       கூட்டுப் பயிற்சிக்குப் பிறகு சமுத்ரா பகீரதர் கப்பலில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கடலோரக் காவல்படை தலைமை தளபதி பிஸ்த், ஜப்பான் கடலோரக் காவல்படை தலைமைத் தளபதி ஹிதேயோ ஹனாமிஜூ கூட்டாகப் அளித்த பேட்டி:
    இரு நாட்டின் நல்லுறவைப் பேணுவதற்கு இக்கூட்டுப் பயிற்சி ஒரு வாய்ப்பாக இருந்து வருகிறது. மேலும் இரு பிராந்தியங்களில் வணிகக் கப்பல்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை விரைந்து முறியடிக்க விரைவாகத் தொடர்பு கொள்ள முடியும். மேலும் கடல் பயணத்தில் மருத்துவ உதவி ஏதேனும் தேவைப்பட்டால் உடனடியாக அளிக்க இயலும். இந்தியா, ஜப்பான் இடையே ஆழமான நட்பு நிலவுகிறது. மேலும் சர்வதேச அளவில் நல்ல கூட்டாளிகளாகச் செயல்பட்டு வருகின்றன. கடலோரக் காவல்படையினர் சர்வதேச அளவில் இணைந்து செயலாற்றி வருவதால் சோமாலியா உள்ளிட்ட நாடுகள் வழியாகச் செல்லும் கப்பல்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். 
    இந்நிகழ்ச்சியில் இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியத் தளபதி எஸ்.பி.சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பெட்டிச் செய்தி 

சர்வதேச கடல் எல்லையை மதிக்க வேண்டும்:கடலோரக் காவல்படை தலைமைத் தளபதி பிஸ்த்
இலங்கை கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தற்போது குறைந்துள்ளது. இப்பிரச்னை குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் உள்ளது. சர்வ தேச சட்டங்கள் இந்தியா மதித்து வரும் நிலையில் இலங்கையில் மட்டும் அந்நாட்டின் கடல் பகுதியில் மீன்பிடிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. சர்வதேச கடல் எல்லையை மதித்து நடக்க மீனவர்களுக்கு விளிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 
    தமிழகக் கடலோரப் பகுதியில் ஏராளமான டால்பின்கள் மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்கியதற்கான காரணங்கள் குறித்து உரிய ஏஜென்சிகள் மூலம் விசாரணை நடத்தப்படும். பதன்கோட் தாக்குதலுக்குப் பிறகு கடல் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எவ்வித அச்சுறுத்தல்களையும் சமாளிக்கும் திறன் இந்தியக் கடலோரக் காவல்படைக்கு உள்ளது என்றார் பிஸ்த். 
வெளிநாட்டு வர்த்கக் கொள்கையில் திருத்தம் 

சென்னை வழியாக ஆப்பிள் இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி 

திருவொற்றியூர், ஜன.13:சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள துறைமுகங்கள் வழியாக ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய மீண்டும் அனுமதி அளிக்கும் வகையில் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் (Foreign Trade Policy 2015-20) திருத்தம் செய்யப்படுவதாக மத்திய வர்த்தக அமைச்சகம் 
செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா, சிலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஏராளமான ஆப்பிள் பழங்கள் குளிரூட்டப்பட்ட சரக்குப் பெட்டகங்களில் இந்தியாவிலுள்ள அனைத்து துறைமுகங்கள் வழியாகவும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் மும்பை, சென்னைத் துறைமுகங்கள்தான் அதிக அளவில் ஆப்பிள் பழ இறக்குமதியில் முக்கிய வகித்தன. இந்நிலையில் மும்பையிலுள்ள நவசேவா துறைமுகம் வழியாக மட்டுமே இனி ஆப்பிள் இறக்குமதி செய்ய முடியும். இதர மற்ற இந்திய துறைமுகங்கள் வழியாக ஆப்பிள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது என வர்த்தக அமைச்சகம் அறிவித்தது. சர்வதேச சந்தையின் போட்டியிலிருந்து இந்திய ஆப்பிள் விவசாயிகளை காப்பாற்றும் விதமாக இத்தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் 
சென்னையிலுள்ள ஆப்பிள் இறக்குமதியாளர்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு துறைமுகத்திற்கு மட்டும் அனுமதி என்பதில் மிகுந்த பாரபட்சம் இருக்கிறது, இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஆப்பிள் விலை கடுமையாக உயரும், எனவே உடனடியாக இத்தடையை விலக்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்த் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து தடையை விலக்குமாறு கோரிக்கை மனு அளித்தனர். 
தடைநீக்கம்:
   இந்நிலையில் வர்த்தக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (Director General of Foreign Trade) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில்  கூறியிருப்பதாவது,
     வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் செய்துள்ள புதிய திருத்தங்களின் படி சென்னை, மும்பை, கொல்கத்தா, கொச்சின் உள்ளிட்ட இடங்களில் உள்ள துறைமுகங்கள், டெல்லி விமான நிலையம் வழியாக ஆப்பிள் பழங்கள் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் இந்திய எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் வழியாகவும் இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது. 
தமிழ் வர்த்க சங்கம் வரவேற்பு:
இது குறித்து தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகரன் கூறியது,
     நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு சாதகமாகவும், இதர பகுதி மக்களுக்குப் பாதகமாகவும் இருந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இத்தடை விதித்த உடனேயே இறக்குமதியாளர்களை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று வர்த்தக அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து தமிழ் வர்த்தக சங்கம் முறையிட்டது. மேலும் நான்கு மாதங்களாக இது குறித்து தடையை நீக்க வலியுறுத்தி வந்தோம். இப்புதிய திருத்தத்தின் மூலம் சென்னையில் ஆப்பிள் பழ இறக்குமதி வர்த்தகம் தடையின்றி நடைபெறும். மத்திய அரசின் முடிவினை வரவேற்கிறோம் என்றார் ராஜசேகரன்.
கிடப்பிலுள்ள இறக்குமதி சரக்குகளை ஆன்லைன் மூலம் ஏலம் விட புதிய மென்பொருள் 

சென்னை சுங்கத் துறை அறிமுகம்

திருவொற்றியூர், ஜன.5: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பல்வேறு காரணங்களால் விடுவிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள கண்டெய்னர்களை ஆன்லைனில் பதிவு செய்து ஏலம் விட புதிய மென்பொருளை சென்னை சுங்கத்துறையும், சரக்குப் பெட்டக நிலையங்களுக்கான கூட்டமைப்பும் கூட்டாகச் சேர்ந்து செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்துள்ளன.
   இதற்கான நிகழ்ச்சி சென்னை சுங்க இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சுங்க இல்ல முதன்மை ஆணையர் எஸ்.ரமேஷ், திருச்சி மண்டல முதன்மை ஆணையர் பி.கே.தாஸ் ஆகியோர் முன்னிலையில் மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் வனஜா என். சர்னா கலந்து கொண்டு புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 
இப்புதிய திட்டம் குறித்து சரக்குப் பெட்டக நிலையங்களுக்கான தேசிய கூட்டமைப்பின் தலைவர் அருண் கூறியது,
    வெளிநாடுகளிலிருந்து கண்டெய்னர்கள் முலம் இறக்குமதியாகும் சரக்குகள் சுங்கத்துறை பரிசோதனைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட பின்னர் இறக்குமதியாளர்கள் இச்சரக்குகளை எடுத்துச் செல்வதும் நடைமுறையில் இயல்பானது. பின்னர் காலி கண்டெய்னர்கள் கப்பல் நிறுவனங்களில் திரும்பவும் ஒப்படைக்கப்படும். பிறகு இந்த காலி கண்டெய்னர்களில் ஏற்றுமதிக்கான சரக்குகள் ஏற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இவ்வாறு கண்டெய்னர்களில் இறக்குமதியாகும் சரக்குகள் பல்வேறு காரணங்களால் எடுத்துச் செல்லாமல் சரக்குப் பெட்டக நிலையங்களிலேயே இருப்பு வைக்கப்படும். தடை செய்யப்பட்டவை, கடத்தி வரப்பட்டவை, போதிய லாபமின்மையால் இறக்குமதியாளர்களால் உரிமை கோரப்படாதவை என பல்வேறு வகையில் இச்சரக்குகள் கண்டெய்னர்களிலேயே வைக்கப்பட்டு சரக்குப் பெட்டக நிலையங்களில் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல்
கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் சுங்கக் கட்டணம், கண்டெய்னர் வாடகை, சரக்குப் பெட்டக நிலையங்களுக்கான கட்டணம் உள்ளிட்டவை நிலுவையில் இருக்கும். இவற்றை ஏலம் விட்டும் வரும் தொகையில் இக்கட்டணங்களை வசூலிக்க இயலும். 
இதில் தாமதம் ஏற்படும் நிலையில் பொருள்கள் வீணாகி போதிய ஏலத் தொகை கிடைகாகாம்ல போய்விடும். சென்னை வட்டாரத்தில் மட்டும் சுமார் 3,500 கண்டெய்னர்கள் நிலுவையில் கிடக்கின்றன. இவற்றின் விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்து ஆன்லைன் மூலம் ஏலம் விட சுங்கத்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கென புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏலம் விடுவதற்கான காலதாமதம் வெகுவாகக் குறைக்கப்படும் என்றார் அருண்.
   இதில் காமராஜர் துறைமுகத் தலைவர் பாஸ்கராச்சார், சத்துவா சரக்குப் பெட்டக நிலைய இயக்குன் பத்மநாபன், சுங்கத்துறை ஆணையர்கள் பிரகாஷ் பகேரா, மயன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
வேன் மோதி ஒப்பந்ததாரர் சாவு

கண்டெய்னர் லாரி நெரிசலால் தொடரும் விபத்துகள்

சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் 

திருவொற்றியூர், ஜன.4.:திருவொற்றியூர் ஜோதிநகரில் வேன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நாகராஜன் (44) திங்கள்கிழமை உயிரிழந்தார். உடன் வந்த இவரது நண்பர் சிவகுமார் பலத்த காயங்களுடன்  
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
   திருவொற்றியூர் மேற்கு பகுதியைச் சேர்ந்த டி.கே.பி.நகரில் வசிப்பவர் நாகராஜன் (44). கட்டட ஒப்பந்தப் பணிகளைச் செய்து வருகிறார். திங்கள்கிழமை இவரது நண்பர்  பொன்னேரியைச் சேர்ந்த சிவகுமார் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் தொழில் நிமித்தமாக இருசக்கரவாகனத்தில் திருவொற்றியூர் நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது எதிரில் வந்த வேன் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜன் சம்வப இடத்திலேயே உயரிழந்தார். இவரது நண்பர் சிவகுமார் 
பலத்த காயங்களுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து ஏற்பட்டவுடன் சம்பவ இடத்திலிருந்து வேன் டிரைவர் 
தப்பியோடிவிட்டார்.
   இது குறி்த்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து
தப்பியோடிய வேன் டிரைவரைத் தேடி வருகின்றனர்.
விபத்துக்கு கண்டெய்னர் லாரிகள் நெரிசலே காரணம்: பொதுமக்கள் சாலை மறியல்
   விபத்து குறி்த்து தகவல் அறிந்த நாகராஜனின் உறவினர்கள், பொதுமக்கள் 
சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்துக்கு காரணம் சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கண்டெய்னர் லாரிகள்தான், எனவும் இதற்கு 
போக்குவரத்து போலீஸாரின் தவறான நடவடிக்கைகளே காரணம் எனும் புகார் தெரிவித்தனர். 
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மேலும் கூறியது,
      சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு தினமும் வரிசைகட்டி நிற்கின்றன. மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, உள்வட்டச் சாலையில் இரண்டு, மூன்று வரிசைகளில் லாரிகள் 
நிறுத்தப்படுகின்றன. நான்கு வழிச்சாலையில் ஒரு மார்க்கத்தில் செல்லும் சாலை முழுதும் கண்டெய்னர் லாரிகள் அடைத்துக் கொண்டு நிற்கின்றனர்.இதனால் தடுப்புகளைத் தாண்டி  எதிர்புற மார்க்கத்தில் பொதுமக்கள் பயணி்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் மோதி எளிதாக விபத்துகள் ஏற்படுகின்றன. திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தும் இந்த வகையில்தான் 
ஏற்பட்டுள்ளது. லாரிகள் இவ்வாறு சாலைகளை அடைத்து வரிசைகட்டி நிற்பதற்கு போக்குவரத்து போலீஸார்தான் காரணம். ஒரு வரிசையில் லாரிகள் நின்று கொண்டிருக்கும்போது இன்னொரு வரிசையில் லாரிகள் ஏறி வர போக்குவரத்து போலீஸார் அனுமதிப்பதன் காரணம் என்ன?. சிலமாதங்களுக்கு முன்புதான் போலீஸாரின் இச்செயலைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். இருப்பினும் 
எவ்வித பயனும் இல்லை. இச்சாலைகளில் ஒரு வித மரண பயத்துடன்தான் நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம்.  இப்பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என
பொதுமக்கள் தெரிவித்தனர். 
துணை ஆணையர் உறுதிமொழி: 
    சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த மாதவரம் போலீஸ் துணை ஆணையர் 
எஸ்.ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தார். பின்னர் இனிமேல் கண்டெய்னர் லாரிகள் ஒரு வரிசைக்கு மேல் நிறுத்தி வைக்க
அனுமதிக்க மாட்டோம். இப்பிரச்னை குறி்த்து  சென்னைத் துறைமுக நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து எதிர்காலத்தில் கண்டெய்னர்கள் லாரிகளே வரிசை கட்டி நிற்காத வகையில் சிறப்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. 
இச்சாலை மறியலால் சுமார் இரண்டு மணி நேரம் மணலி விரைவு சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 
கண்டெய்னர்களை விடுவிக்க ரூ.50 ஆயிரம் கூடுதல் கட்டணம்

நூதன முறையில் லாபம் ஈட்டும் கப்பல் நிறுவனங்கள், பெட்டக நிலையங்கள் 

பாராமுகத்தில் சென்னைத் துறைமுக நிர்வாகம் 

திருவொற்றியூர், ஜன.2:சென்னைத் துறைமுகம் வழியாக இறக்குமதி செய்யும் கண்டெய்னர்களுக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை செலுத்தும் வகையில் நூதனமுறையில் கப்பல் நிறுவனங்கள், சரக்குப் பெட்டக முனையங்கள் கூடுதல் செலவினங்களை ஏற்படுத்துகிறது. இது குறித்து துறைமுக நிர்வாகம் எவ்வித 
நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகத்தில் இருந்து வருவதாக இறக்குமதியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
   சென்னைத் துறைமுகத்தின் வழியாகக் கையாளப்படும் இறக்குமதி, ஏற்றுமதிக்கான 
கண்டெய்னர்களை சுங்கப் பரிசோதனை செய்து விடுவிக்கும் வசதிகள் கொண்ட
சுமார் 30 சரக்குப் பெட்டக நிலையங்கள அமைந்துள்ளன. சென்னைத் துறைமுகத்தில் இறக்குமதியாகும் கண்டெய்னர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்புவரை துறைமுகத்தின் உள்ளேயே சுங்கப் பரிசோதனை செய்து பிறகு எடுத்துச் செல்ல முடியும். பிறகு கண்டெய்னர்களால் நெரிசல் ஏற்படுவதாகக் கூறி இறக்குமதியாகும் கண்டெய்னர்களை சரக்குப் பெட்ட நிலையங்களுக்கு கப்பல் நிறுவனங்களே எடுத்துச் செல்வது என முடிவு செய்யப்பட்டது. அப்போது இறக்குமதியாளர்கள் தங்களுக்கு வசதியான பெட்டக நிலையங்களுக்கு எடுத்துச் செல்லவும் அனுமதியளிக்கப்பட்டது. இதிலிருந்து  குளிர்பதன கண்டெய்னர்களை (Refrigirated Containers) துறைமுகத்திலேயே சுங்கத்துறை சோதனைக்குப் பிறகு இறக்குமதியாளர்கள் நேரடியாக எடுத்துச் செல்லும் வகையில் விலக்கு அளிக்கப்பட்டது.  
குளிர்பதன கண்டெய்னர்கள்:
    ஆனால் பழங்கள், வேளாண் விளைபொருள்கள், மாமிச வகைகள், உணவு பொருள்கள் குளிர்பதன கண்டெய்னர்களில் இறக்குமதியாகின்றன. இவற்றின் அழுகும் தன்மை, அவசரம் கருதி துறைமுகத்திலேயே விடுவிக்க அளிக்கப்பட்டிருந்த சலுகையை நீக்கி கப்பல் நிறுவனங்கள் இறக்குமதியாளர்களின் விருப்பத்திற்கு மாறாக தனியார் பெட்டக நிலையங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். மேலும் அத்தனை செலவுகளும் கணக்கிடப்பட்டு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை அதிகம் செலவிட வேண்டிய அவலம் இறக்குதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக  ஆப்பிள்கள் ஏற்றப்பட்ட சுமார் 5  கண்டெய்னர் கப்பலில் சென்னைத் துறைமுகம் வருகிறது. இதனை துறைமுகத்திலேயே சோதனை செய்து விடுவித்தால் இரண்டே நாளில் சுமார் ரூ.5 ஆயிரம் துறைமுகக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு கோயம்பேடு எடுத்துச் சென்று விடலாம். ஆனால் இக்கண்டெய்னர்களை கப்பல் நிறுவனங்கள் தங்களுக்குச் சொந்தமான அல்லது வசதியான பெட்டக நிலையங்களுக்குச் எடுத்துச் சென்று விடுவார்கள். இவ்வாறு அங்கு போய்விட்டால் 5 கண்டெய்னர்களுக்கும் சேர்த்து சுமார் ரூ.2.50 லட்சம் கூடுதலாக இறக்குமதியாளர் செலவிட வேண்டிய நிலை ஏற்படும். இது குறித்து இறக்குமதியாளர்களின் கோரிக்கையையும் கப்பல் நிறுவனங்கள் 
கவனத்தில் கொள்வது இல்லை. மேலும் கண்டெய்னர்களை விடுவிப்பதற்காக அதிக நாள்கள் காத்திருக்க வேண்டிய அவலமும் உள்ளது. இவ்வாறு நூதன முறையில் கூடுதல் லாபம் ஈட்டுவதில் கப்பல் நிறுவனங்களும், தனியார் சரக்குப் பெட்டக நிலையங்களும் கூட்டாகச் செயல்படுவதாக இறக்குமதியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
இருப்பு வைக்க வசதி இருந்தும் இடம் மாற்றுவது ஏன்?
இது குறித்து சுங்கத்துறை முகவர் சதீஷன் கூறியது,    
      சென்னைத் துறைமுகத்தில் உள்ள இரண்டு முனையங்களிலும் ஒரே நேரத்தில் சுமார் 900 குளிர்சாதன கண்டெய்னர்களை இருப்பு வைப்பதற்கான வசதிகள் உள்ளன. இதில் பாதியளவு கூட தற்போது முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பிறகு எதற்கு கண்டெய்னர்களை வேண்டுமென்றே இங்கிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள பொன்னேரிக்கு எடுத்து செல்ல வேண்டும்?. இறக்குமதியாளர்களை, முகவர்களை அவதிக்குள்ளாக்க வேண்டும்?. இதில் கூட்டாகச் சேர்ந்து நியாயமற்ற கூடுதல் லாபம் ஈட்டுவதைத் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்?. இதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த கப்பல் நிறுவனங்களும், தனியார் சரக்குப் பெட்டக நிலையங்களும் மாதம் சுமார் ரூ.10 கோடிக்கும் மேல் கூடுதல் லாபம் ஈட்டுகின்றன.  மேலும் இறக்குமதியாளர்களின் கருத்துக்களையோ, கோரிக்கைகளையோ கப்பல் நிறுவனங்கள் சிறிது கூட மதிப்பது இல்லை. இதனால் சென்னைத் துறைமுகத்தின் நம்பகத்தன்மைதான் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது இங்கிருந்து இறக்குமதியாளர்கள் வேறு துறைமுகங்களுக்கு இடம்பெயருவது நிச்சயம் நடக்கும் என்றார் சதீஷன்.
இறக்குமதியாளர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை:
இது குறித்து குன்னூரைச் சேர்ந்த தோட்டக் கலை நிறுவன மேலாளர் நம்பியார் கூறியது,
    எங்கள் நிறுவனத்திற்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து தொடர்ச்சியாக லில்லி மலருக்கான விதைகள் இறக்குமதியாகின்றன. இதேபோல் கடந்த வாரம் 
ஒரு கண்டெய்னர் மார்க்ஸ் என்ற கப்பல் நிறுவனம் மூலம் கொண்டுவரப்பட்டது. இதனை சென்னைத் துறைமுகத்திலேயே எடுத்துக் கொள்கிறோம் என கடிதம் அளித்திருந்தோம். இதற்கான கட்டணம் ஒன்றையும் செலுத்திவிட்டோம். ஆனால்
அடுத்த நாளே எங்களது கண்டெய்னரை இதே நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ.பி.எம். 
சரக்குப் பெட்டக நிலையத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டனர். இது குறித்து பலமுறை 
தொடர்பு கொண்டும் இக்கப்பல் நிறுவனம் ஒரு பொருட்டாக நினைத்து எவ்வித பதிலையும் கூட அளிக்கவில்லை. பிறகு வேறு வழியின்று நான்கு நாள்களுக்குப் பிறகு ரூ.49 ஆயிரம் கூடுதல் கட்டண் செலுத்தி கண்டெய்னரை விடுவித்து சரக்குகளை குன்னூர் எடுத்துவந்தோம். இதுபோல பலரும் அவஸ்தைக்கு உள்ளாகி வருவதாகத் தெரிகிறது. எனவே இனி சென்னைத் துறைமுகத்தைத் தவிர்த்து கொச்சி துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் நம்பியார்.
     இதே கருத்துக்களை கோயம்பேடு மார்க்கெட்டைச் சேர்ந்த பழவியாபாரிகளும் 
தெரிவித்துள்ளனர். இது குறித்து கப்பல்த் துறை அமைச்சகம்  தீவிர விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரக் கூடும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


பெட்டிச் செய்தி.....
அதானியின் போட்டியை சென்னைத் துறைமுகம் சமாளிக்குமா?
     ஏற்கனவே கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல், கட்டமைப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சென்னைத் துறைமுகம் தள்ளாடி வரும் நிலையில் இதனை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள அதானி துறைமுக நிர்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. முதற்கட்டமாக எல் அன் டி நிறுவனத்திடமிருந்து காட்டுப் பள்ளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத்தை ஒப்பந்த அடிப்படையில் அதானி இயக்கி வருகிறது. மேலும் எண்ணூர் துறைமுகத்தில் ரூ.1,270 கோடி மதிப்பீட்டில் மிகப் பெரிய சரக்குப் பெட்ட முனையத்தை அதானி அமைத்து வருகிறது. இந்த இரண்டு முனையங்களில் கண்டெய்னர்களை நேரடியாக இறக்குமதியாளர்கள் எடுத்துச் செல்ல அதானி நிர்வாகம் வசதிகளை ஏற்படுத்திவருகிறது. எனவே செலவினங்கள் குறையும்போது இறக்குமதியாளர்கள் அதானி துறைமுக முனையங்களுக்கு இடம்பெயர்வது என்பது தவிர்க்க முடியாதது ஆகும். இது சென்னைத் துறைமுகத்தை மேலும் சிக்கலாக்கும். ஆனால் போக்குவரத்து நெரிசலாகட்டும், ஏற்றுமதி, இறக்குமதியாளர்களின் பிரச்னைகளாகட்டும் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாதபோல்தான் துறைமுகம் செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடவடிக்கை எடுப்பாரா?
திருவொற்றியூர் கலை, அறிவியல் கல்லூரி முதல் பட்டமளிப்பு விழா

மாணவர்கள் தங்களது பலம், பலவீனத்தை அறிந்து கொள்ள வேண்டும்

துணை வேந்தர் ஆர்.தாண்டவன் 

திருவொற்றியூர், டிச.31:மாணவர்கள் தங்களது பலம், பலவீனம் குறித்து முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர். தாண்டவன் வியாழக்கிழமை சென்னையில் கூறினார்.
    திருவொற்றியூரில் உள்ள சென்னை பல்கலைக் கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை வகித்த சென்னை பல்கலைக் கழக துணை வேந்தர் ஆர்.தாண்டவன், இக்கல்லூரியில் பயின்ற  115 மாணவ, மாணவியருக்கு  பட்டங்களை வழங்கி விழா பேருரையாற்றினார். 
அப்போது தாண்டவன் பேசியது, 
    இப்பகுதியைச் சார்ந்த மாணவர்களுக்கு அனைத்து துறைகளிலும் தரமான கல்வியை அளித்து அவர்களை திறமையானவர்களாக மாற்ற ஏதுவாக இக்கல்லூரியை கடந்த 2012-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.  உலக அமைதி தற்போதைய தேவையாக உள்ள நிலையில் மாணவர்களிடையே இத்தகைய பண்புகள், பெருந்தன்மைகளை பயிற்றுவிப்பது என்பது ஆசிரியர்களிடம்தான் உள்ளது. இது மழலையர் வகுப்புகளிலிருந்து தொடங்கப்படவேண்டும். தரமான கல்வி மூலம் அனைத்து நிலைகளிலும் நிரந்தரமான அறிவு பரவலாக்கம் நடைபெறுகிறது.   
    மா்ணவர்களுக்கு வெறும் படிப்பறிவு மட்டுமன்றி பட்டறிவும் வேண்டும். நமது கலாச்சாரமானது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெரியவர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும். அவர்கள் மீது மரியாதை செலுத்த வேண்டும் என்பதாகும். இத்தகைய 
கலாச்சாரத்துடன் கூடிய கல்வியை மாணவர்கள் பெற வேண்டும். மேலும் படிப்பு என்பதை வாழ்நாள் இறுதிவரை படித்துக் கொண்டே இருக்கவேண்டும். 
    மாணவர்கள் முதலில் தான் என்னவாக விரும்புகிறோம், தன்னால் என்ன முடியும் என்பதை முடிவு செய்திட வேண்டும். இதற்கு தங்களின் பலம், பலவீனங்கள் என்பதை முதலில் பட்டியலிடவேண்டும். பலத்தை மேலும் பலப்படுத்த வேண்டும். பலவீனங்களைத் தூக்கியெறிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் இல்லை அது ஒரு பலவீனமாகக் கருதாமல் கடுமையான பயிற்சிகள் மூலம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக் கற்றுக் கொள்ளலாம் என்றார் தாண்டவன்.
    நிகழ்ச்சியில் பல்கலைக் கழக பதிவாளர் பி.டேவிட் ஜவஹர், தேர்வு கட்டுப்பாட்டு 
அதிகாரி எஸ்.திருமகன், கல்லூரி முதல்வர் முனைவர் கே.பழனிசாமி உள்ளிட்டோர் 
கலந்து கொண்டனர். 
பெட்டிச் செய்தி:
நிரந்தர கட்டடத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும்?
   இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை அடுத்து திருவொற்றியூரில் கல்லூரி 
அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் இக்கல்லூரிக்கான இடம் 
எர்ணாவூரில் தேர்வு செய்யப்பட்டு நிரந்தரக் கட்டடம் அமைக்க சுமார் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடும் செய்தார். ஆனால் இந்த இடத்தை சென்னப் பல்கலைக் கழகம் வசம் ஒப்படைபதில் தமிழ்நாடு கனிம வள நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து தடங்கல்களை ஏற்படுத்தி வந்தனர். இதனால்தான் மூன்று ஆண்டுகள் படித்தும் தாற்காலிக வளாகத்திலேயே பட்டமளிப்பு விழா நடத்திட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக பட்டம் பெற்ற மாணவர்கள் தெரிவித்தனர். வியாழக்கிழமை பட்டம் பெற்றவர்களில் சுமார் 70 சதவீதம்பேர் முதல்தலைமுறை பட்டப் படித்தவர்களாவார்கள். இந்நிலையில் விரைவில் எர்ணாவூரில் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும். இதற்கான அடிக்கல்நாட்டுவிழா ஜனவரியில் இருக்கக் கூடும் என உயர்கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

எண்ணூரில் கடல் சீற்றம்: 300 அடி நீளத்திற்கு கடலரிப்பு 

திருவொற்றியூர், டிச.29:எண்ணூரில் கடல் சீற்றத்தால் சுமார் 300 அடி நீளத்திற்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. 
   காசிமேடு முதல் எண்ணூர் வரை தொடர்ந்து கடலரிப்பு இருந்து வந்தது. இதனைத் தடுக்கும் வகையில் பெரும்பாலான கருங்கற்களாலான தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தடுப்புச் சுவர்கள் சரியாக அமைக்கப்படாத இடங்களில் அவ்வப்போது கடலரிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் எண்ணூர் முகத்துவாரப் பகுதியை ஒட்டிய நெட்டுக்குப்பம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட கடல் சீற்றத்தால் சுமார் 300 அடி நீளத்திற்கு கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. முகத்துவாரப் பகுதி என்பதால் மணல் மேடு மலைபோல் குவிந்திருக்கும். ஆனால் திங்கள்கிழமை பார்த்தபோது இம்மணல் திட்டுக்கள் முழுதும் கடல் சீற்றத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் முகத்துவாரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் 
அச்சத்துடன் உள்ளனர். 
இது குறித்து இப்பகுதி மீனவ மக்கள் கூறியது,
    எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் முறையாகப் பராமரிப்பு செய்யப்படாததாலும், 
கடல் சீற்றத்தாலும் மணல்மேடுகள் திடீரென கடலுக்குள் சென்றுவிட்டன. இதே நிலை நீடித்தால் இன்னும் சில நாள்களில் இங்குள்ள பெரும்பாலான வீடுகள் கடலரிப்பில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் சுமார் 300 அடி நீளத்திற்கு கடலரிப்பு ஏற்பட்டும் எவ்வித தடுப்பு பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபடவில்லை. மேலும் இது குறித்து தகவல் தெரிவித்தும் திங்கள்கிழமைவரை முக்கிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. எண்ணூர் முகத்துவாரத்தில்தான் குசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் தண்ணீர் கலக்கிறது. எனவே இதனை முறையாகத் தூர்வாரி பராமரிக்க வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண சிறப்புத் திட்டத்தை 
தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றனர். 

வெள்ளப்பாதிப்பு எதிரொலி:

வடசென்னை ஏரி, நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

விரைவில் ஆய்வு: மாவட்ட ஆட்சியர்

திருவொற்றியூர், டிச.18:சமீபத்திய வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளான வடசென்னை பகுதிகளில் ஏரி மற்றும் நீர் நிலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து விரைவில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
     வடசென்னையில் குசஸ்தலை ஆறு, புழல் ஏரிக் கால்வாய், ரெட்டை ஏரி, பக்கிங்காம் கல்வாய், திருவொற்றியூரில் கழிவெளி புறம்போக்கு, மணலி, மாத்தூர் ஏரிகள் நீர் நிலை பகுதிகளாக உள்ளன. சமீபத்திய வெள்ளப்பெருக்கின்போது திருவொற்றியூர், மணலி, மணலி புதுநகர், புழல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் என இப்பகுதியில் வசிக்கும் சுமார் 2 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கினர். பெரும்பாலான இடங்களில் மார்பளவு தண்ணீர் பெருக்கெடுத்தது.  மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நடைபெற்றுவந்த விவசாயம்  கடுமையான பாதிப்பிற்கு உள்ளானது. மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள சரக்குப் பெட்டக நிலையங்கள், சிறு தொழிற்சாலைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வெள்ளநீர் புகுந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இப்பகுதியே தீவுபோல் மாறும் அளவுக்கு வெள்ளப்பாதிப்பு இருந்தது. வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 
முக்கிய காரணங்கள்: குசஸ்தலை ஆறு
    திருவொற்றியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில்  கனமழை பெய்வதால் மட்டுமே பொதுவாக அதிக பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் பூண்டி, புழல், சோழவரம் ஏரிகளில் உபரி நீர் திறக்கப்படும்போதெல்லாம் இப்பகுதி வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அவலம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கு முதல் காரணம்,  குசஸ்தலை ஆற்றில் பெரும்பாலான இடங்களில் ஆளுயரத்திற்கு மணல் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆற்றின் கரைகள் முறையாக சீரமைக்கப்படவில்லை. பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் ஆற்றின் அகலம் சுருங்கி நீரோட்டத்தின் வேகம் குறைந்துள்ளது. மேலும் நாப்பாளையம் பாலத்தை கடந்து கடலை நோக்கிச் செல்லும் இந்த ஆறு சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு ஆற்றுப் போக்கு சீராக  இல்லாமல் பரவலாகச் செல்கிறது. இதனால் வெள்ளப்பெருக்கின் போது வெளியேற்றப்படும் வெள்ள நீரின் வேகம் தடைபடுகிறது. இதனால் தேக்கம் ஏற்பட்டு படிப்படியாக கிராமங்களில் வெள்ளநீர் 
புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய வெள்ளச் சேதத்தில் இதே நிலைதான் 
நீடித்தது. 
திசையற்ற போக்கில் புழல் ஏரிக் கால்வாய்:
   புழல் ஏரியில் திறந்து விடப்படும் உபரி நீர் கால்வாய் மூலம் சென்று எண்ணூரில் கடலில் கலக்கிறது. இதற்கென சுமார் 25 கி.மீ.தூரத்திற்கு கால்வாய் உள்ளது. ஆனால் இக்கால்வாய் சீராக இல்லை. இக்கால்வாய் ஒரு ஒழுங்கான திசையில் செல்லாமல் பல இடங்களில் வளைந்து, வளைந்து செல்கிறது. பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால்  குறுகலாகவும், ஆழமின்றியும் காணப்படுகிறது. ஆமுல்லைவாயல் கிராமம் வழியாக மணலி பகுதியில் வரும்போது இதில் சென்னை உரத் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றபடும் கழிவு நீரும் சேர்கிறது. மேலும் வெள்ளப்பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தேக்கி வைக்கப்படும் பெட்ரோலியக் கழிவுகள் அனைத்தும் வெள்ளநீரில் கலந்து வெளியேற்றப்படுகிறது. 
வெள்ளம் வடிந்தபிறகும் இப்பகுதியில் இதன் பாதிப்பு நீடிக்கிறது. புழல் ஏரிக் கால்வாயில் உள்ள ஆக்கிமிப்புகளை அகற்றி, தூர்வாரி  எண்ணூர் வரை இருபுறமும் கரைகளை அமைத்து சீரமைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். 
கழிவெளி புறம்போக்கு நிலத்தில் குடியிருப்புகள்:
     திருவொற்றியூரில் பெய்யும் மழை வெள்ளம் இதன் மேற்கு பகுதியில் உள்ள கழிவெளி புறம்போக்கு நிலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் பக்கிங்காம் கால்வாயின் 
வெள்ளத்திற்கேற்ப படிப்படியாக இக்கால்வாயில் வழிந்தோடி கடலில் கலக்கும். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இப்பகுதியில் ஒரு குடியிருப்பும் கிடையாது. இதன் ஒரு பகுதியில் சுதந்திர போராட்டப் பகுதிகளுக்காக வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. இதனையே சாக்காக வைத்து அரசியல் பலமிக்கவர்களால் புறம்போக்கு நிலத்தில் வீ்ட்டுமனைகள் அமைக்கப்பட்டு சட்டவிரோத விற்பனை தொடர்ந்தது. ரூ.10 ஆயிரத்தில் தொடங்கிய வீட்டுமனையின் இன்றைய விலை ரூ.5 லட்சம் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இப்பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டுவிட்டன. இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதிகளும் தரப்பட்டுவிட்டன. சமீபத்திய மழை வெள்ளத்தால் மேற்கு பகுதி முழுவதும் கழுத்தளவு தேங்கியதற்கு காரணம் இக்கழிவெளி புறம்போக்கு நிலத்திலை அமைக்கப்பட்ட குடியிருப்புகள்தான் முக்கிய காரணமாக உள்ளது. 
மாத்தூர் ஏரிகள்:
   மணலி, மாத்தூர் இடையே உள்ள இரண்டு பெரிய ஏரிகள் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளால் தற்போது பாதியாகச் சுருங்கிவிட்டன. இதனைத் தூர்வாரி ஆழப்படுத்தியிருந்தால் புழல் ஏரியில் உபரி நீர் திறக்கப்படும் போதெல்லாம் இந்த ஏரிகள் நிரம்பி வழியும் அளவுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். இவ்வாறு சேமித்தால் மணலி, திருவொற்றியூர், மாதவரம், சின்னச் சேக்காடு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படாம் தொடர்ந்து பாதுகாக்க முடியும். 
ஆக்கிரமிப்புகள், பாரபட்சமற்ற நடவடிக்கை தேவை:
இது குறித்து திருவொற்றியூர் பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியது, 
      வடசென்னை பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் ஏழைகள், பணக்காரர்கள் என யாராக இருந்தாலும், அரசியல் பாரபட்ச பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். ஏமாற்ற நினைத்த ஆக்கிரமிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலங்களை ஆக்கிரமித்து விற்றவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து இவர்களிடம் ஏமாந்துபோய் வீட்டுமனைகள் வாங்கிய ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். முகத்துவாரப் பகுதிகளை தூர்வாரி தண்ணீர் தடையின்றிச் 
செல்ல வழிவகை காண வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்திலாவது வழக்கமான வெள்ளப்பாதிப்பிலிருந்து வடசென்னை மக்களைக் காப்பாற்ற இயலும் என்றனர். 

பெட்டிச் செய்தி.....
ஆக்கிரமிப்புகள் குறித்து விரைவில் ஆய்வு: மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்
    வெள்ளத்தின்போது வெள்ள நீர் செல்ல தடையாக இருந்த ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டன. திருவொற்றியூர், மணலி பகுதிகளில் நீர் நீலைகளில் உள்ள ஆக்கிமிப்புகள் குறித்து விரைவில் விரிவாக ஆய்வு செய்யப்படும். ஆறுகள் கலக்கும் பகுதிகளில் வெள்ளநீர் பரவலாகவே செல்கிறது. இதனை மாற்றி கால்வாய் போன்று ஆறுகளைச் சீரமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். நிவாரணப் பணிகள் சற்று நிறைவடைந்த பிறகு ஆற்றின் முகத்துவாரங்களில் தூர்வாரும் பணியை மேம்படுத்த நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். எதிர்காலத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்படாத வகையில் நீண்ட காலத் திட்டத்தைச் செயல்படுத்த 
காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்

சென்னை தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

திருவொற்றியூர், டிச.11:வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
   இது குறி்த்து இச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
சமீபத்திய வெள்ளதால் சென்னையிலுள்ள தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 20 லட்சம் மணித்துளிகள் மனித உழைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதனால் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட ஆர்டர்களை குறித்த காலத்திற்குள் பூர்த்தி செய்யப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழில் துறையை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். அனைத்து வகை வரி செலுத்துவதற்கான கால அளவு நீடிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
      ஏற்றுமதி, இறக்குமதிக்காக கொண்டு வரப்பட்டு துறைமுகங்கள், விமான நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருள்களுக்கு சுணக்க கட்டணங்களிலிருந்து (Demurage Charges) விலக்கு அளிக்க வேண்டும். நிறுவனங்கள், தொழிலகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடியாக கள ஆய்வு செய்து இழப்பீட்டுத் தொகையை முடிந்தவரை விரைவாக வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். 
      நிவாரணம் வழங்கிய செலவுகளுக்கு நூறு சதவீத வருமான வரி விலக்கு வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளிகள், ஊழியர்களுக்கு பிணையம் இன்றி ஒரு லட்சம் ரூபாய் தனிநபர் கடன்களை வழங்க வேண்டும். 
பாதிப்பிற்கு உள்ளான தொழிலகங்களை சீரமைக்க தேவையான அளவு வங்கிக் கடன்களை வழங்கி மீண்டும் தொழில்துறையை இயல்புநிலைக்கு கொண்டு வர 
நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்

ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

திருவொற்றியூர், டிச.11:தமிழகத்தில் நீர் நிலைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்ற உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
   திருவொற்றியூர் பகுதி த.மா.கா சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு
சுமார் 2 ஆயிரம் பேர்களுக்கு பாய், போர்வை, அரிசி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் வாசன் கூறியது,
  நீர் நிலை, நீர் வழி, நீர் சேமிப்பு உள்ளிட்டவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி உடனடியாக அகற்ற வேண்டும். மழை வெள்ளப் பாதிப்புகளுக்கு ஆக்கிரமிப்புகளே மூல காரணமாக உள்ளன. இதனால் பல லட்சம்பேர் 
பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆக்கிமிப்புகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு, தனிநபர்களின் தலையீடு இருக்கக்கூடாது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பது அரசாங்கத்தின் கடமை ஆகும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு புதிய வாழ்விடம், வாழ்வாதாரம் உள்ளிட்டவைகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும். இப்பிரச்னையில் ஒருமித்த கருத்து ஏற்பட அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். 
சந்தேகத்தை போக்க வேண்டும்:
   செம்பரம்பாக்கம் ஏரியில் அதிக அளவு தண்ணீர் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறி்த்து பொதுப்பணித் துறை போதிய விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் மக்களிடம் ஏற்பட்டுள்ள சந்தேகம், அச்சம் உள்ளிட்டவைகளைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
   அரசு மற்றும் தனியாரால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் முறையாக வழங்கப்பட வேண்டும். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நூறு சதவீத மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற வேண்டும். 
திருவொற்றியூர் பாலம்:
   மணலி விரைவு சாலையிலிருந்து சடையன்குப்பம் பகுதிக்கு பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் நீண்ட நாள்களாக நடைபெறுகிறது. இதனை விரைவில் 
கட்டி முடிக்க காலக்கெடு விதிக்கப்பட வேண்டும். இப்பாலம் இல்லாததால் இங்கு செல்ல படகினை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது என்றார் வாசன். 
      நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கத்திபாரா ஜனார்தனம், டி.வி.முருகன், சுகுமாறன், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.