இலங்கையில் சீனாவின் முதலீடுகள் குறித்து கூர்ந்து கவனிக்கப்படும்
செய்தி மட்டும்.....
இந்திய கடற்படை அதிகாரி அமர் கே.மகாதேவன்
திருவொற்றியூர், டிச.2: இலங்கையில் சீனா செய்து வரும் முதலீட்டுத் திட்டங்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே சீனா குறித்து பீதியடையத் தேவையில்லை என கடற்படை அதிகாரி (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) அமர் கே.மகாதேவன் திங்கள்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
டிச.4 அன்று கொண்டாடப்பட உள்ள கடற்படை தினம் குறித்து திங்கள்கிழம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமர் கே.மகாதேவன் கூறியது,
1971-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் கராச்சி துறைமுகத்தை டிச.4 அன்று இந்திய கடற்படை கைப்பற்றியது. இந்நாளை கடற்படை தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி சென்னை போர் நினைவுச் சின்னத்தில் டிச.4 வியாழக்கிழமை போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் முப்படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்திய கடல் பகுதியில் பாதுகாப்பு, கண்காணிப்பை பலப்படுத்தும் பணியில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்படும்
15 சதவீத நிதியிலிருந்துதான் கடற்படை செயல்பட்டு வருகிறது. தற்போது 20 முதல் 30 சதவீதம்வரை ஆள் பற்றாக்குறை உள்ளது.
500 கடல் மைல் தூரம் பாதுகாப்பு:
2008-ஆண்டிலிருந்துதான் சோமாலியா கடற்கொள்ளையர்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனையடுத்து வணிக கப்பல்களுக்கு சர்வதேச அளவில் கூட்டுப் பாதுகாப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ஏடன் வளைகுடாவிலிருந்து சுமார் 500 கடல் மைல் தூரத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு இந்திய கடற்படைக்கு அளிக்கப்பட்டது. இவ்வழியே செல்லும் சுமார் 3 ஆயிரம் கப்பல்களுக்கு ஆயுதப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் கடல் சிப்பந்திகளில் சுமார் 7 சதவீதம் இந்தியர்கள் உள்ளனர். எனவே ஏதேனும் ஒரு கப்பல் கொள்ளையர்களால் கடத்தப்படும்போது அதில் இந்தியர்களும் சிக்கிக் கொள்கின்றனர்.
இலங்கையில் சீனாவின் முதலீடுகள்:
சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சியில் சீனா முக்கிய பங்காற்றி வருகிறது. இதன் அடிப்படையில் இலங்கையிலும் சீனா தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பன்னாட்டு வணிகத்திற்கு உதவும் வகையில் பெரிய துறைமுகங்களை
இலங்கையில் சீனா அமைத்து வருகிறது. இந்த வசதிகளை எதிர்காலத்தில் ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நிலை வரலாம். எனவே இத்திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து இந்திய கூர்ந்து கவனித்து வருகிறோம். எவ்வித அச்சுறுத்தலையும்
எதிர்கொள்ளும் ஆற்றல் இந்திய ராணுவத்திற்கு உண்டு. எனவே சீனாவின் முதலீடுகள் குறித்து பயப்படத் தேவையில்லை.
தூத்துக்குடியில் கடற்படை துறைமுகம்:
எதிர்காலத்தில் தெற்கு பகுதியை பலப்படுத்தும் வகையில் அதி நவீன கடற்படை தளம் ஒன்றை தூத்துக்குடியில் அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு வசதியாக தற்போதைய தூத்துக்குடி துறைமுகம் விரிவுபடுத்தப்படும். இதற்கான பூர்வாங்கப் பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளன. 2017-ம் ஆண்டு இப்பணிகள் முழுமையடையும்.
மீனவர்கள் பிரச்னை:
தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்ந்து இருந்து வருகிறது. சர்வதேச ஒப்பந்த விதிகளின்படி ஒரு நாட்டின் கடல் எல்லையில் மற்றொரு நாடு உள்ளே செல்ல முடியாது. எனவே இந்திய கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் யாரும் தாக்கப்படுவதில்லை. இலங்கை கடல்பகுதியில் இந்திய மீனவர்களை நாங்கள் பாதுகாக்க முடியாது என்றார் அமர்.கே. மகாதேவன்.
பேட்டியின்போது கடற்படை அதிகாரி கே.வி.மகாதேவன், பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி ஆண்டவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment