-மாற்றுத் திட்டங்களைச் செயல்படுத்த 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்
திருவொற்றியூர்:
காலாவதியான எண்ணெய்க் குழாய்களால் வடசென்னைக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதுவும் புதிய குழாய்கள், கொள்கலன்களை அமைக்க மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளிப்பதைப் பொருத்தே இதன் கால அளவு அமையும் எனத் தெரிகிறது.
தண்டையார்பேட்டை வரதராஜபெருமாள் கோயில் தெருவில் உள்ள சில வீடுகளின் ஆழ்குழாய்க் கிணறுகளில் பெட்ரோலிய எண்ணெய் கலந்த பிரச்னையை அடுத்து மாசுக் கட்டுப்பாடு வாரியங்கள், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். எனினும் எங்கிருந்து இந்த எண்ணெய் கசிந்து கிணறுகளுக்கு வந்தது?, மேலும் அது என்ன வகை எண்ணெய்? எந்த நிறுவனத்தின் குழாயிலிருந்து கசிவு ஏற்பட்டது? என்பதில் தொடர்ந்து குழப்பம்தான் நிலவுகிறது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தடை பலன் தருமா?:
சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) தங்களுக்கு வருவது கச்சா எண்ணெய் மட்டுமே. கிணறுகளில் காணப்பட்ட எண்ணெய் இதுவல்ல எனவும், இந்தியன் ஆயில் கார்போரேசன் (ஐ.ஓ.சி.) நிறுவனம் தங்களது குழாய் வழியில் எவ்வித கசிவும் இல்லை எனவும், பாரத் பெட்ரோலியம் (பி.பி.சி.எல்.) நிறுவனம் இவ்வழியே செல்லும் குழாயில் எண்ணெய் கொண்டு செல்வதை சில மாதங்களுக்கு முன்பே நிறுத்தி விட்டோம் எனவும் தெரிவித்துள்ளன. இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இவ்வழியே எண்ணெய் எடுத்துச் செல்ல தடை விதிப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இவ்வாறு தடை விதிக்கப்படுவதால் மட்டும் இப்பிரச்னை முடிந்துவிடும் என கருத முடியாது. பிறகு பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் பிரச்னை பெரிதாக உருவெடுக்கும் அபாயமும் இருக்கிறது என்கிறார் எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர்.
பிரச்னையின் மூலமும், மாற்றுத் திட்டமும்:
1969-ல் மணலியில் சி.பி.சி.எல் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆலைக்காக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை கொண்டு வர சென்னை துறைமுகத்திலிருந்து தண்டையார்பேட்டை வழியாக சுமார் 7 கி.மீ. நீளத்திற்கு 75 செ.மீ. விட்டுமுள்ள குழாய்கள் அமைக்கப்பட்டன. இதேபோல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகளை தண்டையார்பேட்டையில் உள்ள கொள் கலன்களுக்குக் கொண்டு வரவும் இதே காலத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டன. இங்கிருந்துதான் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கு பெட்ரோலிய பொருள்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இதன் ஆயுள் காலம் 30 ஆண்டுகள் மட்டுமே. தற்போது சுமார் 45 ஆண்டுகள் பழமையாகிவிட்டன. எனவே இதனத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருக்கும்வரை ஆபத்தும் தொடரும் என்பதுதான் உண்மை நிலவரம். இதற்கான மாற்றுத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?
ரூ.126 கோடி திட்டத்திற்கு விரைவில் அனுமதி:
இது குறித்து சி.பி.சி.எல். நிறுவன அதிகாரிகள் கூறியது,
காலாவதியான குழாய்களை தொடர் பயன்பாட்டில் வைத்திருப்பது ஆபத்தானது என்பதால்தான் ரூ.126 கோடி மதிப்பீட்டிலான புதிய குழாய்கள் பதிக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்தது. டி துறைமுகத்திலிருந்து எண்ணூர் விரைவுசாலை, மணலி சாலை வழியாக 17 கி.மீ. நீளத்திற்கு 105 செ.மீ. விட்டமுள்ள CARBON STEEL குழாய்களை பதிக்கும் இத்திட்டத்திற்கு தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மைக் குழுமம் பரிசீலனை செய்த பிறகு கடந்த மே மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. பின்னர் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் கடற்கரை ஒழுங்காற்று மண்டலம் (COASTAL REGULATION ZONE) துறை பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு இத்திட்டத்திற்கு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளிக்க பரிந்துரைத்துள்ளது. தற்போது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக இத்திட்டம் காத்திருக்கிறது. ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஒப்புதல் கிடைத்த 18 மாதங்களில் புதிய குழாய்களைப் பதித்து செயல்பாட்டுக்குக் கொண்டு வரமுடியும் என்றனர்.
சேமிப்பு கொள்கலன்கள் எண்ணூருக்கு மாற்றம்:
தமிழகத்தில் IOC, BPCL,HPCL உள்ளிட்ட நிறுவனங்கள்தான் பெருவாரியாக எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன. துறைமுகங்களிலிருந்தும், சுத்திகரிப்பு ஆலைகளிலிருந்தும் பெட்ரோலிய எண்ணெய் வகைகளை குழாய் மூலம் கொள்கலன்களுக்குக் கொண்டு வந்து சேமித்து வைக்கின்றன. இந்நிறுவனங்களின் கொள்கலன்கள் பெரும்பாலானவை தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை பகுதிகளில் தான் உள்ளன. மக்கள் நெருக்கும் அதிகமாக இருக்கும் இப்பகுதியில் இக்கலன்களை தொடர்ந்து வைத்திருப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. தற்போதைய சம்பவத்தால் இது மேலும் வலுத்துள்ளது.
இதனையடுத்து தங்களது சேமிப்பு இருப்பிடத்தை மாற்ற இந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பி.பி.சி.எல் நிறுவனம் எண்ணூர் துறைமுகம் அருகே 60 ஏக்கர் பரப்பளவில் சேமிப்பு கொள்கலன்களை அமைக்கவும் இதற்கான இடத்தை பெறும் முயற்சியில் இறங்கியுள்ளது. சமீபத்தில் மத்திய தொழில் மற்றும் வர்த்தக இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனை சந்தித்து பி.பி.சி.எல். நிறுவன அதிகாரிகள் இதனை வலியுறுத்தியுள்ளனர். இதே போல் இதர நிறுவனங்களும் மாற்றுத் திட்டங்களை வகுத்து செயல்படுத்து முனைந்துள்ளன என்பதை தற்போதைய நிலை.
எப்படி பார்த்தாலும் தற்போதைய நிலையில் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு காலாவதியான குழாய்கள் பயன்பாட்டில் வைத்திருப்பது தவிர்க்க முடியாது. எனவே தடைவிதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளால் பயன் ஏதும் இராது. அதனை விடுத்து மாற்றுத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஒருங்கிணைந்து ஆர்வத்துடன் செயல்பட்டால் மட்டுமே
வட சென்னை மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்பதே ஏதார்த்த உண்மை.
No comments:
Post a Comment