Friday, 26 July 2013

75 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்த அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

-இன்று பவள விழா நடைபெறுகிறது.

திருவொற்றியூர், ஜூலை.26.: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 75 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இதற்கான பவள விழா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 
     1781- ஆண்டில் சென்னையில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டது.  இதனால் அன்றைய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் பட்டினியால் வாடினர். இவர்களைக் காப்பாற்றும் நோக்கில் மெட்ராஸ் பிரசிடென்சி அரசும், தூய மேரி தேவாலயமும் இணைந்து ராயபுரம் பகுதியில் தற்போதைய மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் கஞ்சித் தொட்டியை திறந்தன.  பின்னர் இங்கேயே ஒய்வெடுக்கவும் வசதிகள் ஏற்படுத்துப்பட்டது.  பின்னர் இந்த இடம் கிராம ஹெட்மேனின் நினைவாக Monegar Choultry என மக்கள் பெயரிட்டு அழைத்தனர்.   மோனிகர் சவுல்ட்ரியின்  ஒரு பகுதி இன்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது.  உணவும், மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டதால்  நீண்டகாலமாக இம்மருத்துவமனை கஞ்சித் தொட்டி மருத்துவமனை என்றே அழைக்கப்பட்டு வந்தது. 
       1797- டாக்டர் ஜான் ஹோலன் அண்டர்வுட் என்பரால் மருத்துவமனைக்கான கட்டடம் கட்டப்பட்டது.  இதில் 90 படுக்கை வசதிகள் ஏற்படுத்துப்பட்டன. 1807-ல் மோனேகர் சவுல்ட்ரி இம்மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது.  1968-ல் பெண்களுக்குக் சிகிச்சை அளிக்க வசதியாக 40 படுக்கைகள் கொண்ட சிறப்பு கட்டடம் அமைக்கப்பட்டது.  பின்னர் 
செங்குன்றம் ஏரியிலிருந்து இம்மருத்துவமனைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதற்கு ராஜா சர் ராமசாமி முதலியார் உதவி செய்தார். இவரது நினைவாக தற்போதைய ஆர்.எஸ். ஆர்.எம். மகப்பேறு மருத்துமனை செயல்பட்டு வருகிறது. 
       1903-ல் ராயபுரம் மெடிக்கல் ஸ்கூல் தொடங்கப்பட்டது. பின்னர் மெட்ராஸ் பிரசிடென்சியில் கவர்னராக இருந்த ஜார்ஜ் பிரடெரிக் ஸ்டான்லியின் நினைவாக ஸ்டான்லி மெடிக்கல் ஸ்கூல் என பெயர் மாற்றம் பெற்றது.  இப்பள்ளிதான் படிப்படியாக வளர்ந்து ஜூலை 2, 1938-ல் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்வு பெற்றது.  முதலில் 72 மருத்துவ மாணவர்கள், 462 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துமனை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.  இம்மருத்துவக் கல்லூரியின் முதல் டீனாக டாக்டர் அனந்தநாராயன ஐயர் பதவி வகித்துள்ளது. இதுவரை 25 டீன்கள்கள் இப்பதவியில் இருந்துள்ளனர்.  26 வது டீனாக டாக்டர் கீதாலட்சுமி இருந்து வருகிறார். 

சாதனை படைத்த சிறப்பு மருத்துவத் துறைகள்:
இம்மருத்துமனையில் முதலில் உடல் கூறு இயல் சிறப்பு மையம் டாக்டர் அனந்தநாராயண ஐயரால் தொடங்கப்பட்டது. 1971-ல் பேராசிரியர் டாக்டர் ஆர்.வெங்கடசாமியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைப் பிரிவு இதுவரை 3.30 லட்சம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளது. சுமார் 70 ஆயிரம் பேருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இவ்வகைச் சிகிச்சையில் இந்தியாவிலேயே முன்னோடி மையமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது கை மாற்றும் அறுவைச் சிகிச்சை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
1995-ல் டாக்டர் ஆர்.பி.சண்முகம் தலைமையில் தொடங்கப்பட்ட கல்லீரல், குடல் பகுதி சிகிச்சை பிரிவில்தான் இந்தியாவிலேய கல்லீரல் மாற்று முதல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பேராசிரியர் டாக்டர் ஆர். சுரேந்திரன் தலைமையில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவு சிறப்பு மையமாக வளர்ச்சி பெற்றது. 2000-ஆம் ஆண்டில் ஐ.எஸ்.ஓ. 9001 தரச்சான்று இம்மையத்திற்கு வழங்கப்பட்டது.
நாட்டிலேயே அரசு மருத்துவமனையில் இச்சான்று பெற்ற மையம் இது என்பதும், கல்லீரல் செயலிழந்த 37 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு இந்தியாவின் முன்னணி மையமாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஸ்டான்லி மருத்துவமனை என்றாலே நினைவுக்கு வருவது எலும்பு சிகிச்சைப் பிரிவுதான். இப்பிரிவுக்கு மட்டும் தினமும் சுமார் 800 நோயாளிகளுக்கும் மேல் சிகிச்சை பெற வருகின்றனர்.

மொத்தத்தில் 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட மருத்துவமனையின் துணையோடு 75 ஆண்டுகளைக் கடந்து சாதனை படைத்து இன்று பவள விழாக் கொண்டாடுகிறது அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி.

Wednesday, 24 July 2013

தினமணி செய்தி எதிரொலி..... செயல்படத் தொடங்கியது திருவொற்றியூர் எரிவாயு தகன மையம்

-ஒரே நாளில் 3 சடலங்கள் எரிப்பு

திருவொற்றியூர்:இரண்டு முறை திறப்பு விழா கண்டு செயல்பாட்டுக்கு வராத  திருவொற்றியூர் எரிவாயு தகன மையம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியது.
     திருவொற்றியூரில் ரூ.1.10 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எரிவாயு தகன மையம் கடந்த 2011-ல் திறக்கப்பட்டது. ஆனால் ஒரு சில மாதங்களில் மூடப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர மேயர் சைதை எஸ். துரைசாமி நேரில் ஆய்வு செய்து எரிவாயு தகன மையத்தை சீரமைத்து உடனடியாகத் திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து தகன மையம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. மேலும் புதுப்பிக்கப்பட்ட எரிவாயு தகன மையத்தை கடந்த ஜூன்.17 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேயர் சைதை துரைசாமி திறந்தும் வைத்தார். ஆனாலும் இம்மையம் செயல்பாட்டுக்கு வந்தபாடு இல்லை. பழைய முறையிலேயே சடலங்கள் விறகு, எரு ராட்டை உள்ளிட்டவைகளால் எரிக்கப்பட்டன.
        இம்மையம் செயல்பாட்டுக்கு வராததிற்கான காரணம் குறித்து மண்டலக்குழுத் தலைவர் தனரமேஷிடம் கேட்டபோது, 'மயான ஊழியர்களின் எதிர்ப்பால்தான் மையம் செயல்படுவதில் தடங்கல் உள்ளது' என தெரிவித்தார். இது குறித்து தினமணி ஜூலை.16 நாளிதழில் 'இரண்டு முறை திறப்பு விழா கண்டும் செயல்படாத திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை' என சிறப்புச் செய்தி வெளியானது. 

மேயர் துரித நடவடிக்கை:
    இது குறித்து தகவல் அறிந்த மேயர் சைதை துரைசாமி வெளிநாட்டில் இருந்த போதும் தகன மையத்தை உடனடியாகத் செயல்பட வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மண்டல அலுவலர் காங்கேயன் கென்னடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மயான ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதில் புதிய எரிவாயு தகன மையம் செயல்பட மயான ஊழியர்கள் ஒத்துழைப்பதாக தெரிவித்தனர். மேலும் அவர்களை மாநகராட்சி ஊழியர்களாக பணி நியமனம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஓரே நாளில் மூன்று சடலங்கள் எரிப்பு:
   இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை முதல் தகன மையம் செயல்படத் தொடங்கியது. காலடிப்பேட்டை மேற்கு மாடவீதியைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க. கவுன்சிலர் எம்.இ. குமாரின் உறவினர் பார்வதி புற்றுநோய் பாதிப்பினால் சனிக்கிழமை இறந்து போனார். 
பார்வதியின் சடலம் ஞாயிற்றுக்கிழமை எரிவாயு தகன மேடையில் வைக்கப்பட்டு எரியூட்டப்பட்டது. இரவு வரை மேலும் இரண்டு சடலங்கள் எரிக்கப்பட்டன. 

மயான ஊழியர்கள் வேண்டுகோள்:

இது குறித்து மயான ஊழியர்கள் சார்பில் ஆனந்தன் கூறியது,
    திருவொற்றியூர் மயானத்தில் பரம்பரையாக சடலங்களை எரிக்கும், புதைக்கும் பணியைச் செய்து வருகிறோம். இந்நிலையில் புதிய எரிவாயு தகன மையத்தை திறந்துள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனினும் மையம் செயல்பட முழு ஒத்துழைப்பு கொடுப்போம். எங்களின் ஏழ்மை நிலை கருதி கருணை அடிப்படையில் 9 மயான ஊழியர்களையும் மாநகராட்சி ஊழயர்களாக நியமிக்க வேண்டும். இதனைத்தான் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்து வருகிறோம்.  மற்றபடி தகன மையத்தை செயல்படவிடாமல் இதுவரை தடுத்தோம் என்பது தவறான தகவல் என்றார் ஆனந்தன்.
தடங்கலின்றி செயல்படக் கோரிக்கை:
இது குறித்து திருவொற்றியூர் பகுதி பொதுநல ஆர்வலர் அரிமா என்.துரைராஜ் கூறியது,
    திருவொற்றியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டம் இது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இம்மையம் செயல்படுதில் தடங்கல் ஏற்பட்டு விட்டது. இனிமேலாவது இம்மையம் தடங்கலின்றிச் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தகன மையத்தில் உள்ள அமரர் பூங்கா, நீரருவி உள்ளிட்டவைகளை பராமரிக்க தேவையான தண்ணீரை வழங்க வேண்டும்.  ஏற்கனவே சென்னை மாநகராட்டியில் உள்ள விதிமுறைகள், திட்டங்கள் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளுக்கும் இன்னும் விரிவுபடுத்தாமல் இருப்பதே இது போன்ற பிரச்னைகளுக்குக் காரணம் கூறப்படுகிறது. எனவே இது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர், மாநகர மேயர் ஆகியோர்  துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார் துரைராஜ். 

இரண்டுமுறை திறப்பு விழா கண்டும் செயல்படாத திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை

-பொதுமக்களின் நலன் கருதி மாநகராட்சி துரித நடவடிக்கை தேவை

திருவொற்றியூர்:
சென்னை மாநகராட்சியால்  சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட திருவொற்றியூர் எரிவாயு தகன மேடை மயான ஊழியர்களின் எதிர்ப்பால் செயல்படாமல் முடங்கியுள்ளது. 
    திருவொற்றியூர் மயானம் புதர் மண்டி கிடந்ததையடுத்து இதனை சீரமைத்து நவீனப்படுத்த வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து  இம்மயானத்தில் எரிவாயு தகன மேடை கூடிய மயானமாக மாற்றியமைக்க முடிவு செய்த நகராட்சி நிர்வாகம் ரூ. 1.10 கோடி செலவில் அமரர் பூங்கா, இறுதிச் சடங்கு மண்டபம்,  தகன மேடை ஆகியவற்றுடன் நவீன மயானத்தைக் கட்டி முடித்தது. 
இதனை கடந்த பிப்.27, 2011-ல் அப்போதையை மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி இதனைத் திறந்து வைத்தார். மேலும் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்) சார்பில் ரூ.9.50 செலவில் அமரர் ஊர்தியும் ஒன்றையும் இலவசமாக வழங்கியது. எரிவாயு தகன மேடையை இயக்கும் பொறுப்பு பட்டினத்த சமூக சேவை மையத்திடம் அளிக்கப்பட்டது.  
மயான ஊழியர்கள் எதிர்ப்பு
    சில நாள்கள் மட்டும் எரிவாயு தகன மேடை செயல்பட்டு வந்த நிலையில் இம்மயானத்தில் ஏற்கனவே பணி செய்து வந்த மயான ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக உத்தரவிட்டால் மட்டுமே மயானத்தை இயக்க ஒத்துழைப்பு கொடுப்போம் என இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேவை மைய நிர்வாகிகளையும் விரட்டியடித்தனர். இக்கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம். ஆனால் உடனே முடியாது அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை மயான ஊழியர்கள் ஏற்க மறுத்தனர்.இந்நிலையில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டதில் தொழில்நுட்பக் கோளாறுகள் உள்ளதாகக் தகன மேடை  மூடப்பட்டது.     
   இதனையடுத்து பழைய எரிமேடையிலேயே விறகு, சாண இராட்டை போன்றவைகளைக் கொண்டு சடலங்கள் எரிக்கும் பணி தொடங்கியது.   சடலங்கள் எரியூட்டப்படும்போது பரவும் துர்நாற்றம் மிகுந்த புகையால்  இப்பகுதி மக்கள் மீண்டும் அவதிக்குள்ளாயினர்.  மேலும் ஒரு சடலத்தை எரிக்க ரூ.5 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை மயான ஊழியர்களால் வசூலிக்கப்பட்டது.  இந்நிலையில் திருவொற்றியூர் நகராட்சி சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு மயானமும் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 
மேயர் ஆய்வு: 
     இதனையடுத்து எரிவாயு தகன மேடையை சீரமைத்து இயக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்புகளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தன.  இது குறித்து 'தினமணி'யில் செப். 21,  2012-ல் விரிவாக செய்தியும் வெளியிடப்பட்டது.   இதனையடுத்து மேயர் சைதை எஸ்.துரைசாமி, சட்டப் பேரவை உறுப்பினர் கே.குப்பன்,  மண்டலக் குழு தலைவர் மு.தனரமேஷ் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர்.  பின்னர் எரிவாயு தகன மேடையை விரைவில் இயக்குவதற்கான பணிகளை உடனடியாகச் செய்யும்படி அதிகாரிகளுக்கு மேயர் துரைசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த ஆறு மாதங்களாக சீரமைக்கும் பணியும், மயான ஊழியர்களை சமாதானப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வந்தன. 
மீண்டும் திறப்பு விழா:
     இதனையடுத்து எரிவாயு தகனமேடையுடன் கூடிய மயானம் புதுப் பொலிவு பெற்றது. மேலும் மயானத்தின் அருகிலேயே உயர் கோபுர மின் விளக்கும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூன்,17 அன்று திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேயர் சைதை எஸ்.துரைசாமி சீரமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையை திறந்து வைத்தார். மேலும் சடலத்தை எரிக்கும் செலவை மாநகராட்சியே ஏற்கும். உறவினர்கள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை என அறிவித்தார்.  ஆனால் திறப்பு விழாக் கண்டு ஒரு மாதம் ஆக உள்ள நிலையில் தகன மேடையில் ஒரு சடலம் கூட எரிக்கப்படவில்லை. 

கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடியாது:

இது குறித்து மண்டலக் குழு தலைவர் மு.தனரமேஷ் கூறியது,
     மயான பணியாளர்களை மாநகராட்சி ஊழியர்களாக பணிவரன்முறைப்படுத்தும் கோரிக்கை சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதி மயான பணியாளர்களுக்கும் பொதுவானது.  எனவே இதில் உடனடியாக முடிவெடுக்க முடியாது. இவர்கள் இல்லாமலேயே புதிய எரிவாயு தகன மேடையை இயக்க முடியும் என்றாலும் இறுதி அடக்கத்தின் போது மேற்கொள்ளப்பட்டும் சாஸ்திர, சம்பிரதாயங்களை செய்ய மயான பணியாளர்கள் தேவை.  ஏற்கனவே செய்து வந்த பணியாளர்கள் 11 பேரும் இதனைச் செய்ய மறுக்கும் நிலையில் புதிய பணியாளர்களையும் அச்சுறுத்துகின்றனர். எனினும் மாற்று ஏற்பாடுச் செய்து உடனடியாக மயானத்தை இயக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்றார் தனரமேஷ்.
   சென்னை மாகராட்சியின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே உள்ள மயானங்களில் உள்ள பணியாளர்கள் எல்லாம் நிரந்தர ஊழியர்களாக இருக்கும் போது திருவொற்றியூர் மயான பணியாளர்களின் கோரிக்கை நியாயமானதாகவே தெரிகிறது. எது எப்படி இருப்பினும் ஒன்று அனைத்து பிரச்னைகளையும் தீர்த்துவிட்டு மயானத்தை திறந்திருக்க வேண்டும். திறந்து வைத்துவிட்டால் பொதுமக்களின் நலன் கருதி பிரச்னைகளைச் சமாளித்து மயானத்தை செயல்படுத்த முனைய வேண்டும். இதுவே இந்த விசயத்தில் பெரும்பாலோரின் கருத்தாக உள்ளது. 

காலாவதியான எண்ணெய்க் குழாய்களுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை பயன் தருமா?

-மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் 

திருவொற்றியூர்:
காலாவதியான எண்ணெய்க் குழாய்களால் வடசென்னைக்கு  மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதுவும் புதிய குழாய்கள், கொள்கலன்களை அமைக்க மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிப்பதைப் பொருத்தே இதன் கால அளவு அமையும் எனத் தெரிகிறது. 
     தண்டையார்பேட்டை வரதராஜபெருமாள் கோயில் தெருவில் உள்ள சில வீடுகளின் ஆழ்குழாய்க் கிணறுகளில் பெட்ரோலிய எண்ணெய் கலந்த பிரச்னையை அடுத்து மாசுக் கட்டுப்பாடு வாரியங்கள், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். எனினும் எங்கிருந்து இந்த எண்ணெய் கசிந்து கிணறுகளுக்கு வந்தது?, மேலும் அது என்ன வகை எண்ணெய்? எந்த நிறுவனத்தின் குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டது? என்பதில் தொடர்ந்து குழப்பம்தான் நிலவுகிறது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தடை பலன் தருமா?:
    சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) தங்களுக்கு வருவது கச்சா எண்ணெய் மட்டுமே. கிணறுகளில் காணப்பட்ட எண்ணெய் இதுவல்ல எனவும், இந்தியன் ஆயில் கார்போரேசன்  (ஐ.ஓ.சி.) நிறுவனம் தங்களது குழாய் வழியில் எவ்வித கசிவும் இல்லை எனவும், பாரத் பெட்ரோலியம் (பி.பி.சி.எல்.) நிறுவனம் இவ்வழியே செல்லும் குழாயில் எண்ணெய் கொண்டு செல்வதை சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தி விட்டோம் எனவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம்  இவ்வழியே எண்ணெய் எடுத்துச் செல்ல தடை விதிப்பதாக  மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.  இவ்வாறு தடை விதிக்கப்படுவதால் மட்டும் இப்பிரச்னை முடிந்துவிடும் என கருத முடியாது. பிறகு பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் பிரச்னை பெரிதாக உருவெடுக்கும் அபாயமும் இருக்கிறது என்கிறார் எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர்.  

பிரச்னையின் மூலமும், மாற்றுத் திட்டமும்:

      1969-ல் மணலியில் சி.பி.சி.எல் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆலைக்காக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை கொண்டு வர சென்னை துறைமுகத்திலிருந்து தண்டையார்பேட்டை வழியாக சுமார் 7 கி.மீ. நீளத்திற்கு 75 செ.மீ. விட்டுமுள்ள குழாய்கள் அமைக்கப்பட்டன. இதேபோல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை தண்டையார்பேட்டையில் உள்ள கொள் கலன்களுக்குக் கொண்டு வரவும் இதே காலத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டன. இங்கிருந்துதான் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கு பெட்ரோலிய பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதன் ஆயுள் காலம் 30 ஆண்டுகள் மட்டுமே. தற்போது சுமார் 45 ஆண்டுகள் பழமையாகிவிட்டன. எனவே இதனத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்கும்வரை ஆபத்தும் தொடரும் என்பதுதான் உண்மை நிலவரம். இதற்கான மாற்றுத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? 
ரூ.126 கோடி திட்டத்திற்கு விரைவில் அனுமதி: 
இது குறித்து சி.பி.சி.எல். நிறுவன அதிகாரிகள் கூறியது,
  காலாவதியான குழாய்களை தொடர் பயன்பாட்டில் வைத்திருப்பது ஆபத்தானது என்பதால்தான் ரூ.126 கோடி மதிப்பீட்டிலான புதிய குழாய்கள் பதிக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்தது. டி துறைமுகத்திலிருந்து எண்ணூர் விரைவுசாலை, மணலி சாலை வழியாக 17 கி.மீ. நீளத்திற்கு 105 செ.மீ. விட்டமுள்ள CARBON STEEL குழாய்களை பதிக்கும் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மைக் குழுமம் பரிசீலனை செய்த பிறகு கடந்த மே மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. பின்னர் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் (COASTAL REGULATION ZONE) துறை பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இத்திட்டத்திற்கு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளிக்க பரிந்துரைத்துள்ளது. தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக இத்திட்டம் காத்திருக்கிறது. ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒப்புதல் கிடைத்த 18 மாதங்களில் புதிய குழாய்களைப் பதித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வரமுடியும் என்றனர். 
சேமிப்பு கொள்கலன்கள் எண்ணூருக்கு மாற்றம்:
    தமிழகத்தில் IOC, BPCL,HPCL உள்ளிட்ட நிறுவனங்கள்தான் பெருவாரியாக எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன. துறைமுகங்களிலிருந்தும், சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும் பெட்ரோலிய எண்ணெய் வகைகளை குழாய் மூலம்  கொள்கலன்களுக்குக் கொண்டு வந்து சேமித்து வைக்கின்றன. இந்நிறுவனங்களின் கொள்கலன்கள் பெரும்பாலானவை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் தான் உள்ளன. மக்கள் நெருக்கும் அதிகமாக இருக்கும் இப்பகுதியில் இக்கலன்களை தொடர்ந்து வைத்திருப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. தற்போதைய சம்பவத்தால் இது மேலும் வலுத்துள்ளது. 
    இதனையடுத்து தங்களது சேமிப்பு இருப்பிடத்தை மாற்ற இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பி.பி.சி.எல் நிறுவனம் எண்ணூர் துறைமுகம் அருகே 60 ஏக்கர் பரப்பளவில் சேமிப்பு கொள்கலன்களை அமைக்கவும் இதற்கான இடத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. சமீபத்தில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனை சந்தித்து பி.பி.சி.எல். நிறுவன அதிகாரிகள் இதனை வலியுறுத்தியுள்ளனர். இதே போல் இதர நிறுவனங்களும் மாற்றுத் திட்டங்களை வகுத்து செயல்படுத்து முனைந்துள்ளன என்பதை தற்போதைய நிலை.
    எப்படி பார்த்தாலும் தற்போதைய நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு காலாவதியான குழாய்கள் பயன்பாட்டில் வைத்திருப்பது தவிர்க்க முடியாது. எனவே தடைவிதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால் பயன் ஏதும் இராது. அதனை விடுத்து மாற்றுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஒருங்கிணைந்து ஆர்வத்துடன் செயல்பட்டால் மட்டுமே 
வட சென்னை மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்பதே ஏதார்த்த உண்மை.

கழிவுநீர், குப்பைக் கழிவுளால் நாசமாகும் வடசென்னை கடற்கரை மாநகராட்சி நிர்வாகம் சிறப்புக் கவனம் செலுத்துமா?

முகவை.க.சிவகுமார்,
திருவொற்றியூர்:

வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணூர்வரை உள்ள நீண்ட கடற்கரை பகுதி கழிவு நீர் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் சுற்றுச் சூழல் சீர்கேடு அடைந்து வருகிறது.
முன்பு கடற்கரை கிராமங்களாக இருந்த  மைலாப்பூர், திருவல்லிக்கேணி, சென்னை பட்டணம், ராயபுரம், வண்ணையம்பதி, திருவொற்றியூர் உள்ளிட்டவைதான் முதலில் சென்னை மாநகரம் தோன்ற காரணமாக அமைந்தது என்பது வரலாற்று உண்மை.
சிறு படகுத் துறையாக இருந்த மெரினா இன்று ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.  லட்சக் கணக்கான மக்கள் காற்று வாங்கும் இடமாக மெரினா உள்ளது.  மெரினா, பெசன்ட் நகர், பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதிகளை பராமரிக்க, அழகுபடுத்த என சென்னை மாநகராட்சி ஆண்டு தோரும் கணிசமான தொகையைச் செலவு செய்கிறது. இதேபோல்  வடசென்னை கடற்கரையை பராமரிப்பதிலும் போதுமான கவனம் செலுத்த வேணடும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கடலரிப்பில் காணாமல் போன கோயில்:
   காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் நிறைந்த அழகிய கடற்கரைகள் முன்பு இருந்தன. மேலும் காசி விசுவநாதர் கோயில், பட்டினத்தார் கோயில், அகத்தியர் கோயில், ராமலிங்கர்மடம் என வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களும், அகலமான மணற்பரப்பும், மரங்கள் அடங்கிய தோப்புகளும் இக்கடற்கரைக்கு முன்பு அழகு சேர்த்தன. ஆனால் இப்பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட கடலரிப்பால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலம் கடலால் காவு கொள்ளப்பட்டு விட்டது. இதில் காசி விசுவநாதர் கோவில் போன்றவைகளும் கடலில் கரைந்துவிட்டன. இந்நிலையில் மீதி உள்ள பகுதியும் தற்போது குப்பை, கழிவுகள்  கொட்டப்படும் இடங்களாக மாறி வருவது இப்பகுதி மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.  
கடலில் கலக்கும் ரசாயனக் கழிவுகள்:
   மணலி,எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட ரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன. இவைகளிலிருந்து வெளியேற்றப்படும் ஆலைக் கழிவு நீர் வடசென்னை கடற்கரை பகுதியில்தான் கடலில் விடப்படுகின்றன.  இங்குள்ள இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் முக்கிய தொழிலே மீன் பிடிப்பதுதான். கடலில் தொடர்ந்து கலந்து வரும் ரசாயன கழிவுகளால் இப்பகுதியில் மீன்வளம் பெருமளவு குறைந்துபோய்விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடற்கரையில் கொட்டப்படும் குப்பைகள்:
    சென்னை மாநகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகள் இதற்கென உள்ள வளாகங்களில்தான் பெரும்பாலும் கொட்டப்படுகின்றன. ஆனால் வியாபார நிறுவனங்கள் நிறுவனங்கள் மற்றும் மாவு மில்கள் போன்றவற்றில் வெளியேற்றப்படும் குப்பைகள் எண்ணூர் விரைவு சாலையில் சுங்கச் சாவடி கடற்கரை பகுதி அருகே தொடர்ந்து கொட்டப்படுகின்றன. இதில் இரவு நேரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகள் அப்போதே தீவைக்கப்படுகின்றன. சுங்கச் சாவடியில்  புறக்காவல் நிலையம் இருந்தும் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்களைத் தடுப்பது எங்கள் வேலை அல்ல என்பது போல் உள்ளனர்.  
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் வாரியம்:
 
  திருவொற்றியூர் மண்டலத்தில் 14 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடை வசதி இல்லை. இப்பகுதியில்  சென்னைக் குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுமார் ரூ.110 கோடி மதிப்பீட்டிலான பாதாளச் சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகளும் சுமார் 7 ஆண்டுகளாக மந்த கதியில் நடைபெற்று வருகின்றன. பாதாளச் சாக்கடை வசதியில்லாத இப்பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீர் முறைப்படி கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்குத்தான் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் போதுமான கழிவு நீர் லாரிகள் இல்லாததால், அதிக நடை செல்ல வேண்டும் என்கிற கட்டாயத்தில் அகற்றப்படும் கழிவு நீர் அனைத்தும் அருகில் உள்ள கடற்கரை பகுதியில்தான் கொட்டுகின்றனர். மேலும் பாதாளச் சாக்கடையில் தேங்கும் கழிவுகளையும் கடற்கரையில்தான் குடிநீர் வாரியம் கொட்டுகிறது.
சிறப்புத் திட்டம் வேண்டும்:
   இப்பிரச்னை குறித்து  திருவொற்றியூரைச் சேர்ந்த சமூக நல ஆர்வலர்கள் கோட்டீசுவரன், சுப்பிரமணி ஆகியோர்  கூறியது,
    கடலரிப்பைத் தடுக்க தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்ட பிறகு கடற்கரை நெடுகிலும் மணல் குவிந்துள்ளது. துறைமுக இணைப்பு சாலைகள் (EMRIP) திட்டத்தின் கீழ் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆனாலும்  இங்கு தொடர்ந்து குப்பைகள்,  கழிவுநீர், ரசாயனக் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் இப்பகுதி தொடர்ந்து மாசடைந்து வருகிறது. கடலோரப் பகுதிகளில்  சிறிய கட்டங்கள், பொதுக் கழிப்பிடங்கள் கட்டுவதற்குக் கூட எதிர்ப்பு தெரிவிக்கும் கடலோர மண்டல மேலாண்மை குழுமம் (COASTAL ZONE MANAGEMENT AUTHORITY) கூட இது போன்ற சீர்கேடுகளைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. சுமார் 20 லட்சம் பேர் வசிக்கும்  வடசென்னையில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை. எனவே வட சென்னை கடற்கரை பகுதியை அழகுபடுத்துவது குறித்து ஆய்வு செய்து ஒரு சிறப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவிக்க வேண்டும் என்றனர். 
    மொத்தத்தில் தென் சென்னைக்கு நிகராக வடசென்னையும் வளம் பெறுமா?. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்துமா? வடசென்னை மக்கள் பிரதிநிதிகள் முன்முயற்சி எடுப்பார்களா? இவைகளே இப்பகுதி மக்களின் பொதுவான கேள்விகளாக உள்ளன