Monday, 26 November 2012

வேளாண் விளைபொருள் ஏற்றுமதி வர்த்தகம் முடங்கும் அபாயம்


ஆய்வுச் சான்று வழங்குவதில் அசாதாரண நிலை: அமைச்சகம் தலையிடக் கோரிக்கை

திருவொற்றியூர், நவ.25.: சென்னைத் துறைமுகம் வழியாக நடைபெற்று வரும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
    இதற்கு காரணம் வேளாண் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டிய இந்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரப் பாதுகாப்புத் துறையினர் தேவையற்ற கால தாமதம் செய்வதே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுக்கு 2 லட்சம் கண்டெய்னர்கள்:
     சென்னைத் துறைமுகத்தில் சுமார் ஆண்டுக்கு 20 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. இதில் வேளாண் வேளாண் விளைபொருள்களின் பங்கு கணிசமான அளவில் உள்ளது.  இதில் மக்காச்சோளம் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மக்காச்சோளம், வெங்காயம், அரிசி, மிளகாய், வேர்க்கடலை உள்ளிட்டவை மட்டும் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கண்டெய்னர்கள் வரை சென்னைத் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.   
         இதேபோல்  மரங்கள், மரக் கட்டைகள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகள், உளுந்து, துவரை, பட்டாணி, சுண்டக் கடலை உள்ளிட்ட பருப்பு வகைகள்,  அலங்காரப் பூக்கள் என ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் கண்டெய்னர்கள் வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.  மொத்தத்தில் வேளாண் வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு வெளிநாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
ஆய்வுச் சான்று வழங்கும் தாவரப் பாதுகாப்புத் துறை
       இவ்வாறு வேளாண் பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் முன்பு மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் உள்ள தாவரப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்து சான்று அளிக்கப்பட வேண்டும்.  இச்சான்றில் விளைபொருளின் பொதுவான தாவரவியல் பெயர், தரம், கிருமி, பூச்சி ஏதும் இல்லை, அளவு, காலம் உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சட்டப்பூர்வமான சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாமல் எந்த கண்டெய்னரையும் எடுத்துச் செல்ல சுங்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கமாட்டார்கள்.  நான்கு மாநிலங்களுக்கான பூச்சிக் கட்டுப்பாட்டு  மண்டல அலுவலகம் இதற்கென சென்னை மீனம்பாக்கத்தில் இயங்கி வருகிறது.
தேவையற்ற தாமதம்:
       ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய வேளாண் விளை பொருளை ஏற்றுமதி செய்ய சென்னைக்குக் கொண்டு வந்தபிறகு நேரில் வந்து ஆய்வு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள் பிறகு சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் கிடங்குகளுக்கு நேரில் சென்று சோதனையிடுவர். பின்னர் அலுவலகத்திற்கு வந்து பல்வேறு விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் வரிசை எண்களுடன் கூடிய சான்றிதழ்களை முத்திரையிட்டு அளிப்பார்கள். பிறகு இதனை சுங்கத் துறை அதிகாரிகள் காண்பித்த பிறகு ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். இதே போன்ற நடைமுறைதான் இறக்குமதியாகும் பொருள்களுக்கும் பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
     இந்த நடைமுறைகளில்தான் தற்போது தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாகவும்,  முன்பு ஓரே நாளில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் தற்போது ஐந்து நாள்கள் வரை கால தாதம் ஆகின்றன. இதற்கு அதிகாரிகள் தரப்பில் தெளிவான பதில் இல்லாத நிலையில் வேளாண் விளைபொருள் ஏற்றுமதி விரைவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதி முடங்கினால் விவசாயிகள் பாதிக்கப்படுவர்:
இது குறித்து சென்னை மக்காச் சோளம் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியது,
     மக்காச் சோளம் ஏற்றுமதி ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.  மானாவாரி பயிரான மக்காச்சோளம் ஏழை விவசாயிகளின் வரப்பிரசாதம் என்ற அளவிற்கு தற்போது உள்ளது. இதற்கு காரணம் ஏற்றுமதி மூலம் விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைத்து வருவதேயாகும். ஏற்றுமதியில் லாபம் குறைவுதான் என்றாலும் அதிக அளவில் ஏற்றுமதி செய்வதால் பரவாயில்லை என்ற நிலை இருந்து வந்தது. ஏற்கனவே கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் இத்தொழில் நலிவடைந்து விட்டது. இந்நிலையில் தாவரப் பாதுகாப்புத் துறையினர் தற்போது மேற்கொண்டுள்ள நடைமுறைகளால் இத்தொழில் முற்றிலும் முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
     'அனைத்தும் ஆன்லைன்' என்ற கணிணி வளர்ச்சி ஏற்பட்டுவிட்ட நிலையில் ஒரு சான்று வழங்கவே மூன்று முதல் ஐந்து நாள்கள் என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. ஏற்றுமதி வெற்றிகரமாக நடைபெறவேண்டும் என்றால் தேவையான சரக்குகள், லாரிகள், இருப்பு வைக்க கிடங்குகள்,  கண்டெய்னர்கள் லாரிகள், இணைப்புக் கப்பல்கள், தொடர்புடைய துறைகள் உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்.  இதில் ஒன்றில் தடங்கல் ஏற்பட்டாலும்  இழப்பு ஏற்றுமதியாளருக்குத்தான். கண்டெய்னருக்கு சராசரியாக ரூ. 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை லாபம் கிடைத்து வந்த நிலையில், தற்போதைய பிரச்னையால் இந்த லாபத்தையும் இழந்து விட வேண்டியதுதான். பிறகு நட்டத்திற்கா வியாபாரம் செய்ய முடியும்?. எனவே இது குறி்த்து வர்த்தக் துறை அமைச்சகம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.
சென்னை என்றாலே அலட்சியம்தான்:
இப்பிரச்னை குறித்து வெங்காயம் ஏற்றுமதி செய்யும்  கிருபாகரன் கூறியது,
   இப்பிரச்னைக்குக் காரணம் அதிகாரிகளின் அலட்சியம்தான். தாமதத்தினால் வெங்காயம் அழுகிவிடும், அதிகரிக்கும் செலவினங்களால் மக்காச்சோளம் உள்ளிட்ட ஏற்றுமதி, இறக்குமதி முடங்கும் அபாயம் உள்ளது என விளக்கமாக எடுத்துரைத்தாலும் பயன் இல்லை. அதைப் பற்றி தங்களுக்கு கவலை இல்லை. தங்ளது பணி அதிகாரத்தைச் செயல்படுத்துவது மட்டுமே. இங்கு கேள்வி கேட்பதற்கு இடமில்லை என்ற மனப்பான்மைதான் இந்த அதிகாரிகளிடம் நிலவுகிறது.  கொச்சி, தூத்துக்குடி, மங்களூர், விசாகபட்டினம், கிருஷ்ணபட்டனம், கல்கத்தா, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இதே தாவரப் பாதுகாப்புத் துறை அலுவலங்களில் தற்போதும் ஒரே நாளில் சான்றிதழ் வழங்கப்படும்போது சென்னையில் மட்டும் தாமதம் ஏன்? இதன் பின்னணி என்ன? இரண்டு மாதங்கள் முன்புவரை இல்லாத பிரச்னைகள் இப்போது மட்டும் ஏன்? இதற்கான 'காரண காரியங்கள்' தாவரப் பாதுகாப்புத் துறை மண்டல அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும். இப்பிரச்னை குறித்து இத்துறையின் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் பல்வேறு 'விசயங்கள்' வெளிச்சத்திற்கு வரும் என்பதே உண்மை என்றார் கிருபாகரன்
     கண்டெய்னர் லாரிகள் நெரிசல், போதிய கிடங்கு வசதிகள் இல்லாமை, சர்வதேசப் போட்டி உள்ளிட்ட பிரச்னைகளால் சென்னைத் துறைமுகம் மூலம் நடைபெற்று வந்த வேளாண் விளைபொருள்கள் ஏற்றதி படிப்படியாகக் குறைந்து வருகிறது.  இதில் தாவரப் பாதுகாப்பத் துறையும் தனது பங்களிப்பை அளிக்க உள்ளது என்பதே தற்போதைய நிலை. விவசாயப் புரட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம், விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்தெல்லாம் மேடைப் பேச்சுக்குதானோ?. அலைக்கற்றைப் பிரச்னையை பற்றியே பேச நேரமில்லாதபோது.... இதில் வேளாண்மை செழித்தால் என்ன? செத்தால் என்ன?






போர்க்களத்தில் அறநெறியைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்



வைகோ
திருவொற்றியூர், நவ.21: சங்க காலம் தொட்டு போர்க்களத்தில் அறநெறியைக் கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள்தான் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
     சென்னைத் துறைமுகத் தமிழ்ச் சங்கம் சார்பில் 48-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை சென்னையில் நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் செ.ஹரிசந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த தமிழறிஞருக்கான விருது முனைவர் ம. லெனின் தங்கப்பா,  சிறந்த சமூக சேவைக்கான விருது இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், கலைச் சேவைக்கான விருது கலைமாமணி புரிசை கண்ணப்ப சம்மந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன். மேலும் சென்னைத் துறைமுகத்தில் சிறப்பாகப் சேவையாற்றியதற்காக டாக்டர் ராஜா ரவிவர்மா, டாக்டர் ராஜ்குமார், டாக்டர் குணசேகரன் உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர்.    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு  பெரியார், அண்ணா, சங்கரலிங்கனார் ஆகியோரின் திருஉருவப் படங்களைத் திறந்து வைத்தார்.  பின்னர்  'அறமும் மறமும்' என்ற தலைப்பில் வைகோ இலக்கிய பேருரையாற்றினார்.
அப்போது வைகோ பேசியது,
        தமிழர்களின் கலாச்சாரத்திலும், வரலாற்று நிகழ்வுகளிலும் துறைமுகங்களுக்கு முக்கிய இடம் உண்டு.   மறம் என்பதே பல்வேறு அறநெறிகள் மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுதான்.  புறநானூறு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்ளிட்ட இலக்கியங்களில் அறமும், மறமும் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.  எழுத்தின் மூலம் வல்லமையை உருவாக்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு.
        எது அறம்? எது மறம்?  வீரம் செறி்ந்த தமிழன் போர்க்களத்தில் அறத்தைக் காப்பாற்றினான்.  போர்முனைக்குச் சென்ற போதிலும் மனித  நேயத்தோடு போராடியவன் தமிழன்.   மகளிர், சமயத் துறவிகளை,  உடல் நலம் குன்றியவர்கள், ஊனமுற்றவர்கள் உள்ளிட்டோரை வெளியேற்றிவிட்டு போர்களத்தைச் சந்தித்தவன் தமிழன்.  இது பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் முதல் ஈழம் பிரபாகரன் வரை அனைவருக்கும் பொருந்தும்.  ஆனால் இலங்கையில் நடந்தது என்ன? பெண்கள், கற்பிணிகள் குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஆயுதங்களை இழந்து  நிராயுதபாணியாக வந்தவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.  
      உலகத்தில் மன்னிக்கவே முடியாத குற்றம் நன்றி மறப்பதுதான் என அறம் கூறுகிறது.  பசுவின் மடிக்காம்பை அறுத்தவன், பெண்களின் கற்பைச் சிதைத்தவனுக்குக் கூட மன்னிப்பு உண்டு. ஆனால் நன்றி மறந்தவனுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது என்ற பொருளில் பல்வேறு இலக்கியங்களும் வலியுறுத்துகின்றன.  தவ வேடத்தில் உள்ளவன் தவறு செய்யக்கூடாது.  வீரம், அறநெறியை எடுத்தியம்பும் புறநானூற்றில் எந்த மன்னன் பெயரும் குறிப்பிடப்படவில்லை. திருக்குறளிலோ நாட்டின் பெயர் கூட குறிப்பிடப்படவில்லை.  உலகின் பல்வேறு பகுதிகளில் தத்துவங்கள் தோன்றியிருக்கலாம். ஆனால் உலகத்திற்கு பொருந்தும் அறநெறிகளை ஆதியிலேயே வகுத்தவன் தமிழன்தான்.
     இந்திய சுதந்திர வரலாற்றில் காந்தியடிகள் அறமென்றால் நேதாஜி மறம். இலங்கையில் செல்வநாயகம் மறமென்றால் பிரபாகரன் மறம்.  அண்ணா அறம்.  பெரியாரின் வழி எதிர்காலத்தில் மறம் என்றார் வைகோ.
  

Sunday, 11 November 2012

சென்னையில் தரை தட்டிய 'பிரதீபா காவேரி' கப்பல் மீட்பு

விபத்து குறித்து விசாரணை: அமைச்சர் ஜி.கே.வாசன்

திருவொற்றியூர், நவ.11:அண்மையில் தாக்கிய 'நிலம்' புயலில் சிக்கி சென்னை மெரினா அருகே தரை தட்டிய எம்.டி.பிரதீபா காவேரி என்ற எண்ணெய்க் கப்பல் 12 நாள்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
    நான்காவது நாளாக தொடர்ந்த மீட்புப் பணி முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட இக்கப்பல் நடுக்கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.
    மும்பையைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான 'எம்.டி.பிரதீபா காவேரி' கப்பல் பழுதடைந்த நிலையில் சென்னைத் துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்து. இந்நிலையில் புயல் தாக்கியால் படிப்படியாக இழுத்து வரப்பட்டு கடந்த அக்டோபர் 31-ஆம் தேதியன்று சென்னை பட்டினம்பாக்கம் அருகே தரை தட்டி நின்றது. அப்போது இக்கப்பலில் இருந்து இறங்கி தப்பிக்க முயன்ற 22 சிப்பந்திகளில் ஆனந்த் என்ற பொறியாளர் உள்ளிட்ட 6 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்துபோயினர்.
இழுக்கும் பணியின்போது கயிறு வடம் அறுந்தது:   இந்நிலையில் கரை தட்டிய கப்பலை மீட்கும் பணி நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'ஸ்மிட்' என்ற மீட்புப் பணி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 133 பி.பி இழுவை திறன் கொண்ட மாளவியா என்ற இழுவைக் கப்பல் காக்கிநாடாவிலிருந்தும், 80 பி.பி. இழுவைத் திறன் கொண்ட எஸ்.சி.ஐ.ரட்னா என்ற கப்பல் மும்பையிலிருந்தும் வரவழைக்கப்பட்டன. தரை தட்டிய கப்பல் வலுவாகவே
மணலில் புதைந்திருந்ததால் தொடக்கத்திலேயே 'மாளவியா' மூலம் இழுக்கும் பணி கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. அப்போது தரைதட்டிய கப்பலோடு இணைக்கப்பட்டிருந்த நைலான் கயிறு வடம் அறுந்து போனதால் மீட்புப் பணி தடைபட்டது.
மீட்கும் பணியில் முன்னேற்றம்:     இதனையடுத்து புதிய கயிறு வடம் மூலம்  மீட்புப் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் தொடர்ந்தது. ஆனால் இரண்டாவது நாளிலும் கப்பலை அசைக்கக் கூட முடியவில்லை. சனிக்கிழமையும் தொடர்ந்து இழுக்கும் பணி நடைபெற்ற நிலையில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கடல்மார்க்கமாகச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். அப்போது 10 டிகிரி கோணம் அளவிற்கு கப்பல் அசைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கப்பல் நிச்சயமாக மீட்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கடற்கரைக்கு வந்து மீட்பு பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் வாசன் கப்பல் மீட்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறி்த்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டதில்  ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் கப்பல் மீட்கப்பட்டது.
கடல்சார் வாணிபத் துறை நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் வாசன்   கப்பலை மீட்கும் இறுதி கட்ட நிகழ்வின்போது கடற்கரைக்கு வந்த அமைச்சர் வாசன் முழுமையாக இழுக்கப்படும்வரை சுமார் 3 மணி நேரம் அங்கேயே இருந்தார்.
பின்ர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வாசன் கூறியது,
    கப்பலில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது, ஒத்துழைப்பு கொடுத்து ராட்சத கடல் அலைகள், தளராத முயற்சி, மீட்பு பணி நிறுவனத்தின் அனுபவம் போன்ற பல்வேறு சாதகமான சூழ்நிலைகளால் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 16 கப்பல்களை மீட்டுள்ள 'ஸ்மிட்' மீட்புப் பணி நிறுவனத்தின் அனுபவம், புதிய உத்திகள்தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த சென்னைத் துறைமுகம், கடல்சார் வாணிபத் துறை, கடலோரக் காவல்படை, காவல்த் துறை,மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அமைச்சகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
   நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் மீட்கப்பட்ட கப்பல் துறைமுகம் அருகே ஆழ்கடலில் நிறுத்தி வைக்கப்படும். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கப்பல்த் துறை இயக்குனரகம் 'பிரதீபா காவேரி' பதிவை ஏற்கனவே ரத்து செய்துள்ளது. கப்பல் நிறுவனம் மீதான நடவடிக்கை, கப்பலை மீண்டும் இயக்குவதற்கு அனுமதியளிப்பது உள்ளிட்டவை குறித்தெல்லாம் விசாரணை அறிக்கையின் பேரி கப்பல்த் துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும். புயலில் சிக்கி இறந்து போன இக்கப்பலின் ஊழியர்கள் 6 பேருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை அமைச்சகம் எடுக்கும் என்றார் வாசன். 
   கடந்த 12 நாள்களாக 'மெரினா'வே 'பட்டினம்பாக்கத்திற்கு' இடம் பெயர்ந்து விட்டதோ எனக் கேட்கத் தூண்டும் அளவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தரை தட்டிய பிரதீபா காவேரியை பார்த்து ரசித்தனர். ஞாயிற்றுக்கிழமை கப்பல் மீட்கப்பட்டதன் மூலம் இதற்கு முடிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




 

Thursday, 8 November 2012

கப்பலை மீட்கும் பணி: கயிறு வடம் அறுந்ததால் தொய்வு



இன்று 2 கப்பல்களை ஈடுபடுத்த முடிவு

திருவொற்றியூர், நவ.8: புயலின் தாக்கம் காரணமாக சென்னை மெரினா கடற்கரை அருகே தரைதட்டி நிற்கும் எம்.டி. பிரதீபா காவேரி கப்பலை மீட்க வியாழக்கிழமை மேற்கொண்ட முயற்சியின்போது இழுவைக் கயிறு அறுந்து போனதால் இழுக்கும் பணியில் நிறுத்தப்பட்டது. வியாழக்கிழமை மாளவியா என்ற கப்பல் மட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை (இன்று) மாளவியா கப்பலுடன், எஸ்.சி.ஐ.ரட்னாவும் இழுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
                தரை தட்டிய கப்பலான எம்.டி.பிரதீபா காவேரியை இழுக்கும் பணியை நெதர்லாந்தைச் சேர்ந்த 'ஸ்மிட்(SMIT)'
என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிபுணர்கள் குழு கடந்த வாரமே சென்னை வந்துவிட்டனர். மேலும் கடந்த சில நாள்களாக கப்பலை பத்திரமாக மீட்பது குறித்து சென்னைத் துறைமுகம், கடல்சார் வாணிபத்துறை, கடலோரக் காவல்படை அதிகாரிகளுடன் ஸ்மிட் நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதற்கிடையே கப்பலை இழுக்க 133 பி.பி. இழுவைத் திறன் கொண்ட எம்.வி. மாளவியா என்ற இழுவைக் கப்பல் காக்கிநாடாவிலிருந்தும், எஸ்.சி.ஐ.ரட்னா என்ற கப்பல் மும்பையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
              இந்நிலையில் கப்பலை இழுக்கும் பணி்க்கான ஆயத்தப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது.  பலம் வாய்ந்த நைலான் கயிறு வடம் தரை தட்டிய கப்பலில் கட்டப்பட்டு மாளவியா கப்பலைக் கொண்டு வியாழக்கிழமை இழுக்கும் பணி தொடங்கியது. ஆனால் சில முயற்சிகளிலேயே கயிறு வடம் அறுந்து போனதால் இழுக்கும் முயற்சி நிறுத்தப்பட்டது. பின்னர் மீட்பு நிபுணர்கள், அதிகாரிகள் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து கடல்சார் வாணிபத்துறை வட்டாரத்தில் கூறியது, 
           தற்போது கப்பலை இயக்கும் முக்கிய இயந்திரம் பழுதடைந்துள்ளது.  எனவே தரைதட்டிய கப்பலை இழுக்க  மேலும் கூடுதல் இழுவைத் திறன் தேவைப்படுகிறது. மேலும் தற்போது கப்பலில் அதிக அளவில் அளவு கடல் நீர் நிரப்பப்பட்டுள்ளது. கடலில் மிதக்க அவசியமான சரிவிகித எடைக்காக கடல் நீர் நிரப்பப்படுவது வழக்கமானது. இக்கப்பல் காலியாக இருந்ததால் அதிக அளவில் கடல் நீர் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்றினால் கப்பலின் எடை குறைந்து இழுப்பதற்கு சற்று எளிதாக இருக்கும்.  ஆனால் ஜெனரேட்டரை இயக்கத் தேவையான டீசல் தீர்ந்துவிட்டதால் கப்பலில் மின்சாரம் இல்லை. மின்சாரம் இல்லாததால் மோட்டார்களை இயக்க முடியவில்லை.  இதனால் சென்னைத் துறைமுகத்திலிருந்து டீசல் எடுத்துவரப்பட்டு தரை தட்டிய கப்பலில் நிரப்பப்பட்டுள்ளது.  வியாழக்கிழமை ஜெனரேட்டர் இயக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
           கயிறு வடம் அறுந்துவிட்டதால் இழுக்கும் பணியில் தொய்வடைந்துவிட்டதாகக் கருதமுடியாது.
எல்லாமே முயற்சிதான். வெற்றி என்பது இறுதியில் தான் தெரியும். கப்பலை கயிறு மூலம் இழுக்கும் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கும். அப்போது மாளவியாவுடன் எஸ்.சி.ரட்னாவும் ஈடுபடுத்தப்படும்.  மேலும் நைலான் கயிறு வடத்திற்குப் பதிலாக பலம் வாய்ந்த இரும்பு வடம் கொண்டு இழுக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
         கப்பல் இழுக்கும் பணி நடைபெறுவதையொட்டி மெரினா, பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியே      
பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தது. அதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.







       
                                                                              
       

தானாகவே இணைப்பு துண்டிக்கப்படும் அலைபேசிகள்


திருவொற்றியூர், நவ.8:சென்னையில் உபயோகிக்கப்படும் அலைபேசிகளின் இணைப்புகள் தானாகவே துண்டிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து அலைபேசி உபயோகிப்பாளர்கள் கூறியது,
    சென்னையில் கடந்த சில நாள்களாக அலைபேசி மூலம் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென எதிர்முனையில் பேசுபவர்களின் குரல் கேட்பதில்லை. அலைபேசித் தொடர்பு அமைதியாகிவிடுகிறது. ஆனால் உபயோகிக்கும் நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதாவது பேசுவதற்கான கட்டணம் மட்டும் வழக்கம்போல் எடுத்துக் கொள்கின்றனர். பிறகு நாம் ஹலோ சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். இணைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் தொடர்பு கொள்ளவேண்டியதுள்ளது. மேலும் அலைபேசி இணைப்பில் பேசிக்கொண்டிருக்கும்போதே 'தங்கள் அழைப்பு ஹோல்டில் வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரம் காத்திருக்கவும் அல்லது மீண்டும் தொடர்பு கொள்ளவும்' என பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது.   நாம் சற்று நேரம் பொறுமையாக காத்திருந்தால் மீண்டும் இணைப்பு வருகிறது. அதற்குள் அடுத்த அழைப்புக்குரிய கட்டணம் செலுத்த வேண்டியதுள்ளது. நமது அலைபேசி சேவையில் மட்டும்தான் இந்த குறைபாடு உள்ளது என்ற தொடக்கத்தில் நம்பியவர்கள் பலர். ஆனால் இப்பிரச்னை அலைபேசி உபயோகிக்கும் பலருக்கு இருப்பது பிறகுதான் தெரியவந்தது.  இது குறித்து வெவ்வேறு அலைபேசி உபயோகிப்பாளர்கள், தத்தமது வாடிக்கையாளர் சேவை மையங்களைத் தொடர்பு கொண்டால், 'அப்படியா, ஒரு சேவைக் குறைவும் இல்லை. இருந்தாலும் கவனிக்கிறோம்' என அலட்சியமாகப் பதில் அளிக்கின்றனர் என்றனர்.
    இது குறித்து தகவல் கிடைத்தவுடன் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை  ஆணைய வளைத்தளத்தில் சேவை நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் மூலம் தகவல் பெற முயன்ற போது ஒருவரின் அலைபேசி தொடர்பு எண்ணும் அதில் இல்லை. பொறுப்பு அதிகாரிகள் அனைவருக்கும் நிரந்த இணைப்புத் தொலைபேசி எண்கள் (LAND Line) தான் தரப்பட்டுள்ளன. அதில் தொடர்பு கொண்டாலும் சம்மந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவோ அல்லது தெளிவானப் பதிலைப் பெறவோ முடியவில்லை.  













 

Sunday, 4 November 2012

6 கப்பல் சிப்பந்திகள் கடலில் இறந்து போன கோரச்சம்பவத்திற்கு காரணம் என்ன?


கப்பலிற்கு தரச் சான்று வழங்குவதில் அரசியல் பின்னணி ?

திருவொற்றியூர், நவ.3.: சென்னை மெரினா கடற்கரை அருகே கரை தட்டிய கப்பலில் வேலை செய்து வந்த 6 சிப்பந்திகள் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தில் பல்வேறு பின்னணி தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
     கடந்த அக்.31 -ஆம் தேதி புதன்கிழமை நிலம் புயல் சென்னை அருகே கரையைக் கடந்தது.  இப்புயலில் சிக்கி நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்.டி. பிரதீபா காவேரி என்ற எண்ணெய் கப்பல் கடல் கொந்தளிப்பில் சிக்கித் தத்தளித்தது. அப்போது கப்பலில் இருந்து உயிர்காக்கும் படகு மூலம் தப்பிக்க முயற்சித்த 22 சிப்பந்திகளில் 6 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள்.
   சென்னைத் துறைமுகத்தின் கடல் எல்லையில் நடந்த இச்சம்பவம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  இத்தனைக்கும் இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்குப் பிராந்திய தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து வெகு அருகாமையில்தான் உள்ளது.  மேலும்  இந்திய கடற்படையின் அலுவலகமான ஐ.என். எஸ். அடையாரும் இதற்கு அருகே தான் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் எவ்வித உதவியும் கிட்டாமல் 6 சிப்பந்திகள் இறந்து போனது வருத்தமளிக்கிறது. மேலும் மீட்கப்பட்ட 16 பேரில் 5 பேர் மட்டுமே தானாகவே நீச்சல் அடித்து தப்பி கரையை அடைந்துள்ளனர். மீதி 11 பேரை மீனவர்கள் தான் காப்பாற்றியதாகக் கூறப்படுகிறது.  கடல் மிகவும் கொந்தளிப்பாக இருப்பதால் தங்களால் தற்போது வர இயலாது என துறைமுகம், கடலோரக் காவல்படை, கடல்சார் வாணிபத்துறை அதிகாரிகள் கைவிரித்திருந்த நிலையில்
துணிச்சலாகச் செயல்பட்டு உரிய நேரத்தில் 11 பேரைக் காப்பாற்றிய மீனவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என உயிர் தப்பிய சிப்பந்திகள் கூறினார்.
குளறுபடியில் உச்சத்தில் நடந்த கோரச் சம்பவம்:      எம்.டி.பிரதீபா காவேரி கப்பல்  ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தும் கப்பலில் ஏற்பட்ட கோளாறுகளைச் சரி செய்யவோ அல்லது கப்பல் பழுது பார்க்கும் தளத்திற்கு எடுத்துச் செல்லவோ கப்பல் நிறுவனம் நடவடிக்களைக் மேற்கொள்ளாமல் மெத்தனமாகச் செயல்பட்டுள்ளது.   மேலும் ஊழியர்களுக்கும் 6 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை,  கப்பலில் பணியாற்றுவோருக்கு தேவையான உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 28 ஆம் தேதி புயல் சென்னைத் துறைமுகத்தின் புயல் எச்சரிக்கை பிரதீபா காவேரி கப்பலின் ஊழியர்களை மேலும் கவலையடையச் செய்துவிட்டது.  இதனையடுத்து கப்பலைக் காப்பாற்றும் பல்வேறு முயற்சியில் கேப்டன் மற்றும் தகவல் தொடர்பு அலுவலரும் ஈடுபட்டுள்ளனர்.  ஆனால் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில்தான் கப்பல் கைவிடப்படும் அபாய நிலை குறித்து கப்பலின் கேப்டன் அறிவித்ததாகவும் அதன் பிறகே உயிர்காக்கும் படகு மூலம் தப்பிக்க முயற்சி மேற்கொண்டதாகவும் உயிர் தப்பியவர்கள் தெரிவிக்கின்றனர்.
    ஆனால் சென்னைத் துறைமுகம் வட்டாரத்தில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வேறு மாதிரியாக உள்ளன.  எம்.டி.பிரதீபா காவேரியிலிருந்து இழுவைக் கப்பல்களை அனுப்பும்படி உதவி கேட்டு தொடர்பு கொண்டது உண்மைதான்.  ஆனால் கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டதால் இழுவைக் கப்பல்களை இயக்க மாலுமிகள் மறுத்துவிட்டனர்.  மேலும் கப்பலின் அபாய நிலை குறி்த்து கிழக்குக் கடலோரக் காவல்படையினருக்கு சென்னைத் துறைமுக அதிகாரிகள் தகவல் பரிமாற்றம் செய்துள்ளனர்.   மேலும் புதுடில்லியில் உள்ள கப்பல்த்துறை அமைச்சகம் சார்பில் இந்திய கடலோரக் காவல்படையின் தலைமையகத்திற்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இழுவைக் கப்பல்களின் மாலுமிகள்
தெரிவித்தது போலவே கடலோரக் காவல்படையினரும் தெரிவித்துள்ளனர்.
          இந்நிலையில்  கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி துறைமுக அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட கடலோரக் காவல் படையினர்,  'கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. இருப்பினும் பிரதீபா காவேரி கப்பலுக்கும், அதில் இருக்கும் சிப்பந்திகளுக்கும எவ்வித ஆபத்தும் இல்லை. புயல் கரையைக் கடந்தவுடன் சிப்பந்திகளை மீட்கலாம். அதுவரை சிப்பந்திகள் கப்பலிலேயே இருக்கட்டும். அதுவே பாதுகாப்பானதாக இருக்கும்'  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மீறித்தான் சிப்பந்திகள் செயல்பட்டு ஆபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என துறைமுக தரப்பில் கூறப்படுகிறது.
கடல்சார் வாணிபத் துறை அலட்சியமா?    இதற்கிடையே கப்பல் நிறுவனம் குறித்தும் பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது. பொதுவாகவே 25 ஆண்டுகளுக்கும் மேலாக கப்பல்களை தொடர்ந்து இயக்க பல்வேறு கட்டுப்பாடுகளை கடல் சார் வாணிபத்துறை விதித்துள்ளது. எம்.டி.பிரதீபா காவேரி கப்பல் 31 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இக்கப்பலின் உறுதித் தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து மும்பையில் உள்ள கடல்சார் வாணிபத்துறை உயர் அதிகாரி கூறுகையில்,
'விபத்தில் சிக்கிய இக்கப்பலின் உறுதித் தன்மை குறி்த்து ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களாகவே முயற்சி செய்து வந்தோம். ஆனால் கப்பல் நிறுவனத்தினர் பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லியே கப்பலை ஆய்வுக்குக் கொண்டு வராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.  ஆனால் கப்பலை ஆய்வு செய்ய உரிய  உத்தரவினையும் எங்கள் துறை உயர் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இதற்கு கப்பல் நிறுவனத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாகக் கூறப்படுகிறது.
  ஒரு வேளை இக்கப்பலை உரிய நேரத்தில் முறையாக ஆய்வுக்கு உட்படுத்தி இருந்தால் இந்த கோரச் சம்பவத்தையும், 6 சிப்பந்திகளின் உயிரிழப்பையும் தவிர்த்திருக்க முடியும் ' என்றார் அந்த அதிகாரி.
   

    

Friday, 2 November 2012

சென்னையில் கரை தட்டிய டேங்கர் கப்பல்


திருவொற்றியூர், அக்.31:நீலம் புயல் சென்னையைத் தாக்கியதில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த 'எம்.டி. பிரதீபா காவேரி' என்ற ஆயில் டேங்கர் கப்பல் சென்னை பட்டினம்பாக்கம் அருகே கரை தட்டியது.  இக்கப்பலை மீட்பது குறித்து சென்னைத் துறைமுகம், கடல்சார் வாணிபத் துறை, கடலரோக் காவல் படை அதிகாரிகள்
தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
     மும்பையைச் சேர்ந்த பிரதீபா சிப்பிங் கம்பெனி லிட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான 'எம்.டி.பிரதீபா காவேரி' என்ற டேங்கர் கப்பல் மும்பையிலிருந்து கிளம்பி விசாகபட்டினம் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதில் கேப்டன் உள்ளிட்ட 37 சிப்பந்திகள் கப்பலில் இருந்தனர். சரக்கு ஏதும் ஏற்றாமல் காலியாகச் சென்று கொண்டிருந்த இக்கப்பல் சிப்பந்திகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக் கொள்வதற்காக சென்னைத் துறைமுகம் அருகே அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நீலம் புயலின் தாக்கம் அதிகரித்ததையடுத்து கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டது. சென்னைத் துறைமுகத்தில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நங்கூரமிடப்பட்டன.
   இவ்வாறு நடுக்கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்த 'எம்.டி. பிரதீபா காவேரி' என்ற கப்பல் புதன்கிழமை கடல் கொந்தளிப்பில் சிக்கி, ராட்ச அலைகளால் பட்டினம்பாக்கம் அருகே கரை ஒதுங்கியது. கப்பலை மேலும் இயக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.  கரை தட்டிய கப்பல் ஒரு புறமாகச் சாய்ந்தது. இதனால் இதில் இருந்த சிப்பந்திகள் கடலில் குதித்து தப்பி்க்க முயற்சித்தனர்.  இது குறி்த்து தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர் நவீன படகுகளில் சென்று கப்பலில் இருந்த சிப்பந்திகளை மீட்டனர்.
 கப்பலை மீட்க முடியுமா?:
1981-ல் ஜப்பானில் கட்டப்பட்ட இக்கப்பல் 31 ஆண்டுகளை கடந்துவிட்டது. எனவே இதன் இயந்திரங்கள் அபாய நிலையைச் சமாளிக்கும் திறன் இழந்துவிட்டது எனவும், எனவே அப்படியே பத்திரமாக இழுத்துச் செல்லமுடியுமா? அல்லது உடைத்துத்தான் எடுக்க வேண்டுமா என்பது குறித்தெல்லாம் ஆய்விற்குப் பிறகே கூறமுடியும் என கடல்சார் வாணிபத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

NEWS ITEMR:2

கப்பல் நிறுவனம்,  துறைமுக நிர்வாகங்களின் மெத்தனமே கரை தட்டியதற்கு காரணம்
காணாமல் போன 5 பேர் கதி என்ன?
நீந்திக் கரை சேர்ந்த கப்பல் ஊழியர்கள் பேட்டி
திருவொற்றியூர், நவ.1: தமிழகத்தைத் தாக்கிய புயலில் சிக்கி சென்னை அருகே கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.டி. பிரதீபா காவேரி என்ற எண்ணெய்க் கப்பல்  புதன்கிழமை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் இழுத்து வரப்பட்டு பட்டினம்பாக்கம் கடற்கரை அருகே கரை தட்டி நிற்கிறது.  இதனையடுத்து கப்பலில் பணி செய்து வந்த ஊழியர்கள்  படகு மூலம் தப்பிச் செல்ல முயன்றனர்.  அப்போது படகு கவிழ்ந்ததில் ஆனந்த் மோகன்தாஸ் என்பவர் பொறியாளர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.
 நடந்தது என்ன?:
     மும்பையைச் சேர்ந்த பிரதீபா சிப்பிங் கம்பெனி என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இக்கப்பல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை ஏற்றிச் செல்லும் வசதி கொண்டது.  இக்கப்பல் ஒப்பந்த அடிப்படையில் இந்தியன் ஆயில் கார்போரேசன் (ஐ.ஓ.சி) நிறுவனத்திற்கு டீசல்களை ஏற்றி வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இதன்படி கடந்த செப்.25-ல் எல்.டி.ஓ.வகை டீசலை ஏற்றிக்கொண்டு சென்னைத் துறைமுகம் வந்தது பிரதீபா காவேரி  டீசலை இறக்கிய பிறகு காலியாக துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டிருந்தது.  இந்நிலையில்  ஐ.ஓ.சி. நிறுவனத்துடனான ஒப்பந்தம் காலாவதியானதால் புதிய ஆர்டர்களுக்காக காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது.  இதற்கிடையே உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தீர்ந்துவிட்டதால் இதற்காக கடந்த அக்.8-ம் தேதி மீண்டும் துறைமுகத்திற்குள் வந்தது. ஆனால் வழக்கமான முகமை நிறுவனம்,  தனக்கு அதிக பாக்கி வைத்திருப்பதால் மேற்கொண்டு  பொருள்களை வழங்க முடியாது என மறுத்துவிட்டது. இருப்பினும் அவசரத் தேவை கருதி வேண்டுகோளின் அடிப்படையில் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருள்களை மட்டும் அந்த ஏஜென்சி வழங்கியது.
இதன் பிறகும் கப்பலை பழுது பார்க்கும் தளத்திற்குக் கொண்டு செல்லவோ, ஊழியர்களுக்கு தேவையான அத்தியாவசித் தேவைகளை பூர்த்தி செய்யவோ கப்பல் நிறுவனம் துரித முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.
சென்னைத் துறைமுகம் மெத்தனம்:
     இந்நிலையில் கப்பல் பழுது, உணவுப் பஞ்சம், சம்பளம் வழங்காதது,  பணி ஒப்பந்தம் முடிந்தும் விடுவிக்கப்படாதது உள்ளிட்ட துயரங்களால் இன்னலுற்ற கப்பல் சிப்பந்திகளுக்கு புயல் வடிவில் புதிய பிரச்னை ஏற்பட்டது.  கடந்த அக்.28-ம் தேதி சென்னைத் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனையடுத்த கப்பலுக்கு ஆபத்து நேரிடலாம் எனக் கருதிய பிரதீபா கப்பலின் கேப்டன் சென்னைத் துறைமுகத்தில் உள்ள வி.டி.எம்.எஸ் (கப்பல் போக்குவரத்து மேலாண்மை பணி) அதிகாரிகளுக்கும், கடல்சார் வாணிபத்துறை (எம்.எம்.டி.) அதிகாரிகளுக்கும் கப்பலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து விளக்கியதாகவும், எனவே கப்பலை நடுக்கடலுக்குக் கொண்டு செல்ல இரண்டு இழுவைக் கப்பல்களை அனுப்பும்படி கோரிக்கை விடுத்ததாக கப்பலின் ரேடியோ அலுவலர் ரூபக் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.
 முதலில் இதற்கு ஒப்புதல் தெரிவித்த அதிகாரிகள், சாக்குப் போக்குச் சொல்லியவாறே புதன்கிழமைவரை இழுவைக் கப்பல்களை அனுப்பவில்லை. இதற்கிடையே காற்றின் வேகம் அதிகரித்து, கடல் கொந்தளித்ததால் கப்பலை இயக்க இறுதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் கப்பல் நகரவே இல்லை. இதற்கிடையே கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு வந்துவிட்டது என்கிறார் ரூபக் குமார்.
 உயிருக்குப் போராடிய ஊழியர்கள்:
     இதனையடுத்து நடந்த சம்பவங்கள் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கப்பல் ஊழியர்கள் கூறியது,
கப்பல் மூழ்கிவிடும் ஆபத்து ஏற்பட்டும் எவ்வித உதவியும் கிட்டாத நிலையில் அனைத்து ஊழியர்களையும் ஓரிடத்திற்கு வரும்படி கேப்டன் அழைத்தார். பின்னர் கப்பல் ஆபத்தில் சிக்கியுள்ளதால் உயிர்காக்கும் படகுகள் மூலம் தப்பிச் செல்லும்படி அவர் தெரிவித்தார். அப்போது கப்பலில் இருந்த 37 பேரில் 22 பேர் மட்டும் உடனடியாக தப்பிச் செல்ல முடிவெடுத்து படகை இறக்கி நாங்களும் அதில் ஏறினோம். ஆனால் அந்தப் படகும் பழுதடைந்தநிலையில் இருந்தது அப்போதுதான் தெரியவந்தது.  இந்நிலையில் கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. ஐந்து பேர் மட்டும்
நீந்திக் கரைக்கு வந்தோம். பின்னர் கடலில் தத்தளித்தவர்களை மீனவர்கள் மீட்டனர். அதற்குள்  ஆனந்த் மோகன்தாஸ் என்ற பொறியாளர் கடலில் மூழ்கி இறந்துவிட்டார்.  ஐந்து பேரைக் காணவில்லை. அவர்கள் கதி என்னவென்றும் தெரியவில்லை. வியாழக்கிழமைதான் கடலோரக் காவல்படையினர் ஹெலிகாப்டரில் வந்து கப்பலில் இருந்த 15 பேரை மீட்டனர்.
       மொத்தத்தில் கப்பல் நிறுவனத்தின் அலட்சியம்,  துறைமுகம், சென்னைத் துறைமுக நிர்வாக அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, அவசரத்திற்கு உதவாத கடலோரக் காவல்படை ஆகிவற்றோடு புயல் என்ற இயற்கை சீற்றமும் சேர்ந்து எங்களை சோதித்து விட்டன என்பதே உண்மை என கண்ணீரோடு தெரிவித்தனர்.

ITEM 3
.
ஒப்பந்தம் முடிந்தும் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆனந்த்
கடலில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்
திருவொற்றியூர், நவ.1:
கரை தட்டிய கப்பலில் இருந்து தப்பிக்க முயன்றபோது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்து போன ஆனந்த் மோகன்தாஸ் (31) குறி்த்த தகவல்கள்:
   இறந்து போன ஆனந்த விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவைசே சேர்ந்த நேசல் கிராமத்தைச் சேர்ந்தவர். கப்பல் பொறியியலில் பட்டம் பெற்ற ஆனந்த் பிரதீபா கப்பல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தம் முடிந்துவிட்டபோதும் அவரை கப்பல் நிறுவனம் விடுவிக்காதது மட்டுமல்ல ஆனந்தின் சம்பளத்தையும் நிலுவையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல் இக்கப்பலில் வேலை செய்து வந்த பெரும்பாலான ஊழியர்களுக்கு 5 முதல் 7 மாதங்கள் சம்பளத்தை பாக்கியாக வைத்துள்ளது கப்பல் நிறுவனம்.  எனவே பாக்கிச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு விரைவில் இந்நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவு செய்திருந்த நிலையில்தான் இக்கோரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது என கப்பலில் பணிபுரிந்து உயர் தப்பிய அவரது சக நண்பர்கள் தெரிவித்தனர்.
5 பேரின் கதி என்ன?
   கேப்டன் உள்ளிட்ட மொத்த ஊழியர்கள் 37 பேரில் 16 பேர் புதன்கிழமை மீட்கப்பட்டனர். ஆனந்த் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். கப்பலில் இருந்த 15 பேரை
கடலோரக் காவல்படையினர் வியாழக்கிழமை மீட்டுள்ளனர். இந்நிலையில்
படகு கவிழ்ந்ததில் காணாமல் போன கப்பல் ஊழியர்கள் 5 பேரின் கதி என்ன? என்பது குறித்து வியாழக்கிழமை இரவுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.