காட்டுப்பள்ளி எல் அன் டி துறைமுகத்தை நிர்வகிக்கும் பணியில் அதானி குழுமம்
சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்கத் திட்டம்
திருவொற்றியூர், அக்.4:எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி எல் அன் டி துறைமுகத்தை இயக்கி பராமரிக்கும் பணியை (Operation and Maintenance) குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அதானி குழுமம் (APSEZ-Adani Ports and Special Economic Zone) கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஏற்றுள்ளது.
தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் உதவியுடன் காட்டுப்பள்ளியில் எல் அன் டி மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) இணைந்து எல் அன் டி கப்பல் கட்டும் தளம் (L & T Shipbuilding Ltd) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு இதன் மூலம் சுமார் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் பணி கடந்த 2009-ல் தொடங்கியது. இதனையடுத்து சுமார் 1,200 ஏக்கர் காலி நிலத்தை நீண்டகால குத்தகை அடிப்படையில் தமிழக அரசு இந்நிறுவனத்திற்கு வழங்கியது. கடந்த 2013-ஜனவரி மாதம் இத்துறைமுகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சரக்குப் பெட்டக முனையம், கப்பல் கட்டும் தளம், கடல்சார் கட்டுருவாக்கம் வசதி, துறைமுகத்திற்கான கிடங்குகள் ஆகிய நான்கு துணை நிறுவனங்கள் இத்துறைமுக வளாகத்தில் இயங்கி வருகின்றன. இதில் சரக்குப் பெட்டக முனையத்தை பிலிப்பைன்ஸ் நாட்டு நிறுவனம் இயக்கி வந்தது. ஆனால் போதுமான கப்பல்கள் வராதது, மற்றும் கப்பல்கள் வந்தால் அதற்கு தேவையான குறைந்தபட்ச சரக்குப் பெட்டகங்கள் கிடைக்கப் பெறாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சரக்குப் பெட்டக முனையத்தை லாபகரமாகக் கையாள்வதில் கடந்த இரு ஆண்டுகளாக துறைமுக நிர்வாகம் போராடி வந்தது.
பங்குச் சந்தையில் தகவல்:
இந்நிலையில் இத்துறைமுகத்தை ஒட்டு மொத்தமாக முழுமையாக அதானி குழுமம் வாங்கவிருப்பதாக கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதிலுள்ள சரக்குப் பெட்டக முனையத்தை மட்டும் இயக்கி பராமரிக்கும் பொறுப்பை ப்பை அதானி குழுமம் ஏற்றுள்ளதாக பம்பாய் பங்கு பரிவர்த்தனை மையத்தில் (BSE-Bombay Stock Exchange)-ல் கடந்த புதன்கிழமை உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கப்பல் கட்டும் தளம் உள்ளிட்ட இதர துணை நிறுவனங்களை எல் அன் டி நிர்வாகமே தொடர்ந்து நிர்வாகிக்கும் எனவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமை நிர்வாக அதிகாரி சி.ஜே.ராவ்:
இதனையடுத்து வெள்ளிக்கிழமை அதானி குழும இயக்குநர் (பெட்டகஉயர்மட்டக் குழு தலைவர் என்னரசு தலைமையில் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்குச் சென்று எல் அன் டி அதிகாரிகளிடமிருந்து பொறுப்புகளை ஏற்றனர். மேலும் இம்முனையத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சி.ஜே.ராவ் நியமிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. சி.ஜே.ராவ் சென்னைத் துறைமுகத்தின் துணைத் தலைவராகவும், தூத்துக்குடி, பாரதீப் துறைமுகத் தலைவராகவும் பொறுப்பு வகித்து ஓய்வு பெற்றவர். பின்னர் அதானி குழுமத்தில் இணைந்தார் சி.ஜே.ராவ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு மாதத்திற்கு துறைமுகம் குறித்த முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பிறகுதான் இரு நிறுவனங்களுக்கிடையேயான லாபப் பங்கீடு இறுதி செய்யப்படும் என இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
தென்னிந்தியாவில் தடம் பதிக்கும் அதானி குழுமம்:
அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் கடந்த நிதியாண்டில் ஆண்டுக்கு சுமார் ரூ.650 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் முந்த்ரா துறைமுகம் ஆண்டுக்கு சுமார் 120 மில்லியன் சரக்குகளைக் கையாண்டு வருகிறது. இது தவிர ஹஜிரா, துனா டெக்ரா, டாம்ரா,
மர்முகோவா, விசாகபட்டணம் உள்ளிட்ட துறைமுகங்களில் உள்ள முனையங்களை
இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது. மேலும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் சரக்குப் பெட்டக முனையம் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கேரளாவில் ரூ.4 ஆயிரம் கோடியில் அமைய உள்ள விளிஞ்சியம் சர்வதேச துறைமுகத்தை அமைக்கும் பணியை அதானி குழுமம் ஏற்றுள்ள நிலையில் காட்டுப்பள்ளி துறைமுகத்தை இக்குழுமம் ஏற்றுள்ளது.
சர்வதேச கடல் வழிப் பாதை:
சர்வதேச கடல் வழிப் பாதை என்பது தென்னிந்தியாவை ஒட்டியே அமைந்துள்ளது. இதனால்தான் சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட துறைமுகங்கள் சர்வதேச அளவில் பெரும் அளவிலான சரக்குகளைக் கையாளுகின்றன. எனவே தமிழகம் மற்றும் கேரளாவில் அதி நவீன முனையங்களை ஏற்படுத்தி நிர்வகிப்பதன் மூலம உலகின் பல்வேறு துறைமுகங்களிலிருந்து இந்தியாவிற்கு வரும் சரக்குப் பெட்டகங்களை நேரடியாகக் கையாள முடியும். இதன் மூலம் உலக அளவில் அதானி குழுமம் வளர்ச்சிய அடைய முடியும் என்பதால்தான் சமீபத்தில் தொடர்ந்து தென்னிந்திய துறைமுகங்களில் அதானி குழுமம் ஆர்வம் செலுத்தி வருவதாக இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment