Friday, 19 June 2015

காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்ட சர்வதேச சரக்குப் பெட்டக கப்பல்

முகவை க.சிவகுமார்.
திருவொற்றியூர் செய்தியாளர்
-----------------------

தொடரும் நெரிசல் பிரச்னை: 

சென்னைத் துறைமுகத்திற்கு எச்சரிக்கை மணி 

திருவொற்றியூர்,ஜூன் 18:தொடர்ந்து இருந்து வரும்  போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் சென்னைத் துறைமுகத்திற்கு வரவேண்டிய  எம்.வி.சீலேண்டு காமெட் (M.V.SEALAND COMET) என்ற சர்வதேச சரக்குப் பெட்டகக் கப்பல், அருகில் உள்ள காட்டுப்பள்ளி எல் அன் டி தனியார் துறைமுகத்திற்கு  திருப்பி விடப்பட்ட சம்பவம் சென்னைத் துறைமுகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    சென்னைத் துறைமுகத்தில் உள்ள சரக்குப் பெட்டக முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. ஆனால் இதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஏற்படுத்தாததால் கடந்த சில ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இது குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை. இதனால் கண்டெய்னர் லாரிகள் துறைமுகத்தில் ஒரு முறை சென்றுவர முதல் 5 நாள்கள்வரை ஆகும் அவல நிலை இருந்து வருகிறது.  இப்பிரச்னையால் வேளாண் விளைபொருள் உள்ளிட்ட குறிப்பிடத் தகுந்த சரக்குகள் வேறு துறைமுகங்களுக்குச் சென்றுவிட்டன. 
இருப்பினும் சுங்கத்துறை, துறைமுக நிர்வாகங்களிடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததால் இப்பிரச்னை தொடர்கிறது. 
திருப்பிவிடப்பட்ட கப்பல்: 
     இந்நிலையில் உலகில் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களின் ஒன்றான மார்க்ஸ் நிறுவனம் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னைத் துறைமுகத்திற்கு வர வேண்டிய எம்.வி.சீலேண்டு காமெட் என்ற கப்பலில் வரும் சரக்குகளை தவிர்க்க முடியாத காரணங்களால் அருகில் உள்ள காட்டுப்பள்ளித் துறைமுகத்தில் இறக்க அனுமதிக்கும்படி மார்க்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை சுங்கத்துறையிடம் கடந்த ஜூன் 12-ல் அனுமதி கோரி ஒப்புதல் பெற்றது. இதனையடுத்து கடந்த திங்கள்கிழமை காட்டுப்பள்ளித் துறைமுகத்திற்கு வந்த இக்கப்பல் 3,246 கண்டெய்னகளை இத்துறைமுகத்தில் ஏற்றி, இறக்கிச் சென்றது. . 
26 மணி நேரத்தில் 3,246 கண்டெய்னர்கள்: 
இது குறித்து காட்டுப்பள்ளி எல் அன் டி துறைமுக நிர்வாகத் தரப்பில் கூறியது,
    தமிழ்நாடு அரசு கூட்டாண்மையுடன் அமைக்கப்பட்டுள்ள சர்வதேசத் தரத்திலான இத்துறைமுகத்தை ஜன. 2013 ல் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதன்  அருகாமையில் ஏராளமான சரக்குப் பெட்டக நிலையங்கள் உள்ளன. பெரிய கப்பல்களைக் கையாளும் திறன்கொண்ட இத்துறைமுகம்  சுங்கத் துறை அனுமதி உள்ளிட்ட சில காரணங்களால் மந்தநிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது அனைத்து அனுமதிகளையும் பெற்றுவிட்டோம். ஏற்கனவே சில கப்பல்கள் 15 நாள்களுக்கு ஒரு முறை வந்து செல்கின்றன.  மார்க்ஸ் நிறுவனம் சுங்கத்துறையினரின் உரிய அனுமதியுடன் இக்கப்பலை கடந்த திங்கள்கிழமை கொண்டு வந்தது. 26 மணி நேரத்தில் 3,246 கண்டெய்னர்கள் கையாளப்பட்டன. இங்கு இறக்கி வைக்கப்பட்ட கண்டெய்னர்கள் சில மணி நேரங்களில் துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை இங்கு உள்ளது என்றனர். 
சென்னைத் துறைமுகத்திற்கு எச்சரிக்கை மணி:
    இது குறி்த்து சுங்கத் துறை முகமை நிறுவன மேலாளர் ஜெகநாதன் கூறியது,
சுமார் 130 ஆண்டுகள் பழமை கொண்ட இத்துறைமுகத்திற்கு இணைப்புக் கப்பல்கள் (Vessel Connectivity) அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றன. இவ்வாறான அதிக கப்பல்கள் வருவதால்தான் சரக்குகளும் அதிக எண்ணிக்கை கண்டெய்னர்களில் எடுத்து வரப்படுகிறது. சென்னைத் துறைமுகம் ஒன்று மட்டுமே இப்பகுதியில் இருந்த நிலைமை மாறி சென்னையிலிருந்து 27 கி.மீ. தொலைவில் காமராஜர் துறைமுகம், 29 கி.மீ. தொலைவில் காட்டுப்பள்ளி எல் அன் டி துறைமுகம், 170 கி.மீ. தொலைவில் கிருஷ்ணாபட்டனம் துறைமுகம், 295 கி.மீ. தொலைவில் காரைக்கால் துறைமுகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இது தவிர பழைய துறைமுகங்களான தூத்துக்குடி, கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களும் சென்னைக்கு சவாலாகவே உள்ளன.
    இவை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வர்த்தக வளர்ச்சியை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் சென்னைத் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த சரக்குகளையே அதிகமாக நம்பியுள்ளன என்பது எதார்த்தமானது. எனவே காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு மார்க்ஸ் நிறுவன கப்பல் திருப்பிவிடப்பட்ட சம்பவம் சென்னைத் துறைமுகத்திற்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும். இனியும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னைத் துறைமுகம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அடுத்தடுத்து பல கப்பல் நிறுவனங்களும் தங்களது கப்பல்களை இப்புதிய துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லும் வாய்ப்பு அதிகிரித்துள்ளது என்றார் ஜெகநாதன்.
முனையங்களின் திறன் அதிகரிக்க வேண்டும்:
இது குறி்த்து தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர், சென்னைத் துறைமுக அறங்காவலர் குழு உறுப்பினர்  சோழநாச்சியார் ராஜசேகரன் கூறியது,  
    சென்னைத் துறைமுகம் தனது சிறப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் இங்குள்ள இரண்டு தனியார் முனையங்களின் கையாளும் திறனை அதிகரிக்க வேண்டும். மேலும் துறைமுகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கட்டமைப்பு வசதிகளை ஒருங்கிணைத்து லாரிகள் தாராளமாக வந்து செல்லும் உறுதியை அளிக்க வேண்டும். மதுரவாயல் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். மேலும் துறைமுகத்திற்குள் லாரிகள் வந்து செல்வதற்கான அதிகபட்ச கால அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். சுங்கத்துறையில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் துறைமுகத்தில் நிலவும் ஒட்டு மொத்த பிரச்னைகள் குறித்து வர்த்தக அமைப்புகளுடன் சென்னைத் துறைமுகம் உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும். நீண்டகால பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டால் மட்டுமே இத்துறைமுகத்தை காப்பாற்ற இயலும என்பதே எதார்த்தம் என்றார் சோழநாச்சியார்.
     பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் தனியார் துறைமுகங்களும் வளர வேண்டியதுதான். ஆனால் அந்த வளர்ச்சி உள்ள பொதுத்துறை துறைமுகங்களின் சரிவில்தான் இருக்க வேண்டும் வளரவேண்டும் என்பதில்லை. எனவே தனியார் துறைமுகங்களுடன் போட்டியிட்டு சென்னைத் துறைமுகம் வெற்றி பெற வேண்டும் என்பதே இத்துறைமுகம் சார்ந்த சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் களமிறங்கிய அதிநவீனக் கப்பல்

சக்திய வாய்ந்த கேமரா பொருத்திய கருவி கடலுக்குள் செலுத்தப்பட்டது


திருவொற்றியூர், ஜூன், 19: கடந்த ஜூன் 8-ம் தேதி காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானத்தைக் கண்டறிவதற்காக காக்கிநாடாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள அதி நவீன ஆழ்கடல் ஆய்வுக் கப்பலான எம்.வி. ஒலிம்பிக் கேன்யான் விமானம் காணாமல் போனதாக நம்பப்படும் பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வந்தடைந்தது.  
      தற்போது முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ள இக்கப்பல் ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யும் நவீன கேமராக்கள் அடங்கிய  தொலைவிலிருந்து இயக்கும் கருவியை (Remotely Operated Vessel) கடலுக்குள் இறக்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது என கடலோரக் காவல்படை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 
     கடந்த ஜூன் 8, திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் வெள்ளிக்கிழமையுடன் 12 நாள்கள் ஆகிவிட்டன.  விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்ட ஐ.என். எஸ் சந்தயாக் என்ற கடற்படை கப்பல் காணாமல் போன விமானத்திலிருந்து விட்டு விட்டு சமிஞ்சைகள் வருவதை ஒலி அலைகளைக் கொண்டு இருப்பிடம் அறியும் கருவி (Sonar Locating Beacon-SLB) மூலம் கடந்த ஜூன் 12-ம் தேதி கண்டறிந்தது. இதனையடுத்து சமிஞ்ச் கிடைத்த பகுதி சென்னையிலிருந்து சுமார் 95 கடல் மைல் தூரத்திலும், சிதம்பரம் கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 16 கடல் மைல் தூரத்திலும் மையமாகக் கொண்டிருந்தது. இதனையடுத்து கடற்படை நீர் மூழ்கி்க் கப்பல் ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ்,  இதேபோல்  எதிரொலி முறையில் இயங்கும் (Echo Sound) கருவி பொருத்தப்பட்ட தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology) ஆய்வுக் கப்பலான 'சாகர் நிதி'  உள்ளிட்டவை இப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.  மேலும் பத்துக்கும் மேற்பட்ட ரோந்துக் கப்பல்கள், விமானங்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 
எம்.வி.ஒலிம்பிக் கேன்யான்:
            மேலும் விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியும் நடைபெற்றது.  ஆனாலும் காணாமல் போன விமானத்தின் இருப்பிடம் அறிவதிலும் தொடர் முன்னேற்றம் காணப்படவில்லை. இதற்கு காரணம் இக்கடல் பகுதி சுமார் 700 முதல் 1000 மீட்டர்வரை ஆழமானது.  எனவே கடலின் அடிப்பகுதிவரை சென்று ஆய்வு நடத்துவதற்கான வசதிகள் ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கப்பல்களில் இல்லை. எனவே ஆயிரம் மீட்டர் ஆழம்வரை ஆய்வு செய்யக்கூடிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்நோக்கு கப்பலான எம்.வி.ஒலிம்பிக் கேன்யான்-ஐ வரவழைக்க முடிவு செய்யப்பட்டது. இக்கப்பல் ஏற்கனவே கடந்த ஆண்டு விசாகபட்டனம் அருகே மூழ்கிய கடற்டை கப்பலின் இருப்பிடத்தை அறிவதில் வெற்றிகரமாக் செயல்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளப்பட்டது.  இதனையடுத்து கடலோரக் காவல்படையின் அழைப்பின் பேரில் இக்கப்பல் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு விமானம் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதிக்கு வந்த சேர்ந்தது.
தொலைவிலிருந்து இயக்கும் கருவி செலுத்தப்பட்டது:
        இது குறித்து கடலோரக் காவல்படை அதிகாரிகள் கூறியது, 
எம்.வி. கேன்யான் காமெட் இப்பகுதிக்கு வந்தவுடன் இதில் உள்ள நிபுணர்கள் இப்பகுதியில் கடலின் ஆழம், கடல்  அலையின் வேகம்,  புவியியல் அமைப்பு,  ஏற்கனவே பெறப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவைகள் குறித்து முதல்கட்ட ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் அதிக பகுத்தறியும் திறன் கொண்ட கேமராக்கள் (High Resolution Cameras)  அடங்கிய தொலைவிலிருந்து இயக்கும் கருவியை (Remotely Operated Vessel) கடலுக்குள் செலுத்தி வருகின்றனர்.  மேலும் ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த கப்பல்கள் இதே பகுதியில் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தேவைபட்டால் இவற்றின் உதவி மீண்டும் நாடப்படும்.  எனவே எந்த நேரமும் காணாமல் போன விமானம் குறி்த்து தகவல்கள் கிடைக்கப் பெறலாம் என தெரிவித்தனர். 

காணாமல் போன விமானத்தைக் கண்டறிவதில் புதிய முயற்சி

கடலில் ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யும் அதி நவீன கப்பல் 

கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய தளபதி எஸ்.பி.சர்மா தகவல் 


திருவொற்றியூர், ஜூன் 17: கடந்த ஜூன் 8-ம் தேதி காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானத்தைக் கண்டறிவதில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதெற்கென கடலில் ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யும் அதி நவீன கப்பல் எம்.வி.ஒலிம்பிக் கேன்யான் காக்கிநாடாவிலிருந்து வெள்ளிக்கிழமை வந்து சேர்கிறது என புதன்கிழமை சென்னையி்ல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய தளபதி சத்ய பிரகாஷ் சர்மா புதன்கிழமை தெரிவித்தார். 
அப்போது அவர் மேலும் கூறியது,
     கடந்த ஜூன் 8, திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் 10 நாள்கள் ஆகிவிட்டன. கடந்த பத்து ஒன்பது நாள்களாக தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை விமானம் காணாமல் விமானத்திலிருந்து விட்டு விட்டு சமிஞ்சைகள் கிடைப்பதாக கடற்படை கப்பலான சந்தயாக் கண்டறிந்தது. இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ள ஒலி அலைகளைக் கொண்டு இருப்பிடம் அறியும் கருவி (Sonar Locating Beacon-SLB) மூலம்  சமிஞ்சைகள் ஆய்வு செய்யப்பட்டன.  இதனையடுத்து இதே பகுதிக்கு கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.சிந்துத்வாஜ் வரவழைக்கப்பட்டது. இக்கப்பலும் விமானத்திலிருந்து சமிஞ்சை விட்டு விட்டு கிடைப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோல் தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology) ஆய்வுக் கப்பலான 'சாகர் நிதி' எதிரொலி முறையில் இயங்கும் (Echo Sound) கருவி தொடர்ந்து விமானத்திலிருந்து கிடைத்த சமிஞ்சை குறி்த்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.  எனவே காணாமல் போனதாக நம்பப்படும் இடத்திலிருந்தே இந்த சமிஞ்சைகள் கிடைத்திருப்பதன் மூலம் இப்பகுதியில்தான் விமானம் விழுந்திருக்கக் கூடும். இப்பகுதி சென்னையிலிருந்து தென்கிழக்கில் சுமார் 95 கடல் மைல் தூரத்திலும், சிதம்பரம் அருகேயுள்ள கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 16 கடல் மைல் தூரத்திலிருந்தும் அமைந்துள்ளது. 
1000 மீட்டர் ஆழமான கடல்:
     இந்நிலையில் காணாமல் போனதாக நம்பப்படும் இடத்திலிருந்தே இந்த சமிஞ்சைகள் கிடைத்திருப்பதன் மூலம் இப்பகுதியில்தான் விமானம் விழுந்திருக்கக் கூடும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது.  இப்பகுதி சென்னையிலிருந்து தென்கிழக்கில் சுமார் 95 கடல் மைல் தூரத்திலும், சிதம்பரம் அருகேயுள்ள கடலோரப் பகுதியிலிருந்து சுமார் 16 கடல் மைல் தூரத்திலிருந்தும் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதி சுமார் 700 மீட்டர் முதல் ஆயிரம் மீட்டர்வரை ஆழம் மீட்டர்வரை ஆழம் கொண்டதாக உள்ளது. எனவே ஆழம் அதிகமாக இருப்பதாலும்,  சமிஞ்சை விட்டு விட்டு கிடைத்து வருவதாலும் தற்போது இங்கு நிறுத்தப்பட்டுள்ள மூன்று கப்பல்களில் உள்ள அதி நவீன வசதிகளைக் கொண்டும் விமானத்தை கண்டறிவதில் மேற்கொண்டு முன்னேறிச் செல்ல முடியவில்லை. 
அதி நவீன கப்பல் எம்.வி.ஒலிம்பிக் கேன்யான்:
    இந்நிலையி்ல் ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான அதிநவீனக் கப்பல் தொலைவிலிருந்து இயக்கும் கப்பலான (Remotely Operated Vessel-ROV) எம்.வி.ஒலிம்பிக் கேன்யான் உதவி கோரப்பட்டுள்ளது. இக்கப்பல் ஆயிரம் மீட்டர் ஆழம்வரை சென்று ஆய்வு செய்யும் வல்லமை படைத்தது. காக்கிநாடாவிலிருந்து வந்து கொண்டிருக்கும் இக்கப்பல் வெள்ளிக்கிழமை காலை வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம். இக்கப்பல் ஒவ்வொரு கிலோ மீட்டராக படம் பிடித்து ஆய்வு செய்யும். இக்கப்பல் சமிஞ்சைகள் கிடைத்து வரும் பகுதியில் 50 மணி நேரம் ஆய்வு மேற்கொள்ளும்.
தேடும் பணியில் திருப்தி:
     ஒரு விமானமோ, கப்பலோ கடலில் மூழ்கிவிட்டால், அதனைக் கண்டறிவதில் எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தகைய முயற்சிகள் அனைத்தையும் அதிநவீன அறிவியல் சாதனங்களின் துணை கொண்டு இந்திய கடலோரக் காவல்படை ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறது. காணாமல் போன டோர்னியர் விமானத்தில் உள்ள சமிஞ்சை எழுப்பும் கருவி 30 நாள்கள் வரை செயல்படும் தன்மை கொண்டது. எனவே விமானத்தை முழுமையாக மீட்க முடியும் என நம்புகிறோம். தேடும் பணியில் தொய்வு ஏதும் ஏற்படவில்லை. தேடும் பணி குறித்து காணாமல் போன விமானத்தில் சென்ற வீரர்களின் குடும்பத்தினர் திருப்தியடைந்துள்ளனர் என்றார் எஸ்.பி.சர்மா.


பெட்டிச் செய்தி:

ஆழ்கடல் ஆய்வுக் கப்பல் எம்.வி.ஒலிம்பிக் கேன்யான்

நார்வே நாட்டைச் சேர்ந்த எம்.வி.ஒலிம்பிக் கேன்யான் 2006-ல் கட்டமைக்கப்பட்டது. பல்நோக்கு வசதிகளுடன் கூடிய இக்கப்பலைக் கொண்டு ஆயிரம் மீட்டர் ஆழம்வரை கடலில் ஆய்வு செய்யமுடியும். மேலும் இதில் சக்தி வாய்ந்த பகுத்தறியும் திறன் கொண்ட ஒளிப்பதிவு கருவி (Videography) உள்ளது. இதன் மூலம் கடலுக்கடியில் ஆழமாகச் சென்று தெளிவாக அறிய முடியும். இந்திய கடற்படையின் கடலுக்கு அடியில் சென்று ஏவுகணையைச் செலுத்தும் வசதி கொண்ட கப்பல் (Torpedo Recovery Vessel-TRV) கடந்த ஆண்டு நவ.6-ல் விசாகபட்டனம் அருகே நடுக்கடலில் மூழ்கியது. இதில் இருந்த 5 கடற்படை வீரர்கள்  இறந்து போய்விட்டனர். இக்கப்பலை மீட்பதில் எம்.வி.ஒலிம்பிக் கேன்யான் உதவி நாடப்பட்டது. பின்னர் இங்கு வந்து பணியில் ஈடுபட்டு மூழ்கிய கப்பலின் இருப்பிடத்தை துள்ளியமாக அளவிட்டு மூழ்கிய கப்பலை  இக்கப்பல்தான். எனவேதான் காணாமல் போன விமானத்தை கண்டறிவதற்காக வரவழைக்கப்படுகிறது.

Wednesday, 17 June 2015

காணாமல் போன விமானத்தை கண்டுபிடிப்பதில் தொடரும் பின்னடைவு

முன்னேற்றம் இல்லாததால் தேடும் பணியில் சோர்வு

திருவொற்றியூர், ஜூன் 16: கடந்த ஜூன் 8-ம் தேதி காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் 9 நாள்கள் ஆன நிலையில் மீட்பு பணியில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.  அனைத்து நவீன வசதிகளை பயன்படுத்தி ஏராளமான கப்பல்கள், ரோந்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி முழு வீச்சில் சுமார்  200 மணி நேரத்திற்கு மேல் தேடியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் மீட்பு படையினர் சோர்வடைந்துள்ளனர்.   
     கடந்த ஜூன் 8, திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் ஒன்பது நாள்கள் ஆகிவிட்டன. கடந்த ஒன்பது நாள்களாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விமானம் காணாமல் போய் இருக்க வாய்ப்புள்ள கடல் பகுதியில் எண்ணெய் படலம் மிதப்பது கண்டறியப்பட்டது. மேலும் காணாமல் போன விமானத்திலிருந்து விட்டு விட்டு சமிஞ்சைகள் கிடைப்பதாக கடற்படை கப்பலான சந்தயாக் கண்டறிந்தது. இதனையடுத்து இப்பகுதியில் கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக தேடுதல் பணி ஒருங்கிணைக்கப்பட்டன. கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.சிந்துத்வாஜ் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளது.
    மேலும் தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology) ஆய்வுக் கப்பலான 'சாகர் நிதி' தொடர்ந்து விமானத்திலிருந்து கிடைத்த சமிஞ்சை குறி்த்து ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இக்கப்பலில் உள்ள நவீன கருவிகள் மூலம்  கடலின் அடிப்பாகம் (Seabed) ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைவிலிருந்து இயக்கும் கப்பலான (Remotely Operated Vessel-ROV) எம்.வி. ஒலிம்பிக் கேன்யான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 
     மேலும் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிப்பதில் உதவும்படி 
இந்திய விமானப்படையை மீட்பு படையினர் திங்கள்கிழமை கேட்டிருந்தனர். இந்நிலையி்ல செவ்வாய்க்கிழமை விமானப்படையின் சிறப்பு ஹெலிகாப்டர்கள் 
சென்னையிலிருந்து கிளம்பிச் சென்று சிதம்பரம், தஞ்சாவூர், நாகபட்டனம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வாகப் பறந்து விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தன. இதில் தகவல்கள் ஏதும் கிடைக்காததால் ஹெலிகாப்டர்கள் சென்னை திரும்பின என கடலோரக் காவல்படை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 
     அனைத்து வகை நவீன கருவிகள் கொண்ட கப்பல்கள், விமானங்கள், படகுகளைக் கொண்டு கடந்த 9 நாள்களாகத் தேடியும் காணாமல் போன விமானம் குறித்து எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால் கடலோரக் காவல்படை, கடலோரப் பாதுகாப்புக் குழு, கடற்படையைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் சோர்வுற்றுள்ளனர். மேலும் தற்போது நடைபெற்றுவரும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆய்வின் முடிவைப் பொருத்து இன்னும் ஓரிரு நாள்களில் தேடும் பணி கைவிடப்பட வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ராமேஸ்வரம் அருகே ரூ.65 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

ரூ.65 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

இந்திய கடலோரக் காவல் படை நடவடிக்கை

திருவொற்றியூர், ஜூன் 16: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கொடியில் 
650 கிலோ கஞ்சாவை இந்திய கடலோரக் காவல் படை செவ்வாய்க்கிழமை கைப்பற்றியது. இதன் மதிப்பு இந்தியச் சந்தையில் ரூ.65 லட்சம் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையிலுள்ள இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியி்ட்டுள்ள செய்திக் குறிப்பு:
    இந்திய கடலோரக் காவல் படை பாக் நீரிணைப்பு பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை ராமேஸ்வரம் அருகே தனுஷ்கொடியில் நீரிலும், நிலத்திலும் செல்லும் ஹோவர்கிராப்ட் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சாக்கு மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கடலில் குதித்து நீந்திச் சென்று சாக்கு மூட்டைகளை மீட்டு சோதனையிட்டனர். அப்போது சாக்கு மூட்டைக்குள் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 32 சாக்குப் பைகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட தலா இரண்டரை கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்தன. இதன் மொத்த எடை 650 கிலோ என அளவிடப்பட்டது. இதன் இந்திய சந்தை மதிப்பு ரூ. 65 லட்சம் ஆகும்.  இதனையடுத்து கஞ்சாவைக் கடத்த முயன்றவர்களைப் பிடிக்க இப்பகுதியில் தேடுதல் வேட்டையில் காவல் படையினர் ஈடுபட்டனர். ஆனால் இப்பகுதியைச் சுற்றி சந்தேகத்திற்கிடமான படகுகளோ, ஆட்களோ தென்படவில்லை. இது குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இது குறி்த்து சுங்கத்துறை, போதை பொருள் தடுப்புத் துறை, தமிழ்நாடு காவல்த் துறை உள்ளிட்டவைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக் நீரிணைப்பு பகுதியில் கடலோரக் காவல் படையினர் சமீபத்தில் கைப்பற்றிய மிகப் பெரிய கடத்தல் தடுப்பு இதுவாகவே இருக்கும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னைத் துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை நிறைவேற்றப்படுமா?

முகவை க.சிவகுமார்,
திருவொற்றியூர் செய்தியாளர்


சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பை முன்னிட்டு

ஏற்றுமதி வளர்ச்சிக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகள் அவசியம்


திருவொற்றியூர், ஜூன்.15:தமிழத்தின் தொழில் வளர்ச்சியை பெருக்குவதற்காக  சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு (Global Inverstors Meet-2015) வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக  கிடப்பில்  உள்ள மதுரவாயல்  உயர்மட்ட விரைவுச் சாலை திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  
சென்னைத் துறைமுக வளர்ச்சிக்கான முக்கிய திட்டம்:
    135 ஆண்டுகள் பழமையான சென்னைத் துறைமுகம் மாநகரை ஒட்டி அமைந்துள்ளதால் இத்துறைமுகத்திற்கு வரும் கனரக வாகனங்கள் நகர போக்குவரத்து நெரிசலைத் தாண்டியே வந்து சேர வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்புவரை துறைமுகத்திற்கு வாகனங்கள் சென்னை மாநகரத்தின் முக்கிய சாலைகள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்டன. ஆனால் கனரக வாகனங்களால் பொதுமக்களின் வாகனங்கள் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் துறைமுகத்திற்குச் செல்லும் வாகனங்கள் மாதவரம், மணலி, திருவொற்றியூர், ராயபுரம் வழியாக மட்டுமே செல்லும் வகையில் திருப்பி விடப்பட்டன. இதனால் இப்பகுயில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க மத்திய அரசு திட்டமிட்டது. 
 பிரதமர் அடிக்கல் நாட்டிய திட்டம்:
 இதனையடுத்து ரூ.600 கோடி மதிப்பீட்டில் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டமும்(EMRIP-Ennore Manali Road Improvement Project), ரூ.1,885 கோடி மதிப்பீட்டில் சென்னைத் துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட விரைவுச்சாலை (Chennai Port-Maduravoyal Elevated Expressway) திட்டமும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்டன.  இதன்படி 19 கிலோ மீட்டர் நீளம் கொண்ட மதுரவாயல் உயர்மட்ட விரைவு சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஜன.9, 2009 அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பணிகள் தொடங்கப்பட்டு மொத்தமுள்ள 889 தூண்களில் 120 தூண்கள் அமைக்கப்பட்டன, மேலும் 15 தூண்களில் சாலை அமைப்பதற்கான மேற்பரப்பும் கட்டப்பட்டது.
பணிகளை நிறுத்தி வைக்க தமிழக அரசு ஆணை:
      இந்த நிலையில் சேத்துப்பட்டு அருகே கூவம் ஆற்றுக்குள் ஏற்கெனவே திட்டமிட்டபடி பணிகள் நடக்காததால், ஆற்றுநீரின் போக்கு தடைபடும் என்று கூறி, இந்தத் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி கடந்த மார்ச் 29, 2012 மாதம் தமிழக அரசின் நீர்வள ஆதாரத் துறை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து உயர்மட்ட எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன.  மேலும் இத்திட்டத்திற்கு புதிய அனுமதியும், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதலை மீண்டும் பெற வேண்டும் என நெடுஞ்சாலை ஆணையத்தை தமிழக நீர்வள ஆதாரத் துறை கேட்டுக்கொண்டது. ஆனால் திட்டத்தின் வழித்தடத்தில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாததால், புதியதாக அனுமதிகள் தேவையில்லை. மேலும் சாலைக்காக தூண்கள் அமைக்கப்படும் பகுதிகளில் தண்ணீர் போக்கில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 
ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு: 
     இந்த விளக்கங்களை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாததையடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த பிப்.20, 2014 அன்று அளித்த தீர்ப்பில் தமிழக அரசின் தமிழக அரசின் உத்தரவை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது. இதற்கிடையே திட்டபணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் தங்களுக்கு
 ரூ.600 கோடிக்கும் மேல் நட்டம் ஏற்பட்டுவிட்டதாகக் கோரி ஆணையத்திற்கு நோட்டீசு அளித்தனர். இந்நிலையில் சிக்கல் தீர்ந்து பணிகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் கடந்த மார்ச் 4, 2014-ல் மேல் முறையீடு செய்யப்பட்டது. தற்போது இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
மத்திய-மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு தேவை: ஏ.சக்திவேல்
    இத்திட்டம் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவரும், இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Exporeters Organisations-FIEO) தெற்கு மண்டலத் தலைவருமான ஏ.சக்திவேல் கூறியது, 
   திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10 மணி நேரத்தில் சென்னைக்குத் செல்லும் சரக்குகள் அங்கிருந்து துறைமுகத்தை அடைய 4 நாள்கள் வரை காத்திருக்கும் அவலம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது.  இதற்கு காரணம் போக்குவரத்து நெரிசல்தான். இதனால் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நேரத்திற்குள் சரக்குகளை கப்பலில் அனுப்ப இயலாத நிலை உள்ளது. இன்றைக்கு பெரும்பாலான தொழில்கள் ஏதாவது ஒரு விதத்தில் ஏற்றுமதி, இறக்குமதியுடன் தொடர்புடையதாகவே உள்ளன. எனவே மாநிலத்தில் தொழில் வளர்ச்சி தொடர வேண்டும் எனில் சென்னைத் துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியாக வேண்டும். இதில் முக்கியமானது மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டம்தான் .      
     எனவே இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டு தமிழகத்தின் தொழில் வளர்ச்சியே  நிச்சயம் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரடியாகத் தலையிட்டு இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுணக்கமின்றி தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும் எனில் மத்திய, மாநில அரசுகளிடையே புரிந்துணர்வு கொண்ட  இணக்கமான சூழல் இருக்க வேண்டும். எனவே இத்திட்டம் நிறைவேற இதுவே சரியான தருணம் என்பதே உண்மை நிலைமை என்றார் சக்திவேல் 
துறைமுகத்தை மூடும் நிலை ஏற்படும்: 
இது குறி்த்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சுகுமார் கூறியது,
     சென்னைத்துறைமுகத்திற்கு தினமும் சுமார் 6 ஆயிரம் கனரக வாகனங்கள் வந்து செல்ல வேண்டும். இதற்கான கட்டமைப்பு வசதிகள் தற்போது இல்லை. இதற்காகவே 
இந்த இரண்டு திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இதில் துறைமுக இணைப்புச் சாலைத் திட்டப்பணிகள் 90 சதவீதம்வரை நிறைவு பெற்றுள்ளது. ஆனாலும் துறைமுகம் செல்ல 
நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. இதனால்  ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணபட்டனம், கேரளாவின் கொச்சி துறைமுக உள்ளிட்ட
தமிழத்திற்கான ஏற்றுமதி இறக்குமதி சரக்குகள் திருப்பிவிடப்படுகின்றன. சென்னைத் துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த வேளாண் விளைபொருள்கள், கிராணைட் கற்கள், ஆயத்த ஆடைகள், துணிமணிகள் உள்ளிட்டவைகள் அண்டை துறைமுகங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 40 சதவீத சரக்குகள் இங்கு சென்று சென்றுவிட்டன.  இதே நிலை நீடித்தால் சென்னைத் துறைமுகம் விரைவில் மூடப்படும் அபாயம் உள்ளது. எனவே துறைமுகம் என்பது மத்திய அரசின் வரம்புக்கு உட்பட்டது எனக் கருதாமல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு இக்கட்டமைப்பு வசதிகள் அவசியமானது என்பதை அனைத்து தரப்பினரும் உணர வேண்டும். எனவே 
மதுரவாயல் உயர்மட்ட விரைவுச் சாலை திட்டத்தை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்றார் சுகுமார். 
     19 கி.மீ. நிளம் கொண்ட இச்சாலை துறைமுகத்திற்கு மட்டுமே செல்லும் என்பது அல்லாமல்  சிவானந்தா சாலை, கல்லூரி சாலை ஆகிய இடங்களில் பொதுமக்களின் வாகனங்கள் ஏறிக் கொள்ளும் வசதியும், ஸ்பர்டாங் சாலை, போர் நினைவுச் சின்னம் ஆகிய இரண்டு இடங்களில் இறங்கிக் கொள்ளும் வசதிகள் இத்திட்டத்தில் அடங்கும். மேலும் இந்தியாவிலேயே ஒரு நகரின் மத்தியில் இவ்வளவு நீளமான மேம்பாலச் சாலை இதுதான் என்பது இத்திட்டத்தின் முக்கிய அம்சமாகும். எனவே இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதா?

 இறுதிக் கட்டத்தில் மீட்பு பணி                                                          




                                       கடந்த ஜூன் 8-ம் தேதி காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் 8 நாள்கள் ஆன நிலையில் மீட்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் விமானத்தை கண்டறிய வாய்ப்புள்ளதா? அல்லது இல்லையா? என்பது தெரியவரும் என கடலோரக் காவல் படை வட்டாரத்தில் கூறப்படுகிறது.  
     கடந்த ஜூன் 8, திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் எட்டு நாள்கள் ஆகிவிட்டன. கடந்த எட்டு நாள்களாக தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விமானம் காணாமல் போய் இருக்க வாய்ப்புள்ள கடல் பகுதியில் எண்ணெய் படலம் மிதப்பது கண்டறியப்பட்டது. மேலும் காணாமல் போன விமானத்திலிருந்து விட்டு விட்டு சமிஞ்சைகள் கிடைத்தது.  இதனையடுத்து இப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறப்பு கப்பல்கள், விமானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விமானத்தை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டன.  ஆனால் எண்ணெய் படலம் வெளியேறுவது நின்று போய்விட்டது, அதேபோல் விமானத்திலிருந்து கிடைத்துவந்த சமிஞ்சையும் சரிவர தொடரவில்லை.  இதனால் காணாமல் போன விமானத்தை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது.  எனவே அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைத்து இறுதிக் கட்டமாக  தீவிரமாகத் தேடும் பணியில் கடலோரக் காவல்படை ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
இது குறித்து இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
    தற்போது தேடும் பணியில் 7 ரோந்துக் கப்பல்கள், அதிவேகப் படகுகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் கடலுக்கு அடியில் தேடும் பணியில் சனிக்கிழமை இணைந்த இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ், கப்பல் காணாமல் போனதாகக் நம்பப்படும் பகுதியில் தொடர்ந்து தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே ஐ.என்.எஸ். சந்தயாக் என்ற கப்பலில்  பொறுத்தப்பட்டுள்ள சோனார் (Sound Navigation and Ranging-SONAR) கருவிகள் மூலம் சமிஞ்சைகள் கிடைப்பதாக கூறப்படும் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பலும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள கருவிகள் மூலம் நடத்திய ஆய்வில் முன்பு தெரிவிக்கப்பட்டதைப் போலவே  8 முதல் 40 கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசையில் அவ்வப்போது சமிஞ்சைகள் கிடைத்து வருகிறது. ஆனாலும் உறுதியாக இப்பகுதியில்தான் அது காணாமல் போன விமானத்திலிருந்துதான் வருகிறதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
    மேலும் தேசிய பெருங்கடல் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology) ஆய்வுக் கப்பலான 'சாகர் நிதி' இப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டு ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது கடலின் அடிப்பாகத்தை (Seabed) அளவிட்டு சோதனை நடத்தி வருகிறது.  இதற்கிடையே ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைவிலிருந்து இயக்கும் கப்பலான (Remotely Operated Vessel-ROV) எம்.வி. ஒலிம்பிக் கேன்யான் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலப்பகுதியில் எங்கேனும் விமானம் விழுந்திருக்க வாய்ப்புள்ளதா? என ஹெலிகாப்டர்கள் மூலம் தேடிப்பார்க்கும் படி இந்திய விமானப் படையை மீட்பு குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர். எனவே விமானத்தை மீட்பதில் அனைத்து நவீன வசதிகளையும் ஒருங்கிணைத்து இறுதி கட்டத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
   கடந்த 8 நாள்களாகத் தேடியும் காணாமல் போன விமானம் குறித்து எவ்வித தெளிவான தகவல்களும் கிடைக்கவில்லை. தற்போது அனைத்து நவீன அறிவியல் வசதிகளையும் ஒருங்கிணைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வருகிறது. எனவே  காணாமல் போன விமானத்தை கண்டறிய வாய்ப்புள்ளதா? இல்லையா? என்பது இன்னும் ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும் என்பதே தற்போதைய நிலை.

Tuesday, 16 June 2015

காணாமல் போன விமானத்தை மீட்பதில் மீண்டும் பின்னடைவு

ஏழாவது நாளாவது தேடும் பணி தொடர்கிறது

திருவொற்றியூர்,  ஜூன் 14:கடந்த திங்கள்கிழமை காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் 7 நாள்கள் ஆன நிலையில் சனிக்கிழமை விமானம் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதியில் புதிய எண்ணெய் படலம் மிதப்பதாகவும், சமிஞ்சைகள் கிடைத்திருப்பதாகவும்  கூறப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை இதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 
     கடந்த திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் கடந்த ஏழு நாள்கள் ஆகிவிட்டது. சனிக்கிழமை விமானம் காணாமல் போய் இருக்க வாய்ப்புள்ள கடல் பகுதியில் எண்ணெய் படலம் மிதப்பது கண்டறியப்பட்டது. மேலும் காணாமல் போன விமானத்திலிருந்து விட்டு விட்டு சமிஞ்சைகள் கிடைத்தது. இதனையடுத்து இப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறப்பு கப்பல்கள், விமானங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு விமானத்தை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதற்குள் இரவு நேரமாகிவிட்டதால் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் படலம் வெளியேறுவது நின்று போய்விட்டதாகவும், விமானத்திலிருந்து கிடைத்துவந்த சமிஞ்சையும் சரிவர தொடரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் காணாமல் போன விமானத்தை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தேடும் பணி தொடரும் என கடலோரக் காவல்படை அறிவித்துள்ளது.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
 தற்போது தேடும் பணியில் 8 ரோந்துக் கப்பல்கள், அதிவேகப் படகுகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  
   மேலும் கடலுக்கு அடியில் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் காரைக்கால் பகுதிக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சோனார் (Sound Navigation and Ranging-SONAR) கருவிகள் பொருத்தப்பட்ட ஐ.என்.எஸ். சந்தயாக் ஆகிய  ஆழ் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள இருப்பிடம் அறியும் கருவி மூலம் 37.5 கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசையில் காணாமல் போன விமானத்தின் சமிஞ்சை
கிடைத்து. இதனையடுத்து கடலோரக் காவல் படையின் ரோந்து கப்பலான ஐ.சி.ஜி.எஸ் விக்ராவில் தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology) தொழில் நுட்பக்குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இக்குழு கொண்டு செல்லும் சிறப்புக் கருவி மூலம் காணாமல் போன விமானத்திலிருந்து வெளி வரும் சமிஞ்சையை ஆய்வு செய்யும்.
   இதற்கிடையே ஹைதராபாத்தில் உள்ள தேசிய தொலை உணர்வு மையத்தின் உதவியை நாடியதில், விமானம் காணாமல் போனதாக நம்பப்படும் பகுதியில் மேகமூட்டமாக இருப்பதால் தெளிவான செயற்கை கோள் படங்கள் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.   இதற்கிடையே கடலில் சிக்கித் தவித்த 10 மீனவர்களை அபிசேக் என்ற கடலோரக் காவல்படை மீட்டு புதுச்சேரி அழைத்துவந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sunday, 14 June 2015

காணாமல் போன விமானத்தை நெருங்கும் மீட்புக் குழுவினர்

கடந்த திங்கள்கிழமை காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்து விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்


புதிய எண்ணெய் படலம், சமிஞ்சை கிடைத்தன



திருவொற்றியூர்,  ஜூன் 13:கடந்த திங்கள்கிழமை காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் 6 நாள்களான நிலையில் சனிக்கிழமை தேடுதல் பணியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விமானம் காணாமல் போனதாகக் கூறப்படும் பகுதியில் புதிய எண்ணெய் படலம் மிதப்பதாகவும், சமிஞ்சைகள் கிடைத்திருப்பதாகவும் கடலோரக் காவல் படை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
இது குறித்து இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   கடந்த திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் கடந்த ஐந்தாவது நாளான வெள்ளிக்கிழமை  ஆகியும் முக்கிய தடயங்களை ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமானத்தைத் தேடும் பணியில் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட ரோந்துக் கப்பல்கள், அதிவேகப் படகுகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழக காவல்த் துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுவினர் கடலை ஒட்டி அமைந்துள்ள சதுப்பு நில மாங்குரோவ் காடுகளில் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். 
   மேலும் கடலுக்கு அடியில் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் சனிக்கிழமை இரவு காரைக்கால் பகுதிக்கு வந்து வந்து சேரும் எதிர்பார்கப்படுகிறது. சோனார் (Sound Navigation and Ranging-SONAR) கருவிகள் பொருத்தப்பட்ட ஐ.என்.எஸ். சந்தயாக் ஆகிய  ஆழ் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இது கடலுக்கு அடியில் தரைப்பகுதிவரை ஆய்வு செய்யும் வசதிகளைக் கொண்டது. இதற்கு உதவியாக ரோந்து விமானங்கள் செயல்பட்டு வருகின்றன.  இக்கப்பலில் உள்ள சோனார் இருப்பிடம் அறியும் கருவி மூலம் 37.5 கிலோ ஹெர்ட்ஸ் கோணத்தில் காணாமல் போன விமானத்தின் சமிஞ்சை
கிடைத்துள்ளதாக இந்திய கடலோரக் காவல் படை கிழக்கு பிராந்திய கமாண்டன்ட் சத்ய பிரகாஷ் சர்மா சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார். 
எந்த நேரமும் தெரியலாம்: 
    மேலும் தேசிய தொலை உணர்வு முகமை (National Remote Sensing Agency-NRSA),  ஹைதராபாத்தில் உள்ள கடல்சார் தகவல்களுக்கான இந்திய தேசிய சேவை மையம் (The Indian National Centre for Ocean Information Services), தஞ்சாவூரில் உள்ள ஓம்கார் பவுண்டேசன் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் தொடர்ந்து பல்வேறு வியூகங்களில் தேடுதல் பணி நடைபெற்றுவருவதாகவும், தற்போது  சமிஞ்சை கிடைத்துள்ளதால் அனைத்து தரப்பிலிருந்தும் சமிஞ்சை கிடைத்துள்ள பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு இறுதி கட்ட தேடுதல் நடைபெற்றுவருகிறது.  சென்னையிலுள்ள தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகத்தின் (National Institute of Ocean Technology)
'சாகர் நிதி' என்ற ஆய்வுக் கப்பல் ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு அடியில் தேடுதல் பணியை மேற்கொள்ள உள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல்நோக்கு உதவிக் கப்பலின் (Multi Support Vehicle-MSV) உதவியை மீட்புக் குழுவினர் கோரியுள்ளனர். இதனைடுத்து காணாமல் போன விமானம் குறித்து எந்த நேரமும் அதன் நிலை குறித்து தெரிய வரலாம் என்பதே சனிக்கிழமை இரவுவரை உள்ள நிலைமையாக உள்ளது. 

Saturday, 13 June 2015

காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் புதிய உத்திகள்

ஐந்தாவது நாளாக தேடுதல் தொடர்கிறது

திருவொற்றியூர்,  ஜூன் 12:கடந்த திங்கள்கிழமை காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் ஐந்து நாள்களாகியும் வெள்ளிக்கிழமைவரை தேடும் பணியில் எவ்வித பலனும் இல்லை. இந்நிலையில் விமானத்தைத் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் வெள்ளிக்கிழமை முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   கடந்த திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் ஐந்து நாள்கள் ஆகியும் முக்கிய தடயங்களை ஏதும் கிடைக்கவில்லை. இருப்பினும் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விமானத்தைத் தேடும் பணியில் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட ரோந்துக் கப்பல்கள், அதிவேகப் படகுகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழக காவல்த் துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுவினர் கடலை ஒட்டி அமைந்துள்ள சதுப்பு நில மாங்குரோவ் காடுகளில் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
   இந்நிலையில் கடலுக்கு அடியில் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ளது. மேலும் வியாழக்கிழமை  சோனார் (Sound Navigation and Ranging-SONAR) கருவிகள் பொருத்தப்பட்ட ஐ.என்.எஸ். சந்தயாக் ஆகிய  ஆழ் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இது கடலுக்கு அடியில் தரைப்பகுதிவரை ஆய்வு செய்யும் வசதிகளைக் கொண்டது. இதற்கு உதவியாக ரோந்து விமானங்கள் செயல்பட்டு வருகின்றன.  கடல் பகுதியில் மிதந்து வந்த எண்ணெய்ப் படலம் காணாமல் போன விமானத்தின் எரிபொருள் இல்லை என்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 
புதிய உத்திகள்:
    ஐந்து நாள்களாகியும் தேடும் பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் 
புதிய உத்திகளைக் கையாள முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய தொலை உணர்வு முகமை (National Remote Sensing Agency-NRSA) மூலம் செயற்கை கோள் படங்களைக் கொண்டு தேடும் பணியை மேற்கொள்ளும். ஹைதராபாத்தில் உள்ள கடல்சார் தகவல்களுக்கான இந்திய தேசிய சேவை மையம் (The Indian National Centre for Ocean Information Services), சென்னையிலுள்ள தேசிய கடல்சார் தொழில் நுட்பக் கழகம் (National Institute of Ocean Technology), தஞ்சாவூரில் உள்ள ஓம்கார் பவுண்டேசன் உள்ளிட்ட நிறுவனங்களின் உதவியை கடலோரக் காவல்படை கோரியுள்ளது.  இவை அனைத்தும் தனித் தனி தொழில்நுட்பங்களில் சிறப்புத் திறன் பெற்றவை. இதன் மூலம் புதிய உத்திகளைக் கையாள்வதன் மூலம் காணாமல் போன விமானம் குறித்து தகவல்கள் கிடைக்கலாம் என நம்புகிறோம். தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, 12 June 2015

கண்டெய்னர் லாரிகளின் கண்ணாடிகள் உடைப்பு: டிரைவர்கள் சாலை மறியல்

திருவொற்றியூர், மே 30:மணலி அருகே இருபதுக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகளின் கண்ணாடிகளை போக்குவரத்து போலீஸார் உடைத்ததாகக் கூறி லாரி டிரைவர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் துறைமுக இணைப்புச் சாலைகளில் சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு மாதவரம், மணலி புதுநகர்  வரிசைகட்டி நிற்கின்றன. இதனை ஒழுங்குபடுத்துவதற்காக சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து காவல் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை உரத் தொழிற்சாலை அருகே உள்ள சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு வரிசையிலிருந்து விலகி வந்த லாரிகளின் கண்ணாடிகளை ரோந்து பணியில் இருந்த போக்குவரத்து போலீஸார் உடைத்ததாகக் கூறப்படுகிறது. இதில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட லாரிகளின் கண்ணாடிகள் சேதமடைந்தன. 
   இது குறித்து தகவல் அறிந்த வரிசையில் நின்ற லாரிகளின் டிரைவர்கள் தங்களது லாரிகளை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்த சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் லாரிகளை உடனே எடுக்கும்படி வலியுறுத்தினர். இதற்கு டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட டிரைவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் டிரைவர்-போலீஸாரிடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. பின்னர் உயர் அதிகாரிகளின் தலையிட்டு சமரசம் செய்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் பொன்னேரி, மீஞ்சூர் செல்ல வேண்டிய பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். 
போலீஸார் மீது டிரைவர்கள் புகார்:
போராட்டம் குறித்து டிரைவர்கள் கூறியது,
    துறைமுகத்திற்குச் செல்ல நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னையை யாரும் கண்டு கொள்வதாக இல்லை. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்ட போக்குவரத்து காவல் சாவடிகளில் பணியில் உள்ள போலீஸார் முறைகேடுகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். வரிசையிலிருந்து விலகி வரும் வாகனங்களை ஆதாயம் பெற்றுக் கொண்டு அனுப்புவது போலீஸார்தான். ஆனால் சில நேரங்களில் உயர் அதிகாரிகள் வருவார்கள் எனத் தெரிந்தால் டிரைவர்களைத் தாக்குகின்றனர். லாரிகளின் கண்ணாடிகளை உடைக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்கதையாக உள்ளது. எனவே நெரிசலைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் போலீஸாரை உயர் அதிகாரிகள் கண்டறிந்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

டிராபிக்' ராமசாமிக்கு ஆதரவளிக்க சசிபெருமாள் நிபந்தனை

திருவொற்றியூர்,ஜூன் 5:எங்களது மது ஒழிப்புக் கொள்கையை 'டிராபிக்' ராமசாமி ஏற்றுக் கொண்டு உறுதியளித்தால் மட்டுமே நான் போட்டியிலிருந்து விலகி அவருக்கு ஆதரவளிப்பேன் என மது ஒழிப்பு பிரச்சாரம் செய்து வரும் சசிபெருமாள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்காாக சசிபெருமாள் தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்தார்.
அப்போது சசிபெருமாள் தினமணி நிருபருக்கு  அளித்த பேட்டி:
முதல்வர் ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக வந்ததையொட்டி 
இப்பகுதியே ஸ்தம்பித்துவிட்டது. மேலும் பல முனைகளிலும் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்ததால் என்னால் குறித்த நேரத்திற்கு வர இயலவில்லை. மேலும் பிற்பகல் 3 மணியாகிவிட்டதால் வேட்பு மனுவை வாங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். நாளை எனது மனுவைத் தாக்கல் செய்வேன். 'டிராபிக்' ராமசாமிக்கு ஆதரவளிப்பதாக முன்பு அறிவித்தது உண்மைதான். ஆனால் அவரது மனு பரிசீலனையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். மேலும் அவர் எங்கள் அமைப்பின் கொள்கையான மது ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுப்பதாக உறுதி அளிக்கக் வேண்டும். அப்போதுதான் எனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு 
'டிராபிக்' ராமசாமிக்கு ஆதரவளிப்பேன். 2016 பொதுத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் மது ஒழிப்பு வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார். அதற்கு ஒரு முன்னோட்டம்தான் இந்த இடைத்தேர்தல் என்றார் சசிபெருமாள். 

காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் நீர்மூழ்கிக் கப்பல்

4 நாள்கள் ஆகியும் எவ்வித தகவலும் இல்லை

திருவொற்றியூர்,  ஜூன் 11:கடந்த திங்கள்கிழமை காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படையின் பி 81 ரக டோர்னியர் ரோந்து விமானம் நான்கு நாள்களாகத் தேடியும் வியாழக்கிழமை இரவுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் விமானத்தைத் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
   கடந்த திங்கள்கிழமை மூன்று அதிகாரிகளுடன் ரோந்துப் பணியில் ஈடுபட்ட டோர்னியர் ரோந்து விமானம் காணாமல் போய் நான்கு நாள்கள் ஆகியும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.  இருப்பினும் தொடர்ந்து தேடும் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தைத் தேடும் பணியில் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட ரோந்துக் கப்பல்கள், அதிவேகப் படகுகள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழக காவல்த் துறையின் கடலோரப் பாதுகாப்புக் குழுவினர் கடலோரப்பகுதியில் உள்ள சதுப்பு நிலம், மாங்குரோவ் காடுகள் உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
   இந்நிலையில் கடலுக்கு அடியில் தேடும் பணியில் இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துத்வாஜ், சோனார் (Sound Navigation and Ranging-SONAR) கருவிகள் பொருத்தப்பட்ட ஐ.என்.எஸ். சந்தயாக் ஆகிய இரண்டு கப்பல்களும் வங்கக் கடல் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கடல் பகுதியில் மிதந்து வந்த எண்ணெய்ப் படலத்தை பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்

திருவொற்றியூர்ஜூன் 11:சென்னைத் துறைமுக கண்டெய்னர் லாரிகள் வேலை நிறுத்தம் புதன்கிழமை நள்ளிரவுமுடிவுக்கு வந்தது.
  சென்னைத் துறைமுகத்தில் உள்ள இரண்டு சரக்குப் பெட்டக முனையங்கள் மூலம் ஏற்றுமதிஇறக்குமதி பணிகள்நடைபெற்று வருகிறதுஇங்கு கண்டெய்னர்களை சுங்கத்துறை சோதனையிடுவதில் தேவையற்ற மந்த நிலைஇருப்பதாகக் கூறி கண்டெய்னர் லாரி டிரைவர்கள் புதன்கிழமை காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து துறைமுகத்திற்கு உள்ளேயும்வெளியேயும் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டனமேலும் இரண்டு முனையங்களின் பணிகளும் அடியோடு ஸ்தம்பித்ததுஇது குறித்து தகவல் அறிந்த சுங்கத்துறை துணைஆணையர் அறிவழகன்சென்னைத் துறைமுகத் துணைத் தலைவர் .ஜெயக்குமார் ஆகியோர் வேலை நிறுத்த்தில்ஈடுபட்ட டிரைவர்களை சமாதானப்படுத்தினர்மேலும் தாமதமின்றி கண்டெய்னர்களை அனுமதிக்க நடவடிக்கைஎடுக்கப்படும்இதற்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து புதன்கிழமைநள்ளிரவு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதுஇதனையடுத்து துறைமுகத்தில் இயல்புநிலை திரும்பியது.

சென்னைத் துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி டிரைவர்கள் மீண்டும் வேலை நிறுத்தம்

ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் கடும் அதிருப்தி

திருவொற்றியூர், ஜூன் 10: சென்னைத் துறைமுகத்தில் சுணக்கமாக நடைபெற்றுவரும் பணிகளை கண்டித்து கண்டெய்னர் லாரி டிரைவர்கள் புதன்கிழமை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  கடந்த ஒரே மாதத்திற்குள் மூன்று முறை திடீர் வேலை நிறுத்தம் நடைபெற்ற நிலையில் நான்காவது முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைநிறுத்தம் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னைத் துறைமுகத்தின் உள்ளே வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு சரக்கு பெட்டக முனையங்கள் உள்ளன. இம்முனையங்களிலும் தினமும் சுமார் 6 ஆயிரம் 20 அடி அளவிலான கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன.
ஆனால் இதற்கேற்ற கட்டமைப்பு வசதிகள் முழுமையாக அமைக்கப்படவில்லை. மேலும் இங்கு தொடர்ந்து இருந்து வரும் பல்வேறு பிரச்னைகளால் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு கண்டெய்னரை துறைமுகத்தின் உள்ளே கொண்டு செல்வதற்கு சுமார் 3 நாள்கள்வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.  இதனால் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மட்டுமன்றி லாரி டிரைவர்களும் கடுமையாகப் பாதிக்கபபடுவதாகக் கூறி ஏற்கனவே பலமுறை வேலை நிறுத்தம் நடைபெற்றுள்ளன.  இந்நிலையில் புதன்கிழமை லாரிகளை குறுக்கே நிறுத்தி லாரி டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுங்கத் துறை அதிகாரிகள் அலட்சியம்:
போராட்டம் குறி்த்து லாரி டிரைவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுவது, 
பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் அனைத்து தரப்பிலுமே போதிய அலட்சியம் 
இருந்து வருகிறது. பல முறை வேலை நிறுத்தம் செய்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.  நான்கைந்து நாள்கள் தொடர்ந்து வீ்ட்டிற்குக் கூட செல்ல முடிவதில்லை. மேலும் உணவு, இயற்கை உபாதை உள்ளிட்ட பல இடர்பாடுகளை நாங்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். வழியில் கிடைப்பதை மட்டுமே வாங்கிச் சாப்பிட இயலும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறையாவது லாரியை ஓட்டி சில அடி தூரம் சென்றபிறகு மீண்டும் நிறுத்த வேண்டும். இதனால் லாரியிலும் தூங்க முடியாது. குறைந்த அளவு சம்பளமே கிடைக்கும். இவ்வாறான சூழ்நிலையைப் பொறுத்துக் கொண்டுதான் வேலை செய்து வருகிறோம். திடீர் வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஒட்டுமொத்த டிரைவர்களும் சேர்ந்து வேலை நிறுத்தத்தை அறிவிக்க வேண்டியதில்லை. ஒரு சிலர் லாரியை நிறுத்திவிட்டு வேலை நிறுத்தம் செய்ய முடியும் என்ற அவல நிலை சென்னைத் துறைமுகத்தில் உள்ளது. தற்போதைய போராட்டத்திற்கு சுணக்கமான பணிகள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை அளித்த அலட்சியமான பதிலை வேலை நிறுத்தத்திற்கு காரணம் ஆகும் டிரைவர்கள் கூறினர்.
முனையங்களின் அலட்சியமே காரணம்: சுங்கத்துறை அதிகாரிகள்
 இப்போராட்டம் குறித்து சுங்கத் துறை துணை ஆணையர் அறிவழகன் கூறியது,
தற்போதைய பிரச்னைக்கு சுங்கத் துறை மட்டமே காரணம் அல்ல.  சி.பி.ஐ. நடத்திய சோதனையில் சிக்கிய சுங்க அதிகாரிகளின் தனிப்பட்ட பிரச்னையாகும். அதற்காக சுணக்கமாக வேலை செய்வார்கள் என்பதை சுங்கத்துறை அனுமதிக்காது. அதே நேரம் இங்கு நிலவும் ஒட்டுமொத்த நெரிசல் பிரச்னைக்கு மூல காரணம் இங்குள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சரக்குப் பெட்டக முனையங்கள்தான். கடந்த 20 நாள்களாக மட்டும் இப்பிரச்னை இல்லை. மாறாக பல ஆண்டுகளாக இது நீடிப்பதற்கு முனையங்களின் செயல்பாடுகள்தான் காரணம். இந்த உண்மை டிரைவர்களுக்கும் தெரியும். குறைந்த அளவு வசதிகளை வைத்துக் கொண்டு முனையங்களை இயக்குகின்றனர். இது குறித்து சுங்கத்துறை சார்பில் முனையங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும். கப்பல்கள் தளங்களில் கட்டப்படும்போது கண்டெய்னர்களை லாரிகளில் ஏற்றி இறக்கும் பணிகளை முனையங்கள் மேற்கொள்ளாததே நெரிசலுக்கு முக்கிய காரணம் ஆகும்.  பல்வேறு தரப்பினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டங்களில் இது வெளிக்கொணரப்பட்டுள்ளது. எனவே சுங்கத்துறை மீது புகார் என்பதை ஏற்க முடியாது. இருப்பினும் எங்களது பணிகளை விரைவாக மேற்கொள்ளும் வகையில் கூடுதல் அதிகாரிகளை உடனே நியமிக்க உள்ளோம் என்றார் அவர்
கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்: துறைமுக துணைத் தலைவர்       
சென்னைத் துறைமுகத்தில் அடிக்கடி வேலை நிறுத்தம் நடைபெறுவது குறித்து சென்னைத் துறைமுகத் துணைத் தலைவர் ஐ.ஜெயக்குமார் கூறியது,
   துறைமுகத்தில் நீண்ட நாள்களாக இருந்து வரும் இருந்து வரும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதில் சென்னைத் துறைமுகம் முனைப்பாக ஈடுபட்டு வருகிறது. இப்பிரச்னை குறித்து முன்னர் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி எந்தவிதமாக குறைகளாக இருந்தாலும் துறைமுக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும்படிதான் கூறியதை அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் இது போன்று முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபடுவது துறைமுகத்திற்கு மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் இழப்புதான் ஏற்படும். மேலும் டிரைவர்களின் பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் முனையங்களின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். முனையங்களில் கிரேன் உள்ளிட்ட  கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும்படியும், லாரிகளில் கண்டெய்னர்களை கையாள்வது, கப்பல்களில் கண்டெய்னர்களைக் கையாள்வது உள்ளிட்டவைகளின் நேர மேலாண்மையைக் கடைப்பிடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 
    மேலும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை மட்டும் பிரத்யேகமாகக் கண்காணிக்கும் வகையில் துறைமுக போக்குவரத்து மேலாளர் தலைமையில் சுங்கத்துறை, சரக்குப் பெட்டக முனைய அதிகாரிகள், டிரைவர்கள், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை உள்ளடக்கிய சிறப்பு குழு உடனே அமைக்கப்படும். இக்குழு இப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க வேண்டிய பணிகளைச் செய்யும். எனவே எதிர்காலத்தில் அடிக்கடி வேலை நிறுத்தம் ஏற்படாது. தற்போதைய வேலை நிறுத்தம் வியாழக்கிழமை காலைக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றார் ஜெயக்குமார்.

காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் கடற்படையின் அதிநவீன கப்பல்கள்; தடயங்கள் கிடைக்காததால் மீட்பு குழுவினர் கவலை

திருவொற்றியூர், ஜூன் 10:காணாமல் போன கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல் படை விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் இரண்டு புதிய அதிநவீன கடற்படை கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடலோரக் காவல் படையின் சென்னை அலுவலகம் தெரிவித்துள்ளது. 
   கடலோரப் பகுதிகளில் கடத்தல், தீவிரவாதம் உள்ளிட்டவைகள் தடுக்கும் 
வகையில் தமிழக காவல்த் துறை, கடலோரக் காவல் படையினர் இணைந்து அவ்வப்போது பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம். இதற்கு 'ஆபரேசன் ஆம்லா'  என அழைக்கப்படும். இதேபோல் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தது. இதற்கான முன்னோட்ட நிகழ்ச்சியில் கடலோரக் காவல் படையின் டோர்னியர் ரோந்து விமானம் திங்கள்கிழமை  கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சென்னையிலிருந்து புறப்பட்ட விமானம் பாக் நீரிணைப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டது. பணி முடித்த பிறகு திங்கள்கிழமை இரவு சென்னைக்குத் திரும்ப வேண்டிய விமானம் குறித்த நேரத்தில் வந்து சேரவில்லை. இதனையடுத்து விமானம் காணாமல் போய்விட்டதாகவும், விமானத்தை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் செவ்வாய்க்கிழமை கடலோரக் காவல் படை அறிவித்தது. ஆனால் புதன்கிழமைவரை விமானம் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
கடற்படை நவீன கப்பல்கள் வருகை:    
    இந்நிலையில் காணாமல் போன விமானத்தை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மூலம் இப்பணி மேலும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 15 அதிநவீன ரோந்துப் படகுகள் மூலம் சுமார் 40 மணி நேரத்திற்கு மேல் தேடியும் எவ்வித விமானத்தின் சிதைந்த பாகங்களோ, விமானத்தில் பயணித்த அதிகாரிகள் குறித்தோ எவ்வித தடயங்களும் கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்திய கடற்படையின் இரண்டு அதி நவீன கப்பல்கள் புதன்கிழமை தேடும் பணியைத் தொடங்கியுள்ளன. இவற்றில் நீரில் மூழ்கிய கலன்களை ஒலி அலைகளைக் கொண்டு கண்டறியும் (SONAR-Sound Navigation and Ranging)வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கடலின் மேற்பரப்பில் நீண்ட தூரத்திற்கு தேடிக் கண்டு பிடிக்க முடியும்.
குடும்பத்தினருக்கு ஆறுதல்:
    இந்நிலையில்  இந்தியக் கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குனர் வைஸ் அட்மிரல் பிஸ்ட் புதன்கிழமை சென்னை வந்தார். மேலும் விமானம் காணாமல் போனது, தேடும் பணி உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த அதிகாரிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கண்டெய்னர்களை உடைத்து திருட்டு: லாரி டிரைவர்கள் 3 பேர் கைது

திருவொற்றியூர், ஜூன் 9:சென்னையில் கண்டெய்னர்களை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள் மூன்று பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 10 தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
   சென்னைத் துறைமுகத்தில் உள்ள சரக்குப் பெட்டக முனையத்தில் இறக்குமதியாகும் கண்டெய்னர்களில் அவ்வப்போது சீல் உடைக்கப்பட்டு பொருள்கள் காணாமல் போவதாக இதன் நிர்வாகம் சார்பில் துறைமுகம் காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு டிரைலர் லாரி நிறுவனத்தின் டிரைவர்கள் கூட்டாகச் செயல்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மணலியைச் சேர்ந்த ஏசுராஜா (39), ரவி (29), காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்த காமராஜர் (27) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 10 எல்.ஈ.டி. தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. 
லாரிகளில் கண்டெய்னர்களை ஏற்றுவதற்காக உள்ளே செல்லும் இவர்கள் மறைவான இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கண்டெய்னர்களின் சீலினை உடைத்து அதில் உள்ள பொருள்களைத் திருடி பர்மா பஜார் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்ததாக போலீஸாரிடம் தெரிவித்தனர்.
      கைது செய்யப்பட்ட மூவரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

சி.பி.ஐ. ரெய்டு எதிரொலி: சுணக்கம் காட்டும் சுங்க அதிகாரிகள்

30 கி.மீ. தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் காத்திருக்கும் அவலம் 

முதல்வர் தலையிடக் கோரிக்கை

திருவொற்றியூர், ஜூன் 8: சமீபத்தில் சென்னை சுங்கத்துறை அதிகாரிகளிடம் மத்திய புலனாய்வு பிரிவு சோதனை நடத்தியதையடுத்து ஏற்றுமதி இறக்குமதி பணியில் சுங்கத்துறை அதிகாரிகள் சுணக்கம் காட்டுவதாகவும், இதனால் துறைமுகத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் அவலம் உள்ளதாக லாரி டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.  மேலும் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக நீடித்து வரும் இப்பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. 
    சென்னைத் துறைமுகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் இரண்டு சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. இதற்கேற்ப 
சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து பல்வேறு நடவடிக்கைகள் கப்பல்த் துறை அமைச்சகம் மேற்கொண்டு வந்தது.  ரூ.270 கோடி செலவில் அமைக்கப்பட்ட துறைமுக இணைப்புச் சாலைத் திட்டப்பணிகள் பெருமளவு முடிவுற்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.   ஆனால் இங்கு ஏற்படும் ஏதாவது ஒரு பிரச்னை மூலம் பல ஆண்டுகளாக நிலவி வரும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒராண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வேலை நிறுத்தங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த இருபது நாள்களுக்கும் மேலாக சரக்குப் பெட்டக முனையங்களில் பணியில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகள் ஆவணப் பரிசோதனையில் தேவையற்ற சுணக்கம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. 
சி.பி.ஐ. ரெய்டு எதிரொலி: சுங்க அதிகாரிகள் அதிர்ச்சி
இது குறி்த்து கண்டெய்னர் லாரி டிரைவர்கள் நல சங்க நிர்வாகி முருகன் கூறியது, 
      சென்னைத் துறைமுகத்தில் கடந்த மே 14-ம் தேதி சி.பி.ஐ. திடீர் ரெய்டு நடத்தியது. இதில் முனையங்களில் பணியில் இருந்தபோது முறைகேடுகளில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் பிடிபட்டனர்.  இவர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு சி.பி.ஐ. பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சுங்கத் துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஏற்றுமதிக்கான ஆவணங்களை தீர ஆய்வு செய்த பிறகுதான் கண்டெய்னர்களை உள்ளே அனுப்ப முடியும் என சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதே நிலைதான் இறக்குமதியாகும் கண்டெய்னர்களிலும் கடைப்பிடிக்கின்றனர். 
      இதனால் லாரிகளை விடுவிக்க சுமார் 10 நிமிடங்கள் முதல் சில நேரம் 30 நிமிடங்கள்வரை நேரம் எடுத்துக் கொள்கின்றனர். இதனையடுத்து நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. துறைமுக இணைப்புச் சாலைகளில் சுமார் 30 கி.மீ. தூரத்திற்கு லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் நாள் கணக்கில் உணவு, உடையின்றி அவலத்திற்கு உள்ளாகி வருகிறோம். கடந்த மூன்று வாரங்களில் மூன்று முறை வேலை நிறுத்தம் செய்துவிட்டோம். அவ்வப்போது உயர் அதிகாரிகள் தலையிட்டு சமாதானம் செய்கின்றனர்.  ஆனால் நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றார் முருகன்.
அடிக்கடி வேலை நிறுத்தத்தால் பல கோடி ரூபாய் இழப்பு:
சுங்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை குறித்து வெங்காயம் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்த பெரியநாயகம் பேசியது, 
       சென்னைத் துறைமுகத்தில் ஏற்றுமதி செய்வது என்பது குதிரைக் கொம்பாகி வருகிறது.  எந்தப் பிரச்னை என்றாலும் வேலை நிறுத்தம்தான் மேற்கொள்ளப்படுகிறது. காரணம் எந்தப் பிரச்னை ஏற்பட்டாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. மேலும் துறைமுகம்-சுங்கத் துறை அதிகாரிகள் இடையே ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லை. சுங்க அதிகாரிகளின் போக்கு குறித்து துறைமுக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை. அதேபோல் சுங்க அதிகாரிகளும் தங்களின் பணி அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்ற மனநிலையில்தான் உள்ளனர். 
       அதிகாரிகள் இடையே ஒற்றுமை வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு பணிக்கு வரும் எந்த அதிகாரியும் இதே போல் சுணக்கமாகவே வேலை செய்கின்றனர்.  மணிக்கு இவ்வளவு கண்டெய்னர்கள் உள்ளே சென்றாக வேண்டும் என்ற நிலையில் அதற்கேற்ற வகையில் ஆவணங்களைச் சோதனையிட நேர வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். சந்தேகம் ஏற்படும் கண்டெய்னர்கள் தனியாக நிறுத்திவிட்டு வழக்கமான பணிகளை விரைவாக மேற்கொள்ளலாம். 
     அனைத்து கண்டெய்னர்களையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க முடியும் என்றால் ஏற்றுமதியே செய்ய முடியாது. மேலும் தற்போது இப்பிரச்னையால் எந்த நேரமும் திடீர் வேலை நிறுத்தம் ஏற்படும் அபாயம் உள்ளதால் ஏற்றுமதியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற வேலை நிறுத்தத்தால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெங்காயம், பழங்கள், கடலுணவு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் அழுகி நாசமாயின. எனவே சென்னைத் துறைமுகத்தில் சுமூகமாகப் பணிகள் நடைபெற வேண்டும் எனில் அதிகாரம் மிக்க ஒருங்கிணைப்புக் குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்றார் பெரிய நாயகம்.
முதல்வர் தலையிடக் கோரிக்கை:
       தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களான வேலூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் பெரும்பாலானவை ஏதாவது ஒருவிதத்தில் சென்னைத் துறைமுகத்தை சார்ந்தே உள்ளன.  எனவே சென்னைத் துறைமுகத்தில் நிலவும் பிரச்னைகள் நிச்சயமாக தமிழக தொழில் துறையை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. 
     இப்பிரச்னை குறித்து சுங்க அதிகாரிகளிடம் கேட்டால், தங்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது. மேலும் அதிகாரிகள் பற்றாக்குறையும் இருக்கிறது. சுணக்கத்திற்கு வேறு உள்நோக்கம் ஏதும் இல்லை என சுங்க அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில்  பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற நிலையே தொடர்கிறது.  எனவே சுங்க அதிகாரிகளாக இருந்தாலும்,  துறைமுக நிர்வாகம் என்றாலும், போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள், லாரி டிரைவர்கள் உள்ளிட்ட யார் மீது தவறு இருந்தாலும் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் சர்வேதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ள நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிட்டால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதே இத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தக அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.

காட்டுப்பள்ளி எல் அன் டி துறைமுகத்தில் வாகனங்கள் ஏற்றுமதி தொடக்கம்

திருவொற்றியூர், ஜூன் 8:சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள தனியார் துறைமுகமான எல் அன் டி துறைமுகத்தில் வாகனங்களை நேரடியாக கப்பலில் ஏற்றுமதி செய்யும் முறை (Roll on Roll off-RORO) திங்கள்கிழமை தொடங்கியது.
    எல் அன் டி துறைமுகத்தில் சரக்குப் பெட்டகங்கள் மட்டும் கையாளப்பட்டு வந்த நிலையில் கார் மற்றும் வாகனங்களை நேரடியாகக் கப்பலில் ஏற்றும் தளம் அமைக்கப்பட்டது. இதனையடுத்து முதல்முறையாக வாகனங்களை கப்பலில்  ஏற்றுமதி செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது.  நிகழ்ச்சியில் தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் கலந்து கொண்டு முதல் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
அப்போது வாகன ஏற்றுமதி குறித்து துறைமுகத்தின் செயல் அதிகாரி கேப்டன் என்.விஸ்வநாதன் கூறியது,
      தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் அனுமதியுடன் அமைக்கப்பட்டுள்ள இத்துறைமுகத்தை கடந்த ஜன.30, 2013 தமிழக முதல்வர் ஜெயலலிதாதிறக்கப்பட்டது. துறைமுகத்தில் சரக்குப் பெட்டகங்களை மட்டும் பிரத்யேகமாகக் கையாளும் வகையில் சிறப்பு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 60 ஆயிரம் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டுள்ளோம். தற்போது மார்ஸ்க், என்.ஒய்.கே ஆகிய இரண்டு கப்பல் நிறுவனத்தின் கப்பல்கள் தொடர்ந்து வந்து செல்கின்றன.
   சரக்குப்பெட்டகங்கள் அல்லாத சரக்குகளை கையாள முடிவு செய்யப்பட்டு இதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இரும்புக் கம்பிகளை எஸ்.ஆர் மற்றும் டாடா நிறுவனங்கள் இத்துறைமுகம் மூலம் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகின்றனர். 
   தற்போது 3,500 கார்களை நிறுத்தி வைக்கும் அளவுக்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களை நேரடியாகக் கப்பலில் ஏற்றுவதற்கான கட்டமைப்பு வசதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை நடைபெற்ற நிகழச்சியில் டைம்லர் நிறுவனத்தின் வாகனங்கள் எம்.வி.கார்டெனியா என்ற கப்பலில் 
ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு கார் நிறுவனங்களின் வாகனங்களை இத்துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் கிராணைட் கற்களை ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. படிப்படியாக அனைத்து வகை சரக்குகளையும் கையாளும் வகையில் துறைமுகம் திறனுடையதாக மாற்றப்படும். 
  துறைமுகத்திலிருந்து கொல்கத்தா நெடுஞ்சாலையுடன் இணைக்கும் 400 அடி வடக்கு இணைப்பு சாலைத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தவுடன் இணைப்புச் சாலை பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். தொழி்ல் துறையும் இத்துறைமுகத்தின் பங்குதாரராக உள்ளதால் மாநில அரசும் மிகுந்த ஒத்துழைப்பை துறைமுக நிர்வாகத்திற்கு அளித்து வருகிறது என்றார் விஸ்வநாதன்.
    நிகழ்ச்சியில் தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் நிரஞ்சன் மார்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், எல் அன் டி நிறுவன அதிகாரிகள் காந்திராஜன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.