Tuesday, 21 April 2015

2014-15 நிதியாண்டு செயல்பாடுகள்

53 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட சென்னைத் துறைமுகம்

திருவொற்றியூர், ஏப்.18:சென்னைத் துறைமுகம் கடந்த 2014-15 நிதியாண்டில் சுமார் 53 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளதாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.  
இது குறித்து சென்னைத் துறைமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    கடந்த 2014-15 நிதியாண்டில் துறைமுகத்தின் அனைத்து துறைகளும் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டில் சுமார் 53 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இத்துறைமுகம் முந்தைய 2013-14 நிதியாண்டில் ரூ.174 கோடி நிகர பற்றாக்குறை இருந்த நிலையில் கடந்த ஆண்டு ரூ.4 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரும்பு கசடுகள், சுண்ணாம்புக்கல், எஃகு தகடுகள், மரக்கட்டைகள் , அதிக அளவில் கையாளப்பட்டுள்ளன. மேலும் துறைமுகத்தில் செயல்பட்டு வரும் இரண்டு தனியார் முனையங்கள் மூலம் 1.60 மில்லியன் சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 6 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் சரக்குப் பெட்டகங்களைக் கையாள்வதில் பெரிய துறைமுகங்களில் மும்பை நவசேவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு அடுத்தபடியாக சென்னைத் துறைமுகம் உள்ளது. 
     துறைமுகத்தை தொடர்ந்து அகழ்வு செய்து வருவதன் மூலம்  பெரிய கப்பல்கள் தங்கு தடையின்றி உள்ளே வந்து செல்ல முடியும். பல்வேறு துரித நடவடிக்கள் எடுக்கப்பட்டதன் மூலம்  கப்பல்கள் துறைமுகத்திற்கு வெளியே காத்திருக்கும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கப்பல் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
     துறைமுகத்தை மேலும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இத்திட்டம் நிறைவடையும்போது ஆண்டுக்கு சுமார 100 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டதாக இத்துறைமுகம் வலுவடையும். 
சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள துறைமுகங்களுக்கு சரக்குப் பெட்டகங்களை எடுத்து செல்ல வசதியாக கடல்சார் நெடும்பாதை (Marine Highway) அமைக்கப்பட உள்ளது. காற்றாலைகள் மூலம் சுமார் 6 மெகாவாட் மின்சாரம் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. துறைமுகத்தில் காவல், கண்காணிப்பு, தீயணைப்பு உள்ளிட்டவைகள் வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளன. 

இணைப்புச் சாலைத் திட்டங்கள்:
    துறைமுக இணைப்புச் சாலைத் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. இதில் உள்ள ஒரு சில பிரச்னைகள் விரைவில் களையப்படும். மேலும் மதுரவாயல்-சென்னைத் துறைமுகம் உயர் மட்ட மேம்பாலம் திட்டம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுடன் பல்வேறு முனைகளில் சுமூகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பதில் துறைமுக நிர்வாகம் மிகுந்த அக்கரை கொண்டுள்ளது. புதிய ரயில்பாதைகள் அமைக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறோம். 
    மேலும் துறைமுகத்தின் கிழக்குக் கரையை மேலும் மேடுபடுத்தி உள்நாட்டு சரக்குப் போக்குவரத்தை தொடங்கும் திட்டம் ஆய்வில் உள்ளது. இதற்கான முழு திட்டச் செலவினையும் இரண்டாவது சரக்குப் பெட்டக முனையம் ஏற்க உள்ளது. 
இரும்புத்தாது, நிலக்கரி தையாளப்படுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும் 
இந்த அளவுக்கு சரக்குகளைக் கையாண்டு சென்னைத் துறைமுகம் லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 16 April 2015

 காமராஜர் துறைமுகத்தில் ரூ.14 கோடியில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதி

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

திருவொற்றியூர், ஏப்.15:காமராஜர் துறைமுகத்தில் ரூ.14 கோடி செலவில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதியை கப்பல்த் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். 
   துறைமுகத்தில் கப்பல்கள் வந்து செல்வதைக் கண்காணிப்பதற்காக ரூ.14 கோடி செலவில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதி காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கப்பல்த் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியது,
   இப்புதிய வசதி காமராஜர் துறைமுக வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். இப்புதிய வசதி மூலம் கப்பல்கள் வந்து செல்வதை மட்டுமின்றி எண்ணெய்க் கசிவு ஏதேனும் ஏற்பட்டாலும் கண்டறிய முடியும். இரண்டு கப்பல் தளங்களுடன் தொடங்கப்பட்ட இத்துறைமுகத்தில் தற்போது ஆறு தளங்கள் உள்ளன. மேலும் இரண்டு தளங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் விரைவில் ஆண்டுக்கு 50 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனை இத்துறைமுகம் பெறும். மேலும் வளர்ந்து வரும் காமராாஜர் துறைமுகம் உள்ள இதர துறைமுகங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி வருகிறது. 
   துறைமுகம் தொடர்ந்து வளர்ந்து வரும் அதே வேளையில் இப்பகுதியி்ன் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சமுதாய வளர்ச்சி திட்டங்களுக்காக சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடிவரை இத்துறைமுகம் செலவிட்டுள்ளது பாராட்டுக்குரியது. அதேநேரம் கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த துறைமுக நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். 
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறார். பொன்னேரி அருகே ஸ்மார்ட் சிட்டி அமைய உள்ள நிலையில் இத்துறைமுகம் சார்ந்த பகுதி சிங்கப்பூர் அளவுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்றார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
    நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார், சென்னைத் துறைமுகத்தலைவர் அதுல்ய மிஸ்ரா, காமராஜர் துறைமுக இயக்குநர் சஞ்சய், பொதுமேலாளர்கள்  ஏ.கே.குப்தா, செந்தில்குமார், குணசேகரன், மக்கள் தொடர்பு மேலாளர் அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Wednesday, 15 April 2015

வரிக்கு முந்தைய லாபமாக ரூ.421 கோடி ஈட்டிய காமராஜர் துறைமுகம் 

துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் தகவல்

திருவொற்றியூர், ஏப்.11:காமராஜர் துறைமுகம் கடந்த நிதியாண்டில் வரிக்கு முந்தைய லாபமாக ரூ.421 கோடி ஈட்டியுள்ளது என துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் சனிக்கிழமை சென்னையில் தெரிவித்தார். 
  காமராாஜர் துறைமுகத்தின் 2014-15 நிதியாண்டிற்கான வருடாந்திர அறிக்கை குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் கூறியது,
     நிறுவனச் சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனமான காமராஜர் துறைமுகம் கடந்த நிதியாண்டில் 30.25 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. இதில் தமிழ்நாடு மின்சார வாரியம் கையாண்ட சுமார் 19 மில்லியன் டன் நிலக்கரியும் அடங்கும். நிஸ்ஸான், டொயோடா, போர்டு, ஹோண்டா, அசோக் லேலண்டு உள்ளிட்ட நிறுவனங்களின் 2.15 லட்சம் வாகனங்கள் இத்துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 11 சதவீதம் அதிக அளவு சரக்குகளைக் கையாண்டுள்ளது. மேலும் கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ. 563 கோடி வருவாய் ஈட்டியதில் செலவினங்கள் போக மீதம் ரூ.421 கோடி வரிக்கு முந்தைய லாபமாக கணக்கிடப்பட்டுள்ளது. 
ரூ.1,270 கோடியில் சரக்குப் பெட்டக முனையம்:
    அதானி குழுமம் சார்பில் ரூ.1,270 கோடி மதிப்பீட்டில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் பணி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கான பணிகளை ஜூன், 2016-க்குள் முடிக்கும்வகையில் விரைவாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முனையம் மூலம் ஆண்டுக்கு 14 லட்சம் சரக்குப் பெட்டகங்களைக் கையாள முடியும். 
     தனியார் மூலம் ரூ.151 கோடி மதிப்பீட்டில் பல்துறை சரக்குகளைக் கையாளும் திறன் கொண்ட புதிய தளம் அமைப்பதற்கான பணி உத்தரவு செட்டிநாடு நிறுவனத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 
விரைவில் தொடங்கும். 
      தமிழ்நாடு மின்சாரம் வாரியத்திற்கு தேவையான நிலக்கரியைக் கையாள்வதில் 
காமராஜர் துறைமுகம் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதற்கென ஏற்கனவே இரண்டு முனையங்கள் செயல்பட்டு வரும் நிலையம் மேலும் இரண்டு முனையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன.  நான்கு முனையங்களின் மூலம் ஆண்டுக்கு 27 மில்லியன் டன் நிலக்கரியைக் கையாள முடியும். 
ரயில்பாதை இணைப்பு:
   சென்னை-விஜயவாடா மார்க்கத்தில் அத்திப்பட்டு, மணலி புதுநகரையும்,  துறைமுகத்தையும் இணைக்கும் திட்டம் ரூ.80 கோடி செலவில் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதில் சிக்னல் உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்த ரூ.11 கோடி தென்னக ரயில்வேயிடம் துறைமுக நிர்வாகம் அளித்துள்ளது. 
எதிர்காலத் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்பாதை கட்டமைப்பை ஏற்படுத்த ரூ. 60 கோடி மதிப்பீட்டிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
கட்டமைப்பு வசதிகள்:
   துறைமுக இணைப்புச் சாலை திட்டத்திற்கு ரூ.34 கோடி காமராஜர் துறைமுகம் அளித்துள்ளது. மேலும் துறைமுக வளாகத்தில் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கூடுதலாக 5 ஆயிரம் கார்களை நிறுத்தி வைக்கும் வகையில் முற்றம் (Yard) ரூ.15 கோடியில் அமைக்கத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. 
மத்திய உப்புத் துறையிடமிருந்து பெறப்பட்ட நிலங்களை துறைமுக உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வரைவு அறிக்கை தயாரிக்கும் பணி தனியார் நிறுவனம் மூலம் நடைபெற்று வருகிறது என்றார் பாஸ்கராச்சார்.
   இதில் காமராஜர் துறைமுக இயக்குனர் சஞ்சய், பொது மேலாளர்கள் செந்தில்குமார், குணசேகரன், ஏ.கே.குப்தா, மக்கள் தொடர்பு மேலாளர் அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
எல்.ஐ.சி. திருவொற்றியூர் கிளைக்கு ரூ.15 கோடியில் புதிய கட்டடம்

தென் மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் அடிக்கல் நாட்டினார்

திருவொற்றியூர், ஏப்.10:ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்.ஐ.சி) திருவொற்றியூர் கிளைக்கு ரூ. 15 கோடியில் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை இதன் தென்மண்டல மேலாளர் டி. சித்தார்த்தன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
   தென் மண்டலத்தில் உள்ள எல்.ஐ.சி. கிளைகளில் திருவொற்றியூர் கிளை நீண்ட நாள்களாக திருவொற்றியூர் காலடிபேட்டையில் தனியார் கட்டடம் ஒன்றில் வாடகையில் செயல்பட்டு வருகிறது. இக்கிளையை சொந்தக் கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்த எல்.ஐ.சி. நிர்வாகம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் புதுவண்ணாரப்பேட்டையில் பகுதியில் தனியாரிடமிருந்து இடத்தை வாங்கியது. இந்நிலையில் வாங்கப்பட்ட இடத்தில் ரூ.15 கோடியில் ஐந்தடுக்கு கொண்ட பிரமாண்ட கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளர் டி.சித்தார்த்தன் அடிக்கல் நாட்டி கட்டடம் கட்டும் பணியைத் தொடங்கி வைத்தார். 
அப்போது செய்தியாளர்களிடம் சித்தார்த்தன் கூறியது,
    சென்னையில் எல்.ஐ.சி.க்கென தனியாரிடமிருந்து இடத்தை விலைக்கு வாங்கி 
கட்டடம் கட்டுவது இதுவே முதல்முறை. வணிக நோக்கில் ஐந்து அடுக்கில் அமைய உள்ள இக்கட்டடத்தில் முதல் தளத்தில் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மட்டும் திருவொற்றியூர் கிளை செயல்படும். மீதம் உள்ள அனைத்து தளங்களும் வாடகைக்கு 
விடப்படும். எல்.ஐ.சி. சார்பில் பல்வேறு புதிய பாலிசிகளை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. முந்தைய ஆண்டைவிட கடந்த ஆண்டு காப்பீட்டு தவணைத் தொகையை கூடுதலாக வசூலித்துள்ளோம் என்றார் சித்தார்த்தன்.
     நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. தென் மண்டல தலைமைப் பொறியாளர் சி.ஹரிகரன், பிராந்திய மேலாளர் கே.ராஜீவன் நாயர், வணிக மேலாளர் வியாகுலசாமி, கிளை மேலாளர் உதுப் ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செம்மரக் கடத்தலுக்கு மறைமுக ஆதரவளிக்கும் அண்டை நாடுகள் 

மீறப்படும் அருகி வரும் தாவர விலங்கின பாதுகாப்பு ஒப்பந்தங்கள்

இண்டர்போல் விசாரணை தேவை?

திருவொற்றியூர், ஏப்.9: அழிந்து வரும் அரிய வகை தாவர இனங்களில் ஒன்றான செம்மரக்கட்டைகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய சர்வ தேச தடை உள்ள நிலையில் இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக கடத்தப்படுவதை சீனா, மலேசியா, ஜப்பான், மியான்மார் உள்ளிட்ட அண்டை நாடுகள் மறைமுக ஆதரவளித்து வருகிறது என்ற சந்தேகம் வலுத்து வருவதாக சுற்றுச் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 
செம்மரம் கடத்தப்படுவதன் பின்னணி என்ன?
    செம்மரக் கட்டைகளைக் கொண்டு விலை உயர்ந்த பாரம்பரிய இசைக் கருவிகள், மருந்து பொருள்கள், வண்ணக் கலவைகள், வாசனை திரவியங்கள், அழகு சாதன கலைப் பொருள்கள், பொம்மைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதாகவும், அணு உலைகளில் கதிர்வீச்சினை தடுப்பதற்கு செம்மரக்கட்டகைகள் பயன்படுத்தப்படுவதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் டன் செம்மரக் கட்டைகள் தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில்  இதுவரை எதற்காக செம்மரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது?  ஏன் இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறார்கள்? என்ற கேள்விகளுக்கு யாரிடமிருந்தும் தெளிவான பதில் இல்லை.  செம்மரக்கட்டைகளைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைதான் இந்த மவுனத்திற்கு காரணமாக உள்ளது.
அழிந்து வரும் தாவர இனப் பட்டியலில் செம்மரம்:
       பூமியில் உள்ள கோடிக் கணக்கான தாவர,  விலங்கினங்களில் சுமார் 35 ஆயிரம் இனங்கள் மனிதப் பயன்பாடுகள், சுற்றுச்சூழல் சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொடர்ந்து அழிந்து வருவதாக அறியப்பட்டது. இதே நிலை தொடருமானால் அடுத்த தலைமுறையில் இவ்வினங்கள் முழுமையாக அழிந்து விடும் அபாயம் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு அரியவகை உயிரினங்களைக் காப்பதற்கான சர்வதேச வர்த்தக ஒப்பந்தம்  (CITES - Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora ) மார்ச் 3, 1973-ல் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இதில் தற்போது சுமார் 180 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா-1976, ஜப்பான்-1980, சீனா-1981 ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு 
ஒப்புதல் அளித்துள்ளன. 
      இதில் ஒரு தாவர இனம்தான் Pterocarpus santalinus என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட செம்மரம்.  உலகிலேயே  தரமான செம்மரம் தென்னிந்திய மலைசார்ந்த பகுதிகளில் மட்டுமே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே செம்மரத்தை  எந்த வகையிலும் வர்த்தகம் செய்ய மேற்கூறப்பட்ட CITES ஒப்பந்தம் தடை செய்கிறது.  உள்நாட்டில் எவ்வித பயன்பாடும் அறியப்படாததால் இந்தியாவில் செம்மரத்திற்கு பொதுவாக தேவை ஏதும் இல்லை. ஆனால் சீனா, மலேசியா, ஜப்பான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இதன் தேவை அதிகமாக இருக்கிறது.  சர்வ தேச ஒப்பந்தத் தடை உள்ளதால் இம்மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள், பயன்பாடுகள் குறித்து வெளிப்படையான விளக்கங்கள் ஏதும் எந்த நாடும் தெரிவிப்பதில்லை. 
அப்பாவிகள் மூலம் நூதனக் கடத்தல்:
     எந்தப் பொருளை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றாலும் முதலில் இறக்குமதி இறக்குமதி குறியீட்டு எண் (IEC-Import Export Code) வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தில் பெற வேண்டும். வங்கியில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் எவரும் எளிதாக இந்த குறியீட்டு எண்ணை வாங்கி விட முடியும். இதற்கான செலவும் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே. பின்னர் இவ்வெண் சுங்கத்துறையோடு இணையத் தளத்துடன் இணைக்கப்படும். பிறகு ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்கலாம். இங்குதான் கடத்தல்காரர்கள் தங்களது வேலையை ஆரம்பிக்கின்றனர். 
   ஏதேனும் ஊர் பெயர் தெரியாதவரின் பெயரில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து குறியீட்டு எண் பெற்றுவிடுகின்றனர்.  பின்னர் கண்டெய்னர்களில் மறைத்து வைக்க வசதியாக இருக்கும் அரிசி மூட்டைகள், கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப் போவதாக சுங்கத்துறையில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பார்கள். பிறகு அதிகாரிகளின் நேரடி ஆய்வுக்குப் பிறகு அரிசி மூட்டைகளோ, கிரானைட் கல்லோ கண்டெய்னர்களில் ஏற்றி சீல் வைக்கப்படும். பின்னர் வழியில் கண்டெய்னர்களை லாவகமாக கையாண்டு சீலை உடைக்காமல் அரிசி மூட்டைகளை எடுத்துவிட்டு கூடுமானவரை  செம்மரக் கட்டைகளை ஏற்றி விடுவார்கள். ஆவணங்களின்படி வெளிநாட்டிற்குச் செல்லும்வரை 
கண்டெய்னர்களில் உள்ளது அரிசியாகவே இருக்கும். இதில் அரிசிக்கான பணம் மட்டும் வங்கி மூலம் பரி்மாற்றம் செய்யப்படும். செம்மரத்திற்கான பணம் ஹவாலாதான்.. 
கடத்தலில் சிக்குவது அப்பாவிகள்தான் :
    இக்கடத்தலைக் தடுக்க மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு (Directorate of Revenue Intelligence), சுங்கத்துறையின் சிறப்பு பிரிவுகள் பல்வேறு வகையில் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அவற்றையெல்லாம் முறியடிக்கும் வகையில் கடத்தல்காரர்கள் புதிய உத்திகளை கையாண்டு வருவதால் செம்மரக்கடத்தலை முழுவதுமாக தடுக்க முடிவதில்லை.  மேலும் பிடிபடும் செம்மரங்கள் குறித்த தொடராய்வில் ஏற்றுமதியாளரின் முகவரி தேடிச் சென்றால் ஒரு கூரை வீட்டில் ஒரு அப்பாவி அந்த பெயரில் இருப்பார். அவருக்கும் ஏற்றுமதிக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. மரம் வெட்டப்படுவது முதல் ஏற்றுமதியாளர்வரை தனித்தனியாக அப்பாவிகள் கையாளப்படுகின்றனர் என்பதே இக்கடத்தலின் சிறப்பு. ஆந்திர சிறையில் சுமார் 1,200 அப்பாவிகள் இவ்வாறுதான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சிறையில் உள்ளோர்களிடம் விசாரித்தால் இந்த உண்மை 
தெளிவாகத் தெரியும். சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட மரங்களை வைத்திருந்ததால், வெட்டியதால் அவர்கள் குற்றவாளிகள். அவ்வளவுதான் மற்றபடி முழுமையாக பயன் அடைந்தவர்களா? இல்லை. 
மறைமுக ஆதரவளிக்கும் நாடுகள்:
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது,
    என்னதான் பல துறைகள் கண்காணித்தாலும் செம்மரக் கடத்தலை முற்றிலும் ஒழிக்க முடியாத நிலைக்கு காரணம் என்ன? கடத்தலை ஒழிக்க வேண்டும் எனில் ஏற்றுமதியாளர், இறக்குமதியாளர் என இரு தரப்பையும் கண்காணித்தால் மட்டுமே சாத்தியமாகும். ஏற்றுமதியின்போது பிடிபடும் செம்மரக் கட்டைகள் 10 சதவீதம் கூட இருக்காது என்றால் மீதம் உள்ள 90 சதவீதம் வெளிநாடுகளுக்கு எவ்வித பிரச்னையும் இன்றி இறக்குமதியாகிறதே எப்படி?. குறிப்பாக சீனா, ஜப்பான் நாடுகளுக்கு செல்லும் சரக்குகள் பெரும்பாலானவை மலேசியா சென்று அங்கிருந்து வேறு கண்டெய்னர்களில் மாற்றப்பட்டு மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதுவரை சீனாவிலோ, ஜப்பானிலோ, இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட செம்மரங்கள் பிடிபட்டதாக ஒரு செய்தி கூட இல்லையே?. எனில் எந்த பொருளை வேண்டுமானாலும் இந்த நாடுகளுக்கு கடத்திச் செல்ல முடியுமா? 
   எனவே சட்டவிரோதக் கடத்தலுக்கு மறைமுக ஆதரவை இந்நாடுகள் தொடர்ந்து அளித்து வருகின்றன. அரசாங்க ஆதரவின்றி நிச்சயம் செம்மரக் கட்டைகள் இந்நாடுகளுக்குள் ஊடுறுவ முடியாது. செம்மரக் கட்டைகள் குறித்து வெளியில் தெரியும் பயன்பாடுகள் தவிர ஏதோ முக்கிய காரணத்திற்காக இம்மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. அது அணு உலையா? கதிர்வீச்சா? நமக்கு ஏதும் தெரியாது. 
ஆனால் CITES ஒப்பந்தத்தில் இந்த நாடுகள் அனைத்தும் கையெழுத்திட்டுள்ளன என்பதை மறைக்க முடியாது. அதே போல் தெரிந்தே இந்த ஒப்பந்தத்தை மீறுகின்றனவா? என்பது குறித்து  அனைத்து நாட்டுக் குற்ற ஒழிப்புக் காவல் துறைக்குழு (INTERPOL) மூலம் விசாரணை நடத்திட மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றனர்.
    ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 அப்பாவித் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் இதன் பின்னணி குறித்து சமூக ஆர்வலர்களின் கருத்து வலுப்பெற்றாக வேண்டிய நிலை உள்ளது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்காக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது என்றால் அது மிகையல்ல. 


பெட்டிச் செய்தி  

'ஆபரேசன் சேஷா'

செம்மரக் கடத்தலைக் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை சார்பில் இதன் இயக்குனர் நஜீப் ஷா கடந்த 23.1.2015 அன்று சுங்கத்துறை ஆணையர்களுக்கு க்கு ரகசிய சுற்றறிக்கை (கடித எண்:DRI F.NO.DRI/HQ-Pol/21/31/2014) அனுப்பியுள்ளார். இதில்  கடந்த பிப்ரவரி 1 முதல் ஏப்.30 தேதிவரை 3 மாதங்களுக்கு செம்மரக் கடத்தலைத் தடுக்க 'ஆபரேசன் சேஷா'(Operation Sesha) எனப் பெயரிடப்பட்டு மத்திய வருவாய் புலனாய்வுத் துறையுடன் சுங்கத்துறை இணைந்து செயல்படுத்த வேண்டிய சிறப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருந்து வரும் இந்த ஆபரேசன் மூலம் மிகவும் மதிப்பு வாய்ந்த அருகி வரும் இனத்தைச் சேர்ந்த   செம்மரங்கள் கடத்தப்படும்போது கைப்பற்றுவது மட்டுமே நோக்கமாக குறிக்கோளாக இல்லாமல், கடத்தலில் நேரடியாக, மறைமுகமாக கூட்டாகச் செயல்படுபவர்கள், பண பரிமாற்றம் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்தெல்லாம் தீவிரமாகச் செயல்பட வேண்டும். கடத்தல் சம்பவங்கள் குறித்து தகவல் கிடைத்தால் அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல்கள் விரைவாக தெரிவிக்கப்படும் வகையில் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Thursday, 9 April 2015

மணலியில் சுங்கச் சாவடி அமைக்க எதிர்ப்பு: லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவொற்றியூர், ஏப்.2:மணலி மாத்தூரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச் சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராாட்டத்திற்கு தலைமை வகித்த தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியது,
    துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் கீழ் எண்ணூர் விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலை, உள்வட்டச் சாலை உள்ளிட்ட சாலைகளை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தி பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, எண்ணூர் துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழ்நாடு அரசு உள்ளிட்டவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. கட்டணமில்லா சாலையாக இருந்த உள்வட்டச் சாலையில் திடீரென மாத்தூர் என்ற இடத்தில் பெரிய சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. 
     துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் திட்டமாக ஏற்கனவே இருந்த சாலைகள்தான்  தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் இச்சாலைகள் அகலப்படுத்தும் பணியால் துறைமுக நிர்வாகங்கள்தான் பெரிதும் பயன் பெறும்.  மேலும் 15 கி.மீ. சுற்று வட்டாரத்தில் ஏற்கனவே சோழவரம், புத்தகரம் ஆகிய இரண்டு இடங்களில் சுங்கச் சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேலும் இச்சாலையில் துறைமுகத்திற்குச் செல்லவேண்டிய லாரிகள் வரிசைக் கட்டி நிற்கின்றன. 
    மாநகராட்சி பகுதிகளில் சுங்கச் சாவடி அமைப்பதற்கு ஏராளமான விதிமுறைகள் உள்ளன. ஆனால் சென்னையைப் பொருத்தவரை  இந்த விதிகளில் பெரும்பாலானவற்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ந்து மீறி வருகிறது. தன்னிச்சையாகச் செயல்படும் ஆணையத்தை மாநில அரசும் கண்டு கொள்ளாத நிலையே தொடர்ந்து வருகிறது. அகலப்படுத்தும் திட்டங்களுக்குக் கூட சுங்கவரி கட்டணம் என்றால் ஆண்டு தோறும் லாரி உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பல்லாயிரம் கோடி வரிப்பணம் எங்கே?. 
     தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை நிதின் கட்காரியும், இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் படிப்படியாக சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என கூறி வரும் நிலையில் ஒரு அகலப்படுத்தும் திட்டத்திற்காக இச்சாவடி அமைப்பது சரியல்ல. மேலும் திருவொற்றியூர், பொன்னேரி, மணலி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்டவைகளை எளிதாக இணைக்கும் இச்சாலை என்பதால் இங்கு சுங்கச்சாவடி அமைப்பது லாரி உரிமையாளர்களை 
மட்டுமல்ல, இப்பகுதி பொதுமக்களையே பெரிதும் பாதிக்கும். எனவே மத்திய, மாநில 
அரசுகள் இதில் தலையிட்டு உடனடியாக இங்கு சாவடி அமைக்கும் பணியை நிறுத்தி ரத்து செய்ய வேண்டும். அதுவரை தொடர் போராட்டங்களில் சம்மேளனம் ஈடுபடும் என்றார் சுகுமார். 
    ஆர்ப்பாட்டத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
துறைமுகங்களுக்கு இடையேயான இறகுப் பந்து போட்டி முடிவுகள்

ஒட்டுமொத்த பரிசுகளை கொச்சி துறைமுகம் தட்டிச் சென்றது

திருவொற்றியூர், மார்ச் 31:பெருந்துறைமுகங்களுக்கு இடையே கடந்த மூன்று நாள்களாக சென்னையில் நடைபெற்ற வந்த இறகுப் பந்து போட்டிகளில் கொச்சி துறைமுகம் தட்டிச் சென்றது. 
   மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பெருந்துறைமுகங்களுக்கிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கமானது. இந்த ஆண்டுக்கான இறகுப் பந்து போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்  கடந்த சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. 
இதில் சென்னை, ஜவகர்லால் நேரு, காமராஜர், காண்டலா, விசாகபட்டனம், வ.உ.சி, மும்பை, நியூ மங்களூர், கொச்சி உள்ளிட்ட ஒன்பது பெருந்துறைமுகங்களைச் சேர்ந்த 
வீளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
     இதற்கான ஏற்பாடுகளை காமராஜர் துறைமுகம் செய்திருந்தது. போட்டியை கடந்த சனிக்கிழமை காமராஜர் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் முன்னிலையில் காவல்த் துறை  கூடுதல் தலைவர் ஷகீல் அக்தர் தொடங்கி வைத்தார். இறுதிச் சுற்று  போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விபரம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன்படி 
இரட்டையர் பிரிவில் கொச்சி, விசாகபட்டனம், சென்னை முறையே முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றனர். ஒற்றையர் பிரிவில் ஜாய் டி ஆண்டனி, பிரனவ் சதீஷ், அஸ்வின் பால் (மூவரும் கொச்சி துறைமுகம்) முதல் மூன்று இடங்களில் வென்றனர். மூத்தவர்களுக்கான போட்டிகளில் ஜவகர்லால் நேரு, மும்பை, விசாகபட்டனம் ஆகியன முறையே முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றனர். 
     போட்டிகளின் நிறைவு விழா நிகழ்ச்சி திங்கள்கிழமை சென்னையில் நடைபெற்றது. 
இதில் சென்னைத் துறைமுக தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரி டி.கந்தசாாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுப் பதக்கங்களை வழங்கினார். இதில் காமராஜர் துறைமுக இயக்குநர் சஞ்சய் குமார், பொதுமேலாளர் ஆர்.செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய கடலோரக் காவல் படையில் புதிய ரோந்து கப்பல், படகுகள் 

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அஜய்குமார் சிங் அர்ப்பணித்தார்.

திருவொற்றியூர், மார்ச்.29:இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்தியத்தில் ஐ.சி.சி.எஸ் அனாக் என்ற ரோந்துக் கப்பல்,   சி-417, சி-430 ஆகிய ரோந்து படகுகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அஜய்குமார் சிங் ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
      இதற்கான விழா நிகழ்ச்சி சென்னைத் துறைமுக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்திய கடலோரக் காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் சத்ய பிரகாஷ் சர்மா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அஜய்குமார் சிங் கலந்து கொண்டு புதிய ரோந்துக் கப்பல், இரண்டு அதிநவீன படகுகள் உள்ளிட்டவைகளை நாட்டிற்கு அர்ப்பணித்தார். 
இதில் கமாண்டர் சத்யபிரகாஷ் சர்மா பேசியது,
        கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வடிவமைப்பு, கட்டமைப்பு செய்யப்பட்ட புதிய ரோந்துக் கப்பலான ஐசிசிஎஸ் அனாக் (FAST PATROL VESSEL ) 50 மீட்டர் நீளமும், சுமார 290 டன் எடை கொண்டது.  மணிக்கு அதிகபட்சமாக 33 கடல் மைல் வேகம் செல்லக் கூடிய இக்கப்பலில் அதிநவீன பல்வேறு வசதிகள் உள்ளன.  மேலும் இக்கப்பலில் கேப்டன் மணீஷ்பால், 39 மாலுமிகள், அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் காட்டுப்பள்ளி எல் அன் டி சிப் யார்டில் கட்டமைக்கப்பட்ட சி-417, சி-430 என்ற அதி நவீன இடைமறிக்கும் படகுகள் (Interceptor Boats) ஆகியனவும் கிழக்குப் பிராந்தியத்தில் இன்று முதல் இணைக்கப்படுகிறது. இதில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 
      கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல் படை 2490 கி.மீ. தூரத்திற்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.  இந்திய கடலோரப்படையில் தற்போது 102 ரோந்துக் கப்பல்கள், 64  ரோந்து விமானங்கள் உள்ளன. மேலும் 90 புதிய கப்பல்கள், 36 இடைமறிக்கும் படகுகள் உள்ளிட்டவை பல்வேறு கப்பல்கட்டும் தளங்களில் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.  ஆண்டுக்கு சுமார் 850 வீரர்கள், அதிகாரிகளுக்கு புதிய பணிவாய்ப்பு இப்படைப் பிரிவில் அளிக்கப்பட்டு வருகிறது. 
        நீண்ட கடற்கரையை எல்லையாகக் கொண்ட இந்தியா நாட்டின் பாதுகாப்பில் கடலோரக் காவல் படையின் பங்கு மகத்தானது.  கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு, கடத்தலை தடுத்தல், மீனவர்கள் பாதுகாப்பு, கப்பல்களுக்குப் பாதுகாப்பு 
அளிப்பது, புயல் உள்ளிட்ட ஆபத்து காலங்களில் உதவுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கடலோரக் காவல் படையினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர். இப்பணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் விதமாக இப்புதிய கப்பல், படகுகள் இணைப்பு உறுதுணையாக இருக்கும் என்றார் சர்மா.
   இந்நிகழ்ச்சியில் கொச்சி கப்பல் கட்டும் தள நிர்வாக இயக்குனர் கேப்டன் சுப்பிரமணியன், காட்டுப்பள்ளி எல் அன் டி
கப்பல் கட்டும் தள இயக்குநர் வைத்தியநாதன், பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரி ஆண்டவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.