அனுபவங்கள் முக்கியமல்ல...
முகவை.க.சிவகுமார்
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தின் பெருமையை உலக நாடுகளுக்கு மீ்ண்டும் ஒரு முறை எடுத்துரைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. இத்தகைய பெருமையில் வெற்றிபெற்றவர்கள் மட்டுமல்ல தோல்வியடைந்தோர், வாக்களித்தோர், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைவருக்குமே பங்கு உண்டு. காரணம் தேர்தலில் பங்கேற்பு என்பதே பெருமைதானே. எதிர்ப்போர் இல்லாமல் தேர்தல் களங்கள் சிறப்பிடம் பெற்றுவிடாது.
60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல் முடிவுகள் மூலம் பல்வேறு பாடங்களை மக்கள் புகட்டியுள்ளனர். வெற்றியின் உச்சத்தில் இருந்தவர்கள் எல்லாம் படுதோல்வி மூலம் பாதாளத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளனர். அதேவேளை அடுத்த தேர்தலில் அவர்கள் மீண்டும் அரியணையில் ஏற்றப்பட்டுள்ளனர். இதில் இதுவரை எந்தக் கட்சியும் தப்பவில்லை. சமீபகாலமாக யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட யார் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய காரணியாக விளங்குகிறது. 16-வது மக்களவை தேர்தல் முடிவுகளும் இதே நோக்கில்தான் உள்ளன. அப்படியென்ன தோற்றவர்கள் தவறுகளைச் செய்தார்கள்?
தேசிய அளவில் காங்கிரஸ் தோற்றதிற்கு முக்கிய காரணம் கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் எண்ண ஓட்டத்திற்கு மாறாக ஆட்சி நடத்தியதுதான். தேசிய அளவில் பார்த்தால் கடும் பொருளாதார சீரழிவு இந்த காலகட்டத்தில்தான் நடைபெற்றது. இறக்குமதி அதிகரித்து நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும் தாராள இறக்குமதியால் உள்நாட்டில் உற்பத்தியான பொருள்கள் மதிப்பிழந்தன. குறிப்பாக சீனப் பொருட்கள் நாடு முழுவதும் பரவின. இதனால் உற்பத்தி குறைந்து பணவீக்கம் அதிகரித்தது. விளை பொருள் உற்பத்தியும் குறைந்தது.
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நிரம்பிய நாடு இந்தியா. ஆனால் விவசாயம், தொழிற்சாலை உள்ளிட்டவைகளுக்கு உடலுழைப்பு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜவகர் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம். நல்ல நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட இத்திட்டம் தவறான திசையில் செல்கிறது என ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியும் முந்தைய அரசு மாற்றிக் கொள்வதாகவே இல்லை.
சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு வந்தால் இந்தியாவின் அடித்தளமே அசைக்கப்படும் அபாயம் உள்ளதாக நாடு முழுவதும் வணிகர்கள் போராடினார்கள். பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்குகளைத் தொடுத்தார்கள். பெரும்பான்மை கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய முந்தைய அரசு இதில் ஏதேச்காரத்துடன் நடந்து கொண்டது.
இலங்கை பிரச்னையில் தமிழர்கள் பாதுகாக்கப்படவேண்டும். இனப் படுகொலையை இந்தியா தடுக்க வேண்டும். இலங்கத் தமிழர்களின் சட்டப்பூர்வமான உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணம். ஆனால் தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக இலங்கைக்கு ஆயுத உதவிவரை முந்தைய அரசு செய்தது. நாம் வழங்காவிட்டால் சீனா ஆயுத உதவியை அளித்துவிடும் என்ற வியாக்கானம் வேறு.
மேலும் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக காங்கிரஸில் கூட ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் கொடுத்தனர். உலக வல்லரசு நாடாகக் கூடிய தகுதி படைத்த இந்தியா அரசு என்ன செய்தது? இதில் மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஜால்ரா அடித்த பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் இத்தேர்தலில் வாங்கிய வாக்குகளைப் பார்த்தாலே மக்கள் எவ்வளவு கோபமாக உள்ளனர் என்பது புரியும்.
ஆந்திராவை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது. ஆனால் இப்பிரச்னையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்க்க வேண்டும். ராஜசேகர ரெட்டியின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு பெருகியது. தனிக்கட்சி தொடங்கினார். தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை...எதிரிக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்ற கணக்கில் முந்தைய அரசு செயல்பட்டது. இரு தரப்பினரின் முழு ஒப்புதலைப் பெற மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?. ஆந்திராவைப் பிரிப்பதில் அந்தோனிக்கும், ப.சிதம்பரத்திற்கும் அப்படி என்ன உரிமை?. நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடி தூவும் அளவுக்கு ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்களே கொதித்தெழுந்தனர். விளைவு சீமாந்திரத்தில் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ.வைக் கூட காங்கிரஸ் பெற முடியவில்லை.
சீதாராம் கேசரியின் தலைமையில் சீரழிந்து போன நிலையில் கட்சியின் தலைமை பதவியை சோனியா காந்தி ஏற்றார். பின்னர் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று பிரதமராக தேர்வு செய்யப்படவிருந்த நிலையில் அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் தெரிவித்த எதிர்ப்பால் மன்மோகன் சிங்கிற்கு வழிவிட்டார் சோனியா. காந்தி, நேருவிற்குப் பிறகு நாட்டு மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவரான அப்துல்கலாம் இரண்டாவது முறையைக மீண்டும் குடியரசு தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் என நாடே எதிர்பார்த்தது. ஆனால் முன்பகை காரணமாக சோனியாவும், கருணாநிதியும் ஒரு சேர கலாமை புறக்கணித்தனர். இதன் விளைவுகளைத்தான் இன்று அறுவடை செய்து கொண்டிருக்கின்றனர்.
சோனியாதான் இப்படியெனில் ராகுல்காந்தியின் செயல்பாடுகளே தற்போதைய நிலைக்கு முக்கிய காரணமாகிவிட்டது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக அவர் பொறுப்பேற்றவுடன் இளைஞர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாகக் கூறினார். அவர் வழி ஏற்படுத்திக் கொடுத்ததெல்லாம் அவருக்கு ஜால்ரா அடிப்பவர்களுக்கும், காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகளுக்கும்தான். இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்வில் ஜனநாயகத்தை புகுத்தினார். ஆனால் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களை சர்வாதிகாரத்துடன் நீக்கினார். டெல்லியில் முறைவாசல் செய்பவர்களுக்கு மட்டுமே இங்கு மரியாதை கிடைக்கும் என்ற தோற்றத்தை கட்சியினரிடம் வளர்த்தார். இதனால் மக்கள் செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுலை எதிர்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்ளத் தொடங்கினர். மக்கள் செல்வாக்கினை இழந்துபோன தலைவர்களின் ஆலோசனைகளை மட்டுமே ராகுல் கேட்டு செயல்பட்டார். இதர கட்சிகளெல்லாம் தேர்தல் பணியைத் தொடங்கி பாதி தூரம் சென்ற நிலையில்தான் காங்கிரஸ் வேட்பாளர்களையே அறிவித்தது.
பாஜக கூட்டணியின் வெற்றிக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான வெறுப்புதான் காரணங்களாக அமைந்தன என்பது நிதர்சன உண்மை. அனுபவங்கள் முக்கியமல்ல... அவற்றின் மூலம் பெற வேண்டிய பாடங்களே முக்கியம். தோல்வியை சந்தித்தவர்கள் மட்டுமல்ல வெற்றி பெற்றவர்களும் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்தானே?