ஒரே நாளில் கணவன், மனைவி மாரடைப்பால் சாவு
மணலியில் சோகம்
திருவொற்றியூர், அக்.28:மணலியில் ஒரே நாளில் கணவன், மனைவி மாரப்படைப்பால் இறந்து போன சம்பவம் மணலி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மணலி அண்ணா தெருவில் வசிப்பவர் சுந்தரம் (65. தையல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி பாப்பா (60). இவர்களுக்கு கலா, தனலட்சுமி என இரு மகள்கள் உள்ளனர். இவர்களுக்குத் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். சுந்தரமும் அவரது மனைவி பாப்பாவும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் பாப்பாவுக்கு உடல் நலம் குன்றியதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். செவ்வாய்க்கிழமை மனைவி பாப்பாவை மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு சோகத்துடன் பூந்தமல்லியில் உள்ள மகள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது திடீரென சுந்தரத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போய்வி்ட்டார். பின்னர் சுந்தரத்தின் சடலம் மணலிக்கு எடுத்துவரப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இறுதிச் சடங்கு செய்வதற்காக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாப்பாவை உறவினர்கள் புதன்கிழமை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
அப்போது கணவரின் சடலத்தைப் பார்த்து துக்கம் தாளாமல் கதறி அழுத பாப்பா திடீரென மயங்கி கீழே சரிந்தார். பின்னர் உடனடியாக பாப்பாவைக் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துபோய்விட்டாதாக தெரிவித்தனர். இதனையடுத்து பாப்பாவின் சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு கணவன் சுந்தரத்தின் உடல் அருகே வைக்கப்பட்டது. பின்னர் இருவரது சடலங்களும் இறுதி அஞ்சலிக்குப் பிறகு புதன்கிழமை மணலி மயானத்தில் எரியூட்டப்பட்டன.
சுந்தரமும், பாப்பாவும் தனியே வசித்தாலும் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்தோடு இருப்பார்கள். ஒருவர் இழப்பை மற்றொருவர் தாங்க இயலாமல் இருவரும் ஒரே நாளில் இறந்து போனது பரிதாபமானதுதான் என அருகில் வசிப்போர் தெரிவித்தனர்.
அன்றில் பறவைகள் பிரியாது.பிரிந்தால் உயிர் தரியாது
ReplyDeleteசுந்தரமும் பாப்பாவும் அன்றிலிருந்து அன்றிலாகவே இன்றுவரை வாழ்ந்தார்கள். மரணம் இவர்களை இணைத்தது.மா.கி