Monday, 25 January 2016

வேன் மோதி ஒப்பந்ததாரர் சாவு

கண்டெய்னர் லாரி நெரிசலால் தொடரும் விபத்துகள்

சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல் 

திருவொற்றியூர், ஜன.4.:திருவொற்றியூர் ஜோதிநகரில் வேன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நாகராஜன் (44) திங்கள்கிழமை உயிரிழந்தார். உடன் வந்த இவரது நண்பர் சிவகுமார் பலத்த காயங்களுடன்  
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
   திருவொற்றியூர் மேற்கு பகுதியைச் சேர்ந்த டி.கே.பி.நகரில் வசிப்பவர் நாகராஜன் (44). கட்டட ஒப்பந்தப் பணிகளைச் செய்து வருகிறார். திங்கள்கிழமை இவரது நண்பர்  பொன்னேரியைச் சேர்ந்த சிவகுமார் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் தொழில் நிமித்தமாக இருசக்கரவாகனத்தில் திருவொற்றியூர் நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது எதிரில் வந்த வேன் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜன் சம்வப இடத்திலேயே உயரிழந்தார். இவரது நண்பர் சிவகுமார் 
பலத்த காயங்களுடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து ஏற்பட்டவுடன் சம்பவ இடத்திலிருந்து வேன் டிரைவர் 
தப்பியோடிவிட்டார்.
   இது குறி்த்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து
தப்பியோடிய வேன் டிரைவரைத் தேடி வருகின்றனர்.
விபத்துக்கு கண்டெய்னர் லாரிகள் நெரிசலே காரணம்: பொதுமக்கள் சாலை மறியல்
   விபத்து குறி்த்து தகவல் அறிந்த நாகராஜனின் உறவினர்கள், பொதுமக்கள் 
சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்துக்கு காரணம் சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கண்டெய்னர் லாரிகள்தான், எனவும் இதற்கு 
போக்குவரத்து போலீஸாரின் தவறான நடவடிக்கைகளே காரணம் எனும் புகார் தெரிவித்தனர். 
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மேலும் கூறியது,
      சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு தினமும் வரிசைகட்டி நிற்கின்றன. மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, உள்வட்டச் சாலையில் இரண்டு, மூன்று வரிசைகளில் லாரிகள் 
நிறுத்தப்படுகின்றன. நான்கு வழிச்சாலையில் ஒரு மார்க்கத்தில் செல்லும் சாலை முழுதும் கண்டெய்னர் லாரிகள் அடைத்துக் கொண்டு நிற்கின்றனர்.இதனால் தடுப்புகளைத் தாண்டி  எதிர்புற மார்க்கத்தில் பொதுமக்கள் பயணி்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் மோதி எளிதாக விபத்துகள் ஏற்படுகின்றன. திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தும் இந்த வகையில்தான் 
ஏற்பட்டுள்ளது. லாரிகள் இவ்வாறு சாலைகளை அடைத்து வரிசைகட்டி நிற்பதற்கு போக்குவரத்து போலீஸார்தான் காரணம். ஒரு வரிசையில் லாரிகள் நின்று கொண்டிருக்கும்போது இன்னொரு வரிசையில் லாரிகள் ஏறி வர போக்குவரத்து போலீஸார் அனுமதிப்பதன் காரணம் என்ன?. சிலமாதங்களுக்கு முன்புதான் போலீஸாரின் இச்செயலைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். இருப்பினும் 
எவ்வித பயனும் இல்லை. இச்சாலைகளில் ஒரு வித மரண பயத்துடன்தான் நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம்.  இப்பிரச்னைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும் என
பொதுமக்கள் தெரிவித்தனர். 
துணை ஆணையர் உறுதிமொழி: 
    சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த மாதவரம் போலீஸ் துணை ஆணையர் 
எஸ்.ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தார். பின்னர் இனிமேல் கண்டெய்னர் லாரிகள் ஒரு வரிசைக்கு மேல் நிறுத்தி வைக்க
அனுமதிக்க மாட்டோம். இப்பிரச்னை குறி்த்து  சென்னைத் துறைமுக நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து எதிர்காலத்தில் கண்டெய்னர்கள் லாரிகளே வரிசை கட்டி நிற்காத வகையில் சிறப்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. 
இச்சாலை மறியலால் சுமார் இரண்டு மணி நேரம் மணலி விரைவு சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

No comments:

Post a Comment