Friday, 7 April 2017

விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு தவறிவிட்டது

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருவொற்றியூர், ஏப்.6:புதுதில்லியில் போராடிவரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்குத் தீர்வு காண தமிழக அரசு தவறிவிட்டது என தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி தொகுதி முக்கியப் பிரமுகர்களுடனான கருத்தாய்வுக் கூட்டம் திமுக சார்பில் ராயபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருத்துக்களைக் கேட்டறிந்தார். அப்போது ஸ்டாலின் பேசியது,
    இன்றைக்கு தமிழக பல்வேறு துறைகளின் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட அனைவருமே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுதில்லியில் போராடி வரும் தமிழக
விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு தவறிவிட்டது. எதிர்கட்சிகளான நாங்கள் அவர்களைச் சந்தித்து பேசத்தான் முடியும். தமிழக முதல்வர் நேரில் சென்று பிரதமரைச் சந்தித்து இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் முதல்வர் பழனிசாமி இடைத்தேர்தல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்.
    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இப்பகுதியில் உள்ள அத்தனை பிரச்னைகளையும் என்னிடம் தெரிவித்துள்ளார். அவர் 
இதே பகுதியில் வசிப்பதால் மக்களின் குறைகளை அறிந்து நிறைவேற்றக் கூடியவர். ஆளும்கட்சியினர் என்னதான் தில்லுமுல்லுகளைச் செய்தாலும் தி.மு.க.வின் வெற்றியைத் தடுக்க முடியாது என்றார் ஸ்டாலின். 

No comments:

Post a Comment