ஆண்டுக் கணக்கில் நீடித்தப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு
துறைமுக இணைப்புச் சாலை பணிக்காக செரியன் நகர் வீடுகள் அகற்றம்
திருவொற்றியூர், அக்.5: சென்னை, எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைகள் விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட தண்டையார்பேட்டை செரியன் நகரில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான இழப்பீட்டினைப் பெறுவதில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் பயனாளிகளுக்கிடையே ஆண்டுக் கணக்கில் நீடித்து வந்த பிரச்னைக்கு சமீபத்தில் தமிழக அரசு சுமூகத் தீர்வு ஏற்படுத்தியது.
இதனையடுத்து இவ்வீடுகள் அனைத்தும் திங்கள்கிழமை ராட்சத கிரேன்கள், புல்டோசர் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. இதன் மூலம் இத்திட்டத்திற்கு நீண்ட நாள்களாக இருந்து வந்த தடங்கல்கள் நீங்கியுள்ளன.
சென்னை, எண்ணூர் துறைமுகங்கள் மற்றும் வடசென்னையில் நிலவி வரும் கண்டெய்னர் லாரி போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் விதமாக ரூ. 600 கோடி மதிப்பீட்டிலான துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டப்பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்ற வருகின்றன. இதில் சுமார் 90 சதவீத பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆங்காங்கு சில இடங்களில் சாலை அமைப்பதற்கான நிலங்களைக் கையகப்படுத்துவதில் தொடர்ந்து தடங்கல்கள் இருந்து வருகிறது.
செரியன் நகரில் பிரச்னை என்ன?:
தண்டையார் பேட்டை செரியன் நகரில் குடிசைமாற்று வாரியம் சார்பில் குறைந்த விலையில் அளிக்கப்பட்ட காலிமனையில் அமைக்கப்பட்டிருந்த 41 வீடுகள் துறைமுக இணைப்புச் சாலை திட்டப்பணிகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டன. இவ்வீடுகளில் 94 குடும்பங்கள் வசித்து வந்தன. இதில் காலி மனைகளுக்கான தவணைகளைச் செலுத்தி
விற்பனை பத்திரத்தை பெரும்பாலான பயனாளிகள் பெற்றிருக்கவில்லை. இந்நிலையில்
மனை மற்றும் வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு உரிமை யாருக்கு என்பதில் குடிசை மாற்று வாரியத்திற்கும், பயனாளிகளுக்கும் தொடர்ந்து பிரச்னை இருந்து வந்தது. இப்பிரச்னை நீண்ட நாள்களாக இருந்து வந்த நிலையில் இந்த இடத்தைத் தவிர்த்து மீதமுள்ள இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டன.
இதனால் இப்பகுதியில் மட்டும் குறுகலான சாலையில் போக்குவரத்து இருந்து வந்தது.
இந்நிலையி்ல் இப்பிரச்னையில் சமீபத்தில் சுமூகத் தீர்வு ஏற்பட்டது. இதன்படி குடிசை மாற்று வாரியம் சார்பில் தண்டையார்பேட்டை ரங்கநாதபுரம் திட்டப்பகுதியில் 94 குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கப்பட்டன. மேலும் தற்போது இடிக்கப்படும் வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டன்.
இதனையடுத்து ஒரு சில தினங்களுக்கு முன்பு அனைத்து குடும்பங்களும் புதிய வீடுகளில் குடியமர்த்தப்பட்டனர். இதனையடுத்து திங்கள்கிழமை ராட்சத கிரேன்கள், புல்டோசர்கள் உதவியுடன் 41 வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டு அகற்றப்பட்டன.
நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம்:
இந்நிலையில் இத்திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பத்திலுள்ள குடிசைகள் இதுவரை அகற்றப்படவில்லை. இங்கு பெரும்பாலானோர் மீனவர்கள் என்பதால் இங்கிருந்து வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி எர்ணாவூரில் அமைக்கப்பட்டுள்ள
குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு இடம்பெயர மறுத்து வருகின்றனர். இதேபோல் எண்ணூர் விரைவு சாலையில் காலடிப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள முத்துகிருஷ்ணசுவாமி மடம், ஜீவ வார்த்தை சபை ஆகியவற்றையும் இதுவரை அகற்ற முடியாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திணறி வருகிறது. இந்த இடங்களைத் தவிர்த்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் இந்த மூன்று இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து இருந்து வருகிறது. மேலும் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயமும் தொடர்கிறது. இந்த மூன்று இடங்களுக்கான பிரச்னை அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த இடங்களை விரைவில் கையகப்படுத்தி உடனடியாக சாலை விரிவாக்கம் செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
செரியன் வீடுகளை இடிப்பதற்கான பணிகளை துறைமுக இணைப்புச் சாலை திட்ட இயக்குனர் சுரேந்திரநாத், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழக முதுநிலை மேலாளர் ரங்கராஜன், தண்டையார்பேட்டை தாசில்தார் சத்யபிரகாஷ் உள்ளிட்டோர் முன்னின்று மேற்பார்வையிட்டனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதைத் தவிர்க்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.