மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
திருவொற்றியூர், அக்.11:சென்னையை அடுத்து மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
சென்னையை அடுத்த மணலி புதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி 10 நாள் திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவினையொட்டி கடந்த 10 நாள்களாக ஏடுவாசித்தல், அலங்கார வாகனத்தில் அய்யா வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி ஞாயிற்றுக்கிழமை 36 அடி உயரம் கொண்ட திருத்தேர்
அய்யா வழி பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. பின்னர் வீதிகள் வழியாக உலா வந்த தேர் பின்னர் இருப்பு சேர்ந்தது. தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி அன்னதானம், தண்ணீர், மோர்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், நாங்குனேரி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.நாராயணன், மணலி மண்டலக் குழு தலைவர் தங்கிசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மபதி தலைவர் தலைவர் தங்கபெருமாள், செயலாளர் தேவதாஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment