திருவொற்றியூர், எண்ணூரில் 1,466 குடும்பங்களுக்கு அரசு இலவச பட்டா
அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார்
திருவொற்றியூர், செப்.27:திருவொற்றியூர், எண்ணூரில் 1,466 குடும்பங்களுக்கு அரசு இலவச பட்டாவை பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா சனிக்கிழமை வழங்கினார்.
திருவொற்றியூர் சாத்துமாநகர் பகுதியில் பல்வேறு நகர் பகுதிகள் உள்ளன. இங்குள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான பயன்பாடில்லாத நிலங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.இதேபோல் எண்ணூர் பகுதியில் மாநராட்சி முதலாவது வார்டு பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இதுவரை இவர்களுக்கு அரசு பட்டா வழங்கப்படவில்லை. இதே போல் திருவொற்றியூர் தொகுதியில் சுமார் 65 ஆயிரம் குடும்பங்கள் பட்டா இன்றி வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனர் ஆண்டுகளாக அரசு பயன்பாடு இல்லாத நிலங்களில் வசித்து வந்தனர்.
இக்குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு நிலவரித் திட்டத்தின் கீழ் இலவச பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டு கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கென சிறப்பு தாசில்தார் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இதுவரை சுமார் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 1,466 குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சிகள் சனிக்கிழமை திருவொற்றியூர், மற்றும் எண்ணூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையும், திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன் முன்னிலையும் வகித்தனர். இதில் கலந்து கொண்டு பால்வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா திருவொற்றியூரில் 1006 பயனாளிகளுக்கும், எண்ணூரில் 460 பயனாளிகளுக்கும் அரசு பட்டாக்களை வழங்கினார்.
இதன் மொத்த பரப்பளவு சுமார் 32 ஏக்கர் எனவும், நிலத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.282 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அம்பத்தூர் ஆர்.டி.ஒ. வீரப்பன், மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் மு.தனரமேஷ், முன்னாள் எம்.எல்.ஏ. த.ஆறுமுகம், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment