முகவை க.சிவகுமார்.
திருவொற்றியூர் செய்தியாளர்.
கேள்வியும்...பதிலும்...
ஜனநாயகத்தின் நான்காவது தூண். மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நாட்டினை வழிநடத்தும் வழிகாட்டி என்றெல்லாம் பத்திரிகைகள் மீது தொடர்ந்து காலம் காலமாக நம்பிக்கை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் காந்தியடிகள் முதல் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வரை ஏராளமானோர் பத்திரிகையாளர்களாக இருந்த பின்னர் தலைவர்களாக உருவெடுத்துள்ளனர். அன்று முதல் இன்றுவரை உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அவற்றையெல்லாம் முடிந்தவரை விரைவாகவும், விளக்கமாகவும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதில் பத்திரிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஆனால் புதுடில்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜயகாந்த் நடந்து கொண்ட விதம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது தினசரி செய்திகளை அறிந்து கொள்வதில் விருப்பம் இல்லாதவர்களிடமும் கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு மட்டுமல்லாது சமீப காலமாக ஊடகங்கள் மீது அவ்வப்போது பல அரசியல் தலைவர்களும் குறை கூறுவது, பழி சுமத்துவது அதிகரித்து வருகிறது. மஹராஷ்டிரா மாநிலத் தேர்தலின் போது பத்திரிகையாளர்களிடம் பரிசுப் பொருள்களை வாங்கி மகிழும்படி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஊடகங்களில் அரசியல் ஊடுவிருவியுள்ளதா? ஒரு சாராக ஊடகங்கள் செயல்படுகின்றனவா? என்ற கேள்விகளுக்கு பதில் கிடைத்தாக வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
1993-ல் தொடங்கப்பட்ட சன் டி.வி. இன்றைக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட நான்கு தென்னிந்திய மொழிகளில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட சேனல்களை நடத்தி வருகிறது. இது தவிர நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் பண்பலை வானொலி நிலையங்களை நடத்தி வருகிறது. தினகரன், தமிழ்முரசு நாளிதழ்களை சன் நெட்வொர்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இவை அனைத்தும் தி.மு.க. சார்பான பின்னணியில்தான் செய்திகள் வெளியிடப்படுகின்றன. அவர்களுக்குள் பிணக்கு ஏற்படும்போது வெளியிடப்படும் செய்திகளை நாம் இங்கு கணக்கில் கொள்ளக் கூடாது.
இதனைத் தொடர்ந்து வந்த ராஜ் டி.வி. ஓரளவிற்கு நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கினையடுத்து அறிவாலயத்திலிருந்து சன் டி.வி. 2007-ல் வெளியேறியபோது ராஜ் டி.வி. உரிமையாளர் எம்.ராஜேந்திரன் தி.மு.க.வில் இணைந்தார். அப்போது சன் டி.வி. இல்லாத நிலையில் தி.மு.க.வின் செய்திகளுக்கு ராஜ் டி.வி. முக்கியத்துவம் அளிக்கும் எனவும் தெரிவித்தார். ஆனால் இந்த ஏற்பாடு நீண்ட காலத்திற்கு ஒத்துவராது என்பதை உணர்ந்த அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தனது குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு உடனடியாக கலைஞர் டி.வி.யைத் தொடங்கினார். சன் டி.வி.யை உருவாக்கி வளர்த்தெடுத்ததில் முக்கிய பங்காற்றிய சரத் ரெட்டியே கலைஞர் டி.வி. தொடங்குவதிலும் மூளையாகச் செயல்பட்டார். அவசர கோலத்தில் தொடங்கப்பட்ட இந்த கலைஞர் டி.வி. விவகாரமே தி.மு.க.வின் சரிவிற்கு காரணமாக அமைந்தது தனிக்கதை. கலைஞர் டி.வி.யின் செய்தியில் தி.மு.க.சார்ந்த செய்திகளை சாதகமாகவும், அ.தி.மு.க.சார்ந்த செய்திகளை பாதகமாகவோ அல்லது திரித்தோ வெளியிடும் பணியைத் திறம்பட செய்து வருகிறது.
அ.தி.மு.க.விற்காக தொடங்கப்பட்ட ஜெயா டி.வி. இன்றைக்கு நான்கு சேனல்களை நடத்தி வருகிறது. இதில் முழுமையாக அ.தி.மு.க. மற்றும் இதன் தலைவர் ஜெயலலிதா குறித்த செய்திகள்தான் இடம்பெறும். மற்றபடி கருணாநிதியையும், தி.மு.க.வையும் வசைபாடும் செய்திகளை வெளியிடுவதில் ஜெயா டி.வி. மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கு நிகரில்லை.
தி.மு.க., அ.தி.மு.க.விற்கு ஊடகங்கள் இருப்பதால்தான் அரசியலில் நிலைத்திருக்க முடிகிறது என்று நம்பிய இதரக் கட்சிகள் தங்களுக்கென ஊடகங்களை ஏற்படுத்துவதில் முனைப்பு காட்டின. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்கள் தொலைக்காட்சி, தமிழோசை ஓசை நாளிதழ் தொடங்கப்பட்டன. ஆரம்பத்தில் மொழி, இனம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க முற்பட்ட மக்கள் தொலைக்காட்சி காலப்போக்கில் பா.ம.க.வின் செய்திகளுக்கே முக்கியத்துவம் அளிக்க முற்பட்டது. மேலும் பெருத்த நட்டத்துடன் தமிழோசை நாளிதழ் நின்று போனதும் பா.ம.க.வுக்கு பாதிப்புதான்.
இதே வழியில் விஜயகாந்த் தொடங்கிய கேப்டன் டி.வி. தே.மு.தி.க.வின் பிரச்சாரப் பீரங்கியாகச் செயல்பட்டு வருகிறது. 2006-ல் காங்கிரஸ் பின்னணியில் ஆர்.ஏ.ஜெபராஜ் என்பவரால் தொடங்கப்பட்ட இமயம் டி.வி. தற்போது ம.தி.மு.க.வின் செய்திகளுக்கு
பிரதான இடம் அளித்து வருகிறது. குமரிஅனந்தனின் சகோதரர் வசந்தக்குமாரால் தொடங்கப்பட்ட வசந்த் டி.வி. காங்கிரஸ் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதை நாம் இங்கு குறிப்பிடலாம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு மெகா டி.வி.யைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
தமிழக காட்சி ஊடக வரலாற்றில் நடுநிலையோடும் புதுமையோடும் செயல்படும் என அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி இதன் நிறுவனர் பச்சமுத்து இந்திய ஜனநாயகக் கட்சி என்ற கட்சியைத் தொடங்கியவுடன் புதிய தலைமுறை மீதும் கட்சி பாசம் விழுந்தது. இதனை மறைத்துக் கொள்ளவும், பொருளாதார ரீதியாக ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கவும் பச்சமுத்து தனியாகவே வேந்தர் டி.வி.யை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை தவிர அரசியல்வாதிகள் தொடர்பில்லாத ஸ்டார் குழுமத்தின் விஜய் டி.வி.,தினத்தந்தி நாளிதழின் தந்தி டி.வி., கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் தொடங்கப்பட்ட பாலிமர், ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. தினசரி செய்தித் தாள்களைப் பொருத்தவரை அவ்வப்போது நடுநிலையாகவும், ஒருநிலை சார்பாகவும் செய்திகளை வெளியிட்டு வருவதை வாசகர்கள் அறிவார்கள். ஆக நடுநிலை என்பது தேட வேண்டிய நிலையில்தான் இன்றைய ஊடகங்களின் நிலை உள்ளது.
இது தமிழ்நாட்டின் உள்ள ஊடகங்ளின் வரலாறு. ஏறக்குறைய இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது வருத்தமான செய்தி. ஜன.29, 1780-ல் இந்தியாவின் முதல் செய்தித்தாளான பெங்கால் கெஜட் ஆங்கில மொழியில் கல்கத்தாவிலிருந்து வெளியானது. இன்றைக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சக புள்ளி விபரங்களின்படி சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் ஆங்கிலம், இந்தி மற்றும் இந்திய மொழிகளில் வெளியிட பதிவு செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன. மேலும் சுமார் 800 தொலைக்காட்சிகள இயங்கி வருகின்றன இதே போல் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் செய்தித்தாள்கள் தொடங்குவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் சுமார் 50 புதிய சேனல்கள் ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திற்கு அனுமதிக்காக வருகின்றன.
இந்த நிலையில் விஜயகாந்த் கூறுவதுபோல் அந்த டி.வி. செய்தியாளர் கேள்வி கேட்கக் கூடாது... இந்த நாளிதழ் இப்படி செய்தி போடுகிறது... என்றெல்லாம் பிதற்றுவது அவரின் அறியாமையைக் காட்டுகிறது. மேலும் தமிழகத்தின் அதிகாரப் பூர்வ எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால்தான் அவர் செல்லுமிடமெல்லாம் அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் விஜயகாந்த் சமீப காலமாக அவர் அளித்து வரும் குதர்க்கமான, கிண்டலான, பொறுப்பற்ற பதில்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அவர் ஒரு கேலிப் பொருளாகி வருகிறார் என்பதை அவரிடம் யார் சொல்வது?.
ஊடகங்களில் பெரும்பாலானவை அரசியல் பின்புலத்தோடுதான் இயங்குகின்றன
என்பதை மறுக்க இயலாது. ஆனால் இதையே நாம் சாதகமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். ஆளும் கட்சியினரின் தவறுகளை எதிர்கட்சியினரின் பின் புலத்தில் உள்ள ஊடகங்கள் வெளிக் கொண்டு வரட்டுமே!. ஆளும் கட்சியின் சாதனைகளை ஆளும் கட்சி பின்புலத்தில் இயங்கும் ஊடகங்கள் எடுத்தியம்பட்டுமே! இதிலென்ன தவறு. ஆக எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும், பத்திரிகைகளாக இருந்தாலும் இவர்கள் வெளியிடும் செய்தியை அன்னப் பறவைபோல்தான் வாசகர்கள், பொதுமக்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
எனவே இனியாவது விஜயகாந்த் போன்ற தலைவர்கள் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்குத்தான் பதில் அளிக்க வேண்டுமே தவிர அவர் எந்த ஊடகத்தைச் சேர்ந்தவர் என்பது தேவையில்லாதது. இவ்வாறு எதிர் கொள்ளத் துணிவற்றவர்கள் செய்தியாளர் சந்திப்பை தவிர்ப்பது நல்லது. அதே நேரம் செய்தியாளர்களும் எந்த ஒரு விசயம் குறித்தும் யாரிடம் கேள்வி எழுப்பினாலும் அதில் விருப்பு வெறுப்புகளின்றி, ஆணித்தரமான, விளக்கமாகக் கேள்விகளைக் கேட்க தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே நடுநிலை செய்தியாளர்களின் விருப்பமாக உள்ளது.
No comments:
Post a Comment