Thursday, 24 September 2015

முகவை க.சிவகுமார்.
திருவொற்றியூர் செய்தியாளர்


மும்பை வழியாக மட்டுமே ஆப்பிள் இறக்குமதி செய்ய முடியும்

வர்த்தக அமைச்சகம் அறிவிப்பு

தென் மாநிலங்களில் ஆப்பிள் விலை அதிகரிக்கும் அபாயம்

திருவொற்றியூர், செப்.23:மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தின் வழியாக மட்டுமே வெளிநாட்டு ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய முடியும் என வர்த்தக அமைச்சகத்தின் இறக்குமதி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையடுத்து சென்னைத் துறைமுகம் மூலம் ஆப்பிளை இறக்குமதி செய்ய தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
    சென்னைத் துறைமுகம் மூலம் பல ஆண்டுகளாக வெளிநாடுகளிலிருந்து ஆப்பிள் பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கண்டெய்னர்கள்வரை ஆப்பிள் பழங்கள் இறக்குமதியாகின்றன. இதன் மதிப்பு சுமார் மதிப்பு சுமார் ரூ.1,500 கோடிக்கு இருக்கும். இறக்குமதி செய்யப்படும் பழங்கள் ஒட்டு மொத்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இரண்டு மாதங்களைத் தவிர்த்து ஆண்டு முழுவதும் ஆப்பிள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
மும்பை நவசேவாவுக்கு அனுமதி: சென்னை உள்ளிட்ட இதர துறைமுகங்களுக்குத் தடை 
    இந்நிலையில் வர்த்தக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2015-2020-ல் கடந்த செப்.14 அன்று திருத்தம் கொண்டு வந்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகக் இயக்குனரக அறிவிப்பு எண்.21 ன் படி இனி மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தின் வழியே மட்டுமே ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 11 பெரிய துறைமுகங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்கள் வழியாக ஆப்பிளை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஏதும் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. 
ஆப்பிள் விலை உயரும் அபாயம்:
     சென்னைத் துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் தற்போது கிராமங்கள் வரை பரவியிருக்கும் நிலையில் திடீரென தடை விதிக்கப்பட்டுள்ள தடையால் ஆப்பிள் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும். இதனால் தென் மாநிலங்களில் ஆப்பிள் விலை பல மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாரபட்சமானது, உள்நோக்கம் கொண்டது:
இது குறித்து தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் சோழநாச்சியார் ராஜசேகரன் கூறியது,     அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிஜி உள்ளிட்ட நாடுகளிலிருந்து குளிரூட்டப்பட்ட கண்டெய்னர்களில் இறக்குமதி ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மும்பை வழியே மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என்றால் அங்கிருந்து சென்னைக்குக் கொண்டு வர பல மடங்கு செலவு அதிகரிக்கும். இதனால் பொதுமக்கள்தான் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும்.  மேலும் ஒரு தரப்பினருக்கு மட்டுமே அளிக்கப்படும் வர்த்தக வாய்ப்புகள் அதே நாட்டில் மற்றொரு பகுதியினருக்கு மறுக்கப்படுவது என்பது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.
     இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாக சென்னைத் துறைமுகம் விளங்கி வருகிறது. இங்கு அனைத்து வகை பொருள்களையும் இறக்குமதி செய்வதற்கான வசதிகள் மற்றும் அனைத்து துறை அலுவலகங்கள் சென்னையில் அமைந்துள்ளன. இருப்பினும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இப்பிரச்னை அமைச்சகத்திடம் கேட்டால் இதுவரை எவ்வித விளக்கமும் இல்லை. இந்த அறிவிப்பு பாரபட்சமானது, உள்நோக்கம் கொண்டது என்பதில் ஐயமில்லை. இது குறித்து கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக மத்திய அரசுக்கு எங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளோம் என்றார் ராஜசேகரன்.
திரும்பப் பெற வேண்டும்: சுங்கத்துறை முகவர் சங்கம்
    இந்த அறிவிப்பு குறித்து சென்னை சுங்க இல்ல முகவர்கள் சங்கத் தலைவர் கே.வி.வி.கிரி கூறியது,
    இந்த அறிவிப்பு ஒருதலைபட்சமானது. ஆப்பிள் வர்த்தகம் என்பது நாட்டின் ஒட்டுமொத்த பகுதி முழுதும் நிரம்பியுள்ளது. சென்னைத் துறைமுகம் சுமார் 130 ஆண்டுகளுக்கும்  மேலான பழமையுடையது. இத்தடை மூலம் சென்னைத் துறைமுகத்தின் எதிர்காலம் பாதிக்கும். வெளிநாட்டு ஆப்பிள் பழங்களுக்கு இந்தியாவில் ஒட்டுமொத்தத் தடை என்றால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஆப்பிள் விளையும் பகுதிகளிலிருந்து அருகாமையில் உள்ள மும்பைக்கு அனுமதி. நீண்ட தூரத்தில் உள்ள சென்னைக்குத் தடை என்பது இயல்பாகவே ஏற்றுக் கொள்ள முடியாது. அதிலும் எவ்வித ஆலோசனையும் இன்றி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார் கிரி.
நீதிமன்றத்தை நாடுவோம்:
   இது குறித்து சென்னைக் கோயம்பேடு வியாபாரி சந்தானக் கிருஷ்ணன் கூறியது, 
    மத்திய அரசு சார்பில் சமீபகாலமாக வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் உண்மையிலேயே பிரதமர் நரேந்திர மோடியின கவனத்திற்குச் செல்கிறதா எனத் தெரியவில்லை. ஒரே நாட்டில் ஒரு பகுதிக்கு அனுமதி. மற்றொரு பகுதிக்கு தடை என்பது சாத்தியமல்லை. இதனால் பல்வேறு பின் விளைவுகள் ஏற்படும். தற்போது ஆப்பிள் இருப்பு வைத்திருப்பவர்கள் பதுக்கி வைக்க ஆரம்பிப்பார்கள். மும்பையிலிருந்து ஆப்பிளை கொண்டு வந்தால் அனைத்து மட்டத்திலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதிருக்கும். நாடு முழுவதும் ஒரே சீரான வர்த்தகம் வேண்டும் என்ற கொள்கை வளர்ந்து வரும் நிலையில் இதுபோன்ற அறிவிப்புகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பின்னடைவுக்குக் கொண்டு செல்லும். எனவே நடைமுறைக்கு ஒத்து வராத இந்த அறிவிப்பை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் நீதிமன்றங்களை நாடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார் சந்தான கிருஷ்ணன்.
     சமூக ஊடகங்களில் அனுப்பப்படும் தகவல்களை சேகரித்து வைக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு அனைத்து தரப்பினரின் எதிர்ப்பால் திரும்பப் பெறப்பட்டது. இதே போல் வர்த்தக அமைச்சகத்தின் இந்த அறிவிப்பும் பொதுமக்களின் எதிர்ப்பினைப் பெறும் என்பதில் ஐயமில்லை. எனவே இது குறித்து உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
திருவொற்றியூரில் ரூ. 1.57 கோடியில் அதிநவீன டிஜிட்டல் பொது நூலகம் 

அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்

திருவொற்றியூர், செப்.21:திருவொற்றியூரில் ரூ.1.57 கோடி செலவில் அமைக்கப்பட்ட டிஜிட்டல் வசதியுடன் கூடிய அதிநவீன பொது நூலகத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி திங்கள்கிழமை திறந்து வைத்தார்.
       திருவொற்றியூர் சண்முகனார் பூங்காவையொட்டி 1958 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறிய பொது நூலகம் ஒன்று இயங்கி வந்தது.  இதனை அதிநவீன டிஜிட்டல் நூலகமாக தரம் உயர்த்துமாறு இப்பகுதி நூலக வாசகர்கள் தொடர்ந்து வலியறுத்தி வந்தனர். இதனையடுத்து திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதி-ரூ.82 லட்சம், திருவள்ளூர் மாவட்ட நூலக ஆணைக் குழு நிதி-ரூ 10 லட்சம், பொதுமக்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு நிதி-ரூ.65 லட்சம் ஆகியவற்றைக் கொண்டு இந்நூலகம் ரூ.1.57 கோடி செலவில் மூன்று அடுக்குகள் கொண்ட அதிநவீன டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இதிலுள்ள மூன்ற தளங்களில் நாளிதழ், பெண்கள், சிறுவர்கள், கணினி நூலகம், போட்டித் தேர்வுகளுக்கான நூலகம், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், கண்பார்வை இழந்தவர்களுக்கான சிறப்பு வசதிகள், நூல்கள் வழங்கும் பிரிவு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பிரிவுகள் இந்நூலகத்தில் அமைந்துள்ளது.
    இந்நூலகத்தின் கட்டடத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கே.வீரராகவராவ் தலைமையும், சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் முன்னிலையும் வகித்தனர். இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நூலகக் கட்டடத்தை திறந்து வைத்தார். பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா குத்துவிளக்கு ஏற்றினார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹிம், வடசென்னை மக்களவை உறுப்பினர் வெங்கடேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொது நூலகங்கள் அமைப்பதில் தமிழகம் முதலிடம்:
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது, 
      தொலை நோக்குத் திட்டம் 2023-ஐ அறிவித்து அதன்படி தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்லும் உன்னத பணியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா செயலாற்றி வருகிறார். மேலும் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் பல்வேறு நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.  கற்றல் என்பது வெறும் கல்வி பெறுவது மட்டும் அல்ல. வாழ்நாள் முழுவதும் படிக்க வேண்டும். புத்தகங்கள் வாங்கும் செலவினம் என்பது அறிவு வளர்ப்பதற்கான மூலதனம் ஆகும்.     பொது நூலகங்களை அமைப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. 1948-ம் ஆண்டிலேயே பொது நூலகச் சட்டத்தைக் கொண்டுவந்தது தமிழகம்தான்.  ஆயிரம் பேர் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் கூட நூலகங்கள் தமிழகத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளன.  நூலகவியலின் முன்னோடியான டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் நல் நூலகர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.  சிறந்த நூலகங்களுக்கு வெள்ளிப் பதக்கம், பண முடிப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
      திருவள்ளூர் மாவட்டத்தில் மணவாளநகர், கடம்பத்தூர், தணிக்காசலபுரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. பண்பாடு நிறைந்த, அறிவுசார்ந்த சமுதாயம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனில்  பொது நூலக இயக்கம் ஒரு சமுதாய இயக்கமாக மாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் வீரமணி.
அனைவரும் படிக்க வேண்டும்: அமைச்சர் ரமணா
நிகழ்ச்சியில் அமைச்சர் பி.வி.ரமணா பேசியது,
    திருவொற்றியூர் நகர வரலாற்றில் இந்நூலகம் ஒரு மைல் கல்லாக இருக்கும்.  இந்நூலகத்திற்கு மாணவர்கள் மட்டுமல்லாது வீட்டில் உள்ள பெண்கள், வேலைக்குச் செல்வோர், வணிக நிறுவனங்களை நடத்துபவர்கள், வேலை செய்பவர்கள், சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பு மக்களும் வரவேண்டும். பொதுமக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதைக் குறைத்துவிட்டு நூலகத்திற்கு வருவதற்கு பழக வேண்டும். அப்போதுதான் அரசியல் உள்ளிட்ட அனைத்து அன்றாட நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடியும். அறிவார்ந்த சமுதாயத்தை அமைப்பதில் புத்தகங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் அமைச்சர் ரமணா. 
வாசிப்பு என்பது தலைசிறந்த பண்பாடு:
நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி பேசியது,
     நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் மனநிறைவைத் தந்த நிகழ்ச்சி இது. 
வாசிப்பு என்பது தலைசிறந்த பண்பாடு ஆகும். ஒருவர் எந்த துறையில் வல்லுனராக இருந்தாலும் அனைத்து துறைகள் குறித்தும் பொது அறிவு தேவை. முன்பு தொடக்கப்பள்ளியில் படிக்கும்போதே நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தந்தனர்.  ஆனால் தற்போது புத்தகங்கள், செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கம் மாணவர்களிடையே தொடர்ந்து குறைந்து வருகிறது.  இதனை மாற்ற அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றார் துரைசாமி.
கூடுதல் பணியாளர்கள் தேவை:
நிகழ்ச்சியில் கே.குப்பன் எம்.எல்.ஏ.பேசியது,
    தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் திறக்கப்பட்டுள்ள இந்நூலகத்திற்குத் தேவையான பணியாளர்கள் உடனடியாக நியமிக்கவேண்டும். மேலும்  முழுதும் குளிரூட்டப்பட்ட வசதி,  வண்ண நகல் எடுக்கும் கருவி, மின் தடையைச் சமாளிக்க  ஜெனரேட்டர் வசதி,  குடிமைப் பணிக்கான சிறப்பு பயிற்சி மையம், அனைத்து கணிணிகளையும் ஒருங்கிணைக்கும் தடையில்லா மின் வழங்கல் கருவி உள்ளிட்டவைகள் அமைக்க பொது நூலகத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை என்றார் குப்பன். 
     நிகழ்ச்சியில் பொது நூலக இயக்குனர் எஸ்.கண்ணப்பன், மாவட்ட நூலக அலுவலர்  தனலட்சுமி, நூலக வாசகர் வட்ட கௌரவத் தலைவர் அரிமா துரைராஜ், நூலகப் புரவலர் தொழிலதிபர் ஜி.வரதராஜன், சமூக சேவகர் கே.சுப்பிரமணி, கிளை நூலகர் பாணிக் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் 
அரசுகளுக்கிடையே அரசியல் பாகுபாடு இருக்கக் கூடாது 

அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்


திருவொற்றியூர், ஆக.26:மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசுகளுக்கிடையே அரசியல் வேறுபாடு இருக்கக் கூடாது என கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் புதன்கிழமை தெரிவித்தார்.
   சென்னைத் துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல், திறப்புவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன. இதில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ரூ.63 கோடி மதிப்பீட்டிலான கடலோரச் சாலை, ரூ.17 கோடியிலான பயணிகள் முனையத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.64 கோடி செலவில் அமைக்கப்பட்ட நடமாடும் பலுதூக்கிகளை இயக்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது,
   சென்னைத் துறைமுகத்தில் சுமார் ரூ.151 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ரூ.173 கோடி நட்டத்தில் இயங்கிய இத்துறைமுகம் கடந்த நிதியாண்டில் சுமார் ரூ.23 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. தேவையற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்தியும், புதிய சரக்குகள் மூலமும், காமராஜ் துறைமுகத்தின் மீதான முதலீட்டு லாபம் உள்ளிட்டவைகள் இது சாத்தியமானது. 
   உலகில் முன்னேறிய நாடுகள் அனைத்தும் சரக்குகளை எடுத்துச் செல்வதில் நீர்வழிப் போக்குவரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. சீனாவின் சரக்குப் போக்குவரத்து சுமார் 47 சதவீதம் நீர் வழிப்பாதைகள் மூலம்தான் நடைபெறுகிறது. இந்தியாவில் நீர்வழிப்போக்குவரத்து மூலம் நடைபெறும் சரக்குப் பரிமாற்றம் சுமார் 6 சதவீதம் மட்டுமே. சாலை போக்குவரத்தை விட பல மடங்கு செலவு குறைந்த, எளிதான நீர்வழிப் போக்குவரத்து கப்பல்த் துறை அமைச்சகம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. துறைமுகத்தின் கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 
கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு:
    சென்னைத்துறைமுகத்தில் நிலவும் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலை நிரந்தரமாகத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை துறைமுக நிர்வாகம் எடுத்து வருகிறது. ரூ 5 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய நுழைவு வாயில்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சரக்கு ரயில்கள் மூலம் பெட்டங்களைக் கையாளும் முறை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 சதவீத நெரிசல் குறையும். துறைமுகத்தின் திறனுக்கும் நெரிசலுக்கும் தொடர்பில்லை. 

மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலம்: 
      துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தில் சுமார் 900 மீட்டர் பகுதியைத் தவிர அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இதிலுள்ள சில தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் இத்திட்டம் முழுமையாக நிறைவு பெறும்.
மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலத் திட்டத்தை நிறைவேற்றுவதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அமைச்சர் கட்காரியும், நானும் பல முறை தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மேலும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தால் இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்யவும், தேவையெனில் சில இடங்களில் வழியை மாற்றவும், இன்னும் தேவையெனில் புதிய வழித் தடத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றவும் மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே எங்களைப் பொருத்தவரை இதில் ஏதும் அரசியல் மாறுபாடு கிடையாது. மற்றவர்களுக்கு அவ்வாறு இருக்குமா என்பதை என்னால் கூற இயலாது. ஆனால் இது போன்ற மக்கள் நலத் திட்டங்களில் அரசுகளுக்கிடையே அரசியல் பாகுபாடு இருக்கக் கூடாது என்பது முக்கியமானது.  இத்திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்கும் என நம்புகிறோம். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை எனில் சென்னைத் துறைமுகம் எதிர்காலத்தில் கண்காட்சியகமாக மாறும் அவல நிலை உள்ளது.  
குளச்சல் துறைமுகம்:
   சாகர்மாலா திட்டத்தின் முக்கிய நோக்கம் துறைமுகங்களுக்கிடையே இணைப்பு ஏற்படுத்துவது, சிறிய, பெரிய துறைமுகங்களை ஏற்படுத்துவது, உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்துகளை அதிகரிப்பது உள்ளிட்டவை அடங்கும். நாட்டின் தென்கோடியில் உள்ள குளச்சல் துறைமுகம் பெரிய துறைமுகமாக மேம்படுத்த அமைச்சகம் தயாராக உள்ளது. இது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய துறைமுகத்தை அமைக்க அனைத்து சாதகமான அம்சங்களும் உள்ளன. இயற்கையாகவே 20 மீட்டர் ஆழம் கொண்ட கடல் பகுதி குளச்சலில் உள்ளது. மேலும் சர்வதேச கடல் வழித் தடம் குளச்சலுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார் அமைச்சர் ராதாகிருஷ்ணன்.
   நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா, துணைத் தலைவர் ஐ.ஜெயக்குமார், துறைமுக அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சோழநாச்சியார் ராஜசேகரன், கருப்பு முருகானந்தம், பி.எஸ்.கிருஷ்ணன், காமராஜர் துறைமுகத்தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார், கான்கார் முதன்மை பொதுமேலாளர்கள் பாலாஜி அருண்குமார், ஸ்ரீகுமார், சரக்குப் பெட்டக முனைய செயல் அதிகாரிகள் சிவகுமார், கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
'கண்டெய்னர் லாரிகளால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு'

பொதுமக்கள் சாலை மறியல்

திருவொற்றியூர்,ஆக.22:சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகளால் வடசென்னை பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திருவொற்றியூரில் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
    சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் மாதவரம், மணலி, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு வழியாகவே செல்கின்றன. ஆயிரக் கணக்கான லாரிகள் இவ்வழியே தினசரி செல்லும் நிலையில் பொதுமக்களுக்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருவதாகக் கூறி சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலையில் திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகரில் வெள்ளிக்கிழமை 
இப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறியது,
   முன்பு இருவழிச்சாலையாக இருந்தபோது கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து பல்வேறுகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இச்சாலைகள் அனைத்தும் நான்கு வழிச்சாலை, ஆறுவழிசாலையாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. ஆனாலும் நெரிசல் பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதற்கு முதல் காரணம் சென்னைத் துறைமுகம்தான். துறைமுகத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த இரண்டு தனியார் சரக்குப் பெட்டக முனையங்கள் உள்ளன. ஏற்றுமதிக்காகச் செல்லும் கண்டெய்னர்களை 
இறக்குவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் பல மணி நேரத்திற்கு கண்டெய்னர்களை இறக்கி வைக்கும் பணிகள் நிறுத்திவிட்டு வேறு பணிகளில் கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால் லாரிகள் செல்வதில் தேக்கநிலை ஏற்பட்டு படிப்படியாக மாதவரம், மீஞ்சூர்வரை லாரிகள் வரிசைகட்டி நிற்கின்றன. 
    இரண்டாவது காரணம் போக்குவரத்து காவல்த் துறையில் உள்ள சில அதிகாரிகள்தான். லாரிகள் ஒரே வரிசையில் ஒன்றன்பின் ஒன்றாகப் பின் தொடர்ந்தால் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இருக்காது. ஆனால் நெரிசலைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் போலீசார் லாரிகளை சுமார் 10 இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து ஆங்காங்கு நிறுத்தி வைக்கின்றனர். பின்னர் இச்சாலையில் இடம் காலியாக இருக்கும்போது வரிசையை முந்திச் செல்லும் வகையில் பின்னால் வரும் லாரிகளை போலீஸாரே முன்னால் அனுப்புகின்றனர். இவ்வாறு போட்டிபோட்டுக் கொண்டு 
ஏறி வரும் லாரிகளால்தான் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான இடங்களில் மூன்று வரிசைகளில் லாரிகள் நிறுத்தப்படுகின்றனர். இதனால் வீட்டைவிட்டு வெளியே செல்வதோ வீட்டிற்கு திரும்பி வருவதோ மிகுந்த சிரமமாக உள்ளது. பெண்கள், பள்ளி மாணவர்கள் ஆபத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மேலும் இப்பகுதியிலிருந்து மீஞ்சூர், மாதவரம், செங்குன்றம்  செல்ல வேண்டும் எனில் 
எந்நேரமும் லாரிகளுக்கிடையே சிக்கிக் கொண்டு மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் நீடிக்கிறது. பேருந்துகள், பொதுமக்கள் வாகனங்கள் இப்பகுதியில் செல்வதே குதிரைக் கொம்பாக உள்ளது. 
    எனவே இப்பிரச்னையைத் தீர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். லாரிகள் வரிசையில் நிற்காத அளவிற்கு கண்டெய்னர்களை துறைமுகத்தில் இறக்கி வைக்கவும், முடியவில்லையெனில் வரிசையில் நிற்கும் லாரிகளை துறைமுகத்தில் 
உள்ள காலி இடங்களில் நிறுத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதையும் மீறி லாரிகள் நீண்ட வரிசையில் நிற்க நேரிட்டால் போக்குவரத்து போலீஸார் லலாரிகளை சோதனைச் சாவடியில் நிறுத்தி வைக்காமல் ஒரே வரிசையில் மட்டும் செல்லும்படி ஒழுங்குபடுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தியே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர். 
   இது குறித்து தகவல் அறிந்த எண்ணூர் காவல் உதவி ஆணையர் தென்னரசு சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கண்டெய்னர் லாரிகள் நெரிசலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்படும். தவறிழைக்கும் போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுக நிர்வாகத்தின் கவனத்திற்கு இப்பிரச்னை கொண்டு செல்லப்படும் என காவல்த் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து இரண்டு மணி நேர சாலை மறியல் போராட்டத்தைப் பொதுமக்கள் 
கைவிட்டனர். போராட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலை மறியலால் இப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.