Sunday, 11 November 2012

சென்னையில் தரை தட்டிய 'பிரதீபா காவேரி' கப்பல் மீட்பு

விபத்து குறித்து விசாரணை: அமைச்சர் ஜி.கே.வாசன்

திருவொற்றியூர், நவ.11:அண்மையில் தாக்கிய 'நிலம்' புயலில் சிக்கி சென்னை மெரினா அருகே தரை தட்டிய எம்.டி.பிரதீபா காவேரி என்ற எண்ணெய்க் கப்பல் 12 நாள்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.
    நான்காவது நாளாக தொடர்ந்த மீட்புப் பணி முயற்சியில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட இக்கப்பல் நடுக்கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டு நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார்.
    மும்பையைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான 'எம்.டி.பிரதீபா காவேரி' கப்பல் பழுதடைந்த நிலையில் சென்னைத் துறைமுகம் அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்து. இந்நிலையில் புயல் தாக்கியால் படிப்படியாக இழுத்து வரப்பட்டு கடந்த அக்டோபர் 31-ஆம் தேதியன்று சென்னை பட்டினம்பாக்கம் அருகே தரை தட்டி நின்றது. அப்போது இக்கப்பலில் இருந்து இறங்கி தப்பிக்க முயன்ற 22 சிப்பந்திகளில் ஆனந்த் என்ற பொறியாளர் உள்ளிட்ட 6 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்துபோயினர்.
இழுக்கும் பணியின்போது கயிறு வடம் அறுந்தது:   இந்நிலையில் கரை தட்டிய கப்பலை மீட்கும் பணி நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 'ஸ்மிட்' என்ற மீட்புப் பணி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் 133 பி.பி இழுவை திறன் கொண்ட மாளவியா என்ற இழுவைக் கப்பல் காக்கிநாடாவிலிருந்தும், 80 பி.பி. இழுவைத் திறன் கொண்ட எஸ்.சி.ஐ.ரட்னா என்ற கப்பல் மும்பையிலிருந்தும் வரவழைக்கப்பட்டன. தரை தட்டிய கப்பல் வலுவாகவே
மணலில் புதைந்திருந்ததால் தொடக்கத்திலேயே 'மாளவியா' மூலம் இழுக்கும் பணி கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. அப்போது தரைதட்டிய கப்பலோடு இணைக்கப்பட்டிருந்த நைலான் கயிறு வடம் அறுந்து போனதால் மீட்புப் பணி தடைபட்டது.
மீட்கும் பணியில் முன்னேற்றம்:     இதனையடுத்து புதிய கயிறு வடம் மூலம்  மீட்புப் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் தொடர்ந்தது. ஆனால் இரண்டாவது நாளிலும் கப்பலை அசைக்கக் கூட முடியவில்லை. சனிக்கிழமையும் தொடர்ந்து இழுக்கும் பணி நடைபெற்ற நிலையில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கடல்மார்க்கமாகச் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார். அப்போது 10 டிகிரி கோணம் அளவிற்கு கப்பல் அசைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கப்பல் நிச்சயமாக மீட்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனக் கூறியிருந்தார். மேலும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே கடற்கரைக்கு வந்து மீட்பு பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் வாசன் கப்பல் மீட்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறி்த்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்நிலையில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டதில்  ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் கப்பல் மீட்கப்பட்டது.
கடல்சார் வாணிபத் துறை நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் வாசன்   கப்பலை மீட்கும் இறுதி கட்ட நிகழ்வின்போது கடற்கரைக்கு வந்த அமைச்சர் வாசன் முழுமையாக இழுக்கப்படும்வரை சுமார் 3 மணி நேரம் அங்கேயே இருந்தார்.
பின்ர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வாசன் கூறியது,
    கப்பலில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது, ஒத்துழைப்பு கொடுத்து ராட்சத கடல் அலைகள், தளராத முயற்சி, மீட்பு பணி நிறுவனத்தின் அனுபவம் போன்ற பல்வேறு சாதகமான சூழ்நிலைகளால் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 16 கப்பல்களை மீட்டுள்ள 'ஸ்மிட்' மீட்புப் பணி நிறுவனத்தின் அனுபவம், புதிய உத்திகள்தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த சென்னைத் துறைமுகம், கடல்சார் வாணிபத் துறை, கடலோரக் காவல்படை, காவல்த் துறை,மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் அமைச்சகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
   நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் மீட்கப்பட்ட கப்பல் துறைமுகம் அருகே ஆழ்கடலில் நிறுத்தி வைக்கப்படும். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கப்பல்த் துறை இயக்குனரகம் 'பிரதீபா காவேரி' பதிவை ஏற்கனவே ரத்து செய்துள்ளது. கப்பல் நிறுவனம் மீதான நடவடிக்கை, கப்பலை மீண்டும் இயக்குவதற்கு அனுமதியளிப்பது உள்ளிட்டவை குறித்தெல்லாம் விசாரணை அறிக்கையின் பேரி கப்பல்த் துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும். புயலில் சிக்கி இறந்து போன இக்கப்பலின் ஊழியர்கள் 6 பேருக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர தேவையான நடவடிக்கைகளை அமைச்சகம் எடுக்கும் என்றார் வாசன். 
   கடந்த 12 நாள்களாக 'மெரினா'வே 'பட்டினம்பாக்கத்திற்கு' இடம் பெயர்ந்து விட்டதோ எனக் கேட்கத் தூண்டும் அளவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு தரை தட்டிய பிரதீபா காவேரியை பார்த்து ரசித்தனர். ஞாயிற்றுக்கிழமை கப்பல் மீட்கப்பட்டதன் மூலம் இதற்கு முடிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




 

No comments:

Post a Comment