Thursday, 16 April 2015

 காமராஜர் துறைமுகத்தில் ரூ.14 கோடியில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதி

அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

திருவொற்றியூர், ஏப்.15:காமராஜர் துறைமுகத்தில் ரூ.14 கோடி செலவில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதியை கப்பல்த் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தொடங்கி வைத்தார். 
   துறைமுகத்தில் கப்பல்கள் வந்து செல்வதைக் கண்காணிப்பதற்காக ரூ.14 கோடி செலவில் கப்பல் போக்குவரத்து மேலாண்மை வசதி காமராஜர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கப்பல்த் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தொடங்கிவைத்தார். அப்போது அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேசியது,
   இப்புதிய வசதி காமராஜர் துறைமுக வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். இப்புதிய வசதி மூலம் கப்பல்கள் வந்து செல்வதை மட்டுமின்றி எண்ணெய்க் கசிவு ஏதேனும் ஏற்பட்டாலும் கண்டறிய முடியும். இரண்டு கப்பல் தளங்களுடன் தொடங்கப்பட்ட இத்துறைமுகத்தில் தற்போது ஆறு தளங்கள் உள்ளன. மேலும் இரண்டு தளங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் விரைவில் ஆண்டுக்கு 50 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனை இத்துறைமுகம் பெறும். மேலும் வளர்ந்து வரும் காமராாஜர் துறைமுகம் உள்ள இதர துறைமுகங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி வருகிறது. 
   துறைமுகம் தொடர்ந்து வளர்ந்து வரும் அதே வேளையில் இப்பகுதியி்ன் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சமுதாய வளர்ச்சி திட்டங்களுக்காக சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ.3 கோடிவரை இத்துறைமுகம் செலவிட்டுள்ளது பாராட்டுக்குரியது. அதேநேரம் கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த துறைமுக நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். 
நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறார். பொன்னேரி அருகே ஸ்மார்ட் சிட்டி அமைய உள்ள நிலையில் இத்துறைமுகம் சார்ந்த பகுதி சிங்கப்பூர் அளவுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது என்றார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
    நிகழ்ச்சியில் காமராஜர் துறைமுகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.பாஸ்கராச்சார், சென்னைத் துறைமுகத்தலைவர் அதுல்ய மிஸ்ரா, காமராஜர் துறைமுக இயக்குநர் சஞ்சய், பொதுமேலாளர்கள்  ஏ.கே.குப்தா, செந்தில்குமார், குணசேகரன், மக்கள் தொடர்பு மேலாளர் அட்சயநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment