வங்கக் கடலில் விசைப்படகு மூலம் 45 நாள்களுக்கு மீன் பிடிக்கத் தடை தொடங்கியது
கடனுதவி வழங்க மீனவர்கள் கோரிக்கை
திருவொற்றியூர், ஏப்.15:வங்கக் கடலில் விசைப் படகுகள் மூலம் 45 நாள்களுக்கு ஆண்டுதோறும் விதிக்கப்படும் தடைகாலம் சனிக்கிழமை தொடங்கியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் சுமார் 8,500 விசைப்படகுகள் இதில் பங்கேற்று நிறுத்தி வைக்கப்பட உள்ளன.
கோடை காலங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும். இதனால் படிப்படியாக மீன்வளம் குறையும் அபாயம் ஏற்படும் எனக் கருதி கடந்த 2000-ஆண்டு வங்கக் கடல் பகுதியில் 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்தது. இது கடந்த 17 ஆண்டுகளாக இந்த தடை நடைமுறையில் தொடர்கிறது. இதற்கு மீனவர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு முன்பு இத்தடை காலத்தை ஆண்டுக்கு 61 நாள்களாக நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மீனவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து 45 அல்லது 61 நாள்களா என்பதை மாநில அரசுகளை முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தைத் தவிர ஆந்திரா, ஒடிசா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் ஆண்டுக்கு 61 நாள்கள் தடையை ஏற்றுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை ஏற்கனவே இருந்துவந்த 45 நாள் தடையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துவிட்டது. இத்தடைகாலம் மே 29-ம் தேதி முடிவுக்கு வரும். இத்தடை காலத்தில்
விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணி, மீனவர்களுக்கு ஓய்வளிப்பது உள்ளிடவை மேற்கொள்ளப்படும். மீன் பிடி தடைகாலத்தில் மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மீன் விலை உயருமா?
சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் விசைப்படகுகள் மூலம் அதிக அளவில் மீன்கள் பிடித்துக் கொண்டுவரப்படுகின்றன. மேலும் சென்னை மாநகர மக்களால் விரும்பி உண்ணப்படும் வஞ்சிரம், வவ்வால், சங்கரா, ஊழா, நண்டு, இறால் உள்ளிட்டவைகள் விசைப்படகுகள் மூலம்தான் கிடைக்கின்றன. எனவே தற்போது இத்தடைகாலம் தொடங்கியுள்ளதால் மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் சற்று கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் மேற்கு கடலோரத்தில் பிடிபடும் மீன்கள், கட்டுமரங்கள், பைபர் படகுகள் மூலம் குறைந்த ஆழத்தில் பிடிபடும் சிறிய வகை மீன்கள் தொடர்ந்து கிடைக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும் - எம்.இ.ரகுபதி, தலைவர், (சென்னை விசைப்படகு மீனவர் நலச் சங்கம்)
மீன்பிடித் தடைகாலம் என்பது கடல் வளத்தை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாகும். எனவே அனைத்து தரப்பினரும் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறோம். ஆனால் இதனால் படகு உரிமையாளர்கள், கூலித்தொழிலாளிகள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகிறோம். மீனவ குடும்பம் ஒன்றுக்கு ரூ.2,000 ஆயிரம் மட்டுமே அரசால் வழங்கப்படுகிறது. இத்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாகக் கோரி வருகிறோம். மேலும் இத்தடையால் படகு உரிமையாளர்கள் கடுமையான பொருளாதார இழப்புக்கு ஆளாகின்றனர். மேலும் காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் விசைப் படகுகளை கரைக்குக் கொண்டு வந்து பழுது பார்ப்பதற்கான இருப்புப் பாதையுடன் கூடிய சாய்வு தளம் இல்லை. வேறு வகையில் பழுது பார்ப்பதால் படகுகள் சேதமடையும் வாய்ப்புகள் உள்ளன. எனவே இவ்வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். தற்போது சுற்றுச் சூழல் பாதிப்பு, குறைந்து வரும் மீன்வளம், கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மீன்பிடித் தொழில் ஆண்டுக்கு ஆண்டு நலிவடைந்து கொண்டே வருகிறது. எனவே இத்தொழிலை மீட்டெடுக்கும் முயற்சியாக விவசாயக் கடன் போன்று தடை காலத்தில் படகுகளை முழுமையாகப் பழுது பார்க்க மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரகுபதி.
No comments:
Post a Comment