Monday, 15 December 2014

வடசென்னையில் மார்கழி தெய்வத் தமிழிசை விழா

திருவொற்றியூர், டிச.14: வடசென்னையில் 27-ம் ஆண்டு மார்கழி தெய்வத் தமிழிசை விழா டிச.16 தொடங்கி ஒரு மாதம் வரை பல்வேறு இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. 
 இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மா.கி.இரமணன், டாக்டர் மகாலிங்கம் கூறியது,
 மார்கழி மாதத்தில் இசை விழாக்கள் என்றாலே தென்சென்னையில் மட்டுமே பெருவாரியாக நடத்தப்படுகின்றன.  வடசென்னையிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற என்ற ஆர்வம் காரணமாக இசை அன்பர்கள் இணைந்து இவ்விழாவினை கடந்த 27 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.  மார்கழி மாதம் தொடங்கும் டிச.16 செவ்வாய்க்கிழமை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்டராமர் ஆலயத்தில் நடைபெற உள்ள முதல் இசைவிழாவை பத்மபூஷன்  டி.எச்.வினாயகராம் தொடங்கி வைக்கிறாம். தினமும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் டெல்லி மகாலட்சுமி, சுவாமிநாதன், சீர்காழி சிவசிதம்பரம், டி.கே.எஸ்.கலைவாணன், பேராசிரியர் ஆனந்தராமன் உள்ளிட்ட முன்னணி கலைஞர் கலந்து கொள்ள உள்ளனர்.  தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ள இத்தொடர் நிகழ்ச்சிகளில் பக்தர்களும், இசை ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் என்றனர். 
திருவொற்றியூரில் ஊழியரின் சடலத்துடன் போராட்டம்: ரூ.20 லட்சம் இழப்பீடு

திருவொற்றியூர், டிச.14:திருவொற்றியூரில் உள்ள தனியார் டயர் ஆலை ஊழியர் தனஞ்செழியன் (34) வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கி இறந்து போனார். இவருக்கு ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்கக் கோரி ஊழியரின் சடலத்துடன் தொழிலாளர்கள் சனிக்கிழமை நள்ளிரவுவரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இறந்து போனவரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. 
     திருவொற்றியூரில் தனியார் டயர் தொழிற்சாலை உள்ளது. மீஞ்சூர் அருகே உள்ள திருவெள்ளவாயல் கிராமத்தைச் சேர்ந்த தனஞ்செழியன் இத்தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் தனஞ்செழியன் வெள்ளிக்கிழமை வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஊருக்கு அருகாமையில் எதிரில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தனஞ்செழியன் திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர ஏற்கனவே இறந்து போய்விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
   இதனையடுத பணிமுடித்து வீடு திரும்போதுதான் விபத்து ஏற்பட்டுள்ளதால் ஆலை நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்நிலையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தனஞ்செழியனின் சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் ஆலை வளாகத்திற்கு கொண்டுவந்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 
தொழிலாளர்கள் தரப்பில் ஒரு நாள் சம்பளப் பணம் சுமார் ரூ.10 லட்சமும்,  இதற்கு இணையாக ரூ. 10 லட்சம் ஆலை நிர்வாகம் சார்பிலும் இழப்பீடாக அளிக்க இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டதையடுத்து தனஞ்செழியனின் சடலமும் அவரது சொந்த ஊரான திருத்தணிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 
     இறந்து போன தொழிலாளரின் சடலத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Wednesday, 10 December 2014


இலங்கையில் சீனாவின் முதலீடுகள் குறித்து கூர்ந்து கவனிக்கப்படும் 
 செய்தி மட்டும்.....
இந்திய கடற்படை அதிகாரி அமர் கே.மகாதேவன் 

திருவொற்றியூர், டிச.2:  இலங்கையில் சீனா செய்து வரும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே சீனா குறித்து பீதியடையத் தேவையில்லை என கடற்படை அதிகாரி (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) அமர் கே.மகாதேவன் திங்கள்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
    டிச.4 அன்று கொண்டாடப்பட உள்ள கடற்படை தினம் குறித்து திங்கள்கிழம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமர் கே.மகாதேவன் கூறியது,
    1971-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் கராச்சி துறைமுகத்தை டிச.4 அன்று இந்திய கடற்படை கைப்பற்றியது. இந்நாளை கடற்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி சென்னை போர் நினைவுச் சின்னத்தில் டிச.4 வியாழக்கிழமை போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் முப்படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். 
     இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பு, கண்காணிப்பை பலப்படுத்தும் பணியில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும் 
15 சதவீத நிதியிலிருந்துதான் கடற்படை செயல்பட்டு வருகிறது.  தற்போது 20 முதல் 30 சதவீதம்வரை ஆள் பற்றாக்குறை உள்ளது. 
500 கடல் மைல் தூரம் பாதுகாப்பு:
   2008-ஆண்டிலிருந்துதான்  சோமாலியா கடற்கொள்ளையர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனையடுத்து வணிக கப்பல்களுக்கு சர்வதேச அளவில் கூட்டுப் பாதுகாப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஏடன் வளைகுடாவிலிருந்து சுமார் 500 கடல் மைல் தூரத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு இந்திய கடற்படைக்கு அளிக்கப்பட்டது. இவ்வழியே செல்லும் சுமார் 3 ஆயிரம் கப்பல்களுக்கு ஆயுதப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் கடல் சிப்பந்திகளில் சுமார் 7 சதவீதம் இந்தியர்கள் உள்ளனர். எனவே ஏதேனும் ஒரு கப்பல்  கொள்ளையர்களால் கடத்தப்படும்போது அதில் இந்தியர்களும் சிக்கிக் கொள்கின்றனர். 
இலங்கையில் சீனாவின் முதலீடுகள்:
    சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்காற்றி வருகிறது. இதன் அடிப்படையில் இலங்கையிலும் சீனா தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பன்னாட்டு வணிகத்திற்கு உதவும் வகையில் பெரிய துறைமுகங்களை 
இலங்கையில் சீனா அமைத்து வருகிறது. இந்த வசதிகளை எதிர்காலத்தில் ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நிலை வரலாம். எனவே இத்திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து இந்திய கூர்ந்து கவனித்து வருகிறோம். எவ்வித அச்சுறுத்தலையும் 
எதிர்கொள்ளும் ஆற்றல் இந்திய ராணுவத்திற்கு உண்டு. எனவே சீனாவின் முதலீடுகள் குறித்து பயப்படத் தேவையில்லை. 
தூத்துக்குடியில் கடற்படை துறைமுகம்:
   எதிர்காலத்தில் தெற்கு பகுதியை பலப்படுத்தும் வகையில் அதி நவீன கடற்படை தளம் ஒன்றை தூத்துக்குடியில் அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு வசதியாக தற்போதைய தூத்துக்குடி துறைமுகம் விரிவுபடுத்தப்படும்.  இதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு இப்பணிகள் முழுமையடையும்.
மீனவர்கள் பிரச்னை:
   தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. சர்வதேச ஒப்பந்த விதிகளின்படி ஒரு நாட்டின் கடல் எல்லையில் மற்றொரு நாடு உள்ளே செல்ல முடியாது. எனவே இந்திய கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் யாரும் தாக்கப்படுவதில்லை. இலங்கை கடல்பகுதியில் இந்திய மீனவர்களை நாங்கள் பாதுகாக்க முடியாது என்றார் அமர்.கே. மகாதேவன்.
   பேட்டியின்போது கடற்படை அதிகாரி கே.வி.மகாதேவன், பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி ஆண்டவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
திருவொற்றியூரில் ரயில் மோதி வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் சாவு 

திருவொற்றியூர், டிச.9:திருவொற்றியூரில் ரயில்பாதையைக் கடக்க முயன்றவர்கள் மீது செவ்வாய்க்கிழமை ரயில் மோதியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த கபில்தேவ் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் உள்ளிட்ட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


    திருவொற்றியூர் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிக்கும், மேற்கு பகுதிக்கும் இடையே சென்னை சென்ட்ரல்-கல்கத்தா ரயில்பாதை அமைந்துள்ளது. இங்கு ரயில்வே சுரங்கப் பாதை இருந்தாலும் நடந்து செல்லும் சிலர் ரயில்பாதை வழியேதான் கடந்து செல்கின்றனர். செவ்வாய்க்கிழமை பிற்பகல் இவ்வாறு சிலர் ரயில்பாதையைக் கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து கும்மிடிபூண்டி நோக்கிச் சென்ற மின்சார தொடர் வண்டி அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். மேலும் இறந்து போனவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் குறித்த விபரங்கள் ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையை அடுத்து இறந்து போனவர்களில் ஒருவர் பெயர் 
                                                                                     
கபில்தேவ் என்பதும், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் விம்கோநகர் அருகே தங்கி கூலி வேலை செய்து வருவதாகவும் தெரியவந்தது. இன்னொருவர் குறித்த விபரங்கள் இரவுவரை தெரியவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இதே ரயில்பாதையில் ரயில் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
     இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து இறந்து போனவர்களின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடையாளம் தெரியாத இன்னொருவர் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tuesday, 9 December 2014

கண்டெய்னர் லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் அவலம்

                     
கண்டெய்னர் லாரிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் அவலம் 

கேள்விக் குறியாகும் சென்னைத் துறைமுக எதிர்காலம் 

திருவொற்றியூர், டிச.09::சென்னைத் துறைமுகத்தில் தொடர்ந்து இருந்து வரும் நெரிசல் பிரச்னையால் கண்டெய்னர் லாரிகள் வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் அவல நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 
    சென்னைத் துறைமுகத்தில் இரண்டு சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. இவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகின்றன. 
ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. இதுதவிர கண்டெய்னரில் செல்லாத ஏராளமான சரக்குகள் கையாளப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் துறைமுகத்திற்குள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இதற்கேற்ப உள்ளேயும், வெளியேயும் போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் முழுமையாக நிறைவடையவில்லை. மேலும் மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டம் உள்ளிட்ட திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் பல பிரச்னைகள் துறைமுகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி உள்ளன. 
சுங்கத்துறை அதிகாரிகள் ஒத்துழையாமை:
    வெளிநாட்டு வர்த்தகம் என்பதால் துறைமுகத்தின் செயல்பாடுகளில் 
சுங்கத்துறையின் பங்கு முக்கியமானதாகும். இத்துறையில் சுமார் 40 சதவீத அதிகாரிகள் பற்றாக்குறை கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறைவாக உள்ள அதிகாரிகளை வைத்துக் கொண்டு நிறைவாகப் பணியாற்ற முடியவில்லை. 
இதனால் நான்கு அதிகாரிகள் பணி செய்ய வேண்டிய இடத்தில் இரண்டு பேர்தான் பணியாற்றுகின்றனர். பணியில் உள்ள அதிகாரிகளும் விரைவாக பணியாற்றுவதில்லை. இது குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால் சோதனையில் ஏதேனும் பிரச்னை என்றால் யார் பொருப்பு என அதிகாரிகள் பதில் அளிக்கின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ. நடத்திய அதிரடி நடவடிக்கையை அடுத்து சுங்கத் துறை கைது செய்யப்பட்டனர். இதனை எதிர்ப்பு தெரிவித்த சுங்கத்துறை அதிகாரிகள் சுணக்கமான வேலைகள் மூலம் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதனால் துறைமுக நுழைவு வாயில்களில் கண்டெய்னர்கள் செல்வதில் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. இதுவே லாரிகள் பல கி.மீ. தூரத்திற்கு வரிசைகட்டி நிற்பதற்கு 
முக்கிய காரணமாக உள்ளது. 
சரக்குப் பெட்டக முனையங்கள்:
   துறைமுகத்தில் உள்ள இரண்டு முனையங்களுக்கும் கப்பல்கள் வந்து செல்கின்றன. கப்பல் கட்டப்படும் கால அளவிற்கு ஏற்ப துறைமுகத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதனால் எந்த முனையத்தில் முனையத்தில் விரைவாக கப்பல்கள் வந்து திருப்பி அனுப்பப்படுகிறதோ அந்த முனையத்திற்கு கப்பல்களை அனுப்ப பன்னாட்டு கப்பல் நிறுவனங்கள் விரும்புகின்றன. இதில் இரண்டு முனையங்களுக்கிடையே போட்டி நிலவுகிறது. இதனால் லாரிகளில் பெட்டகங்களை இறக்கும்பணியை  நிறுத்திவிட்டு கப்பல்களில் பெட்டகங்களை ஏற்றி இறக்குவதில் முனையங்கள் சுறுசுறுப்பு காட்டுகின்றன. கப்பல்கள் கட்டப்படும் நாள்களிலெல்லாம் இவ்வாறு பல மணி நேரங்களுக்கு லாரிகளை முனையத்தின் உள்ளே அனுமதிப்பது கீடையாது. இது குறித்து கண்காணிக்க வேண்டிய துறைமுக நிர்வாகம் முனையங்களின் அடாவடிகளைக் கண்டு கொள்வதில்லை என்கிறார் கண்டெய்னர் லாரி உரிமையாளர் பிரபாகரன். 
 முன்பு சாலைகள் குறுகலாக இருந்தபோது பொதுப் போக்குவரத்து ஸ்தம்பிக்காமல் இருக்க சில இடங்களில் போலீஸ் பூத்துகள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போது சாலைகள் அனைத்தும் ஆறு வழி அளவிற்கு அகலப்படுத்தப்பட்டுவிட்டன. எனவே ஒரு வழியில் லாரிகள் வரிசை கட்டி நின்றால் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. போக்குவரத்தும் ஸ்தம்பிக்காது. 
    எனவே எண்ணிக்கையில் போலீஸ் பூத்துகளை குறைப்பதை விடுத்து பூத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.  லாரிகள் அவசரமாக முந்திச் செல்ல வேண்டும் எனில் பூத்தில் உள்ள போலீஸாரைக் கவனித்தால் போதுமானது. இதன் மூலம் நாள் கணக்கில் வரிசையில் காத்திருக்கும் லாரிகள் சில மணி நேரங்களில் துறைமுகத்தைச் சென்றடைய முடியும். இது குறித்த சமீபத்தில் பத்திரிகை செய்திகள் வெளியானதையடுத்து இதில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
அவசர நடவடிக்கை தேவை:
   ஆண்டுக் கணக்கில் தொடரும் இப்பிரச்னையால் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. சென்னைக்கு அருகாமையில் அதிநவீன தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பிரச்னையால் ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் வேறு துறைமுகங்களை நாடத் தொடங்கிவிட்டனர். தென்னிந்தியாவின் தொழில் வளர்ச்சியில் சென்னைத் துறைமுகத்தின் பங்கு வரலாற்றுச் சிறப்பு உடையது. இந்த சிறப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் எனில் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் பிரச்னை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்பது உண்மை.

       இது மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்பதே துறைமுக உபயோகிப்பாளர்களின் வேண்டுகோளாக உள்ளது

Wednesday, 28 May 2014




அனுபவங்கள் முக்கியமல்ல...

முகவை.க.சிவகுமார்


          மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் பெருமையை உலக நாடுகளுக்கு மீ்ண்டும் ஒரு முறை எடுத்துரைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.  இத்தகைய பெருமையில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமல்ல தோல்வியடைந்தோர், வாக்களித்தோர், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்குமே பங்கு உண்டு. காரணம் தேர்தலில் பங்கேற்பு என்பதே பெருமைதானே. எதிர்ப்போர் இல்லாமல் தேர்தல் களங்கள் சிறப்பிடம் பெற்றுவிடாது.
     60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல் முடிவுகள் மூலம் பல்வேறு பாடங்களை மக்கள் புகட்டியுள்ளனர். வெற்றியின் உச்சத்தில் இருந்தவர்கள் எல்லாம் படுதோல்வி மூலம் பாதாளத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளனர்.  அதேவேளை அடுத்த தேர்தலில் அவர்கள் மீண்டும் அரியணையில் ஏற்றப்பட்டுள்ளனர்.  இதில் இதுவரை எந்தக் கட்சியும் தப்பவில்லை.  சமீபகாலமாக யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய காரணியாக விளங்குகிறது. 16-வது மக்களவை தேர்தல் முடிவுகளும் இதே நோக்கில்தான் உள்ளன.  அப்படியென்ன தோற்றவர்கள் தவறுகளைச் செய்தார்கள்?
    தேசிய அளவில் காங்கிரஸ் தோற்றதிற்கு முக்கிய காரணம் கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் எண்ண ஓட்டத்திற்கு மாறாக ஆட்சி நடத்தியதுதான். தேசிய அளவில் பார்த்தால் கடும் பொருளாதார சீரழிவு இந்த காலகட்டத்தில்தான் நடைபெற்றது. இறக்குமதி அதிகரித்து நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் தாராள இறக்குமதியால் உள்நாட்டில் உற்பத்தியான பொருள்கள் மதிப்பிழந்தன.  குறிப்பாக சீனப் பொருட்கள் நாடு முழுவதும் பரவின.  இதனால் உற்பத்தி குறைந்து பணவீக்கம் அதிகரித்தது. விளை பொருள் உற்பத்தியும் குறைந்தது.
        கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நிரம்பிய நாடு இந்தியா. ஆனால் விவசாயம், தொழிற்சாலை உள்ளிட்டவைகளுக்கு உடலுழைப்பு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜவகர் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்.   நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இத்திட்டம் தவறான திசையில் செல்கிறது என ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியும் முந்தைய அரசு மாற்றிக் கொள்வதாகவே இல்லை. 
    சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு வந்தால் இந்தியாவின் அடித்தளமே அசைக்கப்படும் அபாயம் உள்ளதாக நாடு முழுவதும் வணிகர்கள் போராடினார்கள். பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்குகளைத் தொடுத்தார்கள். பெரும்பான்மை கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய முந்தைய அரசு இதில் ஏதேச்காரத்துடன் நடந்து கொண்டது.  
      இலங்கை பிரச்னையில் தமிழர்கள் பாதுகாக்கப்படவேண்டும். இனப் படுகொலையை இந்தியா தடுக்க வேண்டும். இலங்கத் தமிழர்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணம்.  ஆனால் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக  இலங்கைக்கு ஆயுத உதவிவரை முந்தைய அரசு செய்தது. நாம் வழங்காவிட்டால் சீனா ஆயுத உதவியை அளித்துவிடும் என்ற வியாக்கானம் வேறு. 
     மேலும் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  ஆயிரக்கணக்கான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.  தமிழக காங்கிரஸில் கூட ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர்  கொடுத்தனர். உலக வல்லரசு நாடாகக் கூடிய தகுதி படைத்த இந்தியா அரசு என்ன செய்தது? இதில் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஜால்ரா அடித்த பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் இத்தேர்தலில் வாங்கிய வாக்குகளைப் பார்த்தாலே மக்கள் எவ்வளவு கோபமாக உள்ளனர் என்பது புரியும்.
    ஆந்திராவை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது. ஆனால் இப்பிரச்னையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்க்க வேண்டும். ராஜசேகர ரெட்டியின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு பெருகியது. தனிக்கட்சி தொடங்கினார். தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை...எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்ற கணக்கில் முந்தைய அரசு செயல்பட்டது. இரு தரப்பினரின் முழு ஒப்புதலைப் பெற மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?.  ஆந்திராவைப் பிரிப்பதில் அந்தோனிக்கும், ப.சிதம்பரத்திற்கும் அப்படி என்ன உரிமை?. நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடி தூவும் அளவுக்கு ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்களே கொதித்தெழுந்தனர். விளைவு சீமாந்திரத்தில் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ.வைக் கூட காங்கிரஸ் பெற முடியவில்லை. 
       சீதாராம் கேசரியின் தலைமையில் சீரழிந்து போன நிலையில் கட்சியின் தலைமை பதவியை சோனியா காந்தி ஏற்றார். பின்னர் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்படவிருந்த நிலையில் அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் தெரிவித்த எதிர்ப்பால் மன்மோகன் சிங்கிற்கு வழிவிட்டார் சோனியா.  காந்தி, நேருவிற்குப் பிறகு நாட்டு மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரான அப்துல்கலாம் இரண்டாவது முறையைக மீண்டும் குடியரசு தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என நாடே எதிர்பார்த்தது. ஆனால் முன்பகை காரணமாக சோனியாவும், கருணாநிதியும் ஒரு சேர கலாமை புறக்கணித்தனர். இதன் விளைவுகளைத்தான் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர்.  
     சோனியாதான் இப்படியெனில் ராகுல்காந்தியின் செயல்பாடுகளே தற்போதைய நிலைக்கு முக்கிய காரணமாகிவிட்டது.  காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக அவர் பொறுப்பேற்றவுடன் இளைஞர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகக் கூறினார். அவர் வழி ஏற்படுத்திக் கொடுத்ததெல்லாம் அவருக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கும்,  காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகளுக்கும்தான். இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்வில் ஜனநாயகத்தை புகுத்தினார். ஆனால் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களை சர்வாதிகாரத்துடன் நீக்கினார். டெல்லியில் முறைவாசல் செய்பவர்களுக்கு மட்டுமே இங்கு மரியாதை கிடைக்கும் என்ற தோற்றத்தை கட்சியினரிடம் வளர்த்தார். இதனால் மக்கள் செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுலை எதிர்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கினர். மக்கள் செல்வாக்கினை இழந்துபோன தலைவர்களின் ஆலோசனைகளை மட்டுமே ராகுல் கேட்டு செயல்பட்டார். இதர கட்சிகளெல்லாம் தேர்தல் பணியைத் தொடங்கி பாதி தூரம் சென்ற நிலையில்தான் காங்கிரஸ் வேட்பாளர்களையே அறிவித்தது. 
       பாஜக கூட்டணியின் வெற்றிக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான வெறுப்புதான் காரணங்களாக அமைந்தன என்பது நிதர்சன உண்மை.  அனுபவங்கள் முக்கியமல்ல... அவற்றின் மூலம் பெற வேண்டிய பாடங்களே முக்கியம். தோல்வியை சந்தித்தவர்கள் மட்டுமல்ல வெற்றி பெற்றவர்களும் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்தானே?                                                              

Tuesday, 6 May 2014


இருட்டில் மாநகர உள்வட்டச் சாலைகள்: திகிலில் வாகன ஓட்டிகள்

திருட்டு, பாலியல் தொழில் தொடரும் அவலம் 

திருவொற்றியூர், மே.3:சென்னை மாநகரை ஒட்டி அமைந்துள்ள உள்வட்டச் சாலைகளில் இருட்டில் உள்ளதால் சிறு கடைகளை அமைத்து டீசல் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
    மேலும் திருட்டு, வழிப்பறி பயமும் அதிகரித்துள்ளதால் இச்சாலையை பயன்படுத்தவே பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸார் 'மாமூலாக' வே செயல்படுவதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
    பெருங்களத்தூரிலிருந்து மதுரவாயல், அம்பத்தூர் வழியாக புழல்வரை சுமார் 32 கி.மீ. தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.   இதில் பெருங்களத்தூரிலிருந்து மதுரவாயல்வரையிலும், மதுரவாயல் முதல் புழல்வரை இரண்டு கட்டங்களாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் இணைப்புச் சாலையாக  துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டத்தின்கீழ் மாதவரத்திலிருந்து மணலி, திருவொற்றியூர்வரை நான்கு வழிச்சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளன.
இச்சாலைகள்  திட்டமிடப்படப்பட்டபோது இச்சாலை செல்லும் வழி அனைத்தும் புறநகர் பகுதிகளாகவே இருந்தன. ஆனால் தற்போது இதன் பெரும்பாலான பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விட்டன.  ஆனால் மாநகராட்சியின் தரத்திற்கேற்ப எவ்வித பராமரிப்பும், வசதிகளும் இச்சாலைகளில் மேம்படுத்தப்படவில்லை. மேலும் காவல்த் துறையின் முழுமையான கண்காணிப்பிலும் இச்சாலை தொடர்ச்சியாக இல்லை.
திகிலில் இரு சக்கர வாகன ஓட்டிகள்:
          அண்ணா நகர் பகுதியிலிருந்து திருவொற்றியூர், மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாகவும், விரைவாகவும் செல்ல இச்சாலைகள் மிகுந்த பயனுள்ளவையாக  உள்ளன.  ஆனால் இச்சாலைகளில் ஒளி விளக்குகள் அமைக்கப்படாததால் வழியெங்கும் கும்மிருட்டாகவே உள்ளன.  முதலில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்பாட்டில் மட்டுமே இருந்த சாலையில் தற்போது கார்கள், மோட்டார் சைக்கிள்களில் அதிகம் பேர் பயணிக்கின்றனர்.
ஆனால் இதற்கேற்ப எவ்வித வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை.   கனரக வாகனங்களின் முகப்பு ஒளி வீச்சு மோட்டார் சைக்கிள், சிறிய கார்களில் செல்வோரை அச்சத்திற்கு உள்ளாக்கி திகிலூட்டுகிறது.  மேலும் சாலையின் நடுவே தடுப்புச் சுவர்களில் போதுமான அளவிற்கு இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகளும் சரிவர அமைக்கப்படவில்லை.  இரு சக்கர வாகன ஓட்டிகளால் சாலை அமைத்துள்ள தனியார் நிறுவனத்திற்கு வருவாய் பயன் ஏதும் இல்லை என்பதாலோ என்னவோ பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை.
ஓட்டுனர்களின் துணையுடன் டீசல் திருட்டு:
        இந்த இரண்டு சாலைகளிலும் இரவு நேரத்தில் பயணித்தால் ஆங்காங்கு சிறிய பெட்டி கடைகளும், அதற்கு அடையாளமாக மண்ணெண்ணெய் விளக்குகளை எரிய வைத்திருப்பார்கள். இரவு முழுவதும் இக்கடைகள் திறந்திருக்கும்.  சரக்கு வாகனங்களில் டீசல் திருடுவது என்பது ஒருவகையான ஓட்டுனர்களுக்கு தவிர்க்கமுடியாத பழக்கமாகவே கொண்டுள்ளனர்.  இவ்வகையான டிரைவர்களுக்கு விளக்குடன் கூடிய பெட்டிக்கடைகளைக் கண்டவுடன் லாரியை ஓரம் கட்டிவிடுவார்கள். இதனைப் புரிந்து கொள்ளும் பெட்டிக் கடைக்காரர் லாரி அருகே வருவார்.  டீசலின் அளவும், விலையும் பேசிய பிறகு சில நிமிடங்களில் டீசல் திருடப்படுகிறது.  மேலும் இரும்பு பொருள்களையும் இங்கு வாங்குகின்றனர். இதனால் லாரி உரிமையாளர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும்   ஒரு மாநகராட்சி எல்லைக்குள் பட்டவர்த்தமாக திருட்டுவேலை, அதுவும் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இவ்வாறு நடைபெறுவது எப்படி? இதனால் விபத்துகளும் ஏற்படுகின்றன.
கொடிகட்டிப் பறக்கும் பாலியல் தொழில்:
        லாரி டிரைவர்கள் எங்கு அதிகம் உள்ளார்களோ அங்கெல்லாம் பாலியல் தொழிலும் தொற்றிக் கொள்வது வழக்கம். இச்சாலைகளில் பயணிக்கும்போது  சம்மந்தம் இல்லாத இடத்தில் ஓரமாக ஒரு லாரி நிற்கிறது எனில் சப்தமின்றி சட்டவிரோத காரியம் ஒன்று அங்கே நடைபெறுவதாக உறுதியாகக் கூற முடியும். இரவு முழுவதும் தொடரும் இந்த இரவு ராணிகளில் பெரும்பாலானவர்கள் திருநங்கைகள் என்பது உண்மை. வயிற்றுப் பிழைப்பிற்காக அவர்கள் இதனைச் செய்வதாகக் கூறுகின்றனர்.
          அவர்களுக்கு வயிற்றுப்பிரச்னை எனில் ஓட்டுனர்களின் குடும்பத்திற்கு வாழ்வாதாரம்,  தொற்று நோய் பிரச்னை ஆகும். பொதுமக்களுக்கு இது ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவே உள்ளது.  இச்சம்பவங்களும் எவ்வித ஒளிவு மறைவு இன்றி நடைபெறும் இச்சம்பவங்களை ஒரு முறை பார்க்கும் வாகன ஓட்டிகள் பலர் இரவு நேரத்தில் இச்சாலைகளில் பயணிப்பதைத் தவிர்க்கும் அவல நிலை உள்ளது.
போலீஸாரின் சிறப்பு பார்வை தேவை:
இப்பிரச்னை குறித்து திருவொற்றியூர் நுகர்வேர் பாதுகாப்பு மையத்தின் தலைவரும்,  சமூக ஆர்வலருமான என்.துரைராஜ்,
    வடசென்னஐ மக்களுக்கு முக்கியமான இச்சாலையைப் பராமரிப்பதில் போதிய கவனம் இல்லை. இதனால் இச்சாலையில் பயணிப்பது என்பதே பயமாக உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு இச்சாலையை தவிர்க்க வேண்டிய அவலநிலை நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட இச்சாலைகளில் உடனடியாக ஒளிவிளக்குகள் அமைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  முதல்கட்டமாக சாலையோரங்களில் உள்ள பெட்டிக்கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.  பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்களைப் பிடித்து அவர்களுக்கு வேறு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரவேண்டும். இரவு முழுவதும் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றார் துரைராஜ்.
    'பயணம் முடியும்.... பாதை தொடரும்' என்பார்கள்.  எனவே பயணங்களைத் தொடர சாலைகள் பாதுகாப்பானதாக பராரிக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் ஆவலாக உள்ளது. இத்தனைக்கும் இச்சாலைகள் சுங்கக் கட்டணச் சாலைகள்?