மணலியில் சுங்கச் சாவடி அமைக்க எதிர்ப்பு: லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர், ஏப்.2:மணலி மாத்தூரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் சுங்கச் சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராாட்டத்திற்கு தலைமை வகித்த தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியது,
துறைமுக இணைப்புச் சாலைத் திட்டத்தின் கீழ் எண்ணூர் விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலை, உள்வட்டச் சாலை உள்ளிட்ட சாலைகளை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தி பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, எண்ணூர் துறைமுகங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழ்நாடு அரசு உள்ளிட்டவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. கட்டணமில்லா சாலையாக இருந்த உள்வட்டச் சாலையில் திடீரென மாத்தூர் என்ற இடத்தில் பெரிய சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது.
துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் திட்டமாக ஏற்கனவே இருந்த சாலைகள்தான் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் இச்சாலைகள் அகலப்படுத்தும் பணியால் துறைமுக நிர்வாகங்கள்தான் பெரிதும் பயன் பெறும். மேலும் 15 கி.மீ. சுற்று வட்டாரத்தில் ஏற்கனவே சோழவரம், புத்தகரம் ஆகிய இரண்டு இடங்களில் சுங்கச் சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மேலும் இச்சாலையில் துறைமுகத்திற்குச் செல்லவேண்டிய லாரிகள் வரிசைக் கட்டி நிற்கின்றன.
மாநகராட்சி பகுதிகளில் சுங்கச் சாவடி அமைப்பதற்கு ஏராளமான விதிமுறைகள் உள்ளன. ஆனால் சென்னையைப் பொருத்தவரை இந்த விதிகளில் பெரும்பாலானவற்றை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடர்ந்து மீறி வருகிறது. தன்னிச்சையாகச் செயல்படும் ஆணையத்தை மாநில அரசும் கண்டு கொள்ளாத நிலையே தொடர்ந்து வருகிறது. அகலப்படுத்தும் திட்டங்களுக்குக் கூட சுங்கவரி கட்டணம் என்றால் ஆண்டு தோறும் லாரி உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் பல்லாயிரம் கோடி வரிப்பணம் எங்கே?.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை நிதின் கட்காரியும், இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் படிப்படியாக சுங்கச்சாவடிகளை அகற்றுவோம் என கூறி வரும் நிலையில் ஒரு அகலப்படுத்தும் திட்டத்திற்காக இச்சாவடி அமைப்பது சரியல்ல. மேலும் திருவொற்றியூர், பொன்னேரி, மணலி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அண்ணாநகர், கோயம்பேடு உள்ளிட்டவைகளை எளிதாக இணைக்கும் இச்சாலை என்பதால் இங்கு சுங்கச்சாவடி அமைப்பது லாரி உரிமையாளர்களை
மட்டுமல்ல, இப்பகுதி பொதுமக்களையே பெரிதும் பாதிக்கும். எனவே மத்திய, மாநில
அரசுகள் இதில் தலையிட்டு உடனடியாக இங்கு சாவடி அமைக்கும் பணியை நிறுத்தி ரத்து செய்ய வேண்டும். அதுவரை தொடர் போராட்டங்களில் சம்மேளனம் ஈடுபடும் என்றார் சுகுமார்.
ஆர்ப்பாட்டத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
No comments:
Post a Comment