இன்று 2 கப்பல்களை ஈடுபடுத்த முடிவு
திருவொற்றியூர், நவ.8: புயலின் தாக்கம் காரணமாக சென்னை மெரினா கடற்கரை அருகே தரைதட்டி நிற்கும் எம்.டி. பிரதீபா காவேரி கப்பலை மீட்க வியாழக்கிழமை மேற்கொண்ட முயற்சியின்போது இழுவைக் கயிறு அறுந்து போனதால் இழுக்கும் பணியில் நிறுத்தப்பட்டது. வியாழக்கிழமை மாளவியா என்ற கப்பல் மட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை (இன்று) மாளவியா கப்பலுடன், எஸ்.சி.ஐ.ரட்னாவும் இழுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.
தரை தட்டிய கப்பலான எம்.டி.பிரதீபா காவேரியை இழுக்கும் பணியை நெதர்லாந்தைச் சேர்ந்த 'ஸ்மிட்(SMIT)'
என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் நிபுணர்கள் குழு கடந்த வாரமே சென்னை வந்துவிட்டனர். மேலும் கடந்த சில நாள்களாக கப்பலை பத்திரமாக மீட்பது குறித்து சென்னைத் துறைமுகம், கடல்சார் வாணிபத்துறை, கடலோரக் காவல்படை அதிகாரிகளுடன் ஸ்மிட் நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர். இதற்கிடையே கப்பலை இழுக்க 133 பி.பி. இழுவைத் திறன் கொண்ட எம்.வி. மாளவியா என்ற இழுவைக் கப்பல் காக்கிநாடாவிலிருந்தும், எஸ்.சி.ஐ.ரட்னா என்ற கப்பல் மும்பையிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கப்பலை இழுக்கும் பணி்க்கான ஆயத்தப் பணிகள் புதன்கிழமை தொடங்கியது. பலம் வாய்ந்த நைலான் கயிறு வடம் தரை தட்டிய கப்பலில் கட்டப்பட்டு மாளவியா கப்பலைக் கொண்டு வியாழக்கிழமை இழுக்கும் பணி தொடங்கியது. ஆனால் சில முயற்சிகளிலேயே கயிறு வடம் அறுந்து போனதால் இழுக்கும் முயற்சி நிறுத்தப்பட்டது. பின்னர் மீட்பு நிபுணர்கள், அதிகாரிகள் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் குறித்து கடல்சார் வாணிபத்துறை வட்டாரத்தில் கூறியது,
தற்போது கப்பலை இயக்கும் முக்கிய இயந்திரம் பழுதடைந்துள்ளது. எனவே தரைதட்டிய கப்பலை இழுக்க மேலும் கூடுதல் இழுவைத் திறன் தேவைப்படுகிறது. மேலும் தற்போது கப்பலில் அதிக அளவில் அளவு கடல் நீர் நிரப்பப்பட்டுள்ளது. கடலில் மிதக்க அவசியமான சரிவிகித எடைக்காக கடல் நீர் நிரப்பப்படுவது வழக்கமானது. இக்கப்பல் காலியாக இருந்ததால் அதிக அளவில் கடல் நீர் நிரப்பப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை வெளியேற்றினால் கப்பலின் எடை குறைந்து இழுப்பதற்கு சற்று எளிதாக இருக்கும். ஆனால் ஜெனரேட்டரை இயக்கத் தேவையான டீசல் தீர்ந்துவிட்டதால் கப்பலில் மின்சாரம் இல்லை. மின்சாரம் இல்லாததால் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் சென்னைத் துறைமுகத்திலிருந்து டீசல் எடுத்துவரப்பட்டு தரை தட்டிய கப்பலில் நிரப்பப்பட்டுள்ளது. வியாழக்கிழமை ஜெனரேட்டர் இயக்கப்பட்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
கயிறு வடம் அறுந்துவிட்டதால் இழுக்கும் பணியில் தொய்வடைந்துவிட்டதாகக் கருதமுடியாது.
எல்லாமே முயற்சிதான். வெற்றி என்பது இறுதியில் தான் தெரியும். கப்பலை கயிறு மூலம் இழுக்கும் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கும். அப்போது மாளவியாவுடன் எஸ்.சி.ரட்னாவும் ஈடுபடுத்தப்படும். மேலும் நைலான் கயிறு வடத்திற்குப் பதிலாக பலம் வாய்ந்த இரும்பு வடம் கொண்டு இழுக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் இழுக்கும் பணி நடைபெறுவதையொட்டி மெரினா, பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியே
பார்வையாளர்கள் நிரம்பி வழிந்தது. அதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
No comments:
Post a Comment