2014-15 நிதியாண்டு செயல்பாடுகள்
53 மில்லியன் டன் சரக்குகளை கையாண்ட சென்னைத் துறைமுகம்
திருவொற்றியூர், ஏப்.18:சென்னைத் துறைமுகம் கடந்த 2014-15 நிதியாண்டில் சுமார் 53 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளதாக துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னைத் துறைமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 2014-15 நிதியாண்டில் துறைமுகத்தின் அனைத்து துறைகளும் ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டில் சுமார் 53 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இத்துறைமுகம் முந்தைய 2013-14 நிதியாண்டில் ரூ.174 கோடி நிகர பற்றாக்குறை இருந்த நிலையில் கடந்த ஆண்டு ரூ.4 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இரும்பு கசடுகள், சுண்ணாம்புக்கல், எஃகு தகடுகள், மரக்கட்டைகள் , அதிக அளவில் கையாளப்பட்டுள்ளன. மேலும் துறைமுகத்தில் செயல்பட்டு வரும் இரண்டு தனியார் முனையங்கள் மூலம் 1.60 மில்லியன் சரக்குப் பெட்டகங்கள் கையாளப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 6 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம் சரக்குப் பெட்டகங்களைக் கையாள்வதில் பெரிய துறைமுகங்களில் மும்பை நவசேவாவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு அடுத்தபடியாக சென்னைத் துறைமுகம் உள்ளது.
துறைமுகத்தை தொடர்ந்து அகழ்வு செய்து வருவதன் மூலம் பெரிய கப்பல்கள் தங்கு தடையின்றி உள்ளே வந்து செல்ல முடியும். பல்வேறு துரித நடவடிக்கள் எடுக்கப்பட்டதன் மூலம் கப்பல்கள் துறைமுகத்திற்கு வெளியே காத்திருக்கும் நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கப்பல் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துறைமுகத்தை மேலும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு புதிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இத்திட்டம் நிறைவடையும்போது ஆண்டுக்கு சுமார 100 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டதாக இத்துறைமுகம் வலுவடையும்.
சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள துறைமுகங்களுக்கு சரக்குப் பெட்டகங்களை எடுத்து செல்ல வசதியாக கடல்சார் நெடும்பாதை (Marine Highway) அமைக்கப்பட உள்ளது. காற்றாலைகள் மூலம் சுமார் 6 மெகாவாட் மின்சாரம் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. துறைமுகத்தில் காவல், கண்காணிப்பு, தீயணைப்பு உள்ளிட்டவைகள் வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
இணைப்புச் சாலைத் திட்டங்கள்:
துறைமுக இணைப்புச் சாலைத் திட்டம் முடியும் தருவாயில் உள்ளது. இதில் உள்ள ஒரு சில பிரச்னைகள் விரைவில் களையப்படும். மேலும் மதுரவாயல்-சென்னைத் துறைமுகம் உயர் மட்ட மேம்பாலம் திட்டம் தற்போது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுடன் பல்வேறு முனைகளில் சுமூகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பதில் துறைமுக நிர்வாகம் மிகுந்த அக்கரை கொண்டுள்ளது. புதிய ரயில்பாதைகள் அமைக்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறோம்.
மேலும் துறைமுகத்தின் கிழக்குக் கரையை மேலும் மேடுபடுத்தி உள்நாட்டு சரக்குப் போக்குவரத்தை தொடங்கும் திட்டம் ஆய்வில் உள்ளது. இதற்கான முழு திட்டச் செலவினையும் இரண்டாவது சரக்குப் பெட்டக முனையம் ஏற்க உள்ளது.
இரும்புத்தாது, நிலக்கரி தையாளப்படுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும்
இந்த அளவுக்கு சரக்குகளைக் கையாண்டு சென்னைத் துறைமுகம் லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment