மீன்பிடித் தடைகாலம், அதிவேக படகுகளை பயன்படுத்துவதில் பிரச்னை
காசிமேடு மீனவர்களிடையே கடும் மோதல் ஏற்படும் அபாயம்
முதல்வர் தலையிடக் கோரிக்கை
திருவொற்றியூர், மே 28: மீன் பிடி தடைகாலத்தை நீடிப்பது, அதிவேக விசைப்படகுகளை பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளால் சென்னை காசிமேடு மீனவர்களிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடை காலங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும். இதனால் படிப்படியாக மீன்வளம் குறையும் அபாயம் ஏற்படும் எனக் கருதி கடந்த 2000-ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஏப்.15 முதல் மே 29 வரை 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் வங்கக் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கும் நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த ஆண்டு இத்தடை காலத்தை இந்த ஆண்டு ஜூன் 14 வரை முதல் 61 நாள்களாக நீடித்து மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இதனை ஏற்க முடியாது என அறிவித்துள்ளன. இதனால் 45 நாள் தடைகாலம் வெள்ளிக்கிழமை இரவுடன் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து சென்னை காசிமேடு மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மீனவர்களின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தின் முகத்துவாரத்தில் படகுகளை வரிசையாக நிறுத்தி தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்களிடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மோதலைத் தவிர்க்க மீன்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பிரச்னைக்கான காரணம் குறித்து மீனவர் நல சங்க நிர்வாகிகளிடம் பேசியபோது பின் வருமாறு தெரிவித்தனர்.
அதிவேக விசைப்படகுகளால் வாழ்வாதாரம் பாதிக்கும்:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர் நல சங்கத் தலைவர் குப்பன்:
61 நாள் தடை காலத்தை ஏற்க மறுக்கும் தமிழக அரசின் கொள்கை முடிவில் தலையிட விரும்பவில்லை. இம்முடிவு சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களுக்கு
ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் சுமார் 80 சதவீத காசிமேடு மீனவர்களின் தொழில் சார்ந்த வாழ்வாதாரம் ஆந்திரா மாநில கடலோரப் பகுதிகளை நம்பியே உள்ளன. அம்மாநிலத்தில் தடைகாலம் 61 நாள்கள் என்ற நிலையில் வரும் ஜூன் 14-வரை தடை நீடிக்கிறது. தமிழக மீன்வளத்துறையும் இன்னும் 15 நாள்கள் வரை ஆந்திர பகுதிக்குச் செல்லக்கூடாது என எச்சரித்துள்ளது. மேலும் காசிமேடு மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கணிசமானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே காசிமேட்டில் மொத்தமுள்ள சுமார் 1,100 படகுகளும்
சென்னையை ஒட்டிய குறுகிய பகுதியில் மீன்பிடித்தால் மீன் வளம் என்னவாகும்?
மேலும் அதிகபட்சம் 150 குதிரை சக்தி, 20 மீட்டர் நீளம் வரை உள்ள விசைப்படகுகளுக்கு மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் சுமார் 300 குதிரை சக்திவரையுள்ள ஏராளான விசைப்படகுகள் காசிமேட்டில் உள்ளன. இவற்றை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தடை செய்ய வேண்டும். ஆய்வு செய்வது என்பது தடைகாலத்தில் மட்டுமே சாத்தியம். ஆனால் இதுவரை ஒரு படகினையும் கண்டறியவில்லை என்றார் குப்பன்.
அதிவேக விசைப்படகுகள் இல்லவே இல்லை:
சென்னை விசைப்படகு மீனவர் நல சங்கத் தலைவர் ரகுபதி கூறியது,
தடைகாலம் குறித்து தமிழக அரசு என்ன முடிவெடுக்கிறதோ அதனை ஏற்றுக்கொண்டு செயல்படுவதுதான் முறையானது. மீன் வளத்துறை அதிகாரிகள் கடந்த மே 21-அன்று அனைத்து விசைப்படகுகளையும் நேரடியாக ஆய்வு செய்தனர். இதில் ஒரு படகு கூட 20 மீட்டருக்கும் மேல் நீளம் இல்லை. இதன் பிறகு 80 படகுகள்
விதிகளுக்கு மாறாக அமைக்கப்பட்டுள்ளன என எதிர் தரப்பினர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து மீண்டும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் சோதனையிட்டனர்.
இதிலும் எந்தப் படகும் விதிமீறலுக்கு உட்பட்டதாகக் கண்டறியப்படவில்லை. எனவே
வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு ஒரு குறிப்பிட்ட சங்கத்தைத் சேர்ந்தவர்கள் முகத்துவாரத்தில் படகுகள் நிறுத்தி தடை ஏற்படுத்தி உள்ளனர். வெள்ளிக்கிழமை தடை காலம் நிறைவடையும் நிலையில் படகுகளைத் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எனவே தடை ஏற்படுத்தியுள்ள படகுகளை உடனடியாக அகற்ற
மீன்வளத்துறையும், காவல்த் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரகுபதி.
மீன்வளத்துறை அதிகாரிகள் உடந்தை:
ராயபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், முன்னாள் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய முன்னாள் உறுப்பினருமான வேணுகோபால் கூறியது,
காசிமேடு மீன் பிடித்துறைமுகத்தில் பதிவு செய்யப்படாத படகுகள் ஏராளமாக உள்ளன. எங்கெங்கிருந்த 150 குதிரை சக்திக்கும் அதிகமாக உள்ள இயந்திரங்களைக் கொண்ட அதிவேக விசைப்படகுகள் வாங்கி வரப்பட்டு காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ளன. இதனால் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. மேலும் இங்கு விசைப்படகுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தொழிலாளர் பற்றாக்குறை, மீன் விலை வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னையால் மீனவர்களின்
வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களில் மழை, புயல் காலங்களில் மட்டுமே தடைகாலம் அறிவிக்கப்பட்டு்ள்ளது.
எனவே மீன் இனப்பெருக்கத்திற்காக தடைகாலம் என்றால் ஒரே நாட்டில் ஒரே மாதிரியாகத்தானே இருக்க வேண்டும். இதற்கான ஆய்வுகள் முறையாக நிரூபிக்கப்படவில்லை என்பதே உண்மை. தற்போதைய பிரச்னையையால் மீனவர்களிடையே மோதல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தமிழக அரசின் பொறுப்பாகும் என்றார் வேணுகோபால்.
காசிமேடு விசைப்படகு மீனவர்கள் மூன்று பிரிவுகளாக சங்கங்கள் அமைத்துள்ளனர். இதன் நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு ஒட்டுமொத்த மீனவர்களிடையே பிளவு ஏற்பட்டு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இப்பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு சுமூக முடிவினை எடுக்க வேண்டும். வெள்ளிக்கிழமை இரவுக்குள் தடை ஏற்படுத்தியுள்ள படகுகளை
அப்புறப்படுத்தும் வரை இப்பகுதியில் பதற்றம் தொடரும் என்பதே பெரும்பாலானோர்களின் கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment