Thursday, 17 November 2016


சேமிப்புக் கிடங்கில் கருப்புப் பணம் பதுக்கலா?

அதிகாரிகள் திடீர் சோதனையால் திருவொற்றியூரில் பரபரப்பு


திருவொற்றியூர், நவ.15:திருவொற்றியூரில் உள்ள தனியார் சேமிப்புக் கிடங்கில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக எழுந்த வதந்தியை அடுத்து திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
   எர்ணாவூர் மேம்பாலம் அருகே தனியாருக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்கு உள்ளது. இதனை பாபு என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இங்கு வெளிநாட்டிலிருந்து  கண்டெய்னர்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இங்கு செவ்வாய்க்கிழமை மாலை சுமார் மூன்று கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழு திடீர் சோதனையில் ஈடுபட்டன. மேலும் இக்கிடங்கில் கணக்கில் வராத கருப்புப் பணம் வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவதாக பத்திரிகையாளர்களுக்கு தகவல் பரவியது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதனையடுத்து சோதனை நடைபெற்ற இடத்திற்கு பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் குழுமியிருந்தனர். அவர்கள் வந்திருந்த வாகனங்கள் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமானது என்பதையடுத்து விசாரித்ததில் சோதனையில் ஈடுபட்டிருப்பது வருமான வரித்துறை அதிகாரிகள் அல்ல, தமிழக விற்பனை வரித்துறை அதிகாரிகள் தான் எனவும், இக்கிடங்கில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள பொம்மை, விளையாட்டுச் சாமான்கள் குறித்து ஆய்வு செய்யவே அவர்கள் வந்ததாகவும், இது வழக்கமான சோதனைதான் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.   இதனையடுத்து பரபரப்பு நீங்கியது. 
பழைய ரூ.1000, 500 நோட்டுக்களை மாற்றுவதில் கைமாறு

கருப்புப் பணத்தை மாற்றுவதில் தொடரும்  நூதன மோசடிகள்

திருவொற்றியூர், நவ.15:செல்லாது என அறிவிக்கப்ட்ட ரூ. 1000, 500 நோட்டுக்களை வைத்திருப்போர் அவற்றை பல்வேறு நூதன முறையில் பண பரிமாற்றம் செய்து வருகின்றனர். மேலும் சுமார் 40 சதம்வரை கமிஷனாகப் பெறப்படுவதாக கூறப்படுகிறது.  நாடு முழுவதும் தொடங்கியுள்ள இந்த மோசடியை எவ்வாறு தடுத்த நிறுத்தப்படும் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
   கடந்த நவ.8 ஆம் தேதியிலிருந்து புழக்கத்தில் இருந்து வரும் ரூ.1000, ரூ.500 ரூபாய்  நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததையடுத்து நாடு முழுவதும் வங்கிகள், ஏடிஎம்-களில்  பொதுமக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். 
பொதுமக்கள் தங்களிடம் உள்ள சொற்ப தொகையை மாற்றுவதற்கே 
மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலையில் கணக்கில் வராத பணத்தை வைத்திருக்கும் நபர்கள், நிறுவனங்கள் பல்வேறு நூதன முறையில் தங்களிடமுள்ள கோடிக்கணக்கான பழைய நோட்டுகளை பண பரிமாற்றம் செய்து வருகின்றனர். இது எப்படி சாத்தியமாகிறது? எடுத்துக்காட்டிற்கு ஓரிரண்டு  இங்கே....
முன்தொகை, சம்பளம் வழங்கிய நிறுவனங்கள்:
   இரும்புக் கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் திருவொற்றியூர் முதல் கும்மிடிபூண்டிவரை பரந்து காணப்படுகின்றன. இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் முழுமையாகவே பீகார், உ.பி. உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களே. இவர்களுக்கு இரண்டு மூன்று மாதங்கள் சம்பளத்தைச் சேர்த்து வைத்துத்தான் சம்பளம் வழங்கப்படுமாம். ஆனால் ஏற்கனவே நிலுவையில் உள்ள சம்பளத்துடன் அடுத்த மூன்று மாதங்களுக்கான சம்பளத்தையும் சேர்த்து கடந்த நவ.9 ம் தேதி ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒருசில நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முதல்ல ஒரு லட்சம் வரை முன்பணமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் நிறுவனத்தின் உரிமையாளரோ அல்லது அவருக்கு வேண்டப்பட்டவர்களோ சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் செய்யப்பட்டு விட்டன. இவற்றை தொழிலாளர்கள் வங்கியில் கொடுத்து படிப்படியாக மாற்றி வருகின்றனர். 
பொருள்களை வாங்கிக் குவித்த நிறுவனங்கள்:
   கட்டில், மெத்தை, ஃபிரிட்ஜ், வாசிங் மெசின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள், கட்டட சாமான்கள் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்துவரும் 
பிரபல நிறுவனங்கள் இதுவரை பெருமளவில் ரஷீது போடாமல் ரொக்கப் பணம் பெற்று வாங்கியும், விற்றும் வந்தனர். இதனால் கணக்கில் வராத பணம் அதிக அளவில் புழங்கி வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை அடுத்து நவ.8-ம் தேதிக்கு முன்னதாகவே அதிக தொகையை பொருள்களின் விநியோகஸ்தர்களிடம்  முன்பணமாக செலுத்தி பொருள்களை வாங்க ரொக்கமாகக் கொடுத்துவிட்டதாக கணக்கெழுதி விட்டனர். பல கோடி வர்த்தகம் நடக்கும் இத்தொழிலில் சில கோடி ரூபாய்களை சரிக்கட்டும் பணி வெற்றிகரமாகவே முடிந்து விட்டதாகவே கூறப்படுகிறது. இதற்கேற்ற வகையில் கொள்முதல் மற்றும் விற்பனை கணக்குகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் குறைந்த அளவு பழைய நோட்டுகளே உள்ளன. இவற்றையும் விரைவில் மாற்றி விடுவோம் என்கிறார் இத்தொழிலில் நீண்டகாலமாக ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் மேலாளர் ஒருவர். 
கந்து வட்டிப் பணத்தை காப்பற்றியது எப்படி?
    வடசென்னையில் தினசரி வட்டி முதல் மீட்டர் வட்டிவரை வழங்கும் நபர்கள் 
ஏராளமாக உள்ளனர். இவர்களை நம்பித்தான் சிறு தொழில்கள் முதல் பெருந்தொழில்கள்வரை உள்ளன. பல கோடி புழக்கத்தில் விட்டுள்ள இவர்கள் வங்கியில் செலுத்தினால் கணக்கு காட்ட வேண்டும் என்பதால் எப்போதும் பல லட்ச ரூபாய்களை ரொக்கமாகவே வைத்திருப்பார்கள். மேலும் அதிக அளவு வட்டி சேர்ந்துவிட்டால் ஏதாவது மனை, வீடு உள்ளிட்டவைகளை வாங்கி முதலீடு செய்து விடுவார்கள். இப்படியாக ஏராளமான சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளவர்கள் ஏராளமாக உள்ளனர். இவர்களை இடிபோல் தாக்கிய மோடியின் அறிவிப்பால் முதலில் செய்வதறியாது திகைத்தாலும் தற்போது வட்டிப் பணமாகச் சேர்ந்த பழை நோட்டுகளை மாற்றுவதில், காப்பாற்றுவதில் வெற்றிடைந்து விட்டதாகவே பெருமிதப்படுகின்றனர்.
இதன்படி இவர்களிடம் வாடிக்கையாளராக உள்ள மொத்த வியாபாரிகள் மூலம் அரிசி, பருப்பு, மளிகைச் சாமான்களை வாங்குவதற்கு முன்பணம் கொடுத்துள்ளதாக பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது பணம் வட்டிக்கு விடுபவர்களிடமிருந்து வியாபாரிகளின் கைகளுக்குச் சென்று பல்வேறு வங்கிகளில் பிரித்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கள்ளப் பணம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற வியாபாரிகள் முன்வந்ததிற்கு காரணம் ஏதும் கூற வேண்டியதில்லை. இவ்வாறான வியாபாரிகளுக்கு பணம் முதலீடே இவர்கள்தானே? எந்த வங்கி கொடுக்கிறது? என்பதே பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் கருத்தாக உள்ளது. 
வங்கி அதிகாரிகள் காட்டில் மழை?:
    இவ்வாறாக கோடிக் கணக்கில் செல்லாத பணம் கைமாறுவதற்கு வங்கிகளில் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உதாரணமாக தினமும் லட்சக் கணக்கில் வங்கியில் பண பரிமாற்றம் செய்யும் வியாபாரிகளுக்கு காசாளர் முதல் மேலாளர்வரை அத்தனை பேரும் நல்லுறவுடனே இருப்பார்கள். தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி தினமும் பல கோடி பண பட்டிவாடாா நடைபெறும் வங்கிகளில் சில கோடி ரூபாய்களை பொதுமக்களுக்கு மாற்றித் தரப்படும் கணக்கில் சரிக்கட்டும் பணி நடப்பதாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் வரிசையில் நின்று அடையாள அட்டை மூலம் பணம் வாங்குகின்றனர். அவர்களிடம் பணம் இருப்பு குறைவாக உள்ளதாகக் கூறும் வங்கி ஊழியர்கள் 4 ஆயிரத்திற்குப் பதிலாக 2 அல்லது ஆயிரம் ரூபாய் 
மட்டுமே சில வங்கிகளில் வழங்கப்படுகிறது. இதில்தான் வியாபாரிகளின் கருப்புப் பணம் கச்சிதமாகச் சரிக்கட்டப்படுகிறது. மாலை 5 மணிக்குப் பிறகு இரவு வரை
நடைபெறும் வழக்கமாக பணியின் போது இந்த இடைச் செருகலும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு கைமாறாக சுமார் 15 சதவீதம் வரை வங்கி அதிகாரிகளுக்குச் சென்றடைவதாகவும், திருவொற்றியூரில் உள்ள ஒரு வங்கியில் திங்கள்கிழமை மட்டும் ரூ.30 லட்சம்வரை கமிஷன் பணம் கைமாறியதாக அடித்துச் சொல்கிறார் இச்செயலில் ஈடுபட்ட வியாபாரி ஒருவர். 
    இந்தியாவைப் பொருத்தவரை கட்டமைக்கப்பட்ட, கட்டமைக்கப்படாத வணிகம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மளிகை, வேளான் விளைபொருள் சந்தை போன்றவை கட்டமைக்கப்படாத வணிகத்தில்தான் பெருமளவில் நடைபெறுகிறது. தற்போது எழுந்துள்ள சிக்கல் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முற்றிலுமாக பணம் முடக்கப்படும் போது இத்தொழிலே பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனைப் பயன்படுத்தி எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பல்வேறு தரப்பினரும் மோசடி பேர்வழிகளிடம் பணத்தை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே முறையான, தேவையான பணப்புழக்கத்திற்கு வங்கிகள் கடன்களை அளித்து தொழில் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. 
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் குழாய் மூலம் குடிநீர்

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன் தொடங்கி வைத்தார்

திருவொற்றியூர்,நவ.12:திருவொற்றியூர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பதினைந்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
   திருவொற்றியூர் மேற்கு பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. இதில் சில பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்துவிட்டன. மேலும் இப்பகுதியில் லாரிகள் மூலம்தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் ஏழாவது வார்டுக்கு உட்பட்ட பாலகிருஷ்ணா நகர், சரவணா நகர், சார்லஸ் நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் புதிதாக குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழாய்களுக்கு மணலியில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து இணைப்புகள் தரப்பட்டுள்ளன. சனிக்கிழமை சுமார் 16 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பொதுக் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் பணியை  முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் தொடங்கி வைத்தார். மேலும் சுமார் 300 வீடுகளுக்கு தனி இணைப்பு வழங்குவதற்கான விண்ணப்பப் படிவத்தையும் அவர் வழங்கினார்.
   இந்நிகழ்ச்சியில் சென்னை குடிநீர் வாரிய பகுதி பொறியாளர் உலகநாதன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் என். கலையரசன், வட்டச் செயலாளர் கண்ணன் மற்றும் கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
எண்ணூரில் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் அடையாளம் காணப்பட்டது
 
திருவொற்றியூர், நவ.12: எண்ணூரில் வெள்ளிக்கிழமை கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இறந்து போன இரண்டு பெண்கள் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மோகனா (55),இவரது மகள் கலைவாணி (26) என்பது தெரியவந்துள்ளது. 
   எண்ணூர் தாழங்குப்பம் அருகே கடலில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இரு பெண்கள் கடலில் மூழ்கியதாகத் தகவல் பரவியது. இதனையடுத்து அருகில் வசித்த மீனவர்கள் கடலில் இறங்கி தேடினர். அப்போது இரு பெண்களின் சடலங்களையும் மீட்கப்பட்டன. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீஸார் அவர்கள் யார் என அடையாளம் தெரியாத நிலையில் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த எண்ணூர் காவல் நிலைய போலீஸார் இறந்து போனவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் இறந்துபோனவர்கள் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மோகனா, இவரது மகள் கலைவாணி என்பது தெரிய வந்தது. கலைவாணி பொன்னேரி அருகே உள்ள மேட்டுப்பாளையம் வன்னிவாக்கம் ஊரில் கார்த்திக் என்பவருக்கு
திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பப் பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இருவரது சடலங்களையும் உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர். 
    இது குறித்து எண்ணூர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர் பெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் கைது

திருவொற்றியூர், நவ.12:திருவொற்றியூரில் டேவிட் என்ற பெயிண்டர் கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரமேஷ் (29), அன்புச்செல்வன் (23), அருள் (24) ஆகிய மூவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள ராஜாஜி நகரைச் சேர்ந்த பெயிண்டர் டேவிட் (23) என்பவர் கடந்த வியாழக்கிழமை திருவொற்றியூர்-மணலி சாலையில் உள்ள கரிமேடு பகுதியில் பாழடைந்த கட்டடம் ஒன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இக்கொலையில் தொடர்புடைய ராஜாஜி நகரைச் சேர்ந்த ரமேஷ், தண்டையார்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த அன்புச் செல்வன், இதே பகுதியைச் சேர்ந்த அருள் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் இதே வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் செயல்பட்ட சரவணன் என்பவன் தலைமறைவாகிவிட்டார். சரவணனைத் தேடும் பணியில் போலீஸாார் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். ரமேஷ் மனைவி குறித்து டேவிட் அவமரியாதையாகப் பேசி வந்ததே கொலைக்காண காரணம் என்பதும், சரவணனுக்கும், டேவிட்டுக்கும் இருந்து வந்த முன் விரோதம் போன்றவையே கொலைக்கான காரணம் என் போலீஸார் தெரிவித்தனர்.   
    கைது செய்யப்பட்ட மூவரும் சனிக்கிழமை திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் எம்.வசந்தகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் மூவரையும் பதினைந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து மூவரும்
புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே நாளில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டதற்காக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் பிரகாஷ், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை உயர் அதிகாரிகள் பாராட்டினர். 
ரூ.100 நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததே பொதுமக்கள் அவதிக்கு முக்கிய காரணம்

ஆயிரம் ரூபாய் பெற 5 மணி நேரம் காத்திருக்கும் அவலம்


திருவொற்றியூர், நவ.12: நூறு மற்றும் இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் இல்லாததே பொதுமக்கள் வங்கிகளை நோக்கி படையெடுக்க முக்கிய காரணமாக உள்ளது. மேலும் வங்கிகளில் போதிய பணம் இருப்பு இல்லாததும் பொதுமக்களுக்கும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.
       கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் செல்லாத நோட்டுகள்  டிசம்பர் 31 வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததையடுத்து ஓரிரு நாள்களில் நிலைமை சரியாகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் மூன்று நாள்களாகியும் அன்றாடத் தேவைக்குக் கூட பணம் இல்லாமல் மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
       ஏடிஎம்-களில் பணம் எடுக்கலாம் எனக் காத்திருந்தவர்கள் அதுவும் செயல்படாமல் போனதால் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சனிக்கிழமை நிலவரப்படி பொதுமக்களில் மிகக் குறைந்த அளவினர்தான் இதுவரை பணம் மாற்றியுள்ளனர். மேலும் புதிதாக மாற்ற வேண்டியவர்கள் ஏராளமாக உள்ள நிலையில் ஏற்கனவே குறைந்த அளவு பணமே மாற்றியவர்கள் அப்பணமும் செலவாகிவிட்ட நிலையி்ல் மீண்டும் வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பழைய நோட்டுகளை தாற்காலிகமாக வாங்கி வந்த சிறு வணிகர்களும் அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்டேட் வங்கியில் 60 ஆயிரம் கணக்குகள்: 
     திருவொற்றியூர் ஸ்டேட் வங்கியில் மட்டும் சுமார் 60 ஆயிரம் கணக்குகள் உள்ளன. கடந்த மூன்று நாள்களில் இங்கு அமைக்கப்பட்டுள்ள 6 கவுண்டர்கள் மூலம் இதுவரை சுமார் ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே தலா ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரம் , ஆயிரம் வழங்கப்பட்டுள்ளன எனில் 60 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு எப்போது பணம் வழங்கி முடிக்க முடியும். இதே நிலை நீடித்தால் தினமும் வாடிக்கையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தே பணம் பெற்றாக வேண்டிய நிலையே ஏற்படும். இதனால் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே அதிக அளவிலான பணம் மாற்றித் தருவதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் விரைவாகச் செய்யவில்லை எனில் பொதுமக்களின் கடுமையான அதிருப்தியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரூ.100 நோட்டுகள் புழக்கத்தில் இல்லாது ஏன்?:
இந்நிலையில் சனிக்கிழமை வரிசையில் காத்திருந்த திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அனுராதா கூறியது,
   நாட்டின் நன்மைக்காக பிரதமர் எடுத்த முடிவினை ஆதரிக்கிறேன். ஆனால்
இதன் மூலம் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ரூ.500,1000 நோட்டுகளை செல்லாது என அறிவிக்க முனைந்தபோது
அதற்கேற்ற முன்னதாகவே நூறு ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடாதது ஏன்?. மேலும் புதிய 500, 1000 ரூபாய் நோட்டுகளைத் தயாராக வைத்திருந்து விட்டு பழைய நோட்டுக்களை செல்லாது என அறிவித்திருக்கலாமே. நவ.8-ம் தேதி அறிவித்தபடி 
எதுவும் நடக்கவில்லை. ஏடிஎம் செயல்படவில்லை, சொன்னபடி ரூ.4 ஆயிரம் வீதம் வழங்கப்படவில்லை. யாரிடமாவது பணம் அதிகமாக இருந்தால் நாம் கடனாவது
வாங்கிக் கொள்ளலாம். ஆனால் காலையில் சென்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கினர். அதுவை பிற்பகல் ரூ.2,000, மாலையில் ரூ.1000 மட்டுமே பட்டுவாடா செய்யப்பட்டது. இதனைப் பெற குறைந்தபட்சம் 5 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை. இதனைத் தினந்தோறும் அனுபவிக்க முடியுமா?. கணக்கு வைத்திருப்பவர்களுக்காவது வாராந்திர அதிகபட்ச அளவீடு ரூ.20 ஆயிரத்தை ஒரே தவணையில் அளித்திருக்கலாமே. வங்கிகளுக்கு ஒரு நாள் விட்டபோது போதுமான அளவு பணத்தை இருப்புக்கு கொண்டு வந்திருக்கலாமே . மொத்தத்தில் நல்ல திட்டம்தான் என்றாலும் இவ்வளவு குளறுபடியால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்றார் அனுராதா. இதே கருத்தை வரிசையில் நின்ற பெரும்பாலான பெண்கள் ஆமோதித்ததை அறிய முடிந்தது. 
தினமும் வரிசையில் நின்றால் வருமானத்திற்கு வழி என்ன? 
    இது குறித்து வரிசையில் நின்ற தனலட்சுமி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட பெண்கள் கூறியது,
    பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்க பெட்ரோல் பங்குகளில், ஆவின் பூத்துகளில் ரூ.500 நோட்டுகள் செல்லும் என அறிவித்தார்கள். ஆனால் அங்கு ரூ.500 முழுவதுக்கும் வாங்கினால் மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள். கூலி வேலை செய்பவர்களக்கு இது சாத்தியமல்ல. மருந்துக் கடைகளில் கூட மருந்து வாங்க முடியவில்லை. வங்கி அட்டையைப் பயன்படுத்தலாம் என்றால் வங்கியில் பணம் டெபாசிட் செய்யாமல் எப்படி பயன்படுத்த முடியும். டெபாசிட் செய்ய வேண்டும் என்றாலும் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி நிலைதான் உள்ளது. தினமும் வேலைக்குச் செல்லாமல் வங்கிக்கு வந்து வரிசையில் நின்றால் வருமானத்திற்கு வழி என்ன? எங்களது அன்றாட பணிகளை யார் பார்த்துக் கொள்வது? என கேள்வி எழுப்பினர். 
     இது தவிர ஏராளமான பிரச்னைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. தினசரி வசூலாகும் பணத்தைக் கூட வங்கியில் செலுத்துவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முன்னதாகவே வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்துள்ள காசோலைகள் பணமின்றி திருப்பி அனுப்பப்படும் அவல நிலை நீடிக்கிறது. மேலும் லட்சக் கணக்கில் செலுத்த வேண்டியவர்கள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பது சாத்தியமாகப்படவில்லை. ரொக்கமாக சம்பளம் வழங்கி வந்த சிறிய நிறுவனங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர்.
    இதுபோன்ற என்னற்ற பிரச்னைகள் தொடரும் நிலையில் பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் உடனடி நடவடிக்கைகளை செயல்படுத்தியாக வேண்டும். இன்னும் ரூ.500 ரூபாய் நோட்டு வரவில்லை. வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம் 
நோட்டுக்கும் சில்லரை வாங்க வழியில்லை. எனவே என்னதான் நடக்கிறது? என்னதான் நடக்கும்? என்பதை பிரதமர் மோடி மக்களுக்கு மீண்டும் தெளிவுபடுத்தினால் நல்லது. இல்லையெனில் மூட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்திய கதைதான் ஏற்படும். 
ஓய்வூதியச் சலுகைகளை உடனே வழங்க வேண்டும்

மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர், நவ.8:தமிழ்நாடு மின்சார வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை உடனடியாக அமல்படுத்தக் கோரி திருவொற்றியூர் மின்வாரிய அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கூறியது, 
மின்வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு அரசு உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதியத்தை 
தொடர்ந்து வழங்க வேண்டும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், மின்வாரிய கூட்டுறவு சங்கங்களின் மூலம் பணியாற்றிவர்களுக்கு அவர்களின் பணிகாலம் முழுவதையும் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஓய்வூதியதாரர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றனர்.
  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியதாரர்கள் நல அமைப்பு மாநிலச் செயலாளர் கே.ஆர்.முத்துச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் ஆர்.ஜெயராமன், வெங்கட்டையா மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவொற்றியூர் மேற்கு-வள்ளலார் நகர் இடையே சிற்றுந்து போக்குவரத்து தொடக்கம்

திருவொற்றியூர், நவ.8:திருவொற்றியூர் மேற்கு பகுதியிலிருந்து வள்ளலார் நகருக்கு  சிற்றுந்து போக்குவரத்து வசதியை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
    திருவொற்றியூர் மேற்கு பகுதியில் ராஜாஜி நகர், கார்கில் நகர், பாலகிருஷ்ணா நகர் கலைஞர் நகர் என சுமார் இருபதுக்கும் மேற்பட்ட குடியிருப்பு கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் ஒரு லட்சம் பேருக்கும் மேல் வசித்து வருகின்றனர். திருவொற்றியூரின் கிழக்கு, மேற்கு பகுதிகளிடையே கல்கத்தா, டெல்லி செல்லும் ரயில்வே இருப்புப் பாதை அமைந்துள்ளதால் மேற்கு பகுதிக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் சுமார் 3 கி.மீ. தூரம் வரை நடந்துதான் இப்பகுதியில் வசிக்கும் ரயில்நிலையம், பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியிலிருந்து சிற்றுந்து வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாகக் கோரி வந்தனர்.
    இதனையடுத்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவொற்றியூர் மேற்கு பகுதியிலுள்ள ராஜாஜி நகரிலிருந்து வள்ளலார் நகர்வரை சிற்றுந்து போக்குவரத்து வசதி
செய்து தரப்பட்டுள்ளது. சிற்றுந்து தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
இதில் சிற்றுந்துவை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன் தொடங்கி வைத்தார். அப்போது மேலும் இரண்டு சிற்றுந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
   இந்நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் என்.கலையரசன், மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தாவர நோய்த் தடுப்புச் சான்றிதழ்களில் மோசடி:

வேளாண் விளைபொருள் ஏற்றுமதி, இறக்குமதி சோதனையில் புதிய நடைமுறை 

சரக்குகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்படும் அபாயம்?


திருவொற்றியூர், அக்.4: வேளாண் விளைபொருள்கள் ஏற்றுமதி, இறக்குமதியின் போது மோசடியான முறையில் தாவர நோய்த் தடுப்புச் சான்றிதழ்கள் பெறப்பட்டு வந்ததாக எழுந்த புகாரை அடுத்து இச்சான்றிதழ்களை வழங்குவதில் புதிய நடைமுறை மற்றும் கட்டுப்பாடுகளை விதிக்கும்படி மத்திய வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சரக்குகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். 
வேளாண் விளைபொருள் ஏற்றுமதி, இறக்குமதி:    
   சென்னைத் துறைமுகத்திலிருந்து மட்டும் மக்காச்சோளம், வெங்காயம், அரிசி, மிளகாய், வேர்க்கடலை ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கண்டெய்னர்கள் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதேபோல்  மரங்கள், மரக் கட்டைகள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள், உளுந்து, துவரை, பட்டாணி, சுண்டக் கடலை உள்ளிட்ட பருப்பு வகைகள்,  அலங்காரப் பூக்கள் என ஆண்டுக்கு சுமார் 80 ஆயிரம் கண்டெய்னர்கள் வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.  மொத்தத்தில் வேளாண் வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஆய்வுச் சான்று வழங்கும் தாவரப் பாதுகாப்புத் துறை
       இவ்வாறு வேளாண் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் முன்பு மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து சான்று அளிக்கப்பட வேண்டும்.  இச்சான்றில் விளைபொருளின் பொதுவான தாவரவியல் பெயர், தரம், கிருமி, பூச்சி ஏதும் இல்லை, அளவு, காலம் உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சட்டப்பூர்வமான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாமல் எந்த கண்டெய்னரையும் எடுத்துச் செல்ல சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கமாட்டார்கள்.  
       ஏற்றுமதி, இறக்குமதிக்கான சரக்குகளை நேரில் வந்து ஆய்வு செய்ய வர்த்தகர்கள் விண்ணப்பித்தவுடன் மத்திய தாவரவியல் நோய்க் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளுக்கு நேரில் சென்று சோதனையிட்டு, மாதிரிகள் எடுத்து பின்னர் அலுவலக ஆய்வகத்தில் பரிசோதிப்பார்கள். இதில் எவ்வித நோய்க்கிருமிகளும் இல்லையென முடிவுக்கு வந்த பிறகு தடையில்லாச் சான்றிதழ்களை முத்திரையிட்டு அளிப்பார்கள். இதனை சுங்கத் துறையில் சமர்ப்பித்த பிறகே ஏற்றுமதி, இறக்குமதி செய்ய முடியும். முன்பெல்லாம் ஒரே நாளில் கிடைத்த இச்சான்றிதழ்கள் கடந்த சில ஆண்டுகளாக மூன்று முதல் ஐந்து நாள்கள்வரை ஆகிறது. 
போலிச் சான்றிதழ்கள்:
      ஏற்றுமதிக்கான சரக்குகளை ஆய்வு செய்வதற்கு முன்பு மீத்தைல் புரோமைடு என்ற பூச்சிக்கொல்லி மருந்தை புகையூட்டுதலுக்கு (Fumigation)உட்படுத்த வேண்டும். இதற்கென சென்னையில் மட்டும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் சிலர் புகையூட்டுதலுக்கு உட்படுத்தாமலேயே சான்றிதழ்களை வழங்கி மோசடியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் மத்திய தாவர நோய்க்கட்டுப்பாட்டுச் சான்றிதழையே போலியாகத் தயாரித்து சுங்கத்துறையில் அளித்ததாகவும், பின்னர் கண்டறியப்பட்டு 
தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
மோசடியைத் தடுக்க புதிய நடைமுறை அறிமுகம்:
   இந்நிலையில் மத்திய தாவர நோய்த் தடுப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர் வி.கே.ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
      ஏற்றுமதி செய்யப்படும் போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை முறையாக மேற்கொள்ளாமல் மோசடியாக நோய்த் தடுப்பு தடையில்லாச் சான்றுகளை பெற்று வருவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் வந்துள்ளன. மேலும்  இறக்குமதி செய்யப்படும் இடத்தில் பூச்சிகள் தென்பட்டால் வெளிநாடுகளில் இந்தியாவின் வேளாண் விளை பொருள்களுக்குத் தடை விதிக்கும் அபாயமும் உள்ளது.  எனவே இனி சரக்குகளை பூச்சிக் கொல்லி புகையூட்டுதலுக்கு உட்படுத்தும்போது அதற்கு ஆதாரமாக புகைப்படங்கள், ஒளிப்பதிவுகளை ஆய்வின்போது அதிகாரிகளிடம் சமர்பிக்க வேண்டும். இதனை உடனே நடைமுறைப்படுத்துமாறு அனைத்து மண்டல அலுவலகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
சென்னையில் இன்று ஆய்வுக் கூட்டம்:
    இந்நிலையில் புதிய நடைமுறையை செயல்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள மத்திய தாவரவியல் நோய்த்தடுப்பு மண்டல அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. மத்திய வேளாண் அமைச்சக இணைச் செயலாளர் (தாவர நோய்த் தடுப்பு) அஸ்வனி குமார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மண்டல இணை இயக்குனர் மாணிக்கம், பூச்சிக்கொல்லி புகையூட்டல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் (Fumigation Operators) கலந்து கொள்ள உள்ளனர். 
     கண்டெய்னர் லாரிகள் நெரிசல், போதிய கிடங்கு வசதிகள் இல்லாமை, சர்வதேசப் போட்டி உள்ளிட்ட பிரச்னைகளால் வேளாண் விளைபொருள்கள் ஏற்றதி படிப்படியாகக் குறைந்து வருகிறது. எனவே புதிய நடைமுறைகள் மூலம் ஏற்றுமதி, இறக்குமதியில் மேலும் தாமதம் ஏற்படாமல் இருப்பதில் கவனம் தேவை என பல்வேறு தரப்பினரும் 
கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

திருவொற்றியூர், அக்.17:எண்ணூர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து தரக்குறைவாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மாரிமுத்துவை (27) திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
    நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை எண்ணூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு நபர்கள் பேசிய நிலையில் இக்கட்சியின் திருவொற்றியூர் தொகுதி கொள்கை பரப்புச் செயலாளர் மாரிமுத்து பேசியுள்ளார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.வினர் பொதுக்கூட்ட மேடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டள்ளனர். இதனையடுத்து பொதுக்கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
     இதனையடுத்து அ.தி.மு.க.வினர் அளித்த புகாரின் பேரில்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய எண்ணூர் காவல் போலீஸார் மாரிமுத்துவை திங்கள்கிழமை கைது செய்தனர். பின்னர் திருவொற்றியூர் குற்றவியல் நடுவர்மன்ற  நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து மாரிமுத்துவை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 
எண்ணூரில் மர்மக் காய்ச்சலால் இளம்பெண் சாவு

திருவொற்றியூர், அக்.17:எண்ணூரில் மர்மக் காய்ச்சலால் சந்தியா (17) என்ற  இளம்பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். 
   எண்ணூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் சங்கர். இவரது மனைவி செல்வி. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் சந்தியா. 
சந்தியாவிற்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீர் காய்ச்சல் ஏற்பட்டு திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் தொடர் காய்ச்சல் இருந்து வந்ததால் அங்கிருந்து சில தினங்களுக்கு முன்பு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு 
மாற்றப்பட்டார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தியாவிற்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் சந்தியா இறந்து போனார். 
    கடந்த வெள்ளிக்கிழமைதான் எண்ணூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த தர்ஷினி என்ற ஏழு வயது சிறுமி மர்மக் காய்ச்சலால் இறந்து போன நிலையில் இப்பகுதியில் மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவொற்றியூர், அக்.15:சென்னையை அடுத்து  மணலி புதுநகர்  அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். 
     சென்னையை அடுத்த மணலி புதுநகரில் அமைந்துள்ள  அய்யா வைகுண்ட தர்மபதி 10 நாள் திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமைவரை வரை 10 நாள்கள்  நடைபெற்றது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவினையொட்டி கடந்த 10 நாள்களாக  ஏடுவாசித்தல், அலங்கார வாகனத்தில்  அய்யா வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை 36 அடி உயரம் கொண்ட திருத்தேர் 
அய்யா வழி பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் வீதிகள் வழியாக உலா வந்த தேர் பின்னர் இருப்பு சேர்ந்தது.   தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி அன்னதானம், தண்ணீர், மோர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. 
    நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை ஏ.நாராயணன், தமிழ்வநாடு ணிகர் சங்கங்களின் கூட்டப்பு தலைவர் விக்கிரமராஜா, மக்களவை முன்னாள் உறுப்பினர் ஜெயதுரை,  மணலி மண்டலக் குழு தலைவர் தங்கிசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை  தர்மபதி தலைவர்  தலைவர் பி.தங்கபெருமாள், செயலாளர் தேவதாஸ், வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 
எண்ணூரில் மர்மக் காய்ச்சலால் குழந்தை சாவு 

திருவொற்றியூர், அக்.15:எண்ணூரில் மர்மக் காய்ச்சலால் எண்ணூரில் தர்ஷினி (7) என்ற பள்ளிக் குழந்தை வெள்ளிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தது.
   எண்ணூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி மதிவாணி. சுயதொழில் செய்து வரும் தாமோதரன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட அளவில் நிர்வாகியாக உள்ளார். இவர்களுக்கு சாருமதி, தர்ஷினி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். தர்ஷிணி அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தர்ஷினிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு தர்ஷினியை அழைத்துச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமையும் காய்ச்சல் குறையவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக வாந்தி எடுத்ததைத் தொடர்ந்து தர்ஷினி மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தர்ஷினியைக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் தர்ஷினியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து போய்விட்டதாகத் தெரிவி்த்துள்ளனர்.
    சனிக்கிழமை தாமோதரனின் வீட்டிற்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தர்ஷினியின் மரணம் குறித்து துக்கம் விசாரித்தார். 
காய்ச்சல் ஏற்பட்டு இரண்டே நாள்களில் தர்ஷினி இறந்து போன சம்பவம் 
தர்ஷினியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
கண்டெய்னர் லாரிகளை குடிபோதையில் ஓட்டுவோர் 40 சதவீதம் உள்ளனர்

தொடரும் விபத்துகளால் அலறும் பொதுமக்கள் 

திருவொற்றியூர், அக்.14:சென்னை, காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு இயக்கப்படும் கண்டெய்னர் லாரிகளை குடிபோதையில் ஓட்டும் டிரைவர்கள் சுமார் 40 சதவீதம்வரை உள்ளதாக சமீபத்தில் தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 
    சென்னையில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் இயங்கி வருகின்றன. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தின் அச்சாணியாக இருக்கக் கூடிய இந்த கண்டெய்னர் லாரி போக்குவரத்துத் தொழில் சென்னைத் துறைமுகத்தில் பல ஆண்டுகளாகத் தொடரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் படிப்படியாக 
சிக்கலை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும் தகுதியான டிரைவர்களுக்கு கடும் கிராக்கி இருந்து வரும் நிலையில் இத்தொழிலால் நட்டத்திற்கு ஆளான பலர் லாரிகளை விற்றுவிட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனர். மேலும் டிரைவர்கள் தட்டுப்பாட்டினால் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இருக்கும் டிரைவர்களில் பெரும்பாலானவர்கள் குடிபோதையில் 
வாகனங்களை இயக்குவதாகக் கூறப்படுகிறது. இதனால் தினந்தோறும் பொதுமக்கள் செத்து மடிவது வடசென்னை பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் ஐந்து பேர் திருவொற்றியூரில் மட்டும் கண்டெய்னர் லாரிகளால் 
உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




குடிபோதையில் 40 சதவீத டிரைவர்கள்:
இப்பிரச்னை குறித்து அதானி காட்டுப்பள்ளி தனியார் துறைமுக முக்கிய நிர்வாகி கூறியது,
   அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு கப்பல்கள் வந்து செல்வது அதிகரித்து வருவதையொட்டி கண்டெய்னர் போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே 
லாரி ஓட்டுனர்கள் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வருவதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து சமீபத்தில் ஒருநாள் திடீர் சோதனை நடத்தினோம். இதில் சுமார் 40 சதவீதம் பேர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அவர்களை எச்சரித்து இனி குடிபோதையில் வந்தால் லாரிகள் உள்ளே அனுமதிக்கப்படாது என அறிவித்துள்ளோம். துறைமுகத்தில் கனரக கிரேன்கள் அங்குமிங்கும் நகர்ந்து செல்லும் நிலையில் 
குடிபோதையில் உள்ளே செல்வதைத் தடுப்பதால் பெரும் விபத்துகளை தவிர்க்க இயலும் என்றார் அவர்.
ஓட்டுனர் பற்றாக்குறையே காரணம்:
   இது குறித்து டிரைலர் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.ராஜா கூறியது,
   ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த இத்தொழில் படிப்படியாக நலிவடைந்து வருகிறது. முன்பெல்லாம் ஒரு கண்டெய்னர் லாரியில் ஒரு டிரைவர், ஒரு கிளீனர் இருப்பார்கள். கிளீனராக இருந்து கனரக ஓட்டுனர் உரிமம் பெற்று டிரைவாக வருவார்கள். ஆனால் 8 வது படித்தவர்களுக்கு மட்டுமே வணிக வாகன ஓட்டுனர் உரிமம் என மத்திய அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டுப்பாடு விதித்தது. இதனையடுத்து படித்தவர்கள் யாரும் கிளீனர் வேலைக்கு வருவதில்லை. இதனால் டிரைவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. லாரி ஓட்டுபவர்கள் போதிய பயிற்சியின்றி கண்டெய்னர் லாரிகளை ஓட்டிவிட முடியாது. எனவே பயிற்சி பெற்ற டிரைவர்களுக்குப் பதிலாக லாரி டிரைவர்களே வாகனங்களை ஓட்டுகின்றனர். சென்னையில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. மதுவிற்கு அடிமையான டிரைவர்கள் கூட வேலையில் சேரும்போது குடிபழக்கம் இல்லை என்றுதான் கூறுகின்றனர். எனவே ஏற்கனவே டிரைவர்கள் தட்டுப்பாடு இருக்கிற நிலையில் கிடைக்கிற டிரைவர்களை வைத்து ஓட்டவேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே போதிய கண்டெய்னர் லாரி டிரைவர்களை உருவாக்கித் தரவேண்டியது அரசின் கடமையாகும் என்றார் ராஜா
தகுதிச் சான்று, காப்பீடு இல்லாமல் ஓடும் வாகனங்கள்: 
இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியது,
     தமிழகத்தில் சுமார் 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இவைகளில் சுமார் 1400 பணியிடங்கள் காலியாக உள்ளன. உயர் அதிகாரிகள் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.  தினமும் அதிகரித்து வரும் வாகனப் பதிவுகள், தகுதிச் சான்றுகளை அளிப்பது உள்ளிட்டவைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தகுதிச் சான்று பெற கொண்டுவரப்படும் வாகனங்கள் அனைத்தும் வரிசையாக நிற்க வைத்து ஆய்வு செய்வதோடு கடமை முடிந்து விடுகிறது. ஒவ்வொரு வாகனமும் தகுதியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனில் போதிய ஆய்வாளர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் பெருமளவு ஊழல்கள் நடைபெறுவதை அனைவரும் அறிவார்கள்.  மேலும் வாகனச் சோதனை என்பது அரிதாகி விட்டது. சென்னை மாநகரில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தகுதிச் சான்று, வாகன காப்பீடு இல்லாமல் ஓடுகின்றன.
        மேலும் முறையான ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. சென்னை நகரச் சாலைகள் போதுமான பாதுகாப்பு நிறைந்தவைகளாக இல்லை. நடைபாதைகள் அனைத்தும் சிறுவணிகர்களால் ஆக்கிமிக்கப்பட்டுள்ளன. இதனை போக்குவரத்து போலீஸார், மாநகராட்சி அதிகாரிகள் மாமூல் பெற்றுக் கொண்டு வேடிக்கை பார்க்கின்றனர். எச்சரிக்கை பலகைகள், நடைபாதை குறியீடுகள், சமிஞ்சை கருவிகள் முறையாக இல்லை. பொதுமக்களும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பதில்லை. எனவே வெறும் ஓட்டுனர்கள் மட்டுமே விபத்துகளுக்குக் காரணமாக்க முடியாது. இது குறித்து போக்குவரத்து, காவல், மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலைத் துறை, லாரி உரிமையாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றார் சுகுமார்.
போதைக்குக் காரணம் மன உளைச்சலே:
    கண்டெய்னர் லாரி டிரைவர்கள் குடிபோதையில் ஓட்டுவதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து சென்னைத் துறைமுக கண்டெய்னர் லாரி டிரைவர், கிளீனர் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் ஆசைத்தம்பி கூறியது,
   கண்டெய்னர் லாரிகளை ஓட்டுவது என்பது எளிதானதல்ல. சென்னைத் துறைமுகத்தில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் இருந்து வருவதே 
டிரைவர்கள் தட்டுப்பாட்டுக்குக் காரணம். மாதவரம், மணலி, மீஞ்சூர் பகுதிகளிலிருந்து சென்னைத் துறைமுகம் சுமார் 30 கி.மீ. தூரத்தில்தான் உள்ளது. முன்பு இதனை சில மணி நேரங்களில் கடந்துவிட முடியும். ஆனால் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக 
இதே தூரத்தைக் கடக்க குறைந்தபட்சம் 24 மணி நேரம் முதல் மூன்று நாள்கள்வரைகூட ஆகிறது.  இவ்வாறு வரிசையில் செல்லும் போது வாகனங்கள் விட்டுவிட்டுச் செல்ல இயலாது. இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட செல்ல முடியாது. குளிக்க முடியாது. வழியில்தான் எல்லாம். போதிய தூக்கம் இல்லாமல் 
வாகனங்களை ஓட்ட வேண்டும் என்பதால் சில நேரங்களில் மது குடிக்கத் தொடங்கிய டிரைவர்கள் படிப்படியாக மதுவிற்கு அடிமையாகிவிட்டனர். இதனால் அவர்களின் குடும்பமும்தான் பாதிக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும். மது குடிப்பதை நியாயப்படுத்தவில்லை என்றாலும் போதிய தொழில் சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவேண்டியது யாருடைய பொறுப்பு? என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். 
கனரக வாகன ஓட்டுனர் தொழிலுக்கு சமூக அங்கீகாரம் வழங்க வேண்டும். மேலும் தேவையான இவ்வகை ஓட்டுனர்களை உருவாக்கி அவர்களுக்கு விழிப்புணர்வுடன் பணியமர்த்தினால் இப்பிரச்னையை எதிர்காலத்தில் தவிர்க்கலாம். வெறும் 
தண்டனைகள், அபராதம் மட்டுமே இப்பிரச்னையைத் தீர்க்க இயலாது என்றார் ஆசைத்தம்பி.
    படித்த இளைஞர்களை இத்தொழிலில் ஈடுபடும் வகையில் திறன் பயிற்சியுடன் கூடிய ஓட்டுனர் உரிமங்களை வழங்கி சமூக அந்தஸ்துடன் கூடிய தொழிலாக இதனை மாற்றுவதன் மூலம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். இது குறித்து போதிய ஆலோசனைகள் நடவடிக்கைகளைத் தொடர வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதே 
சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 
இயற்கை பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி 

மணலி அருகே ஏரியில் நடைபெற்றது 

திருவொற்றியூர், அக்.13:வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது குறித்த இயற்கை பேரிடர் பணிகள் ஒத்திகைப் பயிற்சி மணலி அருகே கடப்பாக்கம் ஏரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது பூண்டி, புழல் ஏரிகளில் உபரி நீர் திறக்கப்பட்டதையடுத்து மணலி, திருவொற்றியூர் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.  மேலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன. போக்குவரத்து வசதிகள் அடியோடு நிறுத்தப்பட்டன. மீட்பு குழுவினர் படகுகள் மூலம் ஆயிரக்கணக்கானோரை மீட்டு கரை சேர்த்தனர். இந்நிலையில் மழைக்காலத்தில் இவ்வாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்களைக் காப்பாற்றுவது எப்படி என்பது குறித்த இயற்கை பேரிடர் மீட்பு பணிகள் ஒத்திகை பயிற்சி வருவாய்த்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. மணலி அருகே உள்ள கடப்பாக்கம் ஏரியில் இப்பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. அப்போது வெள்ளத்தில் சிக்கிய இரண்டு பள்ளி மாணவர்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ரப்பர் படகுகளில் விரைந்து சென்று மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். இதேபோல் கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்தவர்களும் மீட்கப்பட்டனர். 
இப்பயிற்சி பேரிடர் காலங்களில் உதவியாக இருக்கும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
    அம்பத்தூர் கோட்டாட்சியர் வி.வீரப்பன் முன்னிலையி்ல் நடைபெற்ற இந்த ஒத்திகையில் திருவொற்றியூர் வட்டாட்சியர் மணிமேகலை, சிறப்பு வட்டாட்சியர் ராஜ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரிகள் தர்மலிங்கம், விஜயசந்திரன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். 

Thursday, 13 October 2016


தேக்கநிலையில் சிக்கித் தவிக்கும் சென்னைத் துறைமுகம் 

புதிய துறைமுகத் தலைவருக்கு காத்திருக்கும் சவால்கள் 

திருவொற்றியூர், அக்.6:பல்வேறு பிரச்னைகளால் தொடர்ந்து சில ஆண்டுகளாக தேக்கநிலையில் இருந்து வரும் சென்னைத் துறைமுகத்தை சீரமைக்க புதிய துறைமுகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பி.ரவீந்திரன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
     சென்னைத் துறைமுகத்தலைவராக ஐந்தாண்டுகள் முழுமையாக பணியாற்றிய  அதுல்ய மிஸ்ரா கடந்த ஓராண்டுக்கு முன்பு தமிழக அரசு பணிக்குத் திரும்பினார். சென்னைத் துறைமுகத் தலைவராகத் தேர்வு பெற குடிமைப் பணி அதிகாரிகள்தான் (Civil Sevice cadre) தகுதி படைத்தவர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவரின் பணிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். இந்நிலையில் கடந்த ஓராண்டாக புதிய துறைமுகத் தலைவரை கப்பல்த் துறை அமைச்சகம் தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் துறைமுகத் தலைவராக பொறுப்பு அதிகாரிகளே இருந்து வந்தனர். இவர்களும் அடிக்கடி மாறி வந்ததால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக எவ்வித பிரச்னைகளுக்கும் முழுமையாகத் தீர்வு காணப்படவில்லை. இதனால் துறைமுகத்தின் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு ஒருவித நிரந்தர தேக்க நிலையை சென்னைத் துறைமுகம் எட்டியுள்ளது. இந்நிலையில் புதிய தலைவராக காஞ்சிபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ரயில்வே போக்குவரத்து பிரிவு குடிமைப் பணி அதிகாரியான பி.ரவீந்திரன் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். இவர் ஐந்தாண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார். இந்நிலையில் 
துறைமுகத்தைச் சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துறைத் தலைவர் பதவிகள் காலி:
    துறைமுகத் தலைவருக்கு உதவிகரமாகச் செயல்பட வேண்டிய முக்கியத் துறைகளின் தலைவர் பதவிகள் நீண்ட நாள்களாகக் காலியாகவே உள்ளன. நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி, தலைமை மருத்துவ அதிகாரி, 
போக்குவரத்து மேலாளர், கடல்சார் துணை பாதுகாவலர், தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட பதவிகளில் தற்போது பொறுப்பு அதிகாரிகளே உள்ளனர். இவர்களால் 
எவ்வித உறுதியான முடிவுகளையும் எடுக்க முடிவதில்லை எனக் கூறப்படுகிறது. 
நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்புடைய இந்த அதிகாரிகளை நியமனம் செய்வதில் புதிய தலைவர் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். 
கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல்:  
   துறைமுகத்தின் வளர்ச்சியைப் பெருமளவு பாதிப்பது கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல்தான். ஆனால் இப்பிரச்னையின் தீவிரத்தன்மையைக் குறைக்க நீ்ண்ட காலமாகவே எந்த அதிகாரியும் முழுமையாக  ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு 
இருந்து வருகிறது. ஒவ்வொரு திங்கள்கிழமையும் காலியாக இருக்கும் துறைமுகம் அடுத்தடுத்த நாள்களில் நிரம்பிவழிவதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்தால் புதிய தலைவருக்கு இதில் தீர்வு கிட்டுவதில் சிக்கல் ஏதும் இருக்காது. காலியாக வரும் வாகனங்களை நிறுத்தி வைக்க போதிய இடவசதியை ஏற்படுத்தி, உள்ளே, வெளியே செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி,  இங்குள்ள தனியார் சரக்குப் பெட்டக முனையங்களின் செயல்பாடுகளை துறைமுகத்தலைவர் கண்காணிக்க வேண்டும். தற்போது எங்கு பார்த்தாலும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வாகனங்கள் நிறுத்திவைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரச்னை ஒன்றுக்கு தீர்வு கண்டாலே துறைமுகத்தின் வளர்ச்சிப் பாதைக்கான கதவு மீண்டும் திறக்கப்படுவதில் சந்தேகம் இல்லை.
தனியார் துறைமுகங்களின் போட்டி:
   சென்னைக்கு அருகே அதானி காட்டுப்பள்ளி, கிருஷ்ணபட்டனம்,  காரைக்கால் துறைமுகம் உள்ளிட்ட தனியார் துறைமுகங்கள்  சமீபகாலமாக பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளன. மேலும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மிகப்பெரிய சரக்குப் பெட்டக முனையம் சுமார் ரூ.1,800 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவைகளின் வளர்ச்சி என்பது சென்னைத் துறைமுகத்தின் வீழ்ச்சியில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்துறைமுகங்கள் கவர்ச்சிகரமான கட்டண விகிதங்கள், மிக விரைவான சேவை, எளிமையான நடைமுறைகள் போன்ற வாக்குறுதிகளை அளித்து ஏற்றுமதி, இறக்குமதியாளர்களை தன்னகத்தை இழுக்கின்றனர். ஆனால் இதற்கு போட்டியாகச் செயல்பட வேண்டிய துறைமுக சந்தைப் பிரிவு அதிகாரிகள் திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் நட்சத்திர விடுதிகளில் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர உருப்படியான எதையும் செய்துவிடவில்லை என பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர்.
மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள்:
  துறைமுகத்தில் நிலவும் நெரிசலைக் கருத்தில் கொண்டு கட்டமைப்பு வசதிகளை 
மேம்படுத்த வேண்டும். மூடிக்கிடக்கும் பாதிக்கும் மேற்பட்ட நுழைவு வாயில்களை வாகனப் போக்குவரத்துக்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கார் ஏற்றுமதிக்காக வரும் லாரிகள் திரும்பிச் செல்ல இரு நாள்களாகின்றன. இதே நிலைதான் இரும்புத் தகடு, கிராணைட் கற்கள் ஏற்றிவரும் லாரிகளுக்கும் இருந்து வருகிறது. சென்னைக்கு அருகே மணலியில் ஒரு சரக்குப் பெட்டக முனையத்தை ஏற்படுத்தி அதிகமான கண்டெய்னர்களை சரக்கு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லும் திட்டம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். இதன்மூலம் லாரிகள் மூலம் ஏற்படும் நெரிசல் குறையும்.  மேலும் துறைமுகத்தின் உள்ளே இரண்டு அல்லது மூன்று இடங்களில் மேம்பாலம் அமைப்பதால் போக்குவரத்து தடையின்றி நடைபெற ஏதுவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 
வழக்குகளில் சிக்கித் தவிக்கிறது துறைமுகம்:
   நிலக்கரி கையாள்வதற்கான தடை, மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலம் உள்ளிட்டவை குறித்த சில வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், நூற்றுக்கணக்கான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவ்வழக்குகளுக்காக சுமார் 350 வழக்குரைஞர்கள் ஆஜராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கென வழக்குப் செலவுகளுக்காக கணிசமான தொகை துறைமுக நிர்வாகத்தால் தொடர்ந்து செலவிடப்பட்டு வருகிறது. மேலும் நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இதனால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்க மாற்றுத் திட்டம் எதனையும் துறைமுக நிர்வாகம் இன்றுவரை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புதிய தலைவர் இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து  முக்கிய வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர் பிரச்னைகள்:
   சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றிய சென்னைத் துறைமுகத்தில் தற்போது சுமார 5 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். சரக்குப் பெட்டகங்களைக் கையாள்வதில் தனியார் நிறுவனங்கள், நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வதில் தடை போன்றவைகளால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித பணிகளும் இல்லை. இவர்களின் வருகையை உறுதி செய்ய சமீபத்தில்தான் டிஜிட்டல் வருகைப் பதிவேடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமே போதுமானதல்ல. வேலைக்கு வரும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறித்து எவ்வித அளவீடுகளும் இல்லை. மேலும் கூடுதலாக இருக்கும் தொழிலாளர்களை மாற்றுப்பணியில் ஈடுபடுத்துவதில் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்போடு முனைப்பு காட்ட வேண்டும். 
    இது தவிர ஸ்ரீபெரும்புதூர் உலர் துறைமுகத் திட்டம், திருவொற்றியூரில் வாகன நிறுத்த முனையம், காற்றாலை மின் திட்டங்கள், உள்நாட்டு கடலோர சரக்குப் போக்குவரத்து, மின்னொளி கூட்டுதல், பல்லடுக்கு கார் நிறுத்த முனையம், பயணிகள் முனையம் உள்ளிட்டஏராளமான திட்டங்கள் நிலுவையிலும், மந்த கதியிலும் உள்ளன.
இவையெல்லாம் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரனுக்கு 
சவாலாக உள்ளன. சென்னைத் துறைமுகத்தின் நிலை அறிந்துதான் கண்டிப்புடனும், துடிப்புடனும் செயல்படக்கூடியவர் என்ற பெயர் பெற்ற பி.ரவீந்திரன் இப்பொறுப்புக்கு கப்பல்த்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது என கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாகத் தொடரும் வீழ்ச்சியை அடுத்த சில ஆண்டுகளில் வளர்ச்சிப் பாதைக்கு
புதிய துறைமுகத் தலைவர் கொண்டு செல்வாரா? என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது. 

கல்வியறிவுக்கான மதிப்பீடு கணிணி அறிவோடு இணைந்ததாகிவிட்டது

அரிமா ஏ.மரியநாதன் 

திருவொற்றியூர், அக்.6:தற்போதைய நிலையில் கல்வியறிவு பெற்றவர்களுக்கான மதிப்பீடு கணிணி அறிவோடு இணைந்ததாகிவிட்டது என அரிமா சங்க நிர்வாகி ஏ.மரியநாதன் திருவொற்றியூரில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
  பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் பெண்களுக்கான கணிணி பயிற்சி மையம் திருவொற்றியூர் ஜோதிநகரில் சமீபத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இங்கு பயிற்சி பெற்ற பெண்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அரிமா சங்க (நூற்றாண்டு விழா) மண்டல தலைவர் ஏ.மரியநாதன் பயிற்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் புதியதாக 
இணையும் பெண்களுக்கான பயிற்சி திட்டத்தை திருவொற்றியூர் அரசு கல்லூரி முதல்வர் முனைவர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மரியநாதன் பேசியது,
    தற்போதைய நிலையில் கல்வியறிவு பெற்றவர்களுக்கான மதிப்பீடுகள் என்பது கணிணி அறிவுடன் இணைந்ததாக உள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு படித்துப் 
பட்டம் பெற்றவர்கள் திருமணத்திற்கு பிறகு குடும்பம், பிள்ளைகளுடன் கூடிய வீட்டை பராமரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். தற்போது வளர்ந்து வரும் கணிணிமயமாக்கத்தால் ஏராாளமான வலைதளங்கள், நவீன செல்போன்கள், உள்ளிட்டவற்றைக் கையாள்வதற்கு வீட்டிலிருக்கும் பெண்களுக்கு சிரமமாக உள்ளது.
மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய பெண்களுக்கு 
கணிணி அறிவு அவசியமாகிறது. மேலும் கணிணி பயிற்சி இருந்தால் 
வீட்டிலிருந்தபடியே கூட வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம். இதனைக் கருத்தில் கொண்டுதான் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் இப்பகுதியில் நிரந்தர 
பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு அடிப்படையான கணிணி குறித்த பயிற்சிகள், வலைதளங்களைக் கையாள்வது, முகநூல், சுட்டுரை, மின்னஞ்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றார் மரியநாதன்.
குழந்தைகளுக்கு உதவ முடியும்:
நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த பெண்கள் கூறியது,
    நாங்கள் ஏற்கனவே ஓரளவு படித்திருப்பதால் இப்பயிற்சி பெரும் உதவியாக இருந்தது. தற்போது அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் பிள்ளைகளுக்கு பயிற்சித் திட்டம் என்ற பெயரில் ஏராளமான பணிகளை பிள்ளைகள் மூலம் செய்துவரச் சொல்கின்றனர். கணிணி அறிவு இல்லாம் இப்பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் உதவ முடியாது. இப்பயிற்சியின் மூலம் குழந்தைகளின் பயிற்சித் திட்டங்களுக்கு நாமே நேரடியாக உதவ முடியும். மேலும் வீட்டைப் பார்த்துக் கொண்டே கணிணி மூலம் வேலை செய்து சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றனர். 
    இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜி.வரதராஜன், சென்னை பசுமை இயக்க நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி, செயின்ட் ஆண்டனி பள்ளி முதல்வர் கேப்ரியேல் ரவி, நகைச்சுவை நடிகர் வெங்கையா பாலன் மற்றும் கிராம நிர்வாகிகள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் நவராத்திரி திருவிழா

திருவொற்றியூர், அக்.3:திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் 10 நாள் நவராத்திரி திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. 
     முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை தபசு அலங்காரம், திங்கள்-பராசக்தி, செவ்வாய்-நந்தினி, புதன்-கௌரி, வியாழன்-பத்மாவதி, வெள்ளி-உமாமகேஸ்வரி, சனி-ராஜராஜேஸ்வரி, ஞாயிற்றுகிழமை-மகிஷாசுரமர்த்தினி, திங்கள்-சரஸ்வதி, இறுதி நாளான அக்.11 செவ்வாய்க்கிழமை மீனாட்சி அலங்காரம் நடைபெற உள்ளது. இவ்விழாவினையோட்டி பல்வேறு நடனம், நாட்டியம், இசைக்கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் தினமும் தொடர்ந்து நடைபெற உள்ளது. விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் எஸ்.சிவகுமார், செயல் அலுவலர் (பொறுப்பு) ஆர்.வான்மதி மற்றும் கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
பத்திரிகையாளர் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல் 

திருவொற்றியூர், அக்.3:மணலியில் பத்திரிகை போட்டோகிராபரைத் தாக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் திங்கள்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   தீக்கதிர் பத்திரிகையின் வடசென்னை பகுதி போட்டோகிராபராக இருப்பவர் ஜாபர் (40).
திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் மக்கள் நல கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் திரளாக மனுத்தாக்கல் செய்தனர். இதனை படம் பிடிப்பதற்காக ஜாபர் மணலி மண்டல அலுவலம் உள்ளே சென்றுள்ளார். அப்போது அவரை போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் பத்திரிகை அடையாள அட்டையை எடுத்து ஜாபர் காட்டியுள்ளார். இருப்பினும் ஜாபரை போலீஸார் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனையடுத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது 
அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்பெக்டர்கள்  சரவணன், ஜீவக்குமார், காவலர் சசிக்குமார் ஆகியோர் ஜாபரை பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கு வந்த பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இது குறித்து தகவல் அறிந்த மாதவரம் காவல்த்துறை துணை ஆணையர் ராஜேந்திரன் 
அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தார். மேலும் ஜாபர் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் 
என உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. 

ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்


திருவொற்றியூர், செப்.28:ஆன்லைன் வர்த்தகத்தால் சிறுவணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் செவ்வாய்க்கிழமை சென்னையில் தெரிவித்தார். 
    திருவொற்றியூர் பொதுவர்த்தகர் சங்க 43-வது பொதுக்குழு மற்றும் ஆண்டுவிழா செவ்வாய்க்கிழமை திருவொற்றியூரில் நடைபெற்றது. நிகழ்ச்சி்க்கு சங்கத்தின் கௌரவத் தலைவர் ஜி.வரதராஜன் தலைமை வகித்தார். இதில் வியாபாரம் செய்வதில் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்த இருபதுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் பாராட்டப்பட்டனர். மேலும் இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கலந்து கொண்டு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற முதல் மூன்று இடங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் பூடான் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில்  தங்கப் பதக்கம் வென்ற, திருவொற்றியூரைச் சேர்ந்த என்.ஷெசன் ராமசாமியைப் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.
அப்போது த.வெள்ளையன் பேசியது,
    43 ஆண்டுகள் சங்கத்தை ஒற்றுமையாக நடத்திய அனைத்து நிர்வாகிகளும் பாராட்டுக்கு உரியவர்கள். தற்போது சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆன்லைன் வர்த்தகத்தால் சிறுவியாபாரிகள் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும் தற்போதைக்கு தங்களை ஒன்று அவ்வளவாகப் பாதிக்காது என நாம் இருக்கக் கூடாது. வெளிநாட்டுப் பொருள்களை இந்தியாவில் விற்பதை எதிர்த்து அமைதி வழியில் போராடிய காந்தியடிகள் பின்னர் அவற்றை வீதியில் போட்டு தீயிட்டுக் கொளுத்தினார். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு பொருள்களை மொத்தமாக வழங்கும் உற்பத்தியாளர்களின் பொருள்களை சில்லரை வியாபாரிகள் புறக்கணிக்க வேண்டும். சுதந்திர நாட்டில் வணிகர்களுக்கும் சுதந்திரமாக வாழ்வாதரத்துடன் வாழ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றார் வெள்ளையன்.
   இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் வி.ராமசாமி, பொதுச் செயலாளர் ஏ.முருகேசன், சங்க நிர்வாகிகள் கனி, நளராஜன், எம்.காமாட்சி, எ்ஸ்.ராமசாமி, மணலி வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
மணலியில் கறிக்கடை ஊழியர் கொலை

பால் வியாபாரி கைது

திருவொற்றியூர், செப்.26:மணலியில் கறிக்கடை ஊழியர் சேகர் (27) கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய பால் வியாபாரி அருண் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
   சென்னை மணலி லால்பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் நாகூர்மீரான். இவர் காமராஜர் சாலையில் கறிக்கடை நடத்தி வருகிறார். இங்கு அம்பத்தூர் பாடியைச் சேர்ந்த சேகர் என்பவர் வேலை செய்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு இறைச்சிக் கடைக்கு வந்த அருண், சேகரிடன் கறி வாங்கிக் கொண்டு பணம் தரவில்லையாம். மேலும் வாக்குவாதம் ஏற்பட்டு திடீரென உருட்டுக் கட்டையால் சேகரைத் தாக்கியுள்ளார் அருண். இதில் தலையில் பலத்த காயமடைந்த சேகர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சேகர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
   இது குறித்து வழக்குப் பதிவு செய்த மணலி காவல் நிலைய போலீஸார் சேகரைத் தாக்கிய அருணை திங்கள்கிழமை கைது செய்து திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை பதினைந்து நாள் நீதிமன்றக் காவலில் வைக்க திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி வசந்தக்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து அருண் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 
ஒருங்கிணைந்த கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை 

தமிழகம்,புதுவையில் புதன்கிழமை நடைபெறுகிறது.

திருவொற்றியூர், செப்.26:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச பகுதிகளை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் ஒருங்கிணைந்த கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.  
இது குறித்து இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
   இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியம் சார்பில் 'சாகர் கவச் (Sagar Kavach)' எனப் பெயரிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 
இதில் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு, ஊடுருவும் குழுவாகவும், மற்றொரு குழு இதனைத் தடுக்கும் பணியில் ஈடுபடவும் செய்வார்கள். இதில் ரோந்துக் கப்பல்கள், விமானங்கள், அதிவேகப் படகுகள் உள்ளிட்டவை ஈடுபடுத்தப்படும். தமிழ்நாடு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த காவல்த்துறை, கடலோரக் காவல்படை, கடற்படை, மீன்வளத்துறை, கடல்சார் அமலாக்கத்துறை, சுங்கத்துறை, சென்னைத் துறைமுகம், கலங்கரை விளக்கங்கள், கப்பல்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இந்த ஒத்திகையில் பங்கேற்க உள்ளனர். 
   இந்த ஒத்திகை சென்னை மற்றும் விசாகபட்டனத்தில் உள்ள கடலோரக் காவல்படை 
அலுவலகங்களிலிருந்து கண்காணிக்கப்படும். ஒத்திகையின் முடிவில் கடலோரப் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள், பாதுகாப்பினைப் பலப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்  உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து 
முதன்மை உள்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
சாலைத் தடுப்புச் சுவரில் மோதி வியாபாரி சாவு

திருவொற்றியூர், செப்.25:எண்ணூர் விரைவு சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கோழி வியாபாரி நந்தகோபால் (23) ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.
   சென்னை வண்ணாரப்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மகன் நந்தகோபால். திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் கோழிக்கடை வைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு கோழிக்கடை வியாபாரத்தை முடித்த நந்தகோபால் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எண்ணூர் விரைவு சாலையில் ஒண்டிக்குப்பம் அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலைத் தடுப்புச் சுவரில் மோதியுள்ளார். இதில் தலையில்  பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
   இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து 
திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் புதிதாக அமைக்கப்படுமா?

பொதுமக்கள், வழக்குரைஞர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறுமா?

திருவொற்றியூர், செப்.25:திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் (Sub Court) அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். 
     திருவள்ளூர் மாவட்டத்தில் 37 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஒருங்கிணைந்த வளாகத்தில்  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இயங்கி வருகிறது. கூடுதல் முதன்மை அமர்வு நீதிமன்றம், தலைமை குற்றவியல் நடுவர், குடும்ப நல நீதிமன்றம், நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றம், வாகன விபத்து தீர்ப்பாயம் உள்ளிட்ட 13 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 
        பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் சார்பு நீதிமன்றங்களுடன் கூடிய உரிமையியல், குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. மேலும் அம்பத்தூர், ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில் அதிக மக்கள் தொகை நெருக்கம் நிறைந்த திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்களிடையே நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வருகிறது. 
சார்பு நீதிமன்றம் அமைவதன் பயன் என்ன?
    தற்போது திருவொற்றியூரில் அமைந்துள்ள உரிமையியல் நீதிமன்றத்தில்  ரூ.1 லட்சம் மதிப்புள்ள தாவாக்களுக்கு மட்டுமே வழக்குத் தொடுக்க முடியும். ஆனால் ரூ.20 லட்சம் வரையிலான தாவாக்களுக்கு சார்பு நீதிமன்றத்தில்தான் வழக்காட முடியும். இதேபோல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அதிகபட்சம் 3 ஆண்டுகள்வரை தண்டனை வழங்கக் கூடிய வழக்குகள் மட்டுமே விசாரணை நடத்த முடியும். சார்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டால் 7 ஆண்டுகள் தண்டனை வழங்கக் கூடிய கொலை முயற்சி (இந்தியச் தண்டனைச் சட்டம் பிரிவு 307) உள்ளிட்ட வழக்குகளைக்கூட  விசாரிக்க முடியும்.
      மேலும் வாகன விபத்து, மணமுறிவு, நில மோசடி உள்ளிட்ட பெரும்பாலான வழக்குகளை தற்போது திருவொற்றியூர் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது. மேலும் தற்போதுள்ள பொருளாதார  சூழ்நிலையில் ரூ. ஒரு லட்சம் என்பது அதிகமான தொகை அல்ல. வாகன விபத்துக்களும், மணமுறிவு வழக்குகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகின்றன. எனவே திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. 
10 லட்சம் மக்கள் தொகை:
இது குறித்து திருவொற்றியூர் பொதுவர்த்தக சங்க கௌரவத் தலைவர் ஜி.வரதராஜன் கூறியது,
   சென்னையை ஒட்டிய முக்கிய பகுதிகளில் திருவொற்றியூர் முக்கியமானதாகும்.  திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மாதவரம், புழல், செங்குன்றத்தின் ஒரு பகுதி திருவொற்றியூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட காவல் நிலையங்களின் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவாகின்றன.  இதில் குறைந்த எண்ணிக்கையிலான வழக்குகள் மட்டுமே திருவொற்றியூரில் உள்ள நீதிமன்றங்களால் விசாரிக்க முடிகிறது. பொன்னேரியில் ஏற்கனவே கூடுதல் மாவட்ட முதன்மை அமர்வு  நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட ஐந்து நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் திருவொற்றியூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் வழக்குகள் பொன்னேரி நீதிமன்றங்களில் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைத்து இவ்வழக்குகளை இங்கு மாற்ற அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வரதராஜன். 
ஒருங்கிணைந்த நீதிமன்றம் தேவை:
   இது குறித்து திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் தலைவர் என்.நாகசுந்தரம் கூறியது,
   திருவொற்றியூரில் 1969-ம் ஆண்டு திருவொற்றியூரில் குற்றவியல் நடுவர் மன்ற நீதிமன்றமும் (J.M. Court), 1996-ல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும் (Munsif Court) அமைக்கப்பட்டன. திருவொற்றியூரில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கான 
அனைத்து தகுதிகளும் உள்ளன. மேலும் மாநகர எல்லைக்குட்பட்ட திருவொற்றியூர் பகுதிக்கென ஒருங்கிணைந்த நீதிமன்றம் அவசியமானது. இதற்கென கட்டடங்களை அணைக்க எர்ணாவூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் கனிம வளத்துறையின் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளன. சார்பு நீதிமன்றம் அமைக்கவும், எர்ணாவூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடங்களை அமைக்கவும்  திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்துள்ளோம். வரும் செப்.29-ம் தேதி இம்மனு விசாரணைக்கு வருகிறது.
      மேலும் திருவொற்றியூர் முன்சீப் நீதிமன்றத்துக்கென இதுவரை அரசு 
வழக்குரைஞர் (Govt Pleader) இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்திலேயே அரசு வழக்குரைஞர் இல்லாத நீதிமன்றம் திருவொற்றியூர்தான். 
திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தில் மட்டும் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். எனவே சார்பு நீதிமன்றத்துடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் இங்கு அமைக்கப்பட்டால் வழக்குரைஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பெரிதும் பயன் பெறுவார்கள். எனவே இதில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நாகசுந்தரம். -
திருவொற்றியூர், செப்.24:சென்னைத் துறைமுகம் சமையல் எண்ணெயைக் கையாள்வதில் புதிய சாதனையைப் புரிந்துள்ளது.
இது குறித்து சென்னைத் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 
   கடந்த செப்.19-ம் தேதி சென்னைத் துறைமுகம் வந்த எம்.டி.அஜவ் சீ என்ற கப்பலில் இருந்த 10,780 மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்பட்ட பனை எண்ணெய் (சமையல் எண்ணெய்) இறக்குமதி செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2014-ல் 8,700 மெட்ரிக் டன் கையாளப்பட்டதை அதிகபட்சமாக இருந்து வந்தது. மேலும் இக்கப்பலில் 35 ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெய் ஏற்றிய எடையுடன் துறைமுகத்திற்கு வந்தது. இதற்கு முன்பு 32 ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெயை ஏற்றிய கப்பலைக் கையாண்டதே சாதனை அளவாக இருந்தது. இச்சாதனை அளவினை எட்டியதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள், இறக்குமதியாளர், கப்பலின் முகவர் உள்ளிட்டவர்களை துறைமுகத் தலைவர் (பொறுப்பு) சிரில் ஜார்ஜ் நேரில் அழைத்துப் பாராட்டினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்ணூரிலிருந்து கொச்சி, கண்டலாவிற்கு கப்பலில் சென்ற 2 ஆயிரம் கார்கள் 

உள்நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்து அறிமுகம் 

திருவொற்றியூர், செப்.24: எண்ணூர் காமராாஜர் துறைமுகத்தில் உள்நாட்டு சரக்குக் கப்பல் போக்குவரத்து முதல்முறையாக வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் கப்பலான எம்.வி. டிரெஸ்டனில் சுமார் 2 ஆயிரம் கார்கள் ஏற்றும் பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. இக்கப்பல் கொச்சி வழியாக ஒரு வாரத்தில் குஜராத் மாநிலத்தின் காண்டலா துறைமுகம் சென்றடைகிறது. 
    உள்நாட்டு நீர்வழி, கடலோரப் போக்குவரத்து மூலம் உள்நாட்டுச் சரக்குகளை கப்பல்கள் மூலம் துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்வதை ஊக்கப்படுத்தும் வகையில் 
'சாகர்மாலா' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி கப்பல் போக்குவரத்து அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இதில் நாட்டின் பெரிய துறைமுகங்கள் மூலம்  இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு வசதியாக துறைமுகத்திற்கு உள்ளே, வெளியே உள்நாட்டுச் சரக்குகளைக் கொண்டு செல்ல சிறப்புப் பாதைகள், கட்டமைப்பு வசதிகள், சுங்கத்துறை சிறப்பு அனுமதி உள்ளிட்டவைகள் அனைத்து துறைமுகங்களிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சாலைப் போக்குவரத்து நெரிசல் குறையும், இதன்மூலம் விபத்துகள் குறையும் மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்பதே   இத்திட்டத்தின் சிறப்பு நோக்கமாகும். இத்திட்டம் பல்வேறு துறைமுகங்களில் ஏற்கனவே தொடங்கிவைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
   இந்நிலையில் உள்நாட்டு சரக்கு கப்பல் போக்குவரத்து எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த  சிகால் லாஜிஸ்டிக் என்ற தனியார் நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட எம்.எவி. டிரெஸ்டன் (M.V.Dresden) என்ற கப்பல் காமராஜர் துறைமுகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தது.  இக்கப்பலின் முதல் பயணத்தில் (First Voyage) ஹூண்டாய், ரினால்ட், ஃபோர்டு உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்களின் சுமார் 2 ஆயிரம் கார்கள் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டன. 
கட்டணங்களில் 80 சதவீதம் சலுகை:
    கப்பலில் கார்கள் ஏற்றும் பணியை துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் 
வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி வைத்தார். ஆனால் கடல் சற்று கொந்தளிப்புடன் காணப்பட்டதால் சனிக்கிழமை கார்களை ஏற்றும் பணி நிறைவடைந்து கப்பல் புறப்பட்டுச் சென்றது. 
இப்புதிய திட்டம் குறித்து  பாஸ்கராச்சார் கூறியது,
   இக்கப்பல் இரண்டரை நாளில் கொச்சித் துறைமுகம் செல்லும். அங்கு 500 கார்களை இறக்கிவிட்டு அங்கிருந்து 1500 கார்களுடன் குஜராத்தின் காண்டலா துறைமுகத்திற்கு 4 நாள்களில் சென்றடையும். பின்னர் அங்கிருந்து ஹோண்டா, ஃபோர்டு நிறுவன வாகனங்கள் இதே கப்பலில் ஏற்றி எண்ணூர் காமராஜர் துறைமுகம் கொண்டு வரப்படும்.  முதல் கட்டமாக மாதம் இருமுறை இக்கப்பல் இதே வழித்தடங்களில் இயக்குவதற்கு சிகால் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. உள்நாட்டுச் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக கப்பல்த்துறை அமைச்சகம் பல்வேறு சலுகைகளை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கையாளப்படும் கார் ஒன்றுக்கு ரூ.2,500 கட்டணம் எனில் உள்நாட்டிற்குள்ளே செல்லும் காருக்கு ரூ.500 மட்டுமே கட்டணம் விதிக்கப்படுகிறது. இதேபோல் கப்பல்கள் நிறுத்துவதற்கான கட்டணம் (Warfage Charges), கப்பல் சார்ந்த கட்டணங்கள் உள்ளிட்ட கட்டணங்களில் சுமார் 80 சதவீதம்வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலை மார்க்கமாக எடுத்துச் செல்வதை விட கப்பல்களில் எடுத்துச் செல்வது செலவு குறைவாக இருக்கும்.
இதேபோல் படிப்படியாக மற்ற சரக்குகளையும் கடல்வழி மார்க்கமாக எடுத்துச் செல்ல 
திட்டமிடப்பட்டுள்ளது என்றார் பாஸ்கராச்சார்.
    இந்நிகழ்ச்சியில் துறைமுக பொதுமேலாளர்கள் வி.கிருஷ்ணசாமி, ஏ.கே.குப்தா, உயர் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், கருப்பையா, சிகால் லாஜிஸ்டிக் நிறுவன மேலாண்மை இயக்குனர் ரமேஷ், முதுநிலை மேலாளர் (மக்கள் தொடர்பு) அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.