Tuesday, 30 October 2012

வடக்கு வாழ்கிறதா? தேய்கிறதா?



கழிவுநீர், குப்பைகளால் நாசமாகும் வடசென்னை கடற்கரை

சிறப்புத் திட்டத்தை அரசு அறிவிக்க கோரிக்கை

முகவை.க.சிவகுமார்

                                       வடசென்னையில் காசிமேடு முதல் எண்ணூர்வரை உள்ள நீண்ட கடற்கரை பகுதி கழிவு நீர் மற்றும் குப்பைகளால் சுற்றுச் சூழல் சீர்கேடு அடைந்து வருகிறது.
                                     ஒரு காலத்தில் கடற்கரை கிராமங்களாக இருந்த  மைலாப்பூர், திருவல்லிக்கேணி, சென்னைபட்டணம், வண்ணையம்பதி,  திருவொற்றியூர் உள்ளிட்டவைதான் இன்று சென்னை மாநகராக மாறியது என்றால் அது மிகையல்ல.   நாகரீகம், அறிவியல் வளர்ச்சியால் கடற்கரை கிராமங்கள் நகரங்களாக உருமாறி விட்டன.
                                 சிறு படகு துறையாக இருந்த மெரினா இன்று ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.  லட்சக் கணக்கான மக்கள் மூச்சு வாங்கும் இடமாக மெரினா மாறிவிட்டது என்றே கூறலாம். பெசன்ட் நகர் , பட்டினம்பாக்கம் ஆகிய இடங்களிலும் கடற்கரை மக்கள் பயன்பாட்டில் உள்ளது.  தமிழக அரசு மெரினாவை அழகுபடுத்த, பராமரிக்க என ஆண்டு தோரும் கணிசமான தொகையைச் செலவு செய்கிறது. தென் சென்னையில் வசிப்போர்  மெரினாவில் காலை நேரத்தில் நடைபயிற்சி செல்வதை தனி சுகமென கருதுகின்றனர்.
கடலரிப்பில் காணாமல் போன கோயில்:   ஆனால் வடசென்னையில் உள்ள  நீண்ட கடற்கரை பகுதி தற்போது குப்பை கொட்டும் இடங்களாகவும கழிவு நீர் வடிகால்களாவும் மாறி வருவதை அரசு
கண்டும் காணமால் இருந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.  காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் மணல் நிறைந்த அழகிய கடற்கரைகள் முன்பு இருந்தன.  மேலும் காசி விசுவநாதர் கோயில், பட்டினத்தார் கோயில், அகத்தியர் கோயில், ராமலிங்கர்மடம் என வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களும், அகலமான மணற்பரப்பும், மரங்கள் அடங்கிய தோப்புகளும் இக்கடற்கரைக்கு அழகு சேர்த்தன.  ஆனால் சென்னைத் துறைமுக விரிவாக்கப்பணிகளால்  ஏற்பட்ட கடலரிப்பால் வடசென்னை கடற்கரையின் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவு நிலத்தை கடல் காவு கொண்டு விட்டது. இதில் கடலில் மூழ்கிய சிறப்பு மிகுந்த காசி விசுவநாதர் கோவிலும் அடக்கம்.
கடலில் கலக்கும் கழிவுநீர்:
   மணலி,எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்ட உரம், ரசாயனம் தயாரிக்கும் கனரக ஆலைகள் உள்ளன. இவைகளிலிருந்து வெளியேற்றப்படும் ஆலைக் கழிவு நீர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் நகராட்சிகளில் கழிவு நீரும் கடலில்தான் கலக்கின்றன. இதனால் கழிவுநீர் கலக்கும் பகுதியில் மக்கள் நடமாடமுடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
இப்பகுதியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களின் முக்கிய தொழிலே மீன் பிடிப்பதுதான். கடலில் தொடர்ந்து கலந்து வரும் ரசாயன கழிவுகளால் இப்பகுதியில் மீன்வளம் பெருமளவு குறைந்துபோய்விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குப்பை கொட்டுமிடம்:
சென்னை மாநகராட்சியால் சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூரில் உள்ள வளாகத்தில் கொட்டப்படுகின்றன. ஆனால் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாவு மில்கள் போன்றவற்றில் வெளியேற்றப்படும் குப்பைகள் எண்ணூர் விரைவு சாலையில் சுங்கச் சாவடி கடற்கரை அருகே வண்டி வண்டியாகக் கொ்ட்டப்படுகின்றன. இதில் இரவு நேரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக், ரப்பர் கழிவுகள் அப்போதே தீவைக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் புகைமண்டலத்தால் வாகனங்களில் செல்வோர் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். காசிமேடுமுதல் நல்ல தண்ணீர் ஓடைக் குப்பம்வரை குப்பைகளால் பல இடங்களில் 'மலைக்குன்றுகள்' தோன்றியுள்ளதைக் காணலாம்.
   திருவொற்றியூர் கடற்கரையிலும் இதேபோல் தோடர்ந்து குப்பைகள் கடற்கரையில் கொட்டப்படுகின்றன. திருவொற்றியூர் கடற்கரை, சுங்கச் சாவடி ஆகிய இடங்களில்  ஒரு புறக்காவல் நிலையங்கள் இருந்தும் குப்பை கொட்டுவதைத் தடுப்பது தங்கள் வேலை அல்ல என போலீஸாரும் கண்டு கொள்வதில்லை.
சமூக அமைப்பு கோரிக்கை:
இது குறித்து திருவொற்றியூர் சமூக சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கோட்டீசுவரன் கூறியது,
வடசென்னையில் நீண்ட நெடிய கடற்கரை கடலரிப்பால் பாதிப்பிற்கு உள்ளானது. ஆனால் தற்போது இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளதால் கடற்கரை நெடுகிலும் மணல் குவிந்துள்ளது. ஆனால் இப்பகுதியில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதாலும், கழிவுநீர்
கலப்பதாலும் கடற்கரை பகுதி கடுமையாக மாசடைந்து உள்ளது. பல பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. சுமார் 20 லட்சம் பேர் வசிக்கும்  வடசென்னையில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லை. துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்திற்காக
கடலோர மீனவ மக்கள் அடுக்குமாடி வீடுகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
எனவே சாலை திட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவேறும் என உறுதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் வட சென்னை கடற்கரை பகுதியை அழகுபடுத்தும் சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இதன்மூலம் மெரினா போல் இப்பகுதியும் அழகாக மாறும். முதற்கட்டமாக் குப்பைகள் கொட்டுவதையும், கழிவுநீர் கலப்பதையும் உடனடியாக தடுக்க வேண்டும் என்றார் கோட்டீசுவரன்.
  தெற்கு வாழ்கிறது! வடக்கு தேய்கிறது! என்ற கோஷம் கடந்த சில ஆண்டுகளாக
வடசென்னைவாசிகள் ஓங்கி ஒலிக்கும் நிலையில் வடசென்னை கடற்கரையை
அழகுபடுத்தும் முயற்சிகளை அரசு உடனே துவங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.



                                                                              
       

                                                                              
       

மகளிர் சுய உதவி குழுக்கள் திசை மாறுகின்றனவா?

முகவை.க.சிவகுமார்,

'வறுமை ஒழிய வேண்டும் !  ஏழ்மையை விரட்ட வேண்டும் ! ' என்ற கோஷங்கள் எல்லாம் இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே நாம் கேட்டவைதான்.  இவற்றை எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற சிந்தனை மிகுந்த சினிமா கலைஞர்கள் எல்லாம் நகைச்சுவையாக விமர்ச்சித்தவை ஏராளம். காங்கிரஸ், ஜனதா, பாரதீய ஜனதா, தேசிய முன்னணி, தேசிய முற்போக்கு கூட்டணி, ஐக்கிய முன்னணி என பல்வேறு ஆட்சியாளர்கள் இந்தியாவை 63 ஆண்டு காலம் ஆண்டுள்ளனர். ஆனால் வறுமையும் ஒழியவில்லை. ஏழ்மையையும் விரட்ட முடியவில்லை. காரணம் என்ன?  வறுமையையும், ஏழ்மையையும் ஒழிக்க எந்த திட்டம் கொண்டுவந்தாலும் முதலில் துவக்கப்படும்போது அதன் குறிக்கோள்கள் சிறப்பாக இருக்கும்.  பின்னர் படிப்படியாக அரசியல் புகுந்துவிடும். பின்னர் திட்டமே செயலற்றுப் போய்விடும். இது கடந்த கால வரலாறு.
                        இதில் ஒன்றாக மகளிர் சுயஉதவி குழுக்கள் இயக்கமும் இணைந்து விடுமோ என்ற ஐயப்பாடு தற்போது எழுந்துள்ளது. 1989-ல் தர்மபுரி மாவட்டத்தில் சிறிய அளவில் துவங்கப்பட்ட இத்திட்டம் 21 ஆண்டுகளில் இது தல விருட்சமாய் வளர்ந்துள்ளது என்பது அதன் புள்ளிவிபரங்களைப் பார்த்தாலே புரியும்.
                    2010, மார்ச் 31 தேதியில் நகர்ப்புறம், ஊரகம் என மொத்த மகளிர் குழுக்களின் எண்ணிக்கை 4,41,311.   இவைகளி்ல் 69.91 லட்சம் பெண்கள் உறுப்பினராக உள்ளனர். இவர்களின் மொத்த சேமிப்புத் தொகை ரூ. 2,568 கோடி ஆகும்.  மொத்த வங்கிக் கடன் தொகை ரூ. 8,130 கோடி ஆகும்.  தமிழகம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 469 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (என்.ஜி.ஓ) மற்றும் நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் போன்ற மக்கள் அமைப்புகள் மூலம்
இத்திட்டம் சிறப்பாகவே செயல்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறது என்றாலும் கூட திட்டம் துவக்கப்பட்டபோது அறிவித்த நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா?
திட்டம் துவங்கியபோது....
             வறுவைக் கோட்டிற்கு கீழே (பி.பி.எல்) வாழும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் 10 முதல் 20 பேர் வரை உறுப்பினர்களாகக் கொண்டு முதலில் குழு அமைக்கப்படுகிறது. பின்னர் அவர்கள் சேமிக்கும் நிதியை 'பொதுநிதி' என்ற பெயரில் வரவு வைக்க வேண்டும். அந்த நிதியை வைத்து ஏதேனும் தொழில் தொடங்க வேண்டும். இதில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும். மேலும் தொழிலை விரிவு படுத்த வங்கிக் கடனைப் பெறலாம். வங்கியில் வாங்கிய கடனை தவணை தவறாமல் கட்டி வந்தால் இரண்டாவது கடனையும் வங்கிகள் வழங்கும். பின்னர் சுழல் நிதியாக ரூ.10 ஆயிரம் சுழல் நிதியாக வழங்கப்படுகிறது. ஆரம்பத்தில் குழு ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்ட கடன் தற்போது முதல் கடனாக ரூ.50 ஆயிரம், இரண்டாவதாக ரூ.ஒரு லட்சம், மூன்றாவதாக ரூ.1.50 லட்சம் என கடன் வழங்கப்படுகிறது.
                     இத்திட்டங்களைச் செயல்படுத்த தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் 1983-ல் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் மூலம் மாவட்டங்கள்தோறும் மகளிர் திட்டங்கள் என்ற பெயரில் சுய உதவி குழுக்கள் நிர்வகிக்கப்படுகின்றன. கணினி பயிற்சி, கட்டுமானம், ஓட்டுநர், ஆயத்த ஆடைகள், செவிலியர் போன்ற தொழிற்பயிற்சிகளும், தையல், காகிதப் பை, மெழுகுவர்த்தி, அப்பளம் தயாரித்தல் போன்ற பயிற்சிகளும் இத்திட்டம் மூலம் கற்றுத் தரப்படுகின்றன. இதுவரை 56,748 பெண்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல்வேறு பணிகள்  மூலம் ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரம் சிறப்படையும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
  கந்து வட்டி ஒழிந்து விட்டதா?சுய உதவிக் குழுக்கள் அமைத்து, தொழில் தொடங்கி, வாழ்வாதாரம் பெருகும் என நோக்கம் இருந்தாலும் 4.41 லட்சம் குழுக்களில் எத்தனை குழுக்கள் இவ்வாறு செயல்படுகின்றன என்ற கேள்விக்குறிதான். இது குறித்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றில் நீண்ட நாள்களாக முதுநிலை பயிற்றுனராக உள்ள மைக்கேல் கூறியது,
எந்த திட்டம் என்றாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். முதலில் நிறைகள் என்றால்....
   வீட்டில் அடைந்து கிடந்த பெண்களை வெளி உலகத்திற்கு கொண்டு வந்துள்ளது இத்திட்டம், கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, பெண் சிசுக்கொலை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது, பெண்கள் மூலம் வியாபாரம் பெருகி உள்ளது, தண்ட வட்டி, கந்து வட்டி குறைந்துள்ளது, சுய தொழில் வளர்ந்துள்ளது. குடும்பத்தில் பெண்களின் மதிப்பு உயர்ந்துள்ளது.சமூக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.
குறைகள் என்றால்.....
                      இருப்பினும் குழுக்கள் அமைப்பதில் பல்வேறு முறைகேடுகள் துவங்கி உள்ளன.  தொண்டு நிறுவனங்கள் குழுக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்புகின்றன. தொண்டு நிறுவனங்கள் அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி உள்ளன.  குழுக்களில் உள்ள பெண்களை தங்களுக்குச் சாதமாக்க அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். இதனால் கடந்த தேர்தல்களில் இது வெளிப்படையாக தெரிந்தது.  இது குறித்து மேலும் ஒரே பெண் பல்வேறு குழுக்களில் பங்கேற்று கடன் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்றார்.
                      ஏழை மக்களின் வாழ்வு உயர வேண்டும். இதற்கு திட்டங்கள் பல வேண்டும். இதில் மகளிர் சுய உதவி குழுத் திட்டமும் என்றுதான் ஐயமில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இந்த பயணம் கடந்த சில ஆண்டுகளாக திசை மாறி வருகிறது என பல்வேறு சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்து வருகின்றன. எனவே அரசு, தொண்டு நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் என பல்வேறு தரப்பினரும் இப்பயணத்தை நேர்வழிக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.




  

ஜாதி இரண்டொழிய வேறில்லை....




முகவை.க.சிவகுமார்.     
 
      சமூக ஆர்வலர் ஒருவர் ஆற்றிய உரை: தங்கள் வாழ்க்கையில் நடைபெற்றுள்ள மிக முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டு, அதற்கு உதவியோரை வரிசைப்படுத்துங்கள். பின்னர் அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள். அதில் தங்களுக்கு உதவியோர் பெரும்பாலானோர் வேறு சாதிகளைச் சேர்ந்த நண்பர்களாகவே இருப்பர். எனவே சொந்தக்காரர்கள் பெரும்பாலும் அதிகம் உதவியதில்லை. எனவே சாதிகளை மறந்து விட்டு மனித நேயத்தை வளர்க்க பாடுபடுங்கள் என முடித்தார்.  
      1906-ல் ஆங்கிலேயரின் ஏகபோக வணிக முறையைக் கண்டித்து சுதேசி கப்பல் கம்பெனி மூலம் தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பலோட்டினார் வ.உ.சி. இதனால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசும் பயணக் கட்டணத்தை ஒரு ரூபாயாக குறைத்தது. இதனையடுத்து சுதேசி கப்பல் நிறுவனமும் தனது கட்டணத்தை 50 பைசாவாக்கியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் பயணத்தையே இலவசமாக அறிவித்தது. விளைவு,  சுதேசி கப்பல்கள் காலியாகச் சென்றன. பெருத்த நட்டத்திற்கிடைய 1909-ல் சுதேசி கப்பல் கம்பெனி திவாலாகியது. 
     கோயம்பத்தூர் சிறைச்சாலையில் செக்கிழுத்த வ.உ.சி நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தபோது அவரை வரவேற்க வந்தவர்கள் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட இருவர் மட்டுமே. சொத்துக்களை, வழக்கறிஞர் உரிமத்தை இழந்து தன் வாழ்நாளின் இறுதி கட்டத்தில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே போராடி 1936 நவ.18-ல் வ.உ.சி. மறைந்தார்.
     1800-களின் தொடக்கத்தில் கொங்கு நாட்டின் பாளையக்காரர்களாக இருந்து  ஆங்கிலேயர்களை எதிர்த்தார் தீரன் சின்னமலை. ஏராளமான இளைஞர்களை ஒன்று திரட்டி பிரெஞ்ச் நாட்டின் ராணுவப் பயிற்சி பெற வைத்தார். இதே காலகட்டத்தில் திப்பு சுல்தான் தனது மைசூர் படை மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டபோது அவருக்கு தனது படையுடன் பகிரங்கமாக உதவியவர் சின்னமலை. திப்புசுல்தானைத் தோற்கடித்த ஆங்கிலேயர் தீரன் சின்னமலையையும் பழிதீர்த்தனர்.  காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆடிப் பெருக்கு தினமான 1805  ஜூலை 31-ல் சங்ககிரியில் தீரன் சின்னமலை தூக்கிலிட்டப்பட்டார்.
    முதல் இந்திய சுதந்திரப் போர் துவங்குவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வீரபாண்டிய கட்டப்பொம்மன், மருது பாண்டியர் உள்ளிட்டோர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினர். 1789-ல் 12 ஆயிரம் வீரர்களைத் திரட்டி ஆங்கிலேயரின் கூட்டாளியாகச் செயல்பட்ட ஆற்காடு நவாபை மருது பாண்டியர்கள்  விரட்டியடித்தனர். கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு தப்பி வந்த ஊமைத்துரைக்கு அடைக்கலம் வழங்கினர். இதனையடுத்து ஆங்கிலேயர்கள் மருது பாண்டயர்களை வீழ்த்தினர்.  மருது சகோதரர்கள் தூக்கிலிடுவதற்கு முன்பு கூறிய வரிகள் இவை: நண்பர்களுக்காக போராடினோம்....நாட்டிற்காக உயிர் துறக்கிறோம்.
     எட்டையபுரத்தில் சுப்பிரமணியனாகப் பிறந்து குறுகிய காலத்திலேயே தேசியக்கவி எனப் போற்றப்பட்டவர் பாரதி. தனது பாடல்கள் மூலம் தேசப்பற்றுவை ஊட்டி வளர்த்த பாரதி வறுமையில் வாடினார். 39 வயதில் பாரதி மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வெறும் பதினான்கு பேர் மட்டுமே.
      பசும்பொன் கிராமத்தில் பெருநிலக்கிழார் குடும்பத்தில் பிறந்த முத்துராமலிங்கத் தேவர் ஆங்கிலேயர்களின் அநீதிகளை எதிர்த்து இறுதிவரை போராடியவர். தான் பதவி வகித்த தொகுதியில் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக்கினார். ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலைத்தை தலித் சமுதாயத்தினருக்கே தானமாக வழங்கியவர்.  மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தலித்துகளை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் செய்தவர் தேவர். 
      விருதுநகரில் பிறந்த காமராஜர் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்கினார். 12 ஆயிரம் பள்ளிகளை 27 ஆயிரமாக உயர்த்தி கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றியவர். சென்னை ஐ.ஐ.டி,  திருச்சி பெல், நெய்வேலி என்.எல்.சி, வைகை, சாத்தனூர், கீழ்பவானி, மணிமுத்தாறு, அமராவதி உள்ளிட்ட அணைகளை கட்டியதால்தான் தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.  பிறந்த ஊரிலேயே தேர்தலில் காமராஜர் தோற்கடிக்கப்பட்டார்.
     மேலூர் தும்பைப்பட்டி குக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பி.கக்கன், சட்டமன்ற,மக்களவை உறுப்பினர், பொதுப்பணி, விவசாயம், காவல் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகப் பரிணமித்தவர்.  அரசியலில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த கக்கன் 1967 தேர்தலில் தோற்றுப் போனார். பின்னர் அரசியலில் இருந்தே ஓய்வு,  வறுமையில் வாடி இறந்து போனார்.
      மேலே குறிப்பிட்டுள்ளதியாகத் தலைவர்கள், அண்ணா, பெரியார், ராஜாஜி, எம்.ஜி.ஆர் போன்றவர்கலெல்லாம் கோலோச்சிய தமிழகம் சாதீய கட்சிகளின் பின்னால் செல்லும் நிலைமை. ஒரே சாதிக்கு பல கட்சிகள். அந்த பல கட்சிகளும் எதிர் எதிர் அணியில் கரம் சேர்ந்து தேர்தலைச் சந்திக்க உள்ளன. தேர்தல் தோல்வி பயம் கொடுப்பதால் தி.மு.க., அ.தி.மு.க-வும் அவர்களைச் சேர்த்துக் கொள்ள போட்டி போடுகின்றன.
    தற்போதைய நிலவரப்படி விடுதலை சிறுத்தைகள்-புதிய தமிழகம்,  மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், கொங்கு முன்னேற்ற பேரவை-கொங்கு இளைஞர் பேரவை, பா.ம.க-வன்னியர் கூட்டமைப்பு, மனித நேய மக்கள் கட்சி-முஸ்லீம் லீக், சமத்துவ மக்கள் கட்சி-பெருந்தலைவர் மக்கள் கட்சி என ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்காக போராடுவதாகக் கூறும் இவர்கள் வரும் தேர்தலில்  முண்டாசு தட்ட தயாராகிவிட்டனர். புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகளுக்கு இதுவரை இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்துள்ளன.
     முன் பத்திகளில் குறிப்பிட்டுள்ள தலைவர்கள் வாழ்ந்தபோது தங்கள் சாதியினரை முன்னிறுத்தியது இல்லை. நேசம், நாட்டுப்பற்று, தியாகம்தான் அவர்களின் இதயத்தில் கோலோச்சி இருந்தன. நாட்டின் சொத்தாக விளங்கக் கூடிய தியாக சீலர்களை எல்லாம் சாதி கண்ணோட்டத்தில் கொண்டு வருவது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, செய்த தியாகங்களை எல்லாம் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கிறது.
சாதி அமைப்புகள் இருக்க கூடாது என்பது நம் வாதம் அல்ல. பதவியை அடைய குறுக்கு வழியாக சாதிகள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்கனவே உள்ள பெரிய அரசியல் கட்சிகளும் துணை போகின்றனவே என்பதுதான் எதார்த்தவாதிகளின் கவலையாக உள்ளது. 
      சமுதாயப் பணிகளில் எப்போதும் அரசியலை அனுமதிக்கக் கூடாது.  சமுதாய உதவி என்பது முதலில் குடும்பத்திலிருந்து துவங்க வேண்டும்.  வசதியில்லாத அண்ணன், தம்பிகள், உற்றார், உறவினர்களுக்கு வசதி படைத்தவர்கள் உதவிட முதலில் உதவிட வேண்டும். பின்னர் அவரது கிராமம், இதர ஜாதியினர் என படிப்படியாக உதவி செய்தாலே அனைத்து சமுதாயத்தினரும் உயர்ந்திட முடியும். மற்றபடி அரசியலில் ஈடுபட்டுத்தான் அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு சேவையாற்ற முடியும் என்பது ஏற்கத் தக்கதல்ல என்கிறார் ஃபோகஸ் அகாடமியின் நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.சங்கரவடிவேலு.
    தமிழகத்தில் நகரத்தார்கள், ஜைன, கிருத்தவ, இந்து மிஷன்கள் போன்றவை ஓசையின்றி பல்வேறு அறப்பணிகளை நீண்டகாலமாகச் செய்து வருகின்றன. இவைகள் மீது சாதி முத்திரைகள் குத்தப்பட்டிருந்தாலும் கூட அவர்களின் சேவையில் அது ஒரு போதும் எதிரொலித்தது இல்லை. சமுதாயத்திற்கு சேவை செய்தே ஆகவேண்டும் என விரும்பும் சாதீயக் கட்சிகள் இது போன்ற அமைப்புகள் மூலம் சேவையைத் தொடரலாம்.  ஒரிரு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகி, ஒட்டுமொத்த சாதிக்காரர்களை முன்னேற்ற முடியும் எனில் அந்த சாதியைச் சேர்ந்த, அரசியல் கட்சிகள் மூலம் பதவியில் இருந்த நூற்றுக் கணக்கான எம்.எல்.ஏ-க்கள் செய்யாதது ஏன்?. சமுதாய வளர்ச்சிக்கு அரசியல் பதவி மட்டுமே பயனளிக்காது.
       மேலே குறிப்பிட்டுள்ளவர்களை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.  எதிர்காலத்தில் தங்களை முதலியார், ஐயர், தேவர், கவுண்டர், நாடார், வன்னியர், நாயுடு என கொச்சைப்படுத்துவார்கள் என தங்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.  அந்த மாமனிதர்கள் தமிழத்திற்கு சொந்தமானவர்கள். அவர்களை சாதீய முன்னோடிகளாக்கி கொச்சைப் படுத்த வேண்டாம் என்பதே பெரும்பாலோரின் வேண்டுகோள். ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஏழைகள்- பணக்காரர்கள் என்பதுதான் அது.
      சாதி வேற்றுமையைச் சொல்லி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் மாற்றுச் சாதியினரோடு சென்னையிலும், டெல்லியிலும்  கொஞ்சிக் குழாவுவதும், அவர்கள் வீடுகளில் லட்ச ரூபாய் விலையுள்ள உயர்ரக நாய்கள், மீன்கள் வளர்க்கப்படுவது எல்லாம் குக்கிராமத்தில் இருக்கும் சாதீயத் தொண்டனுக்குத் தெரியவா போகிறது?. அதுதான் அரசியல்வாதிகளின் பலமே.

                                                                              
       

Monday, 29 October 2012

கடலில் ஒரு நாள் நிகழ்ச்சி: போர்க் கப்பல்களில் கடற்படையினர் சாகசம்




திருவொற்றியூர், அக்.27.:இந்திய கடற்படையின் கிழக்கு மண்டலம் சார்பில் 'கடலில் ஒரு நாள்'  நிகழ்ச்சி சென்னைக்கு அருகே நடுக்கடலில் சனிக்கிழமை நடைபெற்றது.  இதில் 6 போர்க்கப்பல்கள் அணிவகுத்தன. இதில் பங்கேற்ற கடற்படை வீரர்கள் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.
                 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் பங்கேற்ற இந்திய கடற்படை படகுகளில் சென்று கராச்சி துறைமுகத்தைக் கைப்பற்றி வெற்றி கொண்டது.  இந்திய வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இந்த வெற்றி யை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி கடற்படை தினம் கொ்ண்டாடப்பட்டு வருகிறது.
 இதேபோல் இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.  இதில் முதல் நிகழ்ச்சியாக 'கடலில் ஒரு நாள்' என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.   சென்னைக்கு அருகே நடுக்கடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்  ஏவுகனைகளை ஏவும் வசதிகள் கொண்ட ஆயுதம் தாங்கிய கப்பல்கள் உள்ளிட்ட ஜலஸ்வா, ரானா, ரன்விஜய், கிர்பான், குலிஸ் மற்றும் கிர்ச் ஆகிய 6 கப்பல்கள் கலந்து கொண்டன.
           நடுக்கடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கடலில் தத்தளிப்போரைக் காப்பாற்றுவது,  போரின்போது
ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு பொருள்களை பரிமாற்றம் செய்வது, ஹெலிகாப்டரில் ரோந்து செல்வது, துப்பாக்கியால் சுடுவது போன்ற பல்வேறு சாகசங்களை கடற்படை வீரர்கள் செய்து காட்டினர்.  மேலும் நிகழ்ச்சியின்போது தமிழ்நாடு பாய்மரப் படகு சங்க செயலாளர் சாந்தா கலந்து கொண்டு ஜலஸ்வா என்ற கப்பலில் இருந்து கயிறு மூலம் அடுத்த கப்பலுக்குச் சென்று திரும்பினார். இதனை கடற்படை வீரர்களின் குடும்பத்தினர், இதர ராணுவப் பிரிவு அதிகாரிகள், தேசிய மாணவர் படை (என்.சி.சி.) என சுமார் 2.500 பேர் பார்த்து ரசித்தனர்.ஆளுனர் ரோசையா பங்கேற்பு:
        முன்னதாக சென்னைத் துறைமுகத்திலிருந்து கிளம்பிய ஜலஸ்வா கப்பலில் தமிழக ஆளுனர் ரோசையா பயணம் செய்தார்.  சாகச நிகழ்ச்சிகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரோசையா பேசியது, சென்ற முறை சிறிய கப்பலில் பயணம் செய்தேன். இந்த முறை பிரமாண்டமான பெரிய கப்பலில் பயணிக்கிறேன். இந்நிகழ்வு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது நாட்டின் பாதுகாப்பு வலுவாக உள்ளது. எவ்வித தாக்குதலையும் முறியடிக்கும் சக்தி நமது படையினருக்கு உண்டு என்பது போன்றவற்றை பொதுமக்களும் அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சி வழிவகுக்கும் என்றார் ரோசையா.
       கடற்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் பி.அஜித்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில் சென்னைத் துறைமுகத்தலைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஸ்ரீதர், கடற்படை உயர் அதிகாரி மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Friday, 26 October 2012

பணி காலத்தில் இறந்து போன துறைமுக தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.36 கோடி உதவித் தொகை


கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் வழங்கினார்
திருவொற்றியூர், அக்.13: சென்னையில் துறைமுகத்தில் பணிக்காலத்தில் இறந்து போன 868 ஊழியர்களின் துறைமுக ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சுமார் ரூபாய் 36 கோடி உதவித் தொகைக்கான காசோலைகளை கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சனிக்கிழமை வழங்கினார்.
            சென்னைத் துறைமுகத்தில் பணிகாலத்தின்போது உடல் நலக் குறைவு, விபத்து உள்ளிட்ட காரணங்களால் இறந்து போன 868 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான மாற்று வேலைக்குப் பதிலாக உதவித் தொகை வழங்க துறைமுக நிர்வாகம் முடிவு செய்து இதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை துறைமுக வளாகத்தில் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஜி.கே.வாசன் உதவித் தொகை காசோலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் வாசன் பேசியது,
    துறைமுகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்ற துணையாகவும்,  அடித்தளமாகவும் இருப்பவர்கள் தொழிலாளர்கள்தான்.   துறைமுகத்தின் வளர்ச்சியையும், தொழிலாளர்கள் நலனையும் பிரித்துப் பார்க்க வேண்டியதில்லை.  எனவேதான் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அதேசமயம் தொழிலாளர்களின் நலனிலும் கப்பல்துறை அமைச்சகம் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.
         துறைமுகங்களில் பணிகாலத்தின்போது விபத்து, உடல் நலக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் இறந்து போன தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக
இருந்து வருகிறது.  ஆனால் 1999 ஆண்டிற்குப் பிறகு பிரிவு 3,  பிரிவு 4 தகுதி தொழிலாளர்கள் வேலைக்குச் சேர்க்க நேர்ந்தால் மொத்த எண்ணிக்கையில் 5 சதவீதம் மட்டுமே கருணை அடிப்படையில் மாற்று வேலை வழங்க முடியும்.  இதனால்  இவர்களுக்கு மாற்று வேலை வழங்க முடியவில்லை.   உண்மையிலேயே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நியாயமாக வேறு வழியில் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய தார்மீகக் கடமை உள்ளதால் இது குறித்து அமைச்சக உயர் அதிகாரிகள், பிரதமர் அலுவலகம் உள்ளிட்டோரிடம் பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டு, இறந்து போன தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு வேலைக்குப் பதிலாக கணிசமான அளவில் உதவித் தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டது.
           இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கு குறைந்த பட்சம் ரூ.1.25 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.4.90 லட்சம்வரை உதவித்தொகையாகக் கிடைக்கும். இதனைக் கொண்டு அவர்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த தொகை சிறியதாக இருப்பினும் தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் இதனை வழங்கவே கடுமையான நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்திட்டத்தின் சென்னைத்துறைமுகத்தில் மூலம் 868 பேர் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான செலவுத் தொகை ரூ.35.73 கோடி ஆகும். 
விசாகபட்டினத்தில் 860 பேருக்கு ரூ.30 கோடி உதவி:
       தொழிலாளர்களின் நலன் கருதி கப்பல்த் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள இத்திட்டத்தின் கீழ் விசாகபட்டனம் துறைமுகத்தில் பணிகாலத்தில் இறந்து போன சுமார் 860 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 30.30 கோடி உதவித் தொகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.  சென்னை, விசாகபட்டனம் தவிர இதர துறைமுகங்களிலும் இதேபோல் உதவித் தொகை வழங்க அந்தந்த துறைமுக நிர்வாகங்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன.
        மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குகளைக் கையாளும் தொழிலாளர்கள் 993 பேரை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக இருந்து வந்தது.  கப்பல்த் துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் அவர்கள் அனைவரும் தற்போது நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு நிறுவனம் லாபம் ஈட்டுவது மட்டுமே நோக்கமாக இருக்கக் கூடாது.  தொழிலாளர்கள் நலன்,  அருகில் வசிக்கும் மக்களின் சமூக மேம்பாடு உள்ளிட்டவைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.





நிலக்கரி, இரும்புத்தாதுவை மீண்டும் கையாள சென்னைத் துறைமுகம் கடும் முயற்சி


.
முகவை.க.சிவகுமார்,

சென்னையின் முக்கிய பகுதிகளில் கரித்தூள் மாசு படியும் அபாயம்

திருவொற்றியூர், அக்.12:  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக சென்னைத் துறைமுகத்தில் நிலக்கரி, இரும்புத்தாது கையாளப்படுவது கடந்த ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளநிலையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் கப்பல் துறை செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழு  அளித்துள்ள கருத்துரு மூலம் மீண்டும் நிலக்கரியைக் கையாள சென்னைத் துறைமுகம் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
             நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நிலக்கரி, இரும்புத் தாது கையாளப்படுவது தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் சென்னைத் துறைமுகத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கரித்தூள் மாசுவால் திணறிய சென்னை:
             சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 2 கோடி டன் அளவிற்கு இரும்புத் தாது, நிலக்கரி நீண்ட காலமாக கையாளப்பட்டு வந்தது.  இவை கையாளப்படும்போது எழும் கரித்தூளால் கடும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தலைமைச் செயலகம், உயர்நீதிமன்றம், பாரிமுனையில் உள்ள முக்கிய கட்டடங்கள் எல்லாம் இவ்வகை மாசுவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டன. வட சென்னை முழுவதும் எங்கு பார்த்தாலும், கரித்தூள், செந்நிற இரும்புத் தாது தூசு படிந்து பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டனர்.  இது குறித்து பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தன. ஆனால் அனல் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி இறக்குமதி அவசியமாகிறது, மேலும் துறைமுகத்தின் முக்கிய வருவாய் பாதிக்கப்படும் எனக் கூறி சென்னைத் துறைமுக நிர்வாகம் தொடர்ந்து இவற்றை நிறுத்த மறுத்து வந்தது.
நிலக்கரி,இரும்புத் தாதுவிற்கு உயர்நீதிமன்றம் தடை:
    .  இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கில் நிலக்கரி, இரும்புத் தாது கையாள  தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே, 2011-ல் உத்தரவிட்டது.  இத்தடையை எதிர்த்து துறைமுக நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம்   கப்பல்த் துறை செயலாளர் தலைமையில், வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை செயலாளர், மத்திய, மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாடு வாரியத் தலைவர்கள், தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு மையம் (நீரி),  ஐ.ஐ.டி., தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழு அமைத்து உத்தரவிட்டது.  இதனையடுத்து கடந்த மே மாதம் இக்குழு நேரில் ஆய்வு நடத்தி தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் சமர்பித்தது.  இந்த அறிக்கையின் மீது சமீபத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற சென்னைத் துறைமுகத்திற்கு 2 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த வழக்கு விசாரணையும் தள்ளிவைக்கப்பட்டது.
பரிந்துரைகளை விரைந்து செயல்படுத்த  துறைமுக நிர்வாகம் நடவடிக்கை:
               இந்த அறிக்கையில்,  நிலக்கரியை இறக்கும்போது மூடப்பட்ட கலன்களைப் பயன்படுத்த வேண்டும்,  தெளிப்பான்கள் மூலம் நிலக்கரி மீது தொடர்ந்து நீர் தெளித்தல்,  கப்பலில் இருந்து நிலக்கரியை திறந்த லாரிகளில் கொண்டு செல்லாமல் மூடப்பட்ட லாரிகளில் எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் கூறப்பட்டுள்ளன. மேலும் கப்பலில் இருந்து இறக்கி, சேமித்து வைத்து, வேகன்களில் எடுத்துச் செல்லுவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் என்னென்ன நடைமுறைகள் கையாளப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
           நிலக்கரி, இரும்புதாது கையாளப்பட்டு வந்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ.250 கோடிவரை சென்னைத் துறைமுகத்திற்கு வருவாய் கிடைத்து வந்தது.  இதனால் உயர்நீதிமன்றம் அளித்த தடையால் கடந்த ஓராண்டாக பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வந்த துறைமுக நிர்வாகம்,  உயர்மட்டக்குழு அறிக்கையால் தற்போது  எழுச்சி பெற்றுள்ளது.   மேலும்  அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பினைப் பெற முடியும் என துறைமுக நிர்வாகம் கருதி, இதற்கான வேலைகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி நிலக்கரி, இரும்புத் தாது விரைவில் சென்னைத் துறைமுகத்தில் மீண்டும் கையாளப்படும் என்பதே உண்மை என்கிறார் துறைமுக உயர் அதிகாரி ஒருவர்.
பொதுநல அமைப்புகள் கடும் எதிர்ப்பு:
 இது குறித்து வடசென்னை பொதுநல அமைப்புகள் சார்பில் தெரிவித்த கருத்துகள்:
             நிலக்கரி மாசுவால் ஆயிரக் கணக்கானோருக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக வடசென்னை பகுதிகளில் வீட்டுக் கதவு, ஜன்னல்களை சிறிது நேரம் கூட திறந்து வைக்க முடியாது. மாடியில் துணி கூட காய வைக்க முடியாத அளவிற்கு மாசு இருந்தது. தடை செய்யப்பட்ட பிறகுதான் சற்று நிம்மதியடைந்தோம்.    சென்னை மாநகரையே மாசுபடுத்தும் இந்த முயற்சியை கடுமையாக எதிர்ப்போம். ஏற்கனவே படிந்துள்ள கரித்தூள் படலங்கள் கூட இன்னும் விலகாத நிலையில் மீண்டும் நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வது என்ற முயற்சிக்கு அனைத்து தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 
     தமிழகத்தைச் சேர்ந்த ஜி.கே.வாசன் கப்பல்த் துறை அமைச்சராக உள்ள நிலையில் சென்னை மாநகர மக்களை பெருமளவில் பாதிக்கக் கூடிய இப்பிரச்னையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.



                                                                              
       



லாரிகள் நிறுத்துமிடத்திற்கான நிலத்தை திருப்பி அளித்தது சென்னைத் துறைமுகம்

கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதில் மீண்டும் சிக்கல் பிரச்னை
திருவொற்றியூர், ஜூலை.16:கண்டெய்னர் லாரிகள் நிறுத்துமிடம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட 11 ஏக்கர் நகராட்சி நிலத்தை சென்னைத் துறைமுக நிர்வாகம் திடீரென திருப்பி அளித்து விட்டது. இதன்மூலம் வடசென்னையின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண்பதில் மீ்ண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  இந்தியாவின் கிழக்கு வாயிலாகக் கருதப்படும் சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படுகின்றன. சுமார் 4 ஆயிரம் கண்டெய்னர் லாரிகள், 3 ஆயிரம் டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன. இருப்பினும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் துறைமுகத்திற்கு வந்து செல்லும் வாகனங்கள் 5 முதல் 20 மணி நேரம்வரை வரிசையில் காத்திருக்கும் அவலநிலை உள்ளது. எண்ணூர் வரை சுமார் 15 கி.மீ தூரத்திற்கு வரிசையில் லாரிகள் காத்திருப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதில் கடும் போக்குவரத்து நெரிசல்   நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இப்பிரச்னை குறித்து பல்வேறு அமைப்புகளும் போராடி வந்ததை அடுத்து முன்பு டி.ஜி.பி.யாக இருந்த அலெக்சாண்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
குத்தகைக்கு 11 ஏக்கர் நகராட்சி நிலம்:
  இதனை அடுத்து சாலையில் காத்திருக்கும் கண்டெய்னர் லாரிகளை ஓரிடத்தில்
நிறுத்தி பின்னர் நெரிசலின்றி சீராக துறைமுகத்திற்கு அனுப்பி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கென எண்ணூர் விரைவு சாலையை ஒட்டி இருந்த திருவொற்றியூர் நகராட்சிக்குச் சொந்தமான 11 ஏக்கர் காலி நிலம் தேர்வு செய்யப்பட்டது. மாதவாடகை ரூ.11 லட்சம் என முடிவு செய்யப்பட்டது. குத்தகை முன்பணமாக ரூ.33 லட்சத்திற்கான அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சரான மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டு அதனை திருவொற்றியூர் நகர்மன்றத் தலைவர் ஆர்.ஜெயராமனிடம் கடந்த ஜூலை 2, 2007-ல் வழங்கினார்.
ஆனால் கனரக வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு காலி நிலத்தை சீர் செய்யாததால்  லாரிகள் மணலில் புதைந்தன. இதனை அடுத்து காலி நிலத்தில் உறுதியான கான்கிரீட் தளம் அமைக்க சென்னைத் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக நிலையத்தை கையாண்டு வரும் சி.சி.டி.எல் நிறுவனம் முன்வந்து ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடும் செய்தது. ஆனால் நிலத்தை 30 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கிட இந்நிறுவனம் கோரிக்கை விடுத்தது. இதற்கு ஒப்புதல் அளித்து நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கடந்த 2007-ல் நிறைவேற்றப்பட்டது.  இருப்பினும் நீண்ட நாள்களாக அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இது குறித்து 'தினமணி' நாளிதழில் கடந்த ஏப்ரல் 26-ல் சிறப்பு செய்தி வெளியானது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் இறுதியில் குத்தகை காலத்தை 18 ஆண்டுகளாக உயர்த்தி வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்து.
நிலத்தை திருப்பி அளித்த துறைமுகம்:
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த இப்பிரச்னை தீர்ந்து கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல் விரைவில் தீரும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை துறைமுக நிர்வாகம் திடீரென காலி நிலத்தை திருப்பி அளித்து விட்டது. இது குறித்து திருவொற்றியூர் நகராட்சி ஆணையர் எஸ்.கலைச்செல்வன் கூறியது, பல்வேறு நெருக்கடிகளில்தான் குத்தகை காலம் 18 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது. மேலும் துறைமுகம் அரசு நிறுவனம் என்பதால் தொடர்ந்து குத்தகையை நீடிப்பதில் சிக்கல் ஏதும் இருக்காது. ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஜூன்.30 முதல் திருப்பி அளித்துவிடுவதாக கடிதம் அனுப்பி உள்ளனர். கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலால் திருவொற்றியூர் நகரம் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை என்றார் கலைச்செல்வன்.
மழுப்பும் துறைமுக அதிகாரிகள்:
திடீரென நிலத்தை திருப்பி அளித்தது ஏன் என்பது குறித்து சென்னைத் துறைமுக
அதிகாரிகள் சிலர் கூறியது, கண்டெய்னர் நிறுத்துமிடம் அவசியமானது என்றுதான் நாங்கள் வலியுறுத்தினோம். இதனையே கோப்பிலும் குறிப்பிட்டோம். ஆனால் நிலத்தை திருப்பி அளிப்பது குறித்து நிர்வாகக் குழு கூட்டத்தில் கூட ஆலோசனை நடத்தாமல் முடிவெடுத்தது ஏன் என்பது புரியவில்லை. இது குறித்து சென்னை துறைமுக தலைவர் சுபாஷ்குமார் கூறியது, எங்களுக்கு அந்த நிலம் தேவை இல்லை என்பதால் திருப்பி அளித்துவிட்டோம். இது குறித்து காரணம் தெரிவிக்க இயலாது என பதில் அளித்தார்.
11 ஏக்கர் காலி நிலம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் கண்டெய்னர் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பிரச்னை மீண்டும் சிக்கலில் ஆழ்ந்துள்ளது என்பதே நிதர்சன உண்மை. மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசனும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கவனத்தில் உள்ள இம்முக்கிய பிரச்னையில் அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது கண்டிக்கத் தக்கது. இது குறித்து மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்துவோம் என்றார் திருவொற்றியூர் சமூக சேவை மைய நிர்வாகி கோட்டீஸ்வரன். 



 

அபாய நிலையில் திருவொற்றியூர் மீனவர் குடியிருப்பு

Source: www.dinamani.com

திருவொற்றியூரில் உள்ள மீனவர் குடியிருப்பில் திங்கள்கிழமை இரவு மேற்கூரை இடிந்து விழுந்ததில் வேலாயுதம் (45) என்ற மீனவர் படுகாயம் அடைந்தார்.
திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் மீன்வளத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் வேலாயுதம். மீனவரான இவர் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்துள்ளது.
இதில் வேலாயுதம் பலத்த காயமடைந்தார். இவரது மனைவி, குழந்தைகள் அப்போது வீட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்.
இதேபோல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதே குடியிருப்பில் மூன்றாவது மாடியில் வசித்து வந்த தனபால் என்பவரது வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் அவரது மனைவி ஜெயந்தி, குழந்தை கவினேஷ் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவொற்றியூர் கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய மீனவர் கிராமங்களில் ஒன்று திருச்சினாங்குப்பம். இங்கு 1993-ல் மீனவளத்துறை சார்பில் 478 குடும்பங்கள் வசிக்கும் வசதிகள் கொண்ட அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்பட்டன. தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கடுமையாக பழுதடைந்து அபாய நிலையில் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக வீட்டின் மேற்கூரைகள் பெயர்ந்து விழும் சம்பவங்களும், அதில் பலர் காயமடையும் சம்பவமும் அடிக்கடி நிகழ்ந்து வருவதாக இங்கு குடியிருந்துவரும் மீனவர்கள் தெரிவித்தனர்.
புதிய வீடுகள் கட்டித் தரக் கோரிக்கை: இது குறித்து திருச்சினாங்குப்பம் மீனவர் பஞ்சாயத்து நிர்வாகிகள் கூறியது: அடுக்குமாடி வீடுகள் பழுதடைந்து இடிந்துவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இக்குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் அமைத்துத் தரவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு இதேபோல் நடைபெற்ற சம்பவத்தையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் நேரில் ஆய்வு செய்தார்.
இதையடுத்து இங்கு வசிக்கும் மீனவர்களுக்கு ரூ.14.5 கோடி செலவில் பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என கடந்த ஆண்டு மானியக் கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் புதிய வீடுகள் கட்டித் தருவதற்கான பணியை மீன்வளத்துறை மேற்கொள்வதாகத் தெரியவில்லை.
தற்போது வீடுகள் எந்நேரமும் இடிந்து விழும் அபாயக் கட்டத்தை எட்டிவிட்டது. எனவே உடனடியாக புதிய குடியிருப்புகளை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என்றனர்.