Friday, 19 May 2017


அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும்

தமிழருவி மணியன்

திருவொற்றியூர், மே 14:அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும். மேலும் பண்பாடு நிறைந்த வாழ்க்கையை தாய்மொழி மூலமே பெற முடியும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
   திருவொற்றியூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்படும் சிந்தனைச்சாரல் மாதாந்திர நிகழ்ச்சி திருவொற்றியூர் சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 'வாழ்க்கையெனும் ஜீவரசம்' என்ற தலைப்பில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு பேசியது, 
   வாழ்க்கை என்பது பொதுவாகத் துன்பம் அதிகம் நிரம்பியதுதான். ஆனால் இன்பம் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்து கொள்ள நாம்தான் முயற்சிக்க வேண்டுமே தவிர துன்பத்தை எண்ணியே வருத்தமடைய முடியாது. பசி, நோய், பகை இல்லாத வாழக்கையில் அறம் சிறக்கும். 
   பண்பாடு நிறைந்த வாழ்க்கையை தாய்மொழி மூலமே நாம் பெற முடியும். திருக்குறள், திருமந்திரம்,  புறநானூறு, தேவாரம், திருவாசகம், புராணங்கள்ம, இதிகாசங்கள் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறம் சார்ந்த வாழ்க்கை நெறிமுறைகளை தொன்மையான தமிழ்மொழி வகுத்துக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழர்களைப் பொறுத்தவரை அறம் சார்ந்த வாழ்க்கையை வாழ தமிழ் நூல்களைப் படிக்க வேண்டும். இளம்வயதிலிருந்தே இவ்வாறு கற்பதை
பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். 
   தீமையின் நிழல்படாத அறவழியில் ஈட்டும் பொருள்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்கும். தீயவழியில் பொருளீட்டுவதையே ஒருவன் வழக்கமாகக் கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அப்பழக்கம் குணப்படுத்த முடியாத வியாதியைப் போல ஒட்டிக் கொள்ளும். பிறகு துன்பத்திலிருந்து அவன் விடுபடவே முடியாது என்பதை உணர வேண்டும். 
    எதனையும், யாரையும் அற்பமாகக் கருதக்கூடாது. வாழ்வு என்பது பெற்றுக் கொண்டே இருப்பது அல்ல. ஏழைகளுக்குக் கொடுப்பதன் மூலமே உண்மையான மகிழ்ச்சியைப் பெற முடியும்.
   படித்தவர்கள் எல்லாம் ஞானம் நிறைந்தவர்கள் என்று கருதிவிட முடியாது. தகவல்களைப் பெற்று சிந்தனை நிறைந்த அறிவாற்றலை தொடர்ந்து வளப்படுத்தி வந்தால் பிறகு ஞானத்தை அடைய முடியும். ராமகிருஷ்ண பரமஹம்சர் படிக்காதவர். அவரை மெத்தப் படித்த விவேகானந்தர் குருவாக ஏற்றுக்கொண்டதற்கு காரணம் ராமகிருஷ்ணரின் ஞானம்தான்.
   தேடித் தேடி பணத்தைச் சேர்ப்பதைவிட தேடித் தேடி நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். உணவு, உறக்கம், உழைப்பு, இன்பம், சிந்தனை ஆகியவற்றில் 
மலைக்கும் மடுவிற்கும் நடுவே நாம் செல்ல வேண்டும். எந்த விலங்கும், பறவையும் 
காலச் சூழலுக்கு ஏற்ப தங்கள் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டுவிடவில்லை. காரணம் அவற்றுக்கு மனிதனைப்போல சிந்தனை அறிவு கிடையாது. 
   எனவே இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் இயல்பாகவே ஏற்றுக்கொண்டுக் கொண்டு, அறநூல்களில் கூறப்பட்டுள்ளவைகளைக் கடைப்பிடித்து 
ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதுவே ஜீவரசமாக சுவையோடு இருக்கும் என்றார் மணியன். 
    இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜி.வரதராஜன், பள்ளியின் தாளாளர் ரங்கநாதன்,  நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் என்.துரைராஜ், கே.சுப்பிரமணி, மதி, எஸ். சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
'ஓசன் சீல்டு' சென்னை வருகை:

இந்தியா-ஆஸ்திரேலியா இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவாக உள்ளது

ஆஸ்திரேலிய படைத் தளபதி தகவல் 


திருவொற்றியூர், மே 18:ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் படைக் கப்பல்  'ஓசன் சீல்டு'  வியாழக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. இதனை இந்திய கடலோரக் காவல்படையினர், பள்ளி மாணவர்கள் கூடி வரவேற்றனர். 
    இந்திய கடலோரக் காவல்படையினரும், வெளி நாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல்படையினர் நல்லெண்ண உறவுகள் அடிப்படையில் பரஸ்பரம் அந்தந்த நாடுகளுக்குச் சென்று வருவது வழக்கம். இதன்படி கடந்த 2004-ம் ஆண்டு 
இந்தியக் கடலோரக் காவல்படை கப்பலான ஐசிஜிஎஸ் சங்கல்ப் ஆஸ்திரேலியா சென்று வந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படை கப்பலான 'ஓசன் சீல்டு' வியாழக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. அப்போது இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள், பள்ளி மாணவர்கள் கூடி கப்பலை வரவேற்றனர்.
பின்னர் ஆஸ்திரேலியா எல்லை பாதுகாப்புப் படை ஆணையர் ரோமன் குவேட்வைலி கப்பல் பயணத்தின் நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியது, 
ஆஸ்திரேலியா திறமையான கடல் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை கப்பல் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல்முறையாகும். இப்பயணத்தின் மூலம் இந்திய கடலோரக் காவல்படையினருடனான ஈடுபாடு, உறவுகள் அதிகரிக்கும்.  மேலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நிகழும் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் பங்கு மகத்தானது. இரு நாடுகளிடையே மதிப்பு மிகுந்த நல்லுறவு தொடர்ந்து இருந்து வருகிறது. இதனை இக்கப்பல் பயணம் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். பரந்த கடல் எல்லையைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் போதை மருந்துகள், ஆயுதங்கள், கடற்கொள்ளை, சட்டவிரோத மீன்பிடித்தல் உள்ளிட்ட கடல்சார் சட்ட விரோதச் செயல்களைக் கண்காணிப்பதுதான் எல்லை பாதுகாப்பு படையினரின் முக்கிய பணிகளாகும். ஆஸ்திரேலிய கடல் பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் கடத்தப்படும் சம்பவங்கள் பெரும்பாலும் இல்லை. ஆனால் மலாக்கா நீரிணைப்பு பகுதியில்தான் இதுபோன்ற பிரச்னைகள் நீடித்து வருகின்றன. 
இலங்கை அகதிகள் பிரச்னை:
    சட்டவிரோதக் கும்பல்கள் மூலம் இலங்கை அகதிகள் பல்வேறு நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்காக படகுகளில் அழைத்து வரப்படுகின்றனர். இதனை ஆஸ்திரேலியா அனுமதிப்பதில்லை. இதனையடுத்து அவ்வாறு வரும் அகதிகள் மீட்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் தொடர்புடைய நாடுகளின் 
தூதரகங்கள் மூலம் அந்தந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைக்கிறோம். இதில் எல்லைப் பாதுகாப்புப் படை பல்வேறு வகையில் மனிதாபிமானத்துடன்தான் நடவடிக்கை 
மேற்கொள்கிறோம். ஆனால் சட்டவிரோதக் குடியேற்றத்தை எப்போதும் அனுமதிக்க முடியாது என்றார் குவேட்வைலி.
   இந்நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான ஆஸ்திரேலியா நாட்டின் தூதர் ஹரிந்தர் சித்து, கப்பலின் கேப்டன் ஆலன் சாம்ப்கின், இந்தியக் கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய உதவித் தளபதி மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கப்பல் சனிக்கிழமைவரை சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இரு நாள்களும் 
இரு நாட்டு வீர்ர்கள் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா எல்லைப் பாதுகாப்புப் படை கப்பல் 'ஓசன் சீல்டு' 

நாளை சென்னை வருகிறது 

திருவொற்றியூர், மே 16: ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த  'ஓசன் சீல்டு' என்ற கப்பல் வியாழக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்தடைகிறது. இதனை இந்திய கடலோரக் காவல்படை அதிகாரிகள் வரவேற்கின்றனர் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 
    இந்திய கடலோரக் காவல்படையினரும் வெளி நாடுகளைச் சேர்ந்த கடலோரக் காவல்படையினர் நல்லெண்ணம் அடிப்படையில் கலந்துரையாடல், தகவல்கள்,  தொழில்நுட்ப பரிமாற்றம், சமூக சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது வழக்கமானது. இந்த அடிப்படையில் ஆஸ்திரேலியா நாட்டின் எல்லைப் பாதுகாப்புப்படை கப்பல் ஓசன் சீல்டு வியாழக்கிழமை சென்னை வருகிறது.
நடுக்கடலில் பல்வேறு வகையில் உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கப்பல் 110 மீட்டர் நீளமும், 22 மீட்டர் அகலமும் கொண்டதாகும். மணிக்கு 16 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய இக்கப்பல் சுமார் 8,500 டன் எடை கொண்டாகும். மேலும் பொருள்களை எடுத்துச் செல்ல சுமார் 1000 மீட்டர் பரப்பளவிலான இடம் உள்ளது. மேலும் கப்பலின் மேல் பகுதியில் சிறிய ரக ஹெலிகாப்டரை நிறுத்தி வைக்கும் தளம் உள்ளது. காணாமல் போன மலேசியா விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கப்பலில் ஓசன் சீல்டும் ஒன்றாகும். இக்கப்பல் சனிக்கிழமைவரை சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Thursday, 27 April 2017

ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை கைப்பற்ற
27-வது நாளாகத் தொடரும் முற்றுகை போராட்டம் 

திருவொற்றியூர், ஏப்.20: திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள காலியிடத்தை துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் மறு குடியமர்த்தல் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் கடந்த கடந்த 27 நாள்களாக இதே இடத்தில் 
பந்தல்கள் அமைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
     இருப்பினும் இப்பிரச்னையில் தொடர்புடைய  மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மீனவர்கள், பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. 
பிரச்னையின் பின்னணி என்ன?
      துறைமுக இணைப்புச் சாலை திட்டத்தினால் வீடுகளை இழக்கும் என்.டி.ஓ. குப்ப மீனவ குடும்பங்களை மறுகுடியமர்த்தல் செய்வதில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் 
மேலாக பிரச்னை இருந்து வருகிறது. எர்ணாவூரில் ஒதுக்கப்பட்ட வீடுகளை 
ஏற்க மறுத்து வருவதே இதற்கு காரணம். இதனையடுத்து  என்.டி.ஓ.குப்பம் பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான 3.34 ஏக்கர் நிலத்தில்  என்.டி.ஓ.குப்பத்தைச் சேர்ந்த 446 குடும்பங்களுக்கு  சுமார் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி வீடுகள் அமைப்பதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை கடந்த மார்ச் 28-ம் தேதி நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். 
திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு:
    என்.டி.ஓ.குப்பம் மீனவர்களுக்கு கோயில் நிலம் ஒதுக்கப்பட்டதையறிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தியாகராஜர் கோயிலில் சாமி தூக்கும் சேவையில் பாரம்பரியாக ஈடுபட்டு வரும் இக்குப்பத்தைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மனையையோ அல்லது வீடுகள் அமைத்துத் தரும்படி பல ஆண்டுகளாகக் கோரி வருவதாகவும், இந்நிலையில் சாலை விரிவாக்க மறுகுடியமர்த்தல் திட்டத்தின்கீழ் இந்நிலத்தை ஒதுக்கி இருப்பதை ஏற்க முடியாது எனவும் இவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் அறிவிப்பின் அடுத்த நாளே ஒதுக்கப்பட்ட இடத்தில் குவிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அங்கே பந்தல்கள் தங்கக் தொடங்கினர். போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட சமாதானங்களை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் கடந்த 23 நாள்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 
அவசரகதியில் அமைச்சர் எடுத்த முடிவு?:பொதுமக்கள் குற்றச்சாட்டு
இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுமக்கள் கூறியது, 
   அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு அளிப்பதில் கடுமையான பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகளின்படி அவ்வளவு எளிதாக கோயில் நிலத்தை ஒதுக்கிவிட முடியாது. காரணம் கோயில் நிலங்கள் என்பது பெரும்பாலும் முன்னோர்களால் தானம் வழங்கப்பட்டதும், இதனை நோக்கம் ஆன்மீகம், தர்ம காரியங்களுக்கு இந்நிலம் உதவும் என்பதுதான். இந்த நிலத்தை பொறுத்தவரை முறையான எவ்வித அனுமதியோ அல்லது உத்தரவோ 
அளிக்கப்படவில்லை என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அப்படியே இந்ந நிலம்தான் தேவையெனில் அதற்கான இழப்பீட்ட கோயிலுக்கு வழங்கிவிட்டுத்தான் மறு குடியமர்த்தல் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். இதனைவிடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மறுகுடியமர்த்தல் திட்டத்திற்கு அறிவித்ததில் அவசர கதியும், முன்யோசனையின்மையும்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பொறுப்பான மாவட்ட ஆட்சியர், மூத்த அமைச்சரே ஈடுபட்டிருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது என்றனர்.
27 நாள்களைக் கடந்தும் அசையாத அதிகாரிகள்: 
    ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தில் மீனவ கிராம மக்கள் புகுந்து கடந்த 23 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இப்பிரச்னையில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர், அறநிலைய, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித சலனமும் இன்றி மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மீனவர்கள், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிலத்தை அளிக்க எவ்வித உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் அமைச்சர்  எவ்வாறு தன்னிச்சையாக அறிவித்தார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. மேலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாதது அனைவரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. மீனவர்களைப் பொறுத்தவரை
நிலத்திற்கான உரிமையை விட பாரம்பரிய உரிமையை முன்னிறுத்துகின்றனர். மேலும் இந்நிலத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என்பதுதான் பொதுமக்களின் பெரும்பாலான கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் கடும் வெயில், விஷப் பூச்சிகளின் அபாயத்திற்கிடையே கடந்த  27 நாளாக சிறியவர், பெரியவர் என ஒட்டுமொத்தக் கிராமமும் வரும் நிலையில் இவர்களைச் சமாதானப்படுத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு கெடும் எனக் கூறி இடைத்தேர்தலை காரணம் காட்டிய அதிகாரிகளின் அடுத்த சாக்குப்போக்கு என்னவாக இருக்கப்போகிறதோ? 
      மக்கள் தொடங்கும் எந்த போராட்டமும் நாளாக நாளாக தானாகவே செயலிழந்துவிடும், எனவே போராட்டம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதே சரியானது என்பது தற்போதைய அரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளாக இருக்கின்றன.  இதில் தற்போது திருவொற்றியூரும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
23 நாள்களாகத் தொடரும் போராட்டம்: 

ஆக்கிரமிப்பின் பிடியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோயில் நிலம்  

அதிகாரிகள் மெத்தனத்தால் பொதுமக்கள் அதிருப்தி

திருவொற்றியூர், ஏப்.20: திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள காலியிடத்தை துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் மறு குடியமர்த்தல் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் கடந்த கடந்த 23 நாள்களாக இதே இடத்தில் 
பந்தல்கள் அமைத்துப் போராடி வருகின்றனர். 
     இருப்பினும் இப்பிரச்னையில் தொடர்புடைய  மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மீனவர்கள், பொதுமக்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. 
பிரச்னையின் பின்னணி என்ன?
      துறைமுக இணைப்புச் சாலை திட்டத்தினால் வீடுகளை இழக்கும் என்.டி.ஓ. குப்ப மீனவ குடும்பங்களை மறுகுடியமர்த்தல் செய்வதில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் 
மேலாக பிரச்னை இருந்து வருகிறது. எர்ணாவூரில் ஒதுக்கப்பட்ட வீடுகளை 
ஏற்க மறுத்து வருவதே இதற்கு காரணம். இதனையடுத்து  என்.டி.ஓ.குப்பம் பகுதியில் மட்டும் சாலை அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலுக்குச் சொந்தமான 3.34 ஏக்கர் நிலத்தில்  என்.டி.ஓ.குப்பத்தைச் சேர்ந்த 446 குடும்பங்களுக்கு  சுமார் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி வீடுகள் அமைப்பதற்கான ஒதுக்கீட்டு உத்தரவுகளை கடந்த மார்ச் 28-ம் தேதி நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். 
திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு:
    என்.டி.ஓ.குப்பம் மீனவர்களுக்கு கோயில் நிலம் ஒதுக்கப்பட்டதையறிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தியாகராஜர் கோயிலில் சாமி தூக்கும் சேவையில் பாரம்பரியாக ஈடுபட்டு வரும் இக்குப்பத்தைச் சேர்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மனையையோ அல்லது வீடுகள் அமைத்துத் தரும்படி பல ஆண்டுகளாகக் கோரி வருவதாகவும், இந்நிலையில் சாலை விரிவாக்க மறுகுடியமர்த்தல் திட்டத்தின்கீழ் இந்நிலத்தை ஒதுக்கி இருப்பதை ஏற்க முடியாது எனவும் இவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர் அறிவிப்பின் அடுத்த நாளே ஒதுக்கப்பட்ட இடத்தில் குவிந்த திருவொற்றியூர் குப்பம் மீனவர்கள் அங்கே பந்தல்கள் தங்கக் தொடங்கினர். போலீஸார், வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்ட சமாதானங்களை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் கடந்த 23 நாள்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். 
அவசரகதியில் அமைச்சர் எடுத்த முடிவு?:பொதுமக்கள் குற்றச்சாட்டு
இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுமக்கள் கூறியது, 
   அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தை மக்கள் நலத் திட்டங்களுக்கு அளிப்பதில் கடுமையான பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இந்த நடைமுறைகளின்படி அவ்வளவு எளிதாக கோயில் நிலத்தை ஒதுக்கிவிட முடியாது. காரணம் கோயில் நிலங்கள் என்பது பெரும்பாலும் முன்னோர்களால் தானம் வழங்கப்பட்டதும், இதனை நோக்கம் ஆன்மீகம், தர்ம காரியங்களுக்கு இந்நிலம் உதவும் என்பதுதான். இந்த நிலத்தை பொறுத்தவரை முறையான எவ்வித அனுமதியோ அல்லது உத்தரவோ 
அளிக்கப்படவில்லை என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். அப்படியே இந்ந நிலம்தான் தேவையெனில் அதற்கான இழப்பீட்ட கோயிலுக்கு வழங்கிவிட்டுத்தான் மறு குடியமர்த்தல் திட்டத்தை செயல்படுத்தியிருக்க வேண்டும். இதனைவிடுத்து ரூ. 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை மறுகுடியமர்த்தல் திட்டத்திற்கு அறிவித்ததில் அவசர கதியும், முன்யோசனையின்மையும்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் பொறுப்பான மாவட்ட ஆட்சியர், மூத்த அமைச்சரே ஈடுபட்டிருப்பது பொதுமக்களை வேதனையடையச் செய்துள்ளது என்றனர்.
23 நாள்களைக் கடந்தும் அசையாத அதிகாரிகள்: 
    ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தில் மீனவ கிராம மக்கள் புகுந்து கடந்த 23 நாள்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இப்பிரச்னையில் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர், அறநிலைய, காவல்த்துறை உயர் அதிகாரிகள் எவ்வித சலனமும் இன்றி மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மீனவர்கள், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிலத்தை அளிக்க எவ்வித உத்தரவாதமும் அளிக்காத நிலையில், மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் அமைச்சர்  எவ்வாறு தன்னிச்சையாக அறிவித்தார் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. மேலும் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாதது அனைவரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. மீனவர்களைப் பொறுத்தவரை
நிலத்திற்கான உரிமையை விட பாரம்பரிய உரிமையை முன்னிறுத்துகின்றனர். மேலும் இந்நிலத்தை யாருக்கும் வழங்கக் கூடாது என்பதுதான் பொதுமக்களின் பெரும்பாலான கருத்தாக இருக்கிறது. இந்நிலையில் கடும் வெயில், விஷப் பூச்சிகளின் அபாயத்திற்கிடையே  23 நாளாக சிறியவர், பெரியவர் என ஒட்டுமொத்தக் கிராமமும் வரும் நிலையில் இவர்களைச் சமாதானப்படுத்தி பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு கெடும் எனக் கூறி இடைத்தேர்தலை காரணம் காட்டிய அதிகாரிகளின் அடுத்த சாக்குப்போக்கு என்னவாக இருக்கப்போகிறதோ? 
      மக்கள் தொடங்கும் எந்த போராட்டமும் நாளாக நாளாக தானாகவே செயலிழந்துவிடும், எனவே போராட்டம் குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதே சரியானது என்பது தற்போதைய அரசுகளின் ராஜதந்திர நடவடிக்கைகளாக இருக்கின்றன.  இதில் தற்போது திருவொற்றியூரும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Monday, 17 April 2017

'ஐ.என்.எஸ். சென்னை' போர்க்கப்பலை 5 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

இன்று முதல்வர் பழனிசாமி வருகை 

திருவொற்றியூர், ஏப்.16:முதல் முறையாக சென்னை வந்த 'ஐ.என்.எஸ். சென்னை' போர்க்கப்பலை இரு தினங்களில் மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
   இந்திய கடற்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இணைக்கப்பட்ட 'ஐ.என்.எஸ். சென்னை' என்ற போர்க்கப்பல் தனது முதல் பயணமாக சனிக்கிழமை சென்னை வந்தது. அப்போது சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வரிசையில் நின்று கொடியசைத்து வரவேற்றனர். பின்னர் மாணவர்கள்  கப்பலில் ஏறி சுற்றிப் பார்த்தனர். இதனையடுத்து சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெரினா கடற்கரை அருகே கடலில் ஒளி அலங்காரம் செய்யப்பட்டு இக்கப்பல் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் 
ஞாயிற்றுக்கிழமை கப்பலை பொதுமக்கள் பார்வையிட கடற்படை அனுமதித்தது. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கப்பலை பார்வையிட்டதாகவும், இரு தினங்களில் கப்பலைப் பார்வையிட்டோரின் எண்ணிக்கை மொத்தம் சுமார் 5 ஆயிரம் என பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில்  கப்பலைப் பார்வையிட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வருகைதர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மகிழ்ச்சிகரமான அனுபவம்: பொதுமக்கள் நெகிழ்ச்சி
கப்பலைச் சுற்றிப்பார்த்தது குறித்து பெருங்களத்தூரைச் சேர்ந்த என்.சங்கர் (35) கூறியது,
   நானும் எனது நண்பர்களும் கப்பலைப் பார்வையிட்டோம். கடற்படை அதிகாரிகள் பேருந்தில் அழைத்துச் சென்றனர். பின்னர் கப்பலில் ஏறி முக்கிய பகுதிகளில் பார்வையிட அனுமதித்தனர். சுமார் ஒரு மணி நேரம் பார்வையிட்டோம். எங்களுக்கு கப்பலைப் பார்வையிடுவது இதுதான் முதல்முறையாகும். எனவே மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே இருந்தாலும் பார்வையிடுவது மட்டுமே போதுமானது அல்ல. ஏதாவது ஓரிடத்தில் நிறுத்தி வைத்து போர்க்கப்பலின் சிறப்பு, கடற்படையினரின் பணிகள் குறித்து விளக்கிக் கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் பொதுமக்கள் எங்கே வரவேண்டும், அனுமதியை யார் தருவது என்பதை முன்னதாகவே முறையாக அறிவித்திருந்தால் பொதுமக்களுக்கு அலைச்சல் இருந்திருக்காது. மேலும் இது போன்ற கப்பல்கள் வருகை தரும்போது கூடுதல் நாள்கள் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றார் சங்கர்.


தவறான தகவல்கள்தான் சிரமங்களுக்கு காரணம்

ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சக மக்கள் தொடர்பு அதிகாரி டி.சண்முகம் கூறியது, 
   போர்க்கப்பலை வரவேற்க மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால்  ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் பார்வையிட அனுமதி என கடற்படை ஏதும் அறிவிக்கவில்லை. பொதுமக்கள் பார்வையிடத்தான் மெரினா கடற்கரையை ஒட்டி கப்பலை நிறுத்தியது . ஆனால் தவறான தகவல்களின் பேரில் பொதுமக்கள் 18-ம் தேதிவரை கப்பலை நேரில் பார்வையிடலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கானோர் நேப்பியால் பாலம் அருகே கடற்படை அலுவலகம் அருகில் குவிந்துவிட்டனர். இதன்பிறகு வேறு
வழியின்றி பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டு கப்பலைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். முடிந்த அளவு பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்படாமல் 
முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.  எனவே பொதுமக்களுக்கு இனி அனுமதி இல்லை என்றார் சண்முகம். 
இந்திய கடற்படை போர்க்கப்பல் சென்னை வருகை: பள்ளி மாணவர்கள் வரவேற்பு

முதல்வர் பழனிசாமி பார்வையிடுகிறார்


திருவொற்றியூர்,ஏப்.15:இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சென்னை 
சனிக்கிழமை சென்னைத் துறைமுகம் வந்ததடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கொடியசைத்து வரவேற்றனர். 
   பின்னர் கப்பலின் சிறப்பு, வருகை நோக்கம் குறித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதி கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் கூறியது,
   கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐ.என்.எஸ். சென்னை இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.  மும்பையில் உள்ள பொதுத்துறை நிறுவனமான மஜகான் ஷிப் யார்டில் கட்டப்பட்ட இக்கப்பலில் இதர போர்க் கப்பல்களில் உள்ளதைப் போன்று ஏவுகணைகள், கண்ணிவெடிகளை அழித்தல், பீரங்கி, ரேடார் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இக்கப்பலில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அணு, உயிரி, வேதியியல் கருவிகள் பங்களிக்கும் போர்களிலும் இக்கப்பலைப் பயன்படுத்த முடியும். சுமார் 7,500 டன் எடை கொண்ட இக்கப்பல் 164 மீட்டர் நீளம், 17 மீட்டர் அகலம், 18 மீட்டர் உயரம் கொண்ட இக்கப்பலில் தற்போது 330 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.  முழுக்கமுழுக்க உள்நாட்டுத்தொழில் நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்ட இக்கப்பலில் இணைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கருவிகள், உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான். 
மேலும் 40 கப்பல்கள்:
   கடற்படையின்  மேற்கு பிரிவின் கட்டுப்பாட்டில் இக்கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது நல்லெண்ணப் பயனமாகவே இக்கப்பல் சென்னை வந்துள்ளது. மேலும் இக்கப்பல் சோதனை இயக்கத்தில் இருந்தபோது 2015-ம் ஆண்டு சென்னை மாநகரம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நிவாணப் பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்னைத் துறைமுகம் வந்து சென்றுள்ளது. இந்தியக் கடற்படை தொடர்ந்து நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. பழைய கப்பல்கள் நீக்கப்பட்டு புதிய மற்றும் கூடுதல் கப்பல்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மேலும் 40 சிறிய, பெரிய ரக அதிநவீன போர்க் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றனர். 
தமிழக முதல்வர் பார்வையிடுகிறார்:
    துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இக்கப்பலை தமிழக முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை பார்வையிடுகிறார். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை இக்கப்பலின்  ஒத்திகை நிகழ்ச்சி நடுக்கடலில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்க அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர். இக்கப்பலைப் பார்வையிட ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றார் அலோக் பட்னாகர்.
     பேட்டியின் போது கப்பலின் கேப்டன் பிரவீன் நாயர், கடற்படை அதிகாரிகள் மகாதேவன், பிரசாந்த் மிஸ்ரா,  பாதுகாப்பு அமைச்சக மக்கள் தொடர்பு அதிகாரி சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
      இதனையடுத்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை மெரினா கடற்கரை அருகாமையில் கடலில் ஐ.என்.எஸ். சென்னை நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது கப்பல் முழுவதும் மிகுந்த ஒளி அலங்காரம் செய்யபட்டிருந்தது. இதனால் மெரினா வந்திருந்த பொதுமக்கள் கூடுதல் அழகுடன் கப்பலைக் கண்டு களித்தனர். 


சென்னை பெயர்க்காரணமும், மஞ்சம்பட்டி காட்டெருமையும்...

    இந்தியாவின் முக்கிய சுதந்திர போராட்ட வீரர்கள், மன்னர்கள், முக்கிய நதிகளின் பெயர்கள் போர் மற்றும் ரோந்துக் கப்பல்களுக்குச் சூட்டப்படுவது வழக்கம். இதில் தற்போது முக்கிய நகரங்களின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கொச்சி, கொல்கத்தா ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவதாக சென்னை மாநகரத்தின் பெயர் இப்போர்க்கப்பலுக்குச் சூட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையின் பெருமைகள் இக்கப்பலில் பறைசாட்டப்பட்டுள்ளன. இக்கப்பலின் அடையாளச் சின்னத்தில் திருப்பூர், தேனி மாவட்டத்தை உள்ளடக்கிய மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் காணப்படும் அரிய வகை காட்டெருமை, சென்னை மாநகர வரைபடம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மேலும் மஞ்சம்பட்டி காட்டெருமை கட்டுக்கோப்பான உடலமைப்பு, துணிச்சல், போர்க்குணம், குறைந்து வரும் எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களும், சென்னை மாநகரத்தின் பெருமைகள் குறித்தும் கப்பலின் பல்வேறு இடங்களிலும், விளக்கக் குறிப்பேட்டிலும் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பது சிறப்பு அம்சம் ஆகும்.
வங்கக் கடலில் விசைப்படகு மூலம் 45 நாள்களுக்கு மீன் பிடிக்கத் தடை தொடங்கியது 

கடனுதவி வழங்க மீனவர்கள் கோரிக்கை 

திருவொற்றியூர், ஏப்.15:வங்கக் கடலில் விசைப் படகுகள் மூலம் 45 நாள்களுக்கு ஆண்டுதோறும் விதிக்கப்படும் தடைகாலம் சனிக்கிழமை தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் சுமார் 8,500 விசைப்படகுகள் இதில் பங்கேற்று நிறுத்தி வைக்கப்பட உள்ளன. 
     கோடை காலங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால்  இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும்.  இதனால் படிப்படியாக மீன்வளம் குறையும் அபாயம் ஏற்படும் எனக் கருதி கடந்த 2000-ஆண்டு வங்கக் கடல் பகுதியில் 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது. இது கடந்த 17 ஆண்டுகளாக இந்த தடை நடைமுறையில் தொடர்கிறது. இதற்கு மீனவர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு இத்தடை காலத்தை ஆண்டுக்கு 61 நாள்களாக நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து 45 அல்லது 61 நாள்களா என்பதை மாநில அரசுகளை முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தைத் தவிர ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் ஆண்டுக்கு 61 நாள்கள் தடையை ஏற்றுள்ளன.  தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கனவே இருந்துவந்த 45 நாள் தடையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துவிட்டது. இத்தடைகாலம் மே 29-ம் தேதி முடிவுக்கு வரும். இத்தடை காலத்தில்
விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணி, மீனவர்களுக்கு ஓய்வளிப்பது உள்ளிடவை மேற்கொள்ளப்படும். மீன் பிடி தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மீன் விலை உயருமா?
   சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள் மூலம் அதிக அளவில் மீன்கள் பிடித்துக் கொண்டுவரப்படுகின்றன. மேலும் சென்னை மாநகர மக்களால் விரும்பி உண்ணப்படும் வஞ்சிரம், வவ்வால், சங்கரா, ஊழா, நண்டு, இறால் உள்ளிட்டவைகள் விசைப்படகுகள் மூலம்தான் கிடைக்கின்றன. எனவே தற்போது இத்தடைகாலம் தொடங்கியுள்ளதால் மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விலையும்  சற்று கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மேற்கு கடலோரத்தில் பிடிபடும் மீன்கள், கட்டுமரங்கள், பைபர் படகுகள் மூலம் குறைந்த ஆழத்தில் பிடிபடும் சிறிய வகை மீன்கள் தொடர்ந்து கிடைக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். 


மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும் - எம்.இ.ரகுபதி, தலைவர், (சென்னை விசைப்படகு மீனவர் நலச் சங்கம்)
   மீன்பிடித் தடைகாலம் என்பது கடல் வளத்தை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாகும். எனவே அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறோம். ஆனால் இதனால் படகு உரிமையாளர்கள், கூலித்தொழிலாளிகள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகிறோம். மீனவ குடும்பம் ஒன்றுக்கு ரூ.2,000 ஆயிரம் மட்டுமே அரசால் வழங்கப்படுகிறது. இத்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். மேலும் இத்தடையால் படகு உரிமையாளர்கள் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாகின்றனர். மேலும் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் விசைப் படகுகளை கரைக்குக் கொண்டு வந்து பழுது பார்ப்பதற்கான இருப்புப் பாதையுடன் கூடிய சாய்வு தளம் இல்லை. வேறு வகையில் பழுது பார்ப்பதால் படகுகள் சேதமடையும் வாய்ப்புகள் உள்ளன. எனவே இவ்வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். தற்போது சுற்றுச் சூழல் பாதிப்பு, குறைந்து வரும் மீன்வளம், கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மீன்பிடித் தொழில் ஆண்டுக்கு ஆண்டு நலிவடைந்து கொண்டே வருகிறது. எனவே இத்தொழிலை மீட்டெடுக்கும் முயற்சியாக விவசாயக் கடன் போன்று  தடை காலத்தில் படகுகளை முழுமையாகப் பழுது பார்க்க மானியத்துடன் கூடிய கடன் உதவி  வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரகுபதி. 
தீவிரச் சோதனைகளையும் மீறி அரியவகை செம்மரக் கடத்தல் தொடர்வது ஏன்?

பின்னணியில் சர்தேச கடத்தல் மாபியாக்கள்

திருவொற்றியூர், ஏப்.13:சுங்கத்துறை, காவல்த்துறை, வருவாய்ப் புலனாய்வுத் துறை உள்ளிட்ட அனைத்து முக்கிய ஏஜென்சிகளும் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வந்தும் அரியவகை தாவரமாக அறிவிக்கப்பட்டுள்ள செம்மரங்கள் தொடர்ந்து கடத்தப்படுவது சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது. 
   ஏப்.7, 2015-ல் விடியற்காலையில் தமிழகத்திற்குக் கிடைத்த அதிர்ச்சி செய்தி செம்மரம் வெட்டச் சென்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றனர் என்பதுதான். இதனைத் தொடர்ந்து இருமாநில உறவுகள்கூட பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இந்த அளவிற்கு தொழிலாளர்களை சுட்டுக் கொல்லக் கூடிய முடிவை எடுத்ததற்கு காரணம் இதர நடவடிக்களால் செம்மரம் வெட்டுபவர்களை தடுக்க முடியாததுதான் என ஆந்திர போலீஸார் கூறினர். அப்படியும் தடுக்க முடியவில்லை என்பது இச்சம்பவம் நடைபெற்று  இரண்டு ஆண்டுகளைக் கடந்த பிறகும் உணர முடிந்துள்ளது.
     செம்மரக் கடத்தலில் மரங்களை வெட்டுவதும், அங்கிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்குக்கு கடத்துவதும்தான் முக்கியப் பணியாகும். உயிரைப் பணயம் வைக்கும் ஏழைத் தொழிலாளர்களே இதில் பங்கு வகிக்கின்றனர். பிறகு வாகனங்களில் கடத்துவது, சரக்குப் பெட்டகங்களில் வேறு சரக்குகளுக்குப் பதிலாக செம்மரங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும், அங்கிருந்து ஹவாலா மூலம் அந்நியச் செலாவணியை இடம் மாற்றுவதும் சர்வதேச கடத்தல் மாபியாக்களின் பணியாக உள்ளது.
அரியவகைத் தாவரமான செம்மரத்தின் சிறப்பும்:
    அழிந்து வரும் அரிய வகை விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் காப்பதற்கான சர்வதேச அமைப்பு (CITES- The Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) செம்மரத்தை அரிய வகைத் தாவரமாக அறிவித்துள்ளது. இம்முடிவை தற்போது கடத்தலில் தொடர்புடைய நாடுகளும் கூட ஏற்றுக்கொண்டுதான் உள்ளன. அதிக வெப்பநிலை கொண்ட பகுதிகளில் வளரும் தன்மை கொண்ட செம்மரங்கள் உலகிலேயே தென்னிந்தியாவில் மட்டுமே இருக்கின்றன. அதிலும் பெரும்பகுதி ஆந்திர மாநிலத்திலும், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களிலும்தான் இம்மரங்கள் உள்ளன. நறுமண வாசனை ஏதுமற்ற 
செம்மரங்கள் உறுதியானது மட்டுமல்ல பளபளக்கும் தன்மை கொண்டது. எனவே நீண்ட காலம் உபயோகப்படுத்தும் பொருள்களான இசைக்கருவிகள், விளையாட்டுக் கருவிகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இது தவிர விலை உயர்ந்த அரிய வகை மருந்துகள் தயாரிக்கவும் செம்மரங்கள் உதவுகின்றன.
சர்வதேச சந்தை டன் விலை ரூ. 1.50 கோடி: 
   செம்மரங்களைப் பயன்படுத்துவதில் சீனா, சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா உள்ளிட்ட நாடுகள்தான் முக்கிய இடம் வகிக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் டன் செம்மரக் கட்டைகள் தேவையிருக்கின்றன. ஆனால் சர்வதேசவிதிமுறைகளை உள்ளடக்கிய அரசு  அனுமதி பெற்ற விற்பனை என்பது மிகவும் சொற்பம்தான். எனவேதான் செம்மரங்களுக்கு இவ்வளவு கிராக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சர்வதேசச் சந்தையில் செம்மரத்தின் விலை டன் ஒன்றுக்கு சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளது. எனவே ஒரு கண்டெய்னரில் 10 டன் செம்மரங்களை வெற்றிகரமாகக் கடத்திவிட்டால் கடத்தல்காரர்களுக்கு ரூ. 15 கோடிவரை பணம் கிடைக்கும். எனவேதான் மரங்களை வெட்டி எடுத்து வர சங்கிலித் தொடராகப் பலரையும் பயன்படுத்துவதும், அனைவருக்கும் பணத்தை வாரியிரைப்பதும் 
கடத்தல்காரர்களுக்கு கை வந்த கலையாக உள்ளது.
ஏழ்மையை மூலதனமாக்கும் கடத்தல் மாபியாக்கள்:
    தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி ஜவ்வாது மலை. கடல்மட்டத்திலிருந்து சுமார் 2,500 அடிவரை உயரத்தில் உள்ள ஜவ்வாது மலையில் சுமார் 250-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி எழில் கொஞ்சினாலும் வருமானத்திற்கு வழியேதும் இல்லை. இங்குள்ளவர்களுக்கு மரம் வெட்டுவதுதான் முக்கிய தொழிலாக உள்ளது.   இதேமாதிரியான நில அமைப்பு கொண்ட பகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதி. ஆனால் இங்கு ஏழ்மைக்கு இடமில்லை. காரணம் இப்பகுதியில் உலகில் விலைமதிப்பு கொண்ட செம்மரங்கள் விளைகின்றன என்பதுதான். அடர்ந்த காடுகளைக் கொண்ட இப்பகுதியை தொடர்ந்து போலீஸார், வனக்காவலர்களால் கண்காணிப்பது இயலாததாக உள்ளது.
இங்குதான் கடத்தல்காரர்கள் தங்களது வலையை விரிக்கின்றனர். ஏழ்மையைப் பயன்படுத்தி ஜவ்வாது மலை கிராமவாசிகளுக்கு ரூ. 2,000 தினக்கூலி அளிக்கவும், அதனை முன்பணமாகவே கொடுத்தும், அழைத்து வரும் தரகர்களுக்கும் தக்க சன்மானம் அளிப்பதால் மரம் வெட்டும் பணி எளிதாகவே நடைபெறுகிறது. இது தவிர அரசு இயந்திரங்களையும் கடத்தல் சங்கிலியில் எளிதாகவே இந்த மாபியாக்கள் இணைத்துவிடுகின்றனர். 
தொடரும் கடத்தல்  சம்பவங்கள்: 
   கடந்த மாதம் 5 கண்டெய்னர்களில் பிளாஸ்டிக் குழாய்கள் ஏற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்ட ஆவணங்களுடன் ஆந்திராவிலிருந்து முதலில் வந்த ஒரு கண்டெய்னரைச் சோதனையிட்டபோது அதில் 10 டன் செம்மரக்கட்டைகள் இருந்தன. இது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே லாரி டிரைவர், உரிமையாளர், ஏற்றுமதியாளர், சுங்க முகவர் உள்ளிட்ட அனைவரும் தலைமறைவானது மட்டுமல்ல மீதம் வரவேண்டிய நான்கு கண்டெய்னர்களும் திரும்பவும் எங்கோ கொண்டு சென்றுவிட்டார்கள். இந்த அளவிற்கு கடத்தல்காரர்களின் சங்கிலித் தொடர் இணைப்புகள் உள்ளன. 
இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: 
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது,
    சர்வதேச கடத்தலை மாபியாக்களால் செம்மரம் கடத்தப்படுவது மட்டுமல்லாமல் 
ஏழ்மையில் உழலும் தொழிலாளர்களும் பலிகடாவாக்கப்படுகின்றனர். இதில் வரும் அதிக அளவிலான கள்ளப் பணத்தால் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என அனைவரும் செழிக்கின்றனர். இது தேசநலனுக்கு நல்லது அல்ல. மேலும் உலகின் அரிய வகைத் தாவரமான செம்மரங்கள் நமது நாட்டில் இருப்பது பெருமை மட்டுமல்ல. எனவே இதில் தொடர்புடைய மாநில அரசுகள் இணைந்து  தீவிரக் கண்காணிப்பை மேற்கொள்ளவேண்டும். கடத்தல்காரர்களை அனைத்து நிலைகளிலும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஏழைத் தொழிலாளர்களை கடத்தல் வாணிபத்தில் பலிகடாவாக்காமல் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளையும் செய்து தரவேண்டும். இவை மட்டுமே செம்மரக் கடத்தலை நிரந்தரமாகத் தடுப்பதாக அமையும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

Friday, 7 April 2017

தோல்வி பயத்தில்தான் தேர்தல் ஆணையத்தை நாடுகின்றனர்

டி.டி.வி. தினகரன்

திருவொற்றியூர், ஏப்.6:ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்களைச் சந்தித்து வெற்றி பெற முடியாதவர்கள்தான் தேர்தல் ஆணையத்தில் தினமும் பொய்ப் புகார்களை அளித்து வருகின்றன என அதிமுக (அம்மா) வேட்பாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
   ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது செய்தியாளர்களிடம்  தினகரன் கூறியது, 
    தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வரும் கட்சிகள் மக்களைச் சந்தித்து புகார் கூற வேண்டும். தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும், வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பும் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம்தான் பதில் அளிக்க வேண்டும். நாங்கள் தேர்தல் ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட்டு வருகிறோம். எனவே ஆணையத்தின் எந்த நடவடிக்கையையும் ஏற்போம்.
    அதிமுக என்பது தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கம். எனவே தேர்தல் பணியாற்றுவதற்காக ஏராளனமானோர் ஆர்.கே.நகர் வந்திருப்பது இயல்பானது.
மேலும் நாங்கள் வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாகக் கூறப்படும் புகார்களில் உண்மை இல்லை. வெளியூரில் இருந்த வந்து தங்கியிருப்பவர்களுக்கான
அன்றாடச் செலவுக்கு வைத்திருந்த பணத்தை பொய்ப்புகார் காரணமாக பறிமுதல் செய்துள்ளனர். யார் வெற்றி பெற்றால் இத்தொகுதி வளம் பெறும் என்பதை இப்பகுதி மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர். எனவே நான் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெருவது உறுதி என்றார் தினகரன்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு தவறிவிட்டது

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருவொற்றியூர், ஏப்.6:புதுதில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்குத் தீர்வு காண தமிழக அரசு தவறிவிட்டது என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி தொகுதி முக்கியப் பிரமுகர்களுடனான கருத்தாய்வுக் கூட்டம் திமுக சார்பில் ராயபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருத்துக்களைக் கேட்டறிந்தார். அப்போது ஸ்டாலின் பேசியது,
    இன்றைக்கு தமிழக பல்வேறு துறைகளின் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட அனைவருமே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுதில்லியில் போராடி வரும் தமிழக
விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு தவறிவிட்டது. எதிர்கட்சிகளான நாங்கள் அவர்களைச் சந்தித்து பேசத்தான் முடியும். தமிழக முதல்வர் நேரில் சென்று பிரதமரைச் சந்தித்து இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் முதல்வர் பழனிசாமி இடைத்தேர்தல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்.
    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இப்பகுதியில் உள்ள அத்தனை பிரச்னைகளையும் என்னிடம் தெரிவித்துள்ளார். அவர் 
இதே பகுதியில் வசிப்பதால் மக்களின் குறைகளை அறிந்து நிறைவேற்றக் கூடியவர். ஆளும்கட்சியினர் என்னதான் தில்லுமுல்லுகளைச் செய்தாலும் தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்க முடியாது என்றார் ஸ்டாலின். 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்:

தேர்தலைக் கண்காணிக்க 70 மத்திய அரசு அதிகாரிகள் அடங்கிய பறக்கும் படை  

டி.கார்த்திகேயன் தகவல்  

திருவொற்றியூர்,ஏப்.6: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு அலுவலர்கள் அடங்கிய 70 பறக்கும் படை அணிகள் வியாழக்கிழமை முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என மாவட்டத் தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி ஆணையருமான டி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
   ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது, 
    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. சுமார் 800 மத்திய படையினர் ஏற்கனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய 30 பறக்கும் படை குழுக்கள் வாகனச் சோதனை, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
நுண் பார்வையாளர்கள்:
   இந்நிலையில் இத்தொகுதியில் உள்ள 7 வார்டுகளில் தலா 10 பேர் கொண்ட நுண் பார்வையாளர்களுடன் கூடிய பறக்கும் படைகள்  (Micro Observer Flying Squad) அமைக்கப்பட்டுள்ளன. இதில் 70 மத்திய அரசு அதிகாரிகள் நுண்பார்வையாளர்களாகச் செயல்படுவார்கள். இவர்களை இப்பகுதியை நன்கு அறிந்த போலீஸார் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்வார்கள்.  24 மணி நேரமும் மூன்று குழுக்களாகப் பிரிந்து வேவு பார்க்கும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள். எங்காவது முறைகேடுகள், பணப் பட்டுவாடா உள்ளிட்டவைகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் உடனடியாக 
தேர்தல் அதிகாரிக்கோ, பறக்கும் படையினருக்கோ தகவல் அளிக்கலாம். இக்குழுவினர் ஏப்.11-வரை பணியில் ஈடுபடுவார்கள். 
பணப்பட்டுவாடாவைத் தடுப்பது சவாலாக உள்ளது:
    தேர்தலை முறைகேடுகள் இன்றி நடத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் ஆணையம் எடுத்து வருகிறது. ஆனால் பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பது பெரும் சவாலாகவே உள்ளது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குச் செல்வதற்குள் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் தப்பிவிடுகின்றனர். நேற்றுவரை ரூ.14 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே வாகன சோதனையின்போது சிக்கிய ரூ.7 லட்சம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவருடையது எனவும், வியாபாரம் நிமித்தமாக பணத்தை எடுத்து வந்ததாக
ஊர்ஜிதமானதையடுத்து பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. பணப் புழக்கத்தை தடுக்க
வருமானவரித்துறையினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் கார்த்திகேயன்.


புதுடில்லியின் நேரடிப் பார்வையில் ஆர்.கே.நகரின் கண்காணிப்புக் கேமரா   

  பார்வையாளர்கள் அனைவருமே மத்திய அரசு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. 
    ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடவடிக்கைகள் நாடுமுழுவதும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் பணப்பட்டுவாடா, முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் என 50 ஆயிரம் கட்சி நிர்வாகிகள் குவிந்துள்ளனர் என்பது போன்ற தகவல்கள் பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளன. இந்நிலையில் எந்தவகையிலும் வாக்களிக்கப் பணம் கொடுப்பதைத் தடுப்பது என தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசு அதிகாரிகளை நம்பாமல் அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு ஊழியர்களை பார்வையாளர்களாக நியமித்துள்ளது ஆணையம். 
     இவர்கள் அனைவருமே நேரடியாகத் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தகவல்களை அளித்து வருகிறார்கள். இது தவிர மத்திய அரசின் பல்வேறு உளவுப் பிரிவுகள் ஆர்.கே.நகர் தொகுதி முழுதும் தகவல்களைத் திரட்டி டெல்லிக்கு அனுப்பி வருகின்றனர். இதனை உறுதி செய்யும் வகையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் மாவட்டத் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறுகையில், எனது 20 ஆண்டு ஐ.ஏ.எஸ். பணியில் இது போன்றதொரு கடுமையான தேர்தல் ஏற்பாடுகளை நான் பார்த்தது இல்லை.  முன்பெல்லாம் தீவிரக் கண்காணிப்பு பணிகள் என்பது சில இடங்களில் மட்டுமே இருக்கும். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 256 வாக்குச் சாவடிகளும் இவ்வாறு கண்காணிக்கப்படுவது  இதுவே முதல்முறை எனக்குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் ஆர்.கே.நகரை கண்காணிக்கும் கேமரா புதுடில்லியிலிருந்து கண்காணிக்கப்படுகிறது என்பதே உண்மை நிலவரம். 

Sunday, 19 February 2017

திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் வெள்ளிவிழா 

உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்று வாழ்த்து

திருவொற்றியூர், பிப்.19:திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் வெள்ளிவிழா நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜி.ஜெயச்சந்திரன், நிஷாபானு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
   திருவொற்றியூர் வழக்குரைஞர்கள் சங்கம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. இதனையடுத்து வெள்ளி விழா நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகள் திருவொற்றியூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் டாக்டர் ஜி.ஜெயச்சந்திரன், நிஷாபானு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம்,அரிபரந்தாமன் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதிகள் சங்கம் வெள்ளிவிழா கொண்டாட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
    இதில் வழக்குரைஞர் பணியில் 25 ஆண்டுகளைக் கடந்த எஸ்.சுரேஷ்குமார், என்.நாகசுந்தரம், எஸ்.ஆஞ்சலா, டி.பாஸ்கரன் உள்ளிட்ட 8 பேர் பாராட்டி 
கௌரவிக்கப்பட்டனர். மேலும் திருவொற்றியூர் வழக்குரைஞர் சங்கத்தின் உறுப்பினராக இருந்து பின்னர் நீதிபதிகளாக பணியில் சேர்ந்த வி.ஆர்.வேல்ராஜ், ஜி.கிறிஸ்டியன், எஸ்.சுகந்தி ஆகியோர்களை நீதிபதி ஜெயச்சந்திரன் பாராட்டினார். 
  மேலும் திருவள்ளூர் மாவட்ட அமர்வு நீதிபதி டி.இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி டி.இந்திராணி, மாவட்ட உரிமையியல் நீதிபதி டி.திருமால், திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எம்.வசந்தகுமார் ஆகியோர் நிகழ்ச்சியின் போது கௌரவிக்கப்பட்டனர். 
   நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை சங்கத்தின் தலைவர் என்.நாகசுந்தரம், செயலாளர் கே.முருகன், பொருளாளர் என்.சரவணன் மற்றும் நிர்வாகிகள் பி.ராமமூர்த்தி, பிரபுதாஸ், சி.தன்ராஜ் , சி.ராஜேஷ், அருள்மொழி உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
நிகழ்ச்சியில் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
காணாமல் போன சிறுமி குப்பைக் கிடங்கில் சடலமாக மீட்பு

பொதுமக்கள் சாலை மறியல்

திருவொற்றியூர்,பிப்.19:திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ரித்திகா (3) என்ற சிறுமி சனிக்கிழமை காணாமல் போன நிலையில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் இறந்து போன நிலையில் சடலமாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்.


     திருவொற்றியூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசிப்பவர் பழனி, மீனவர். இவரது மனைவி கலைவாணி. இவர்களது மகள் ரித்திகா. மூன்று வயது சிறுமியான ரித்திகா காணாமல் போய்விட்டதாக சனிக்கிழமை எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இந்நிலையில் திருவொற்றியூர்-மணலி சாலையில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் இறந்து போன சிறுமியின் சடலம் ஒன்று கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. கருணாகரன் என்பவர் லாரியில் எடுத்து வந்த குப்பையைப் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோதுதான் சிறுமியின் சடலம் கிடப்பது கண்டறியப்பட்டது. 
இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்தக் குப்பை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பிலிருந்து சேகரித்து கொண்டு வரப்பட்டது என தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த எண்ணூர் போலீஸார் குப்பைக் கிடங்கில் கிடந்த சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இச்சடலம் சனிக்கிழமை காணாமல் போன ரித்திகாவின் சடலம்தான் என்பது தெரியவந்தது. பின்னர் ரித்திகாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
பொதுமக்கள் சாலை மறியல்:
     காணாமல் போன ரித்திகா கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அறிந்த சுனாமி குடியிருப்பு பகுதி பொதுமக்கள் எர்ணாவூர் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் இரு நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கொலையில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை எழுப்பினர். சாலை மறியலால் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மணலி விரைவு சாலை, எண்ணூர் விரைவு சாலைகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸாரின் உறுதியையடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
     இந்நிலையில் ரித்திகா கொலைச் சம்பவம் குறித்து எண்ணூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
சென்னைத் துறைமுகம் வந்த கம்பி வடம் பதிக்கும் சிறப்புக் கப்பல்

திருவொற்றியூர்,பிப்.19:கடலுக்குள் தகவல் தொடர்பு கம்பி வடம் பதிக்கும் எல்.வி.நார்த் ஓசன் 105 என்ற சிறப்புக் கப்பல் சென்னைத் துறைமுகத்திற்கு வந்துள்ளது. சிறப்பு வடிவம் கொண்ட இக்கப்பல் காண்போரை வியக்க வைக்கும் வகையில் புதுமையாக உள்ளது என பலரும் கூறுகின்றனர்.
இக்கப்பல் குறித்து கப்பலின் ஏஜென்சி மேலாளர் கூறியது, 
       உலகம் முழுவதும் வளர்ந்து வரும் தகவல் தொடர்பு வளர்ச்சியையடுத்து நாடுகளுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் கடலுக்கடியில் தகவல் தொடர்பு கம்பி வடம் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சிங்கப்பூர்-கொழும்பு இடையே கம்பி வடம் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் எல்.வி.நார்த் ஓசன் 105 என்ற கப்பல் ஈடுபட்டு வருகிறது.
     இதில் கம்பி வடத்தை நவீன முறையில் கடலுக்குள் செலுத்தும் சிறப்பு உருளைகள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகபட்சம் 10 ஆயிரம் அடி ஆழத்திற்கு 
கடலுக்கு அடியில் கம்பி வடத்தை செலுத்த முடியும்.  இது தவிர இப்பணிக்கான 
தேவையான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இக்கப்பலில் அமைக்கப்பட்டுள்ளன. 
நடுக்கடலில் வேலை செய்யும்போது உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், தளவாடச் சாமான்கள், எரிபொருள் உள்ளிட்டவைகளை ஏற்றிச் செல்வதற்காகவே இக்கப்பல் சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வந்த இக்கப்பல் வரும் புதன்கிழமை புறப்பட்டுச் செல்லும் என்றார் 
அவர். 
ஒப்பந்தம் பெறுவதில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்: போலீஸார் தடியடி

திருவொற்றியூர், பிப்.17:தாற்காலிக பாலம் அமைக்கும் பணி  தொடர்பாக ஒப்பந்கமிஷன் பெறுவதில் அதிமுகவின் இரு குழுவினரிடையே வெள்ளிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தி மோதலை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
   சென்னை மணலியில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்போரேசன் நிறுவனத்தில் விரிவாக்கப் பணிகள் சுமார் ரூ.3,500 மதிப்பீட்டில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 
கச்சா எண்ணெயைப் பிரித்தெடுக்கும் உயர் ரக கொதிகலன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாக உள்ளது. இதன் எடை சுமார் 750 டன் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து திருவொற்றியூர் சத்யமூர்த்தி நகர் அருகே பக்கிங்காம் கால்வாயில் தாற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது. இதற்கான ஒப்பந்தப் பணியை அதிமுக வட்டச் செயலாளர்கள் செபாஸ்டின், பிரபாகரன், மணிக்குமார், அரசு ஆகியோர் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
       இந்நிலையில் அதிமுக பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் தலைமையில் 
அதிமுகவினர் திரண்டு வந்து தங்களுக்கும் ஒப்பந்தப் பணியை பகிர்ந்தளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.  இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இதனால் வேலை செய்து வந்து தொழிலாளர்கள் அங்குமிங்கும் ஓடினர். இதனால் இப்பகுதியே கலவரமாக மாறியது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
     இது குறித்து சாத்தாங்காடு போலீஸார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து தாற்காலிக சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. 
எண்ணூர் துறைமுக ரயில்வே கடவுப் பாதையில் லாரி மோதி விபத்து 

போக்குவரத்து ஸ்தம்பித்தது

திருவொற்றியூர், பிப்.16:எண்ணூர் துறைமுக ரயில்வே கடவுப் பாதையில் லாரி மோதி தடுப்பு
தாழ்வாரம் உடைந்து விழுந்தது. இதனையடுத்து ரயில் பாதை மின்சாரம் லாரிகள் மீது பாயலாம் என்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சில மணி நேரங்கள் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
    எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகங்களுக்குச் செல்லும் பிரதான சாலையில் ரயில்வே கடவு பாதை உள்ளது. வியாழக்கிழமை காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் நோக்கி இரும்புத் தளவாடங்கள் ஏற்றிச் சென்ற லாரி கடவு பாதை தாழ்வு கம்பித் தடங்கள் மீது மோதியது. இதனையடுத்து ரயில்பாதை மின்கம்பிகள் உரசாமல் இருக்க உயரத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டிருக்கும் தாழ்வு கம்பித் தடங்கள் கீழே விழுந்தன. இதனையடுத்து இதே தடத்தின் வாகனங்கள் சென்றால் மின்கம்பிகள் உரசி பெரும் தீவிபத்து ஏற்படும் அபாயம் உண்டாகியது. இதனையடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன. இதனையடுத்து சுமார் 3 மணி நேரம் இரண்டு துறைமுகங்களுக்குமான போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
சீரமைப்பு: 
   இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் போக்குவரத்து மேலாளர் கருப்பையா வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் ரயில்வே மற்றும் துறைமுக ஊழியர்கள் இருபதுக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு சேதமடைந்த தாழ்வு கம்பித் தடங்கள் சீரமைக்கப்பட்டு கடவுப் பாதையில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டது. 
வி.கே.சசிகலா பெங்களூருவிலிருந்து தமிழகச் சிறைக்கு மாற்றப்படுகிறார்?

விதிகளில் தடையில்லை: மூத்த வழக்கறிஞர்கள் கருத்து

திருவொற்றியூர், பிப்.:சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 
வி.கே.சசிகலா பெங்களூரு பரப்பண அக்ரகாரா சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் தமிழகச் சிறைக்கு மாற்றுவதில் சட்டவிதிகள் ஏதும் தடையாக இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு  4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து 
மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராயினர். இதனையடுத்து இங்குள்ள பரப்பண அக்ரகாரா சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர். அப்போது சிறையில் முதல்வகுப்பு சிறைக் கைதிகளுக்கான வசதிகளை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் வி.கே.சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாயின. இது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் கூறியது,
சிறைமாற்றம் என்பது வழக்கமானதுதான்:
எஸ். அறிவழகன் (உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர்):
    சிறைக்கைதிகள் இடமாற்றச் சட்டம் 1950-ல் கூறப்பட்டுள்ள விதிகளின் படி 
எந்த ஒரு கைதியையும் ஒரு மாநிலத்திற்குள் உள்ள எந்த சிறைக்கும் சிறைக் கண்காணிப்பாளர்களே உடனடியாக மாற்றிவிட முடியும். ஆனால் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு கைதிகளை மாற்ற வேண்டும் எனில்
இரு மாநில அரசுகளின் ஒப்புதல்கள் தேவை. வி.கே.சசிகலா வழக்கினைப் பொருத்தவரை குற்றம் நிகழ்ந்த இடமே தமிழ்நாடுதான். வழக்கு விசாரணை மட்டுமே கர்னாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரும் முறைப்படி விருப்ப மனு அளித்தால் தமிழகச் சிறைக்கு மாற்றுவதற்கு 
தார்மீக அடிப்படையிலும், சட்ட விதிகளின் அடிப்படையிலும் எதிர்ப்பு தெரிவிக்க
கர்னாடக அரசு மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை. இது போன்று ஏராளமானவர்கள் தொடர்ந்து சிறைச்சாலை மாற்றப்படுவது வழக்கமானதுதான் என்றார் அறிவழகன்.
அந்தந்த மாநில சிறைவிதிகள் பொருந்தும்:
வி.கண்ணதாசன் (சிறைக்கைதிகளுக்கான சிறப்பு வழக்கறிஞர்):
     சிறைக்கைதிகள் இடமாற்றச் சட்டத்தின் படி  பெங்களூரு சிறையிலிருந்து தமிழகச் சிறைக்கு சசிகலா மாற விரும்பினால் இதற்கான மனுவை தற்போதைய சிறையின் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளிக்க வேண்டும். இம்மனு அம்மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இக்கோரிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சிறைக்கைதிகளுக்கான பாதுகாப்பு, உடல் நலம், மருத்துவ வசதிகள், அமைதி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இருமாநில அரசுகளின் ஒப்புதலுடன் சசிகலா மற்றும் இருவர் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனினும் விடுப்புகள், சலுகைகள் உள்ளிட்டவைகள் எந்த மாநில வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதோ அந்த மாநில சிறை விதிகள்தான் பொருந்தும். தற்போதைய நிலையில் இது குறித்து சசிகலாதான் முடிவு செய்ய முடியும். இதற்காக மற்றவர்கள் வழக்கு ஏதும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது, அது தேவையும் இல்லை என்றார் கண்ணதாசன்.
மறுஆய்வு மனுவால் மாற்றம் இராது:
எஸ்.நந்தகுமார்,(உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், டெல்லி):
      அரசியலமைப்புச் சட்ட விதி 32-ன்படி உச்சநீதிமன்றத்தில் நேரடியாகவே ரிட் மனு தாக்கல் செய்து கர்நாடகச் சிறையிலிருந்த தமிழக சிறைக்கு சசிகலா மாற்றிக்கொள்ளலாம். தண்டனை குறித்து மறு ஆய்வு செய்யக் கோரும் மனு என்பது தீர்ப்பு அளித்த நீதிபதிகள் முன்புதான் விசாரிக்கப்பட வேண்டும் என்பதால் இதில் பயன் ஏதும் இருக்காது. நிச்சயமாகத் தள்ளுபடி செய்யும் வாய்ப்பே உள்ளது என்றார் 
சிறை மாற்றம் குறித்து பரிசீலனை: 
ஏ.நவநீதக்கிருஷ்ணன் (அதிமுக எம்.பி., வழக்கறிஞர் பிரிவு செயலாளர்):
     இதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் தண்டனை குறித்த மறுஆய்வு 
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பணியில் வழக்கறிஞர்கள் குழு ஈடுபட்டு வருகிறது. இதன் பின்னர்தான் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான 
நடவடிக்கைகள் தொடங்கும். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின்
ஆலோசனைக்குப் பிறகே மனுத்தாக்கல் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும்  என்றார் நவநீதக்கிருஷ்ணன்.
      வி.கே.சசிகலாவின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் எடப்படி கே. பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக வியாழக்கிழமை பதவி ஏற்றுள்ள நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அதிமுக முன்னணி தலைவர்களின் கருத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சிறை மாற்றத்திற்கான நடவடிக்கைகள் சில தினங்களில் தொடங்கும் என்பதே தற்போதைய நிலை.
எண்ணெய் சிதறல்களை அகற்றி, தூய்மைப்படுத்தும் பணியில் தொடரும் சவால்கள்  

எளிமையான வழியைப் பின்பற்றாததே பிரச்னைக்குக் காரணம்?   

திருவொற்றியூர், பிப்.16:கப்பலிலிருந்து வெளியேறிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியின்போது சிதறிய எண்ணெய்ப் படிமங்களை தூய்மைப்படுத்தும் பணி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் பல்வேறு சிரமங்களால் தூய்மைப்படுத்தும் பணி சவாலாகவே உள்ளது.  
    எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த ஜன.28-ல் எம்.டி. மாபில் என்ற கப்பல் மோதியதில் எம்.டி.டான் காஞ்சிபுரம் சேதமடைந்தது. இதிலிருந்து வெளியேறிய எண்ணெய்க் கழிவுகள் எர்ணாவூர் பாரதியார் நகர் கடற்கரை அருகே படலமாகத் தேங்கியது. இந்நிலையில் இதனை வாளிகள் மூலம் அகற்றும் பணி கடந்த ஜன.29-ம் தேதி முதல் பிப்.9-ம் தேதிவரை தொடர்ந்து 12 நாள்கள் நடைபெற்றன. கடலோரக் காவல் படையினர் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் பல்வேறு துறைகளைச் சார்ந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  ஈடுபடுத்தப்பட்டனர். 
அப்போது மொத்தம் சுமார் 300 டன் வரை எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் அகற்றப்பட்ட எண்ணெய் கழிவுகள் அனைத்தும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இங்கு உயிரி தொழில்நுட்பம் மூலம் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாதவகையில் அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.  
தூய்மைப்படுத்துவதில் தொடரும் சவால்கள்: 
      இந்நிலையில் எண்ணெய்க் கழிவுகளை அகற்றும்போது ஏற்பட்ட சிதறல்களால் இப்பகுதி முழுதும் மாசடைந்துள்ளது. இவற்றைத் தூய்மைப்படுத்தும் பணி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் பணிகள் முடிந்தபாடில்லை. இதற்கு காரணம் எண்ணெய்ச் சிதறல்கள் தடுப்புச் சுவர் பாறாங்கற்கள் முழுவதும் பரவியுள்ளது.  எண்ணெயைக் கரைக்கும் ரசாயனம் கலந்த கலவையை முதலில் எண்ணெய்ச் சிதறல்கள் மீது தெளிக்கின்றனர். பின்னர் மிகுந்த அழுத்தத்துடன் பிஸ்டன்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து எண்ணெயைக் கரைக்கின்றனர். இருப்பினும் அவ்வளவு எளிதாக பணியாக இது இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் தூய்மைப்படுத்தப்படும் எண்ணெய் கலந்த தண்ணீர் மீண்டும் கடலில்தான் கலக்கிறது. இதனால் கடல் மணல் கருப்பாகி வருகிறது. மேலும் பாறாங்கற்களின் இடுக்குகளில் எண்ணெய்ச் சிதறல்கள் பெருமளவில் புகுந்துள்ளதால் இவற்றை 
அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் பல நாள்கள் தொடர்ந்து இப்பணியைச் செய்தாலும் முழுமையாக தூய்மைப்படுத்த முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே 
உள்ளது என்கிறார் இப்பகுதி சமூக சேவகர் கே.சுப்பிரமணி. 
திட்டமிடலில் தோல்வியே பிரச்னைக்கு காரணம்:
    எண்ணெய்ப் படலம் பாதுகாப்பான இடத்தில்தான் கரைஒதுங்கியிருந்தது. அவை மீண்டும் கடலுக்குள் அடித்து செல்லப்படும் வாய்ப்பு குறைவாக இருந்தது. ஆனால் இது குறித்தெல்லாம் ஆய்வு செய்யாத கடலோரக் காவல்படை, மாசுக்கட்டுபாட்டு வாரிய
அதிகாரிகள் உடனடியாக எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் 
ஈடுபட்டனர். காரணம் மீனவர்களின் கொந்தளிப்பு, ஊடகங்களின் மூலம் பரவிய அழுத்தம் காரணமாக அகற்றல் பணியை உடனடியாகத் தொடர்ந்தனர். எனவே திட்டமிடும் முன்பே வேலையைத் தொடங்கினர் இப்பிரச்னைக்கு மூல காரணமாக உள்ளது.  மேலும் வேலை தொடங்கும்போது சுமார் 4 டன் மட்டுமே இருக்கலாம் என அணுமானித்து முதல் தவறு, குழாய்கள் மூலம் உரிஞ்சி எடுக்கத் திட்டமிட்டது  இரண்டாவது தவறு. இதனால் கெட்டியாக உள்ள எண்ணெயை கழிவுநீர் லாரிகள் மூலம் உரிஞ்சத் திட்டமிட்டு மூன்று லாரிகள் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமானது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு வாளிகள் மூலம் அகற்ற முற்பட்டது, எண்ணெய் படலத்தின் நச்சுத் தன்மையைக் கூட பரிசோதனை செய்யாமல் தன்னார்வலர்கள், மாணவர்கள் என அனைவரையும் பங்கெடுக்க வைத்ததுதான் தவறுகளின் உச்சகட்டம்  என்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சி.பாலசுப்பரமணி. 
எளிய வழியைப் பின்பற்றாதது ஏன்?
    எண்ணெய்ப் படலத்தை வாளிகள் மூலம் அகற்ற முற்படாமல் முறையாகத் திட்டமிட்டிருக்க வேண்டும். சுமார் 200 லாரிகள் கழிவுகள் இருக்கிறது என்பதை முன்பே கண்டறிந்திருக்க வேண்டும். பிறகு தடுப்புச் சுவர் பாறாங்கற்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றி கடற்கரைக்கு பாதை ஏற்படுத்தி இருக்க வேண்டும். பின்னர் தார் எடுத்துச் செல்லும் லாரிகளை தேங்கியிருந்த எண்ணெய் படலம் அருகே எடுத்துச் சென்றிருந்தால் எவ்வித சிரமமும் இல்லாமல், குறைந்த நாள்கள், மனித உழைப்பு சேமித்திருக்க முடியும். தார் லாரிகளின் எடுத்து சென்றிருந்தால் இவற்றை மறுபயன்பாட்டிற்கோ அல்லது மீண்டும் கப்பல் எரிபொருளாகவோ பயன்படுத்தியிருக்க முடியும் என்பதே வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
     எப்படியோ ஒரு சிறிய பிரச்னையை பெரிதாகப் படம் பிடித்து தமிழகமே வியந்து எதிர்பார்க்கும் செய்தி கருப்பொருளாக மாறியதற்கு முன்யோசனை இல்லாத அதிகாரிகளின் செயல்பாடுகளும்தி, திட்டமிடுதலில் ஏற்பட்ட தோல்வியே முக்கிய காரணங்கள் என்பதே இப்பணி குறித்த பொதுமக்களின் மதிப்பீடாக உள்ளது. 

Thursday, 16 February 2017

உணவு பொருட்கள் முறையாக வழங்காததைக் கண்டித்து 
ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்கள்  

திருவொற்றியூர், பிப்.15: திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் ரேஷன் கடையில் உணவு பொருட்களை முறையாக விநியோகம் செய்யாததைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இது குறித்து சங்கத்தின் திருவொற்றியூர் பகுதி செயலாளர் எஸ்.பாக்கியம் கூறியது, 
  இங்குள்ள கடையில் கடந்த இரண்டு மாதங்களாக பாமாயில் வழங்கப்படவில்லை. மொத்தத்தில் துவரம்பருப்பு  300 கிலோ ஒருமாதத்தில் போடப்பட்டுள்ளது. இதனால்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான நாட்களில் அனைத்து பொருட்களும் காலியாகிவிட்டன என்றே கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அப்படியெனில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 
ஒதுக்கீடு செய்யப்படும் பொருள்கள் எங்கே என்பதில் ஐயம் உள்ளது. இதனைக் கண்டித்தே போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்றார் பாக்கியம். 
   இதனையடுத்து உணவு பொருள் வழங்கல் துறை திருவொற்றியூர் மண்டல உதவி ஆணையர் நேரில் வந்து போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஒரு வாரத்திற்குள் நிலுவையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை பெண்கள் கைவிட்டனர். 
வி.கே.சசிகலா பெங்களூருவிலிருந்து தமிழகச் சிறைக்கு மாற்றப்படுவாரா?

விதிகளில் தடையில்லை: மூத்த வழக்கறிஞர்கள் கருத்து

திருவொற்றியூர், பிப்.:சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 
வி.கே.சசிகலா பெங்களூரு பரப்பண அக்ரகாரா சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் தமிழகச் சிறைக்கு மாற்றுவதில் சட்டவிதிகள் ஏதும் தடையாக இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு  4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து 
மூவரும் பெங்களூரு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராயினர். இதனையடுத்து இங்குள்ள பரப்பண அக்ரகாரா சிறையில் மூவரும் அடைக்கப்பட்டனர். அப்போது சிறையில் முதல்வகுப்பு சிறைக் கைதிகளுக்கான வசதிகளை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 
இந்நிலையில் வி.கே.சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாயின. இது குறித்து சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்துக்கள்:
எஸ். அறிவழகன் (உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளர்):
    சிறைக்கைதிகள் இடமாற்றச் சட்டம் 1950-ல் கூறப்பட்டுள்ள விதிகளின் படி 
எந்த ஒரு கைதியையும் ஒரு மாநிலத்திற்குள் உள்ள எந்த சிறைக்கும் சிறைக் கண்காணிப்பாளர்களே உடனடியாக மாற்றிவிட முடியும். ஆனால் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு கைதிகளை மாற்ற வேண்டும் எனில்
இரு மாநில அரசுகளின் ஒப்புதல்கள் தேவை. வி.கே.சசிகலா வழக்கினைப் பொருத்தவரை குற்றம் நிகழ்ந்த இடமே தமிழ்நாடுதான். வழக்கு விசாரணை மட்டுமே கர்னாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. எனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரும் முறைப்படி விருப்ப மனு அளித்தால் தமிழகச் சிறைக்கு மாற்றுவதற்கு 
தார்மீக அடிப்படையிலும், சட்ட விதிகளின் அடிப்படையிலும் எதிர்ப்பு தெரிவிக்க
கர்னாடக அரசு மறுப்பதற்கு வாய்ப்பு இல்லை. இது போன்று ஏராளமானவர்கள் தொடர்ந்து சிறைச்சாலை மாற்றப்படுவது வழக்கமானதுதான் என்றார் அறிவழகன்.
அந்தந்த மாநில சிறைவிதிகள் பொருந்தும்:
வி.கண்ணதாசன் (சிறைக்கைதிகளுக்கான சிறப்பு வழக்கறிஞர்):
     சிறைக்கைதிகள் இடமாற்றச் சட்டத்தின் படி  பெங்களூரு சிறையிலிருந்து தமிழகச் சிறைக்கு சசிகலா மாற விரும்பினால் இதற்கான மனுவை தற்போதைய சிறையின் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளிக்க வேண்டும். இம்மனு அம்மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். இக்கோரிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சிறைக்கைதிகளுக்கான பாதுகாப்பு, உடல் நலம், மருத்துவ வசதிகள், அமைதி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இருமாநில அரசுகளின் ஒப்புதலுடன் சசிகலா மற்றும் இருவர் இடமாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனினும் விடுப்புகள், சலுகைகள் உள்ளிட்டவைகள் எந்த மாநில வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதோ அந்த மாநில சிறை விதிகள்தான் பொருந்தும். தற்போதைய நிலையில் இது குறித்து சசிகலாதான் முடிவு செய்ய முடியும். இதற்காக மற்றவர்கள் வழக்கு ஏதும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியாது, அது தேவையும் இல்லை என்றார் கண்ணதாசன்.
கோரிக்கை மனு அளிக்க வாய்ப்பு உள்ளது:
ஏ.நவநீதக்கிருஷ்ணன் (அதிமுக எம்.பி., மூத்த வழக்கறிஞர்):
     இதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் தண்டனை குறித்த சீராய்வு மனு
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பணியில் வழக்கறிஞர்கள் குழு ஈடுபட்டு வருகிறது. இதன் பின்னர்தான் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றுவதற்கான 
நடவடிக்கைகள் தொடங்கும் என்றார் நவநீதக்கிருஷ்ணன்.
      அதிமுக பொதுச்செயலாளராக உள்ள வி.கே.சசிகலா தமிழக சிறைக்கு மாற்றுவதற்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி தமிழகத்தில் பதவியேற்க வேண்டும். இதற்கே ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்க வில்லை. இதில் குழப்பம் ஏதேனும் ஏற்பட்டால் பெங்களூருவிலேயே இருப்பதே பாதுகாப்பாக இருக்கும்.  எனவே தமிழகத்தில்  புதிய அரசு பதவி ஏற்ற பிறகு சூழ்நிலைக்குத் தகுந்தவாறே சிறைச்சாலை மாற்றம் குறித்து முடிவெடுப்போம் என்பதே சசிகலா தரப்பினரின் கருத்தாக உள்ளது.