Saturday, 1 August 2015

சென்னைத் துறைமுகத்தில் இணையத்தள தொடர்பு துண்டிப்பு

முகவை க.சிவகுமார்,
திருவொற்றியூர் செய்தியாளர்



சுங்கத்துறை பணிகள் பாதிப்பு: இறக்குமதி முடக்கம்

திருவொற்றியூர், ஆக.1:சென்னைத் துறைமுகத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ள இணையத்தள தொடர்பில் தடங்கல் ஏற்பட்டதையடுத்து  சுங்கத்துறை பணிகள் சனிக்கிழமை ஸ்தம்பித்தது. 
     இதனால் துறைமுகத்திலிருந்து பழங்கள், இறைச்சி, ரசாயன பொருள்கள் உள்ளிட்டவைகள் அடங்கிய நூற்றுக்கணக்கான கண்டெய்னர்களை சுங்கப்பரிசோதனை முடித்து வெளியே எடுத்துச் செல்ல முடியவில்லை. 
இது குறித்து சென்னை சுங்க இல்ல முகமை ஊழியர்கள் கூறியது,
     இறக்குமதியாகும் கண்டெய்னர்களில் அழுகும் பொருள்களான இறைச்சி, பழங்கள் மற்றும் அபாயகரமான ரசாயனங்கள் அடங்கிய கண்டெய்னர்களை அவசரம் கருதி துறைமுகத்தில் உள்ள சரக்குப் பெட்டக முனையத்திலேயே சுங்கத் துறை பரிசோதனை முடித்து வெளியே எடுத்துச் செல்ல முடியும். இதற்கென இணையத் தொடர்புடன் கூடிய சுங்கத்துறை அலுவலகம் துறைமுகத்தில் உள்ளது. இங்கு சென்று ஆவணங்களைச் சமர்பித்து, அதிகாரிகளின் சோதனைக்குப் பிறகு கணிணி வழியில் விடுவிக்கும் ஆணையை (Release Order)அளிப்பார்கள். இவ்வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அளித்து வருகிறது. இதில் கடந்த சில நாள்களாக சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் இவ்வசதி சனிக்கிழமை அடியோடு ஸ்தம்பித்தது. 
    மேலும் கோளாறினை சரி செய்யும் முயற்சிகளை சுங்கத்துறையோ, பி.எஸ்.என்.எல். நிறுவனமோ அல்லது துறைமுக நிர்வாகமோ சனிக்கிழமை இரவுவரை மேற்கொள்ளவில்லை. காலை 10 மணிக்கு வரவேண்டிய சுங்கத்துறை 
அதிகாரிகள் பிற்பகல் 2 மணிக்கு வந்துவிட்டு சுமார் 4 மணிக்கு வீட்டிற்குச் சென்றுவிட்டனர். இதனையடுத்து சனிக்கிழமை விடுவிக்கப்படவேண்டிய நூற்றுக்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் இரு மடங்கு கூடுதல் 
செலவிடவேண்டிய அவசியம் இறக்குமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து சுங்கத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்றும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. துறைமுகத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் தடங்கல் ஏற்பட்டால் தற்காலிகமாக உத்தரவுகளை (Manual Report)அளித்திருக்கலாம். அல்லது இங்கு பணிக்கு வந்த சுங்கத்துறை அருகில் உள்ள சரக்குப் பெட்டக மையங்களுக்குச் சென்று அங்குள்ள கணிணியில் இதே பணியைச் செய்திருக்க முடியும். ஆனால் நாங்கள் கேட்டுக் கொண்டும் இப்பணிகளைச் செவிமடுக்க எந்த அதிகாரியும் தயாராக இல்லை.
     சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள தனியார் துறைமுகங்களில் கப்பலிலிருந்து இறக்கப்பட்ட கண்டெய்னர்களை சில மணி நேரங்களில் சோதனை முடித்து வெளியே எடுத்துச் செல்ல முடியும். ஆனால் சென்னைத் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதிக்கு குறைந்தபட்சம் சுமார் 4 நாள்கள் ஆகின்றன. அரசு நிறுவனங்கள் என்றாலே அலட்சியமாகத்தான் உள்ளனர் என தெரிவித்தனர். 
துறைமுக அதிகாரிகளின் அலட்சியமே காரணம்:
  இது குறித்து சுங்கத்துறை துணை ஆணையர் ஒருவர் கூறியது, 
சுங்கத் துறை பணிகள் சீராக நடைபெற தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது துறைமுக நிர்வாகத்தின் பொறுப்பு. இணைப்பில் தடை ஏற்பட்டால் பி.எஸ்.என்.எல்.வுடன் தொடர்பு கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் கடந்த ஒரு வாரமாக இப்பிரச்னை இருந்தும் 
துறைமுக அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதுவே துறைமுகத்திற்கு வெளியே உள்ள தனியார் சரக்குப் பெட்டக மையங்களில் எவ்வித தடங்கலும் இன்றி பணிகள் நடைபெற்றன. எனவே சுங்கத் துறை மீது எவ்வித தவறும் இல்லை. தடங்கலின்றி சுங்கத்துறை பணிகள் நடைபெற துறைமுக நிர்வாகம் நடவடிக்க எடுக்க வேண்டும் என்றார்.
   தனியார் துறைமுகங்களுடன் போட்டியிட்டு வளர வேண்டிய சென்னைத் துறைமுகம் போதிய ஒருங்கிணைப்பின்று செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவி்த்து வரும் நிலையில் சனிக்கிழமை நடைபெற்றுள்ள சம்பவம் இதனை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது.