Friday, 2 November 2012

சென்னையில் கரை தட்டிய டேங்கர் கப்பல்


திருவொற்றியூர், அக்.31:நீலம் புயல் சென்னையைத் தாக்கியதில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த 'எம்.டி. பிரதீபா காவேரி' என்ற ஆயில் டேங்கர் கப்பல் சென்னை பட்டினம்பாக்கம் அருகே கரை தட்டியது.  இக்கப்பலை மீட்பது குறித்து சென்னைத் துறைமுகம், கடல்சார் வாணிபத் துறை, கடலரோக் காவல் படை அதிகாரிகள்
தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
     மும்பையைச் சேர்ந்த பிரதீபா சிப்பிங் கம்பெனி லிட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான 'எம்.டி.பிரதீபா காவேரி' என்ற டேங்கர் கப்பல் மும்பையிலிருந்து கிளம்பி விசாகபட்டினம் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இதில் கேப்டன் உள்ளிட்ட 37 சிப்பந்திகள் கப்பலில் இருந்தனர். சரக்கு ஏதும் ஏற்றாமல் காலியாகச் சென்று கொண்டிருந்த இக்கப்பல் சிப்பந்திகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக் கொள்வதற்காக சென்னைத் துறைமுகம் அருகே அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த நீலம் புயலின் தாக்கம் அதிகரித்ததையடுத்து கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டது. சென்னைத் துறைமுகத்தில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதினைந்திற்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுக்கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நங்கூரமிடப்பட்டன.
   இவ்வாறு நடுக்கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்த 'எம்.டி. பிரதீபா காவேரி' என்ற கப்பல் புதன்கிழமை கடல் கொந்தளிப்பில் சிக்கி, ராட்ச அலைகளால் பட்டினம்பாக்கம் அருகே கரை ஒதுங்கியது. கப்பலை மேலும் இயக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என கூறப்படுகிறது.  கரை தட்டிய கப்பல் ஒரு புறமாகச் சாய்ந்தது. இதனால் இதில் இருந்த சிப்பந்திகள் கடலில் குதித்து தப்பி்க்க முயற்சித்தனர்.  இது குறி்த்து தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர் நவீன படகுகளில் சென்று கப்பலில் இருந்த சிப்பந்திகளை மீட்டனர்.
 கப்பலை மீட்க முடியுமா?:
1981-ல் ஜப்பானில் கட்டப்பட்ட இக்கப்பல் 31 ஆண்டுகளை கடந்துவிட்டது. எனவே இதன் இயந்திரங்கள் அபாய நிலையைச் சமாளிக்கும் திறன் இழந்துவிட்டது எனவும், எனவே அப்படியே பத்திரமாக இழுத்துச் செல்லமுடியுமா? அல்லது உடைத்துத்தான் எடுக்க வேண்டுமா என்பது குறித்தெல்லாம் ஆய்விற்குப் பிறகே கூறமுடியும் என கடல்சார் வாணிபத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

NEWS ITEMR:2

கப்பல் நிறுவனம்,  துறைமுக நிர்வாகங்களின் மெத்தனமே கரை தட்டியதற்கு காரணம்
காணாமல் போன 5 பேர் கதி என்ன?
நீந்திக் கரை சேர்ந்த கப்பல் ஊழியர்கள் பேட்டி
திருவொற்றியூர், நவ.1: தமிழகத்தைத் தாக்கிய புயலில் சிக்கி சென்னை அருகே கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.டி. பிரதீபா காவேரி என்ற எண்ணெய்க் கப்பல்  புதன்கிழமை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் இழுத்து வரப்பட்டு பட்டினம்பாக்கம் கடற்கரை அருகே கரை தட்டி நிற்கிறது.  இதனையடுத்து கப்பலில் பணி செய்து வந்த ஊழியர்கள்  படகு மூலம் தப்பிச் செல்ல முயன்றனர்.  அப்போது படகு கவிழ்ந்ததில் ஆனந்த் மோகன்தாஸ் என்பவர் பொறியாளர் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்.
 நடந்தது என்ன?:
     மும்பையைச் சேர்ந்த பிரதீபா சிப்பிங் கம்பெனி என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இக்கப்பல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை ஏற்றிச் செல்லும் வசதி கொண்டது.  இக்கப்பல் ஒப்பந்த அடிப்படையில் இந்தியன் ஆயில் கார்போரேசன் (ஐ.ஓ.சி) நிறுவனத்திற்கு டீசல்களை ஏற்றி வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இதன்படி கடந்த செப்.25-ல் எல்.டி.ஓ.வகை டீசலை ஏற்றிக்கொண்டு சென்னைத் துறைமுகம் வந்தது பிரதீபா காவேரி  டீசலை இறக்கிய பிறகு காலியாக துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடப்பட்டிருந்தது.  இந்நிலையில்  ஐ.ஓ.சி. நிறுவனத்துடனான ஒப்பந்தம் காலாவதியானதால் புதிய ஆர்டர்களுக்காக காத்திருக்க வேண்டி நிலை ஏற்பட்டது.  இதற்கிடையே உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் தீர்ந்துவிட்டதால் இதற்காக கடந்த அக்.8-ம் தேதி மீண்டும் துறைமுகத்திற்குள் வந்தது. ஆனால் வழக்கமான முகமை நிறுவனம்,  தனக்கு அதிக பாக்கி வைத்திருப்பதால் மேற்கொண்டு  பொருள்களை வழங்க முடியாது என மறுத்துவிட்டது. இருப்பினும் அவசரத் தேவை கருதி வேண்டுகோளின் அடிப்படையில் ஒரு வாரத்திற்குத் தேவையான உணவுப் பொருள்களை மட்டும் அந்த ஏஜென்சி வழங்கியது.
இதன் பிறகும் கப்பலை பழுது பார்க்கும் தளத்திற்குக் கொண்டு செல்லவோ, ஊழியர்களுக்கு தேவையான அத்தியாவசித் தேவைகளை பூர்த்தி செய்யவோ கப்பல் நிறுவனம் துரித முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என ஊழியர்கள் தெரிவித்தனர்.
சென்னைத் துறைமுகம் மெத்தனம்:
     இந்நிலையில் கப்பல் பழுது, உணவுப் பஞ்சம், சம்பளம் வழங்காதது,  பணி ஒப்பந்தம் முடிந்தும் விடுவிக்கப்படாதது உள்ளிட்ட துயரங்களால் இன்னலுற்ற கப்பல் சிப்பந்திகளுக்கு புயல் வடிவில் புதிய பிரச்னை ஏற்பட்டது.  கடந்த அக்.28-ம் தேதி சென்னைத் துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனையடுத்த கப்பலுக்கு ஆபத்து நேரிடலாம் எனக் கருதிய பிரதீபா கப்பலின் கேப்டன் சென்னைத் துறைமுகத்தில் உள்ள வி.டி.எம்.எஸ் (கப்பல் போக்குவரத்து மேலாண்மை பணி) அதிகாரிகளுக்கும், கடல்சார் வாணிபத்துறை (எம்.எம்.டி.) அதிகாரிகளுக்கும் கப்பலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து விளக்கியதாகவும், எனவே கப்பலை நடுக்கடலுக்குக் கொண்டு செல்ல இரண்டு இழுவைக் கப்பல்களை அனுப்பும்படி கோரிக்கை விடுத்ததாக கப்பலின் ரேடியோ அலுவலர் ரூபக் குமார் மிஸ்ரா தெரிவித்தார்.
 முதலில் இதற்கு ஒப்புதல் தெரிவித்த அதிகாரிகள், சாக்குப் போக்குச் சொல்லியவாறே புதன்கிழமைவரை இழுவைக் கப்பல்களை அனுப்பவில்லை. இதற்கிடையே காற்றின் வேகம் அதிகரித்து, கடல் கொந்தளித்ததால் கப்பலை இயக்க இறுதி முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் கப்பல் நகரவே இல்லை. இதற்கிடையே கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்கு வந்துவிட்டது என்கிறார் ரூபக் குமார்.
 உயிருக்குப் போராடிய ஊழியர்கள்:
     இதனையடுத்து நடந்த சம்பவங்கள் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கப்பல் ஊழியர்கள் கூறியது,
கப்பல் மூழ்கிவிடும் ஆபத்து ஏற்பட்டும் எவ்வித உதவியும் கிட்டாத நிலையில் அனைத்து ஊழியர்களையும் ஓரிடத்திற்கு வரும்படி கேப்டன் அழைத்தார். பின்னர் கப்பல் ஆபத்தில் சிக்கியுள்ளதால் உயிர்காக்கும் படகுகள் மூலம் தப்பிச் செல்லும்படி அவர் தெரிவித்தார். அப்போது கப்பலில் இருந்த 37 பேரில் 22 பேர் மட்டும் உடனடியாக தப்பிச் செல்ல முடிவெடுத்து படகை இறக்கி நாங்களும் அதில் ஏறினோம். ஆனால் அந்தப் படகும் பழுதடைந்தநிலையில் இருந்தது அப்போதுதான் தெரியவந்தது.  இந்நிலையில் கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. ஐந்து பேர் மட்டும்
நீந்திக் கரைக்கு வந்தோம். பின்னர் கடலில் தத்தளித்தவர்களை மீனவர்கள் மீட்டனர். அதற்குள்  ஆனந்த் மோகன்தாஸ் என்ற பொறியாளர் கடலில் மூழ்கி இறந்துவிட்டார்.  ஐந்து பேரைக் காணவில்லை. அவர்கள் கதி என்னவென்றும் தெரியவில்லை. வியாழக்கிழமைதான் கடலோரக் காவல்படையினர் ஹெலிகாப்டரில் வந்து கப்பலில் இருந்த 15 பேரை மீட்டனர்.
       மொத்தத்தில் கப்பல் நிறுவனத்தின் அலட்சியம்,  துறைமுகம், சென்னைத் துறைமுக நிர்வாக அதிகாரிகளின் மெத்தனப்போக்கு, அவசரத்திற்கு உதவாத கடலோரக் காவல்படை ஆகிவற்றோடு புயல் என்ற இயற்கை சீற்றமும் சேர்ந்து எங்களை சோதித்து விட்டன என்பதே உண்மை என கண்ணீரோடு தெரிவித்தனர்.

ITEM 3
.
ஒப்பந்தம் முடிந்தும் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஆனந்த்
கடலில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்
திருவொற்றியூர், நவ.1:
கரை தட்டிய கப்பலில் இருந்து தப்பிக்க முயன்றபோது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்து போன ஆனந்த் மோகன்தாஸ் (31) குறி்த்த தகவல்கள்:
   இறந்து போன ஆனந்த விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவைசே சேர்ந்த நேசல் கிராமத்தைச் சேர்ந்தவர். கப்பல் பொறியியலில் பட்டம் பெற்ற ஆனந்த் பிரதீபா கப்பல் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தம் முடிந்துவிட்டபோதும் அவரை கப்பல் நிறுவனம் விடுவிக்காதது மட்டுமல்ல ஆனந்தின் சம்பளத்தையும் நிலுவையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல் இக்கப்பலில் வேலை செய்து வந்த பெரும்பாலான ஊழியர்களுக்கு 5 முதல் 7 மாதங்கள் சம்பளத்தை பாக்கியாக வைத்துள்ளது கப்பல் நிறுவனம்.  எனவே பாக்கிச் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு விரைவில் இந்நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவு செய்திருந்த நிலையில்தான் இக்கோரச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது என கப்பலில் பணிபுரிந்து உயர் தப்பிய அவரது சக நண்பர்கள் தெரிவித்தனர்.
5 பேரின் கதி என்ன?
   கேப்டன் உள்ளிட்ட மொத்த ஊழியர்கள் 37 பேரில் 16 பேர் புதன்கிழமை மீட்கப்பட்டனர். ஆனந்த் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். கப்பலில் இருந்த 15 பேரை
கடலோரக் காவல்படையினர் வியாழக்கிழமை மீட்டுள்ளனர். இந்நிலையில்
படகு கவிழ்ந்ததில் காணாமல் போன கப்பல் ஊழியர்கள் 5 பேரின் கதி என்ன? என்பது குறித்து வியாழக்கிழமை இரவுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment