Friday, 11 December 2015

திருவொற்றியூர் காவலர் குடியிருப்பில் தேங்கி நிற்கும் கழிவு நீர்


திருவொற்றியூர், டிச.9: கனமழையால் வெள்ளத்தில் சிக்கிய திருவொற்றியூர் காவலர் குடியிருப்பில்  வெள்ள நீருடன் கழிவு நீர் கலந்து வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் இங்கு வசிக்கும் காவலர்களின் குடும்பத்தினர் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். 
    திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் காவலர் குடியிருப்பு உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டில் ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் சுமார் என்பதுக்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு நீண்ட காலமாக கழிவு நீர் வெளியேறுவதில் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் இப்பகுதியை வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது மழை நின்றுவிட்ட போதிலும் இங்கிருந்து கழிவு நீர் கலந்த வெள்ளநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கடந்த 15 நாள்களாக இங்கு வசிக்கும் காவலர் குடும்பத்தினர் துர்நாற்றம், கொசு உள்ளிட்ட இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், கழிவுநீரை அகற்று வேண்டும என பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. இங்கு வசிக்கும் காவலங்கள் பல்வேறு பகுதிகளில் மீட்பு மற்றும் காவல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினரே அவதிக்கு உள்ளாகி வருவது வேதனயளிக்கிறது என்றனர்.
விரைவில் தீர்வு காண உறுதி:
இப்பிரச்னை குறித்து மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் தனரமேஷ் கூறியது,
     இக்குடியிருப்பு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் குழாய்கள் போதுமானதாக இல்லை. மேலும் குழாய்களில்  அடைப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தேங்கியிருக்கும் கழிவுநீரை அகற்றி வருகிறோம். கழிவுநீர் அகற்றல், காவலர் வீட்டுவசதி வாரிய அதிகாரிகளின் கலந்து பேசி இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார் தனரமேஷ். 
மணலி அருகே வெள்ளத்தில் சிக்கிய 200 பேர் ஒரு வாரத்திற்கு பின்பு மீட்பு

திருவொற்றியூர்,டிச.9:சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர்-மணலி சாலை அருகே அமைந்துள்ள் ஒரு பகுதியில் கடந்த ஒரு வாரமாக வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தத்தளித்த சுமார் 200 பேர் ஒரு வாரத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை 
மீட்கப்பட்டனர். 
    திருவொற்றியூர்-மணலி சாலையில் தாழ்வான பகுதியில் பெரியார் நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இதனைச் சுற்றி தொழிற்சாலைகளுக்கு பின்னாள் தாழ்வான பகுதியில் பெரியார் நகர் உள்ளது. இக்குடியிருப்பைச் சுற்றி ஒரு சாலையைத் தவிர நான்கு புறமும் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.  இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தொடர்மழையால் பெரியார் நகர் முழுவதும் திடீரென வெள்ளம் சூழ்ந்தது. மார்பளவு உயரத்திற்கு வெள்ளநீர் சூழ்ந்திருந்ததால் இங்கு வசிக்கும் மக்கள் வெளியேற முடியாமல் சிக்கினர். மேலும் கடந்த ஒரு வாரமாக மின்சாரம் தடைபட்டிருந்தது. மேலும் அடிப்படை வசதிகளும் இல்லை. இங்குள்ள கோயில் ஒன்றில் பெண்களில் பெரும்பாலானோர் தங்கியிருந்துள்ளனர். மேலும் இக்குடியிருப்பு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் வைக்கப்பட்டிருந்த  கண்டெய்னர் லாரிகளில் ஆண்கள் தங்கியுள்ளனர். 
    இந்நிலையில் மழை பெய்வது நின்றுள்ளதையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இப்பகுதிச் சென்ற திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே.குப்பன், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், மண்டல குழு தலைவர் தனரமேஷ், மாமன்ற உறுப்பினர் கலையரசன் உள்ளிட்டோர் வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்டு அருகில் உள்ள நிவாரண முகாமுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர்களுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள், உணவு, உடை உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். 
மேலும் இக்குடியிருப்பு பகுதியில் திருட்டு ஏதும் நடக்காத வகையில்  பாதுகாப்பிற்காக  போலீஸார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 
சாலையில் ஆறாக ஓடும் சாக்கடை: சீரமைப்பதில் நிர்வாகக் குளறுபடி 

திருவொற்றியூர், டிச.6:திருவொற்றியூர் எர்ணாவூர் மேம்பாலம் அருகே சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைக் குழாயிலிருந்து கழிவு நீர் ஊற்றுபோல் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது.
  திருவொற்றியூர்  நகராட்சியாக இருந்தபோதே சுமார் 18 வார்டுகளில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகளை குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரியம் செயல்படுத்தி வந்தது. ஐந்து கட்டப் பணிகளாக நடைபெற்றுவந்த இப்பணிகளில் எர்ணாவூர் பகுதியில் பணிகள் நிறைவடைந்து இரு மாதங்களுக்கு முன்பு திறப்புவிழாவும் நடைபெற்றது. 
இந்நிலையில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த பாதாளச் சாக்கடை குழாய்களின் நிலைமை என்னானது என்பது இனிமேல்தான் தெரிய வரும் 
    எர்ணாவூர் பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீர் பாதாளக் குழாய்கள் வழியாக 
வந்து வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் ஏற்றும் மையத்திற்கு வந்தடைகின்றன. இதில் சுனாமி மறுவாழ்வு குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பாரத்நகர்  வழியாக நீரேற்று நிலையத்திற்கு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக 
எர்ணவூர் மேம்பாலம் அருகே உள்ள பாதாளச் சாக்கடை குழாயிலிருந்து ஆள் இறங்கும் துளைகள் வாயிலாக ஊற்றுபோல கழிவு நீர் வெளியேறி வருகிறது. 
துர்நாற்றம், நிர்வாகக் குளறுபடி:
இது குறித்து பாரத்நகரை கிராம நலச் சங்க நிர்வாகிளில் ஒருவரான சேர்ந்த பி.பாலு கூறியது,
    இச்சாலை முழுவதும் முழங்கால் அளவுக்கு கழிவுநீர் தேங்கியுள்ளது. இப்பகுதியின் முக்கியச்சாலையே இதுதான். இதனால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலாகவே இருந்து வரும். இந்த இடத்தில் பேருந்து நிறுத்தம் இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர். நீரேற்று நிலையத்தில் மோட்டார்கள் சரிவர இயக்கப்படாததால் கழிவுநீர் குழாய்களிலிருந்து வெளியேறுகிறது. இது குறித்து வாரியத்தின் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் இது வாரியத்தின் கட்டுமானப் பிரிவிலிருந்து பராமரிப்புத் துறைக்கு ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர். இப்பிரச்னையைத் ஒரே வாரியத்தின் இரு பிரிவுகளுக்குள் கூட ஒற்றுமையில்லாது அதிகாரிகளின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது. எனவே கழிவு நீர் அகற்றல் வாரிய உயர் அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். மேலும் சேதமான ஆள் இறங்கும் துளைகளைச் சீரமைக்க வேண்டும் என்றார் பாலு
சாக்கடை நீரில் தவிக்கும் வடசென்னை மக்கள்: நோய்கள் பரவும் அபாயம்

சிறப்பு கவனம் தேவை

திருவொற்றியூர், டிச.6:வெள்ளத்தின்போது பக்கிங்காம் கால்வாயிலிருந்து வெளியேறிய சாக்கடை மற்றும் குப்பைகளால் வடசென்னையில் சுமார் 40 ஆயிரம் வீடுகளில் வசிக்கும் சுமார் 1.50 லட்சம் பேர் தொடர்ந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
     வடசென்னையில் எண்ணூரிலிருந்து கூவம் ஆறுவரை பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. இதில்தான் எண்ணூர், திருவொற்றியூரின் மேற்கு பகுதி, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளின் வெள்ளநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் நீர் உள்ளிட்டவை வெளியேற்றப்பட்டு வந்தன. ஆனால் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் வழக்கமாகச் செல்லும் இப்பகுதியிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் கால்வாயில் செல்லவில்லை.  மேலும் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பங்கிங்காம் கால்வாய் நீர் எண்ணூர் கடலுக்குச் செல்ல முடியாமல் மேலே ஏறியது. இதனையடுத்து திருவொற்றியூர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கால்வாயில் சென்ற வெள்ளநீர் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் புகுந்தது. இதில் சாக்கடை, குப்பைகளும் உள்ளே வந்ததுதான் இப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாக பெரும் காரணமாக உள்ளது.
சுமார் 1.50 லட்சம் பேர் பாதிப்பு:
   திருவொற்றியூரில் சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், சார்லஸ் நகர், கலைஞர் நகர், 
ஜோதிநகர் உள்ளிட்ட, தண்டையார்பேட்டையில் பரமேஸ்வரன் நகர், தமிழர் நகர் ராஜசேகரன் நகர், மீனாம்பாள் நகர், திருவள்ளுவர் நகர், கருமாரியம்மன் நகர், எழில் நகர் உள்ளிட்ட, கொருக்குப்பேட்டையில் நேரு நகர், அஜிஸ் நகர், பட்டேல் நகர், குமரன் நகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் சுமார் 40 ஆயிரம் வீடுகளில் வெள்ளநீருடன் சாக்கடை, குப்பைகள் புகுந்துள்ளன. இதனால் சுமார் 1.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மழை குறைந்திருப்பதையடுத்து பக்கிங்காம் கால்வாயிலும் ஓடும் நீர் மட்டம் குறைந்துள்ளதால் இதனால் இப்பகுதியில் தேங்கியிருந்த வெள்ளநீர் படிப்படியாக வடிந்து வருகிறது. 
தேங்கிய கழிவுகள், வெளியேறாத குப்பைகள்:
          பக்கிங்காம் கால்வாயிலிருந்து வெளியேறிய குப்பைகளும், சாக்கடைக் கழிவுகள் தண்ணீருடன் வெளியேறாமல் பெரும்பாலான இடங்களில் படிந்து காணப்படுகின்றன. இதனால் எங்கு பார்த்தாலும் கரிய நிறத்தில் சாக்கடை கழிவுகள், சகதி, குப்பைகளாகவே காணப்படுகின்றன. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. இன்னும் ஒரு சில இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளன. மேலும் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி, மாவு, மளிகைச் சாமான்கள் வெள்ளநீரில் மூழ்கி பாழடைந்து
உள்ளது. 
நோய்கள் பரவும் அபாயம், சிறப்பு கவனம் தேவை:
     பொதுவாகவே வடசென்னையில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகள் பெரும்பாலனவை நெருக்கமான வீடுகள், குடிசைகளால் அமைந்தவையே. எனவே சாக்கடைக் கழிவு குப்பைகளை அகற்றுவதில் தீவிர கவனம் தேவை. மேலும் இப்பிரச்னையால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்னதான் சுகாதாரக் குழுக்களை அனுப்பினாலும் இப்பகுதியின் நோய் பரவும் தீவிரத்திற்கு போதுமானதாக இருக்காது. எனவே இப்பகுதியில் படிந்துள்ள சாக்கடை மற்றும் குப்பைகளை விரைந்து வெளியேற்ற சிறப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும். அப்போதுதான் இப்பகுதி மக்கள் தொடர்ந்து அவதிக்கு உள்ளாவதில் இருந்து காப்பாற்ற முடியும் என்பதே தற்போதைய நிலை.


   தீவாக மாறிய மணலி புதுநகர்:
திருவொற்றியூர் பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் 
வடசென்னையின் கடைக்கோடி பகுதியான மணலி புதுநகர், விச்சூர் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித் தீவாக மாறின. இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் சுமார் ஐந்து நாள்கள்வரை எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பல்வேறு அமைப்புகள் வழங்கிய உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் இப்பகுதி மக்களைச் சென்றடையவே இல்லை. எண்ணூர் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாலம், வல்லூர் வழியாக மட்டுமே இப்பகுதியை அடைய முடிந்தது. பொன்னேரி நெடுஞ்சாலையில் சனிக்கிழமை இரவு முதல் போக்குவரத்து மீண்டும் துவங்கியுள்ளதால் இப்பகுதி மக்கள் மெள்ளமெள்ள இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். 
பேரழிவு வெள்ளப்பெருக்கு ஏற்பட முக்கிய காரணங்கள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் குறைபாடா?

நீரியல் நிபுணர் விளக்கம்

திருவொற்றியூர், டிச.6:சென்னையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்திற்கு ஆறுகளின் முகத்துவாரம் தூர்வாரப்படாதது, கால்வாய்கள் சீரமைக்கப்படாததே முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. மேலும் உபரி நீர் திறந்து விடப்படும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் பொதுமான அளவில் செயல்படவில்லை என நீரியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
      சென்னை மாநகரைப் பொருத்தவரை போதுமான நீரியல் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாகவே உள்ளன. ஆனால் இவற்றைப் பராமரிப்பதில்தான் குறைபாடு இருந்து வருகிறது.  இம்மாநகரம் சிறிய ஊராக இருந்த 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த ஆறுகள்தான் தற்போதும் உள்ளன. 
3 ஆறுகள், பக்கிங்காம் மற்றும் 31 சிறிய கால்வாய்  கட்டமைப்பு:
     தற்போது தென் சென்னையில் அடையாறு, மத்திய சென்னையில் கூவம், வடசென்னையில் குசஸ்தலை ஆறு, இவை மூன்றையும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய், இது தவிர நகர்ப்புரமாக மாறிய போது ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன், கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட 31 கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கால்வாய்களின் மொத்த நீளம் சுமார் 1660 கி.மீ. ஆகும். இக்கால்வாய்களில் வழிந்தோடும் தண்ணீர் அனைத்தும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள மூன்று ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் மூலம் கடலில் பாய்கிறது.  மேலும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 21 அடி (அதிகபட்சம் 200 அடி) உயரத்தில் சென்னை மாநகரம் அமைந்துள்ளது. இதனைக் கொண்டு தற்போதைய வெள்ள அளவு உயரத்தை 
கணக்கிட்டுக் கொள்ளலாம்.
பாதுகாப்பான சென்னை மாநகரம்:
   சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக பொதுப்பணித் துறை சார்பில் பராமரிக்கப்படும் ஏரிகளான செம்பரம்பாக்கம் (கொள்ளளவு-3645 மில்லியன் கனஅடி), பூண்டி (3,231), 
செங்குன்றம் (3,300), சோழவரம் (881) ஆகிய நான்கு ஏரிகளில் மொத்தக் கொள்ளளவு  11,057 மில்லியன் கன அடி ஆகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்த நான்கு ஏரிகளிலும் 9,122 மி.கன அடி தண்ணீர் உள்ளன. இந்த ஏரிகள் நிரம்பும் போது ஏற்படும் 
திறக்கப்படும் உபரி நீர் அனைத்தும் மேலே குறிப்பிட்ட மூன்று ஆறுகள் வழியாகவே கடலில் கலக்கிறது. எனவே ஒட்டுமொத்தமாக அனைத்து விசயங்களையும் ஆய்வு செய்து பார்த்தால் சென்னையைப் பொருத்தவரை பாதுகாப்பானதாகவும், வெள்ளப்பாதிப்பில் சிக்குவதற்கான காரணிகள் மிகக் குறைவாக உள்ள மாநகரமாகவும் உள்ளது.  பிறகு எப்படி பேரழிவு வெள்ளத்தில் சிக்கியது சென்னை மாநகரம்?
பெருமழை, கால்வாய் பராமரிப்பு: 
     இது குறித்து பொதுப்பணித் துறையில் அணை, ஏரிகள் பாதுகாப்பு இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற மதுரையைச் சேர்ந்த நீரியல் பொறியாளர் வி.முத்துவிஜயன் கூறியது,
    தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில் திடீரென கடந்த நவ.30, டிச.1 தேதிகளில் கொட்டிய பேய்மழை தான் முக்கிய காரணம்.  சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் இரு நாள்களில் சராசரியாக 80 செ.மீ மழை பெய்தது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு ஒரே நாளில் உயர்ந்தது. நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அவரசகதியில் உபரி நீர் திறந்துவிடப்பட வேண்டிய
அவசியம் ஏற்பட்டது. ஏனெனில் ஏரியோ, அணையோ அதன் கொள்ளளவை எட்ட 2 அடி உயரம் இருக்கும்போது நீர்வரத்துக்கு ஏற்ப உபரி நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்பது பொதுவான விதியாகும். இல்லையெனில் ஏரி உடைந்துவிடும அபாயம் உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறந்துவிடப்பட்டது என்பதில் விதிமீறல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.  
     ஏரிகள், அணைகள் எதுவாக இருந்தாலும் இவற்றிலிருந்து திறந்துவிடப்படும் கால்வாய்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும். திறந்து விடப்படும் அதிகபட்ச தண்ணீரின் அளவுக்கு ஏற்பவே கால்வாய்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இவை முறையாகத் தூர்வாரி பராமரிக்கப்பட வேண்டும். இக்கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படும் உபரி நீர் அருகில் உள்ள ஆறுகளைச் சென்றடையும் வகையில்தான்
சென்னை ஏரிகள் உள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அடையாறுவரை அமைக்கப்பட்டுள்ள தந்தி கால்வாயில்தான் உபரி நீர் செல்கிறது. ஆனால் தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு கனமழையால் ஏரிகளின் மட்டம் உடனடியாக உயர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டதும், இந்த அளவு உபரி நீர் செல்லும் அளவுக்கு தந்தி கால்வாய் போதுமானதாக இல்லை என்பதே முக்கிய காரணம் ஆகும். மேலும் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளுக்கு மேல் பகுதியில் உள்ள ஏரிகள் சில உடைந்து வெளியேறிய வெள்ள நீரும் பல்வேறு வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இன்னொரு முக்கிய காரணம். 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதா?: 
    ஆனால் பேரிடர் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை தவிர்க்க வேண்டுமானால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்திருக்க வேண்டும்.  ஏனெனில் செம்பரம்பாக்கம் ஏரியில் சுமார் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி திறக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க அதிக வாய்ப்பு இல்லை என்றாலும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ஏற்படப் போகும் தாக்கம் நன்றாகவே தெரியும். கடந்த திங்கள்கிழமையிலிருந்தே உபரி நீர் திறப்பதால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து ஊடகங்கள், ஒலிபெருக்கிகள், எச்சரிக்கை ஒலிப்பான்கள் (Emergency Sirens) மூலம் தொடர்ந்து எச்சரி்த்திருக்க வேண்டும். தயார் நிலையில் மீட்பு படையினரை வைத்திருக்க அரசுக்கு உயர் அதிகாரிகள் தகவல் அனுப்பியிருக்க வேண்டும். இவையெல்லாம் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறக்கப்படும்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாகச் செய்தார்களா? எனத் தெரியவில்லை. 
முகத்துவாரங்கள்:
      பொதுவாக ஆறுகளின் முகத்துவாரங்களில் தண்ணீர் பரவலாகவே சென்று கடலில் கலக்கும். இப்பகுதியில் ஆற்றுப் போக்கின் வேகமும் குறைவாகவே இருக்கும். இதேபோல்தான் குசஸ்தலை, அடையாறு, கூவம் ஆறுகளின் முகத்துவராங்களும்  உள்ளன. இவற்றைத் தூர்வாரி தொடர்ந்து பராமரித்திருந்தால் ஆறுகளில் ஓடும் வெள்ளநீரின் வேகம் அதிகரித்திருக்கும். அதிக அளவிலான வெள்ளப்பெருக்கைச் சமாளித்திருக்க முடியும். இந்த தற்போதைய வெள்ளப்பெருக்கை கணக்கிடும்போது இந்த  மூன்று ஆறுகளின் முகத்துவாரங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டதா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளன. இனிமேலாவது இப்பகுதிகளில் படிந்திருக்கும் 
மணல்திட்டுக்களை உடனடியாக அகற்ற வேண்டும். கால்வாய்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். தேவையான இடங்களில் வலுவான தடுப்புச் சுவர்கள் கட்டப்பட வேண்டும் என்றார் முத்துவிஜயன்.
முதல்வர் சாட்டையை எடுப்பாரா?:
     இவர் கூறும் விசயங்களைப் பார்க்கும்போது தற்போதைய நிலைமைக்கு நிகழ்வில் உள்ள ஆட்சியாளர்களை மட்டும் குறைகூறிவிட முடியாது. காலம் காலமாக பொதுப்பணி. நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்ளிட்ட முக்கிய துறைகளின் திட்டப்பணிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வகையான முறைகேடுகளையும் ஒழித்துக் கட்டினால் மட்டுமே  ஏரிகள் பலமாக இருக்கும், முறைான கால்வாய்கள் அமையும், முகத்துவாரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மக்கள் அவதிக்கு உள்ளாவது தவிர்க்கப்படும் என்பதே சென்னைப் பேரிடர் வெள்ளம் அனைவருக்கும் சொல்லும் பாடமாக உள்ளது. மக்கள் வீறு கொண்டு எழும் முன்பு 
அரசும், அதிகாரிகளும் விழித்தெழ வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா சாட்டையை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


பெட்டிச் செய்தி.....

கடமை, பொறுப்புணர்வு குறைந்து போய்விட்டது...
    நீரியல் பொறியாளர் வி.முத்துவிஜயன் மேலும் கூறியது,
நான் 1972-ல் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராகச் சேர்ந்தேன். ஒரு பதினைந்து ஆண்டுகள் முன்புவரை அதிகாரிகள் மிகவும் பொறுப்புணர்வோடும், தங்களை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் தங்களைக் கடிந்து கொள்வதையோ, குறை சொல்லுவதையோ விரும்பமாட்டார்கள். ஆட்சி அதிகாரங்களில் எந்த கட்சியும் இருக்கலாம். ஆனால் அதே அதிகாரிகள்தான் பொறுப்பில் இருப்பார்கள். மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவதன் அவசியம், அவசரம் குறித்தெல்லாம் அதிகாரிகள்தான் ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர்களைக் குறைகூற முடியாது. தற்போது கீழ்நிலையிலிருந்து தலைமை அதிகாரிகள்வரை நேர்மை, கடமை, பொறுப்புணர்வு குறைந்து கொண்டேதான் வருகிறது. சென்னை மாநகர் பேரிடருக்கும் இதுவே மூல காரணமாக உள்ளது என்றார் முத்துவிஜயன்.
திருவொற்றியூர்,மணலியில் 12 ஆயிரம் பேருக்கு உணவு, பால் விநியோகம் 

அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

திருவொற்றியூர், டிச.5: திருவொற்றியூர், மணலி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 12 ஆயிரம் பேருக்கு உணவு, பால் உள்ளிட்டவைகளை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை வழங்கினார்.
   திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், சார்லஸ் நகர், ஜோதிநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள், மணலியை  சடையன் குப்பம், விச்சூர், மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு, கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் கடந்த ஐந்து நாள்களுக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இப்பகுதியே தீவு போல் காட்சியளித்தது. இந்நிலையில் மழை குறைந்துள்ளதையடுத்து வெள்ளநீர் படிப்படியாகக் குறைந்து வருகிறது. படகுகள் மூலம் சென்ற பகுதிகளில் தற்போது நடந்து செல்லும் அளவிற்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
உணவு, பால் விநியோகம்:
    இதனையடுத்து தற்போது நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் பேருக்கு பால், 
உணவு வகைகளை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், மாவட்டச் செயலாளர் பலராமன், மண்டலக்குழு தலைவர் தனரமேஷ் உள்ளிட்டோர் வீதிவீதியாகச்  சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர். மேலும் தேங்கியுள்ள நீரை மோட்டார் பம்புகள் மூலம் விரைவில் அகற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். 
மணலி விரைவு சாலையில் தண்ணீரின் அளவு குறைந்ததையடுத்து 
கடந்த ஐந்து நாள்களுக்குப் பிறகு திருவொற்றியூரிலிருந்து மீஞ்சூர் வழித்தடத்தில் 
போக்கவரத்து தொடங்கியது. 
முகாம்களில் 10 ஆயிரம் பேர்:
    இப்பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி சார்பில் மூன்று வேளையும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது.  தற்போது குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாள்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் வீடு திரும்புவார்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 
வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு குவியும் நிவாரண பொருள்கள் 

பொருள்கள் இருப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை 

திருவொற்றியூர், டிச.5:வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி நிவாரண பொருள்கள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால் இவற்றை பகுதி வாரியாக சமமாக விநியோகிக்க  போதுமான ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படவில்லை. 
   மேலும் அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டிய நிலையில் தற்போது முழுவீச்சில் நிவாரணப் பணி மேற்கொள்ளவும்,  பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
   சென்னை மற்றும் புறநகர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைத் தவிர உள்மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு அதிக அளவில் இல்லை. ஆனால் சென்னையில்  தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இருந்து வந்து குடியேறிவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.  எனவே சென்னை மாநகரவாழ் மக்களின் துயர் துடைப்பதில் தமிழகமே தற்போது வீறு கொண்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ள நீரின் தாண்டவம் உச்சத்தில் இருந்தபோது தொலைபேசி, அலைபேசி உள்ளிட்டவை செயலிழந்தன. இருப்பினும்  வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்டவைகளில் பல்வேறு தரப்பினரும் தாங்கள் ஏற்பாடு செய்து வைத்துள்ள உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை பெற்றுக்கொண்டு விநியோகிக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர்.  
தொண்டு நிறுவனங்களை மிஞ்சிய பொதுநல அமைப்புகள்:
    முன்பெல்லாம் ஏதேனும் பாதிப்பு எனில் நிவாரண பணிகளில்  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் தற்போதைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதில் தனிநபர்கள் கூட தாங்களாகவே சிறு சிறு குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு நிவாரண உதவிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரண பொருள்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் இவற்றை விநியோகம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்களில் பலர் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பெங்களூருவிலிருந்தும் கோவையிலிருந்தும் தலா  1 லட்சம் சப்பாத்திகள் வருகின்றன என்ற தகவல்கள் வந்தன. இவை எங்கு கொண்டு செல்லப்பட்டது, எவ்வாறு விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்து இப்பணியில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளுக்குக் கூட தெரியவில்லை. 
அனைத்தையும் இழந்து தவிப்பு:
    சென்னையின் புறநகர் பகுதிகளில் அதிக அளவிலான அடுக்கு மாடு வீடுகளில் 
தரைத்தளத்தில் வசித்தவர்களின் டிவி, குளிர்சாதன உபகரணங்கள், கட்டில், மெத்தை, 
போர்வைகள், அரிசி, மாவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், மளிகைச் சாமான்கள், உடைகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்து விட்டன. குடிசைவாசிகளைப் பொருத்தவரை சேதம் இன்னும் அதிகமாகவே இருக்கும். தற்போது மழை சற்று ஓய்ந்ததையடுத்து  படிப்படியாக இனிமேல்தான்  வெள்ளச் சேதாரம் முழுமையாகத் தெரியவரும். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் மீண்டும் இயல்பு வாழ்க்கையைத் தொடர வேண்டும் எனில் ஒரு புதிய வீட்டில் குடியேறினால் என்ன தேவையோ அத்தனை பொருள்களையும் உடனடியாக வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.
தட்டுப்பாடு ஏற்படுமா?:
  சரி, வாங்குவதற்கு பணம் இருக்கும் என்றே வைத்துக்கொண்டாலும் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே நேரத்தில் கடைகளில் குவிந்தால் என்ன ஆகும்? வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் தங்குதடையின்றி கிடைக்குமா? வெள்ளத்தின்போது தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு லிட்டர் பால் ரூ 50, தண்ணீர் கேன் ரூ.70 என அனைத்து பொருள்களும் அநியாய விலைக்கு விற்றதை நம்மால் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. இதேபோல் மக்கள் பயணிக்க ஆட்டோ, கால் டாக்சிகள், கார்கள் உள்ளிட்டவற்றின் கட்டணங்களும் பாதிக்கப்பட்ட மக்களை பயமுறுத்தும் என்ற அச்சமும் உள்ளது. எனவே கூடுதல் கட்டணம், கூடுதல் விலைக்கு யார் விற்றாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவிக்க வேண்டும். 
விரைவான சரக்குப் போக்குவரத்து: 
     உணவு பொட்டலங்கள், விரைவில் கெட்டுப் போகாத பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், ரொட்டி பாக்கெட்டுகள், ஆடைகள், போர்வைகள், கொசுவர்த்திச் சுருள்கள், பிஸ்கெட்டுகள், மருந்து பொருள்கள், பாட்டில்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், சோப்பு, சலவை பவுடர்கள் உள்ளிட்டவையே பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய தேவையாக உள்ளன. இவற்றை தட்டுப்பாடின்றி இருப்பு வைக்க வியாபாரிகள் சங்கக் கூட்டமைப்புகள் மூலம் வியாபாரிகளை அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும் சங்க நிர்வாகிகளின்  ஒத்துழைப்பையும் கோரவேண்டும்.  மேலும் அத்தியாவசிய பொருள்களை மொத்த கொள்முதல் செய்து இவற்றை உடனடியாக சென்னைக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வியாபாரிகளுக்கு உடனடியாக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். 
ஏழைகளுக்கு நிவாரண பொருள்கள்:
     கடைகளில் இருப்பினை உயர்த்தும் அதே நேரம் இப்பொருள்களை வாங்கும் வசதி இல்லாத ஏழை மக்களுக்கு அனைத்து அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய நிவாரணப் பேக்கேஜை இலவசமாக வழங்க வேண்டும். இவர்களுக்கு பணமாகக் கொடுப்பதைவிட இது போன்று பேக்கேஜ்-ஆகக் கொடுப்பது சிறப்பாக இருக்கும். இவற்றை வழங்க அரசியல் சார்ந்த, சாராத அமைப்புகள், தனிநபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோரை வலியுறுத்த வேண்டும். ஏனெனில் தினந்தோறும் ஒரு சில இடங்களில் மட்டும் நிவாரண பொருள்களை மட்டுமே வழங்குவது என்பது தேவையற்றதே. தேவையை அறியாமல் இலவசமாகக் கொடுக்கும் பொருள்களால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை எந்த விதத்திலும் உயர்த்திட வழிவகுக்காது என்பது சுனாமி நிவாரணப் பணிகள் மூலம் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
       எவ்வழியேனும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் துயர்துடைப்பே அனைவரின் கடமையாகக் கொள்ள வேண்டும். இதற்கு தமிழக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் போதிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த வேண்டுகோளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
வெள்ள மீட்பு பணியில் ஈடுபட மேலும் இரண்டு கடற்படை கப்பல் வந்தன

மீட்பு பணி தொடரும்: கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர்

திருவொற்றியூர், டிச.4:சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் தமிழக அரசுக்கு ஒத்துழைக்க இந்திய கடற்படையின் மேலும் இரண்டு கப்பல்கள் சுமார் 500 வீரர்களுடன் வெள்ளிக்கிழமை சென்னைத்துறைமுகம் வந்தடைந்தன.
இது குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிரிவு கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் செய்தியாளர்களிடம் கூறியது,
     சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் உதவும்படி தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து ஐ.என்.எஸ். ஐராவத் என்ற கப்பலில் சுமார் 20 டன் மருந்து மற்றும் உணவு பொருள்கள் எடுத்து வரப்பட்டன. இந்நிலையில் சக்தி, சையாத்ரி என்ற இரண்டு பெரிய கப்பல்கள் விசாகபட்டனத்திலிருந்து சென்னை வந்துள்ளன. இதில் 80 நீச்சல் வீரர்கள் உள்ளிட்ட 500 வீரர்கள் உள்ளனர். 19 அதிவேகமாகச் செல்லும் ஜெமினி ரக படகுகள், 400 கேன்களில் தண்ணீர், வரப்பட்டுள்ளது. மேலும் 14 டன் உடனடி உண்ணும் உணவு வகைகள், 20 டன் அரிசி, கோதுமை மாவு, மளிகை சாமான்கள், ஆயிரம் போர்வைகள், 2 ஆயிரம் துண்டுகள், ஆயிரம் லிட்டர் பெட்ரோல் உள்ளிட்டவை இக்கப்பல்களின் எடுத்து வரப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டு தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
5 லட்சம் லிட்டர் குடிநீர்:
    மேலும் இரு கப்பல்களிலும் சுமார் 5 லட்சம் லிட்டர் குடிநீர் மொத்தமாக தொட்டிகளில் நிரப்பி எடுத்து வரப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப எடுத்துச் செல்லப்பட்டு விநியாகிக்கப்படும். மேலும் தேவையான அளவு டீசல் எடுத்துவரப்பட்டுள்ளது. இதனைக் 
கொண்டு ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவைகளை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். மேலும் 3 டாக்டர்கள், 9 மருத்துவ பணியாளர்கள் வந்துள்ளனர். இக்கப்பலில் அறுவைச்சிகிச்சை அரங்குடன் கூடிய மருத்துவமனை வசதி உள்ளது. மீட்பு பணியின் போது மருத்துவ உதவிகள் தேவையெனில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு நேரடியாக கப்பலுக்குக் கொண்டு வந்து நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியும்.
மேலும் உதவிட தயார்:
   தற்போது 4 ஹெலிகாப்டர்கள் கடற்படை சார்பில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மீட்பு பணியில் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகிறோம். தற்போது குறைந்த அளவு நிவாரண உதவிப் பொருள்களை எடுத்து வந்தாலும் தொடர்ந்து உதவிட கடற்படை தயாராக உள்ளது. எந்தப் பகுதியில் மீட்பு பணிகளில் ஈடுபடுவது என்பது குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் கேட்டு அதற்கேற்றபடி பணியில் ஈடுபடுவோம் என்றார் பட்னாகர்.

திருவொற்றியூர், மணலி புதுநகர் பகுதியில் மூன்றாவது நாளாக மீட்பு பணி 

நிவாரண உதவிகள் குவிந்தன.

திருவொற்றியூர், டிச.4:திருவொற்றியூர், மணலி புதுநகர் பகுதிகளில் மூன்றாவது நாளாக மீட்பு பணி தொடர்கிறது. இதற்கிடையே பல்வேறு தரப்பினரும் உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரண உதவிகளை அளித்து வருவது வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. 
    பூண்டி, செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் திறந்து விடப்பட்டதால் திருவொற்றியூர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஜோதிநகர், வி.பி.நகர், சத்தியமூர்த்தி நகர், அம்பேத்கார் நகர், சிவசக்தி நகர், கலைஞர் நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், மணலி புதுநகர், விச்சூர், சடையன்குப்பம், பர்மாநகர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இப்பகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட 
மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். 
   வெள்ளிக்கிழமை மழை சற்று ஓய்ந்திருந்தது. மேலும் ஏரிகளில் திறந்து விடப்படும் உபரி அளவு குறைக்கப்பட்டதால் சுமார் 8 அடிவரை இருந்த வெள்ளநீர் 5 அடியாகக் குறைந்தது. இதனையடுத்து மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை மீட்பு பணியில் முன்னேற்றம் ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் மக்கள் தாங்களாகவே வெள்ளநீரில் நடந்து சென்று வெளியேறத் தொடங்கினர். இதுவரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு வெளியிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
குவிந்த நிவாரண உதவிகள்-ஆறுதலடைந்த மக்கள்:
    வியாழக்கிழமை மாநகராட்சி மற்றும் சில நிறுவனங்கள் அளித்த உணவு, குடிநீர் மட்டுமே வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்குக் கிடைத்த நிலையில் வெள்ளிக்கிழமை 
அதிக அளவில் நிவாரண உதவிகள் குவிந்தன. ராயபுரம், வண்ணாரப்பேட்டை, 
சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தவ்ஹித் ஜமாத், முஸ்லிம் முன்னேற்றக் கழகம், ஜெயின் சமுதாயத்தைச் சேர்ந்த அமைப்புகள், வியாபாரிகள் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் உணவு, குடிநீர், ரொட்டி பாக்கெட்டுகள், உடை, போர்வை உள்ளிட்டவை வேன்களில் அடுத்தடுத்து வந்து இறங்கியவாறு இருந்தன. ஆனால் இவற்றை பெற்று முறையாக விநியோகிக்க போதுமான அளவில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் உதவிக்காகக் கொண்டு வரப்பட்ட பொருள்கள் சீராகச் சென்றடைந்ததா என்பது தெரியவில்லை.
ஐந்தாவது நாளாக போக்குவரத்து நிறுத்தம்:
   வெள்ளநீர் வடியாததையடுத்து மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஐந்தாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் சாலைகளிலும், துறைமுகத்தின் உள்ளேயும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களில் பணிகள் ஸ்தம்பித்துள்ளன. மேலும் இருபதுக்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக நிலையங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் இவற்றின் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. வெள்ளிக்கிழமை மழை நின்றாலும் கூட இயல்புநிலைக்குத் திரும்ப இன்னும் சில நாள்கள் ஆகலாம் 
என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. 
வெள்ளநீர் சூழ்ந்த பெட்டக நிலையங்கள்: துறைமுகங்கள் முடங்கின

திருவொற்றியூர், டிச.3:தொடரும் வெள்ளப்பெருக்கால் சென்னை மற்றும் புறநகரில் அமைந்துள்ள சரக்குப் பெட்டக நிலையங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்கள் கடந்த இரு நாள்களாக முற்றிலும் முடங்கியுள்ளன.
   சென்னைத் துறைமுகத்தின் வர்த்தகத்துடன் இணைந்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் சரக்குப் பெட்டக நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏற்றுமதிக்காகன சரக்குகள் பெரும்பாலும் இங்குதான் கண்டெய்னர்களில் ஏற்றி சுங்கத்துறை முத்திரையிடப்பட்டு பின்னர் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படும். மேலும் இறக்குமதியாகும் கண்டெய்னர்களும் இங்கு வந்துதான் எடுத்துச் செல்லமுடியும்.
இந்நிலையில் தற்போதைய வெள்ளப்பெருக்கால் பெரும்பாலான சரக்குப் பெட்டக நிலையங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.  மேலும் துறைமுகத்திற்கு வரும் முக்கிய சாலையான மணலி விரைவு சாலையில் மார்பளவு வெள்ளநீர் செல்கிறது. இதனால் லாரிகள் இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.  கடந்த மூன்று நாள்களாக இச்சாலையில் அனைத்து வகையான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. 
    மேலும் வெளியூர்களிலிருந்து வரும் லாரிகள் முற்றிலுமாகக் குறைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். 
முடங்கிய துறைமுகங்கள்:
    சென்னைத் துறைமுகத்தில் இரண்டு சரக்குப் பெட்ட முனையங்கள் உள்ளன. இவைகளில் செவ்வாய்க்கிழமை முதல் கண்டெய்னர் லாரி போக்குவரத்து 
முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும் இரும்புத் தகடு உள்ளிட்ட இதரவகை சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சென்னைத் துறைமுகத்தின் ஒட்டு மொத்த பணிகளும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதேபோல் எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களிலும் கடந்த இரு நாள்களாக எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலைக்கு வர இன்னும் ஒரு வாரத்திற்கும் மேல் ஆகும் என்பதால் வெளியூர்களைச் சேரந்த  லாரிடிரைவர்களில் பெரும்பாலோனோர் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். 
திருவொற்றியூர், மணலி புதுநகரில் மீட்பு பணியில் தேக்கநிலை

ஆயிரக்கணக்கானோர் குடிநீர், உணவின்றி தவிப்பு

திருவொற்றியூர், டிச.3:வெள்ளத்தில் சிக்கிய திருவொற்றியூர், மணலிபுதுநகர் பகுதியில் மீட்பு பணிகளில் அரசு இயந்திரங்கள் போதிய அளவில் செயல்படவில்லை. இதனால் இப்பகுதியில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உணவு, குடிநீரின்றி  தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
     பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஏரிகளின் உபரி நீர் திறக்கப்பட்டதால் குசஸ்தலை மற்றும் ஏரிக் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இப்பகுதியில் செல்லும் பக்கிங்காம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கார்கில் நகர், ராஜாஜி நகர், ஜோதிநகர், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் அதிகமான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. அதிகபட்சமாக சுமார் 8 அடிவரை வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் மணலி விரைவு சாலையில் இடுப்பளவு தண்ணீர் பெருக்கெடுத்ததால் இப்பகுதி இதர பகுதிகளிலிருந்து முற்றிலுமாகக் துண்டிக்கப்பட்டுள்ளது. 
மணலி புதுநகர் துண்டிப்பு: 
     இதேபோல் மணலி புதுநகர், விச்சூர், புதுநாப்பாளையம், வெள்ளிவாயல்சாவடி, 
இடையன்சாவடி, கொண்டக்கரை, குருவிமேடு, ஆண்டார்குப்பம் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பொன்னேரி நெடுஞ்சாலையில் சென்னை உரத் தொழிற்சாலை அருகே இடுப்பளவு தண்ணீர் செல்வதால் திருவொற்றியூரிலிருந்து மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு போக்குவரத்து மூன்றாவது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் படகுகள் மூலம் மீட்கப்படும் மக்கள் வேறு இடங்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுக்குமாடி வீடுகளில் வசிப்போர் மீட்பு படையினருக்கு
போன் செய்தபோதும் அவர்களை மீட்டெடுக்க போதுமான ஏற்பாடுகள் இல்லை. 
மீட்பு பணிகளில் தேக்கநிலை:
     திருவொற்றியூர், மணலி புதுநகரை மையமாகக் கொண்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இங்கு நடைபெறும் மீட்பு பணிகளின் தாக்கம் 
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டெடுக்க போதுமானதாக இல்லை. சுமார் 30 படகுகள் வரை இப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு போலீஸாருடன் இருநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் படகுகளை எங்கு அனுப்ப வேண்டும், எவ்வாறு மீட்க வேண்டும், மீட்கப்பட்டவர்களின் அடுத்த தேவை என்ன என்பது போன்ற பணிகளை ஒருங்கிணைக்க போதுமான போலீஸார், மாநகராட்சி அதிகாரிகள் களத்தில் இல்லை. 
      உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரண உதவிகளை பல்வேறு தரப்பினர் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் இவைகளை முறையாக விநியோகம் செய்ய எந்த அதிகாரியோ, ஊழியர்களோ களத்தில் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான அளவில் நிவாரண பொருள்கள் பகிர்ந்தளிப்பதில் போதுமான ஏற்பாடுகள் இல்லை. மொத்தத்தில் இப்பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் தொடர்ந்து தேக்கநிலை இருந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் படகுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுற்றிப்பார்க்க கிடைத்த வாய்ப்பாக சிலர் பயன்படுத்தியதைப் பார்க்க முடிந்தது. மேலும் செல்வாக்கினைப் பயன்படுத்தி அவரவர் பகுதிகளுக்கு படகுகளை அழைத்துச் சென்றனர். இதனால் உள்பகுதியில் சிக்கியவர்களை மீட்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. 
குறைவான எண்ணிக்கையில் போலீஸார்:
     ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. குடிநீர், உணவின்றி தவிக்கும் இம்மக்களை மீட்கும் பணியை தீவிரமாகச் செயல்படுத்தவோ அல்லது மேல் தளங்களில் தங்கியுள்ளோர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதில் மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் போதிய அளவில் கவனம் செலுத்தாத நிலையை வியாழக்கிழமை பார்க்க முடிந்தது. வெள்ள நீரில் படகுகள் செல்வதைப் பார்வையிடுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் சாரைசாரையாக எர்ணாவூர் மேம்பாலத்தில் குவிந்தனர். இவர்களால் மீட்கப்பட்டவர்கள் யார்? வேடிக்கை பார்க்கவந்தவர்கள் யார்? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை வேடிக்கை பார்க்கவந்தவர்களும் வாங்கிச்
சென்றது சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் பார்த்தனர்.  சில படகுகளில் சென்றவர்கள் மீட்கப்பட்டவர்களிடம் பணம் கேட்டு வாங்கிய புகார்களுக்கும் பஞ்சமில்லாத நிலையே 
வியாழக்கிழமை நிலவியது. 
      வேடிக்கை பார்க்கவந்தவர்களை அப்புறப்படுத்தவோ, விரட்டவோ போலீஸாார் முயற்சிக்கவில்லை. எண்ணூர் காவல் உதவி ஆணையர் தலைமையில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே போலீஸார் களத்தில் இருந்தனர். இவர்களால் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, மீட்பு பணிகளை ஒருங்கிணைக்கவோ சிறிதும் முடியவில்லை.  வெள்ளத்தில் சிக்கியவர்கள் போலீஸாருக்கு நேரடியாக போன் செய்தும் அவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை. இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் வியாழக்கிழமை இரவு வரை எவ்வித முன்னேற்றமும் இல்லை. 
முதல்வருக்கு கோரிக்கை:
    குழந்தைகளை, முதியோர் உள்ளிட்டோருடன் ஆயிரக்கணக்கான மக்கள்
உணவு, குடிநீர் இன்றி வெளியேறமுடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக மின்சாரம் இல்லை. இந்நிலையில் போர்க்கால அடிப்படையில்
செயல்படவேண்டிய அரசு இயந்திரம் இப்பகுதியில் பெயரளவிற்கு மட்டுமே 
மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. வெறும் உணவுப் பொட்டலங்களால் இனி பயனில்லை. இன்னும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படகுகளை வெள்ளிக்கிழமை எடுத்து வந்து மீட்பு பணியை ஒருங்கிணைத்தால் மட்டுமே வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை பத்திரமாக மீட்க முடியும். 
     வடசென்னையில் அதிக பாதிப்பு இல்லை என்ற கருத்து அதிகாரிகள் மத்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இது உண்மையெனில் அவர்கள் வெள்ளத்தில் சிக்கிய
உள்பகுதிகளுக்கு இன்னும் செல்லவில்லை என்பதே நிதர்சனம். எனவே இவ்விசயத்தில் 
முதல்வர் ஜெயலலிதா உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

உதவிக்கரம் நீட்டுவோர் வழங்கும் பொருள்கள் விநியோகிக்க சிறப்பு ஏற்பாடு தேவை

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவொற்றியூர், டிச.2: சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைத் தவிர தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை இல்லை. இந்நிலையில் சென்னை மாநகர மக்களின் துயர்துடைக்க இப்பகுதி மக்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக ஊடகங்கள், வலைத்தளங்களில் நூற்றுக்கணக்கானோர் உதவிக்கரம் நீட்ட தயாராக உள்ளதாக நூற்றுக்கணக்கானோர் தகவல்கள் தெரிவித்துள்ளனர். 
      எனவே இவர்கள் வழங்கும் பொருள்களைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாகக் கொண்டு சேர்த்திட தமிழக அரசு உடனடியாக சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
    இது குறித்து வாட்ஸ்அப்பில் தெரிவித்த தாமு என்பவரின் அலைபேசி எண்ணை நாம் தொடர்பு கொண்டபோது, நான்கு வேன்களில் மதுரையிலிருந்து பிஸ்கட், ரொட்டி பாக்கெட்களை அனுப்பியுள்ளதாகவும், அவற்றை ஏற்கனவே ஒருவர் சென்னையில் பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் சென்னையில் ஒருவர் 5 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பெற்றுக்கொண்டு விநியோகிக்க தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணையும், உணவு தயார்நிலையில் உள்ளதற்கான படத்தையும் முகநூலில் தெரிவித்திருந்தார். 
    சமீபத்தில் நெடுஞ்சாலைத் துறையில் பணியில் உள்ள மோகன் என்பவர் 
தனது நண்பர்கள் மூலம் திரட்டிய ரூ.2 லட்சம் நிதியில் திருவொற்றியூர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய சுமார் 1,600 பேருக்கு போர்வைகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற வேண்டுகோள்கள் சமூக ஊடகங்களில் வந்தவண்ணம் உள்ளன. முன்பெல்லாம் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே இப்பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது தனிநபர்களும் உதவிக்கரம் நீட்டத் தயாராக உள்ளது வரவேற்கத்தக்கது.
வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு எவ்வளவு கொடுக்தாலும் பாதிக்கப்பட்ட மக்களின் துயார் தீராது என்ற நிலையில் அரசு வழங்கும் நிவாரணம் மட்டுமே போதுமானதாக இராது. 
    உணவு பொட்டலங்கள், விரைவில் கெட்டுப் போகாத பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், ரொட்டி பாக்கெட்டுகள், ஆடைகள், போர்வைகள், கொசுவர்த்திச் சுருள்கள்,  பிஸ்கெட்டுகள், மருந்து பொருள்கள், பாட்டில்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் உள்ளிட்டவையே பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய தேவையாக உள்ளன. இவற்றை வழங்க தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோர் தயாராக உள்ள நிலையில் மாவட்டம் தோறும் ஒருங்கிணைத்து நிவாரண பொருள்களைச் சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகள் வாரியாக 
வழங்க தேவையான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லையெனில் நிவாரணப் பொருள்கள்கள் பரவலாகப் போய்ச் சேராது. 
எனவே சுனாமி பாதிப்பு ஏற்பட்டபோது களத்தில் இறங்கி செயலாற்றி முதல்வர் ஜெயலலிதா இக்கோரிக்கையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றனர் திருவொற்றியூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் துரைராஜ், சுப்பிரமணி ஆகியோர்.
    எவ்வழியேனும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களின் துயர்துடைப்பே அனைவரின் கடமையாகக் கொள்ள வேண்டும். இதற்கு தமிழக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் போதிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
லட்சக் கணக்கானோர் சிக்கித் தவிப்பு: மீட்பு பணிகளில் ஒருங்கிணைப்பு தேவை

அதிக அளவில் ஹெலிகாப்டர், படகுகளைப் பயன்படுத்தக் கோரிக்கை 


திருவொற்றியூர்,டிச.2:தொடர்ந்து பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கிய வீடுகளில் முடங்கியுள்ளனர்.
    சாலைகள் அனைத்திலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் கண்காணித்து மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையை மிரட்டும் ஏரிகள்:
  முன்பெல்லாம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் கூடினால் இனி குடிநீர் பிரச்னை நமக்கு இல்லை என சென்னை மாநகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இன்றைக்கு இந்த எரிகளில் திறக்கப்படும் உபரி நீரால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அனைத்து ஏரிகளிலும் சேர்த்து சுமார் விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. மாநகர் பகுதிகளில் பெய்யும்  மழையால் அதிக அளவு பாதிப்பு இல்லை என்றாலும் ஏரிகளில் திறந்து விடப்படும் உபரிநீரால் அடையாறு, கூவம், குசஸ்தலை ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் திக்குமுக்காடியுள்ளனர். குடிநீர் வழங்கும் ஏரிகள் மக்களை மிரட்டும் ஏரிகளாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
லட்சக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு:
    செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரால் தென்சென்னையில் வசிக்கும் மக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் செங்குன்றம், சோழவரம் ஏரி உபரிநீரால் வடசென்னையின் திருவொற்றியூர், மணலியைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள், கிராமங்களில் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ளப் பெருக்கு என்பதால் மீட்பு பணிகளும் போதிய பலனளிக்கவில்லை. இதுவரை தாழ்வான பகுதிகளில் தரைத்தளத்தில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டள்ளனர். இதுவரை சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மட்டுமே அனைத்து பகுதிகளிலிருந்தும் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் முதல் தளம் மற்றும் அடுக்குமாடிகளில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் முடங்கியுள்ளனர். எனவே அடுத்து இவர்களையும் மீட்பது என்பது அரசுக்கு சவாலான பணியாகவே இருக்கும்.
மீனவர்களின் சிறப்பான பங்கு:
    மீட்பு பணியில் போலீஸார், தீயணைப்பு படை, மாநகராட்சி, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். ஆனால் சாலைகள் அனைத்தும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் படகுகள் மூலம்தான் மக்களை மீட்க முடியும் என்ற அசாதாரன சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதில் அரசு ஊழியர்களுக்கு போதிய சிறப்பு பயிற்சிகள் இல்லாதது மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில் சில நூறு பேர்களை மட்டுமே படகுகள் மூலம் மீட்க முடிகிறது. தற்போதைய நிலையில் மீனவர்களின் பங்கு அளப்பரியாதாக உள்ளது. திருவொற்றியூர், மணலி புதுநகர் பகுதியில் புதன்கிழமை மீட்பு பணியில் பதினைந்துக்கும் மேற்பட்ட படகுகள் ஈடுபடுத்தப்பட்டன. அப்போது  மீனவர்கள்தான் பயமின்றி வெள்ளநீரில் எதிர்நீச்சல் போட்டு பொதுமக்களை மீட்டதை நேரில் பார்க்க முடிந்தது. 
ஒருங்கிணைப்பு உடனடி தேவை:
     தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள அரசு இயந்திரங்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் ஜெயலலிதா முடுக்கிவிட்டுள்ளார். தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படை, கடலோரக்காவல் படை உள்ளிட்டவை புதன்கிழமை முதல் மீட்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளன.  ஆனால் இவைகளுக்கிடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. அனைத்து பகுதிகளிலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கும் நிலையில் எங்கு மக்கள் சிக்கியுள்ளனர், அவர்களை மீட்பது எப்படி, மீட்கப்படும் மக்களை எங்கு தங்கவைப்பது, அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவைகளை எப்படி வழங்குவது, மாடி வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை கொண்டு சேர்ப்பது எப்படி, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான கழிவறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது எப்படி என்பது  உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையளிப்பதில் தற்போதைய மீட்பு குழுவினரிடம் 
விடை இல்லை. காரணம் மீட்பு படையினர் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. புதன்கிழமை மணலி பகுதியில் வந்து இறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினரோடு உள்ளூர் போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு 
எவ்வித தொடர்பும் இல்லாததைக் காண முடிந்தது. 
ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்த வேண்டும்:
    மீட்பு பணிகளைத் துரிதமாக செயல்படுத்துதற்கு தேவையான சாலைகள் அனைத்தும் 
வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் 
மீட்பு பணிகளைக் கண்காணிக்க பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நான்கு அமைச்சர்களை முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். 
அவர்கள் புதன்கிழமை திருவொற்றியூர் வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். ஆனால் அனைத்து சாலைகளும் வெள்ளநீரால் மூழ்கியுள்ளதால் அவர்களால் வெள்ளம் சூழ்ந்துள்ள மணலி புதுநகர் பகுதிக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை. வடசென்னை போலீஸ் இணை ஆணையர் தினகரன் மட்டுமே லாரி ஒன்றில் ஏரி இப்பகுதிகளைப் பார்வையிட்டார்.
       எனவே சாலை மார்க்கம் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களை உடனடியாக ஈடுபடுத்த வேண்டும். ராணுவம், கடற்படை, கடலோரக் காவல்படை, விமானப்படை உள்ளிட்டவற்றில் உள்ள அனைத்து ஹெலிகாப்டர்களையும் உடனடியாக மீட்பு பணியில் பயன்படுத்திட தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
அதிக படகுகளை ஈடுபடுத்த வேண்டும்: 
    தற்போது மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளை  உடனடியாக வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவற்றை கொண்டு செல்ல மீனவ சங்கங்கள், ஆளும்கட்சியைச் சேர்ந்த மீனவ சமுதாயத் தலைவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான செலவினங்கள், டீசல், உணவு உள்ளிட்டவைகளை உடனடியாக தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்க உயர்மட்ட தொடர்பு மையம் ஏற்படுத்த வேண்டும். தொடர்மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இது போன்ற போர்க்கால அடிப்படியில் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் வேண்டுகோளாக உள்ளது. 
குசஸ்தலை ஆற்றில் வெள்ளம்: பக்கிங்காம் கால்வாயில் உடைப்பு

திருவொற்றியூர், மணலி பகுதியில் 1 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கினர்

15 படகுகளில் மீட்பு பணி

திருவொற்றியூர், டிச.2:சோழவரம், பூண்டி, செங்குன்றம் ஏரிகளில் உபரி நீர் திறந்து விடப்பட்டதால் திருவொற்றியூர், மணலி பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்க சுமார் 15 படகுகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
   பூண்டி, சோழவரம், செங்குன்றம் மற்றும் ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளிலும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் எண்ணூர் அருகே முகத்துவாரப் பகுதியில் கடலில் கலக்கிறது. மேலும் இதே பகுதியில்தான் பக்கிங்காம் கால்வாய் நீரும் சேருகிறது. ஆற்று வெள்ளம் அதிகரித்ததால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு மூன்று இடங்களில் வெள்ளப் பெருக்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால் திருவொற்றியூரின் மேற்கு பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர், அம்பேத்கர் நகர், ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவுக்கும் அதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. 
1 லட்சம் பேர் சிக்கித் தவிப்பு:
   குசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடியது. ஆனால் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் அருகில் உள்ள விச்சூர், மணலி புதுநகர் சடையங்குப்பம், ஆண்டார்குப்பம், நாப்பாளையம், கவுண்டர் பாளையம், இடையன் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிவீடுகளில் முதல் தளம் வரை வெள்ளம் புகுந்தது. மேலும் திருவொற்றியூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட 
மக்கள் சிக்கியுள்ளனர். தொடர்ந்து புதன்கிழமையும் மழை கொட்டியதால் ஏரிகளில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படவில்லை. 
15 படகுகளில் மீட்பு பணி:
    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சுமார் 15 க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் வரவழைக்கப்பட்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள், தீயணைப்பு படையினர், போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதிகமானோர் சிக்கியுள்ளதால் இவர்களை மீட்பதில் இப்படகுகள் போதுமானதாக இல்லை. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கின் வேகம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விச்சூர் பகுதிகளில் படகுகள் மூலம் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள குழந்தை ஏசு ஆலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் இங்கும் வெள்ள நீர் புகுந்ததால் 
இதே வளாகத்தில் உள்ள பள்ளியின் முதல் தளத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 
உணவு, குடிநீரின்றி தவிப்பு:
   கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போதிய உணவு, குடிநீர் வசதிகள் கிடைக்கவில்லை. புதன்கிழமை மேற்கொண்ட மீட்பு பணிகள் மூலம் சுமார் 5 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்கள் தங்க வைக்கப்படும் இடங்களிலேயே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பெரிய அளவில் உணவு தயாரிக்க தேவையான பொருள்களை மணலி, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்துதான் கொண்டு வர வேண்டும். ஆனால் இப்பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் அனைத்தும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. முன்னெச்சரிக்கையுடன் விரிவான ஏற்பாடுகள் செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் குடிநீர், உணவு இன்றி அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதே நிலை வியாழக்கிழமையும் தொடர்ந்தால் நிலைமை மேலும் மோசமாகும்.
உரத்தொழிற்சாலை அருகே 6 அடிக்கு தண்ணீர்:
     புழல் ஏரிக் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சாலையில் வெள்ளம் புகுந்தது. இதனையடுத்து மெட்ராஸ் உரத் தொழிற்சாலை அருகே சுமார் 6 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனையடுத்து இச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 
மேலும் பக்கிங்காம் கால்வாய் உடைப்பு ஏற்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தால் 
எர்ணாவூர் மேம்பாலம் முதல் சத்தியமூர்த்தி நகர்வரை இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. 
இதனையடுத்து திருவொற்றியூரிலிருந்து மணலி புதுநகர், மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன.
பொன்னேரி நெடுஞ்சாலையில் தடுப்புகள் அகற்றம்:
      திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலையில் பல இடங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பல இடங்களில் நடுவில் உள்ள தடுப்புச் சுவர்களால் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தடுப்புச் சுவர்களை கிரேன்கள் மூலம் பொதுமக்களே அகற்றினர். சாலையில் அமைக்கப்பட்டிருந்த வடிகால் வசதிகள் அனைத்தும் எவ்வித பயனும் அளிக்கவில்லை. மேலும் துறைமுக இணைப்புச் சாலை அமைக்கப்பட்டபோது
வெள்ளம் ஏற்படும் போது தண்ணீர் தேங்கும் பகுதிகள் அறியப்பட்டு அதற்கேற்ற அளவில் சாலைகள் அமைக்கப்படாததே இப்பிரச்னைக்கு காரணம் என்கிறார் இடையன்சாவடியைச் சேர்ந்த கிருபாகரன். 
வடசென்னையையும் கவனிக்க வேண்டும்:
     தென்சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படை, ராணுவம், கடலோரக் காவல்படை உள்ளிட்டவை மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் பெரும்பாலான ஊடகங்களும் இப்பகுதிகளில்தான் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் ஏரிகளில் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அடையாறுக்கு நிகராக குசஸ்தலையிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவரை போதுமான மீட்பு பணிகள் வடசென்னை, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் போதுமான ஒருங்கிணைப்பு இல்லை என்கிறார் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர். 
ஏரிகளில் உபரி நீர் திறக்கப்பட்டது:

மணலி புதுநகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

திருவொற்றியூர்,டிச.1:தொடர்மழையால் செங்குன்றம், சோழவரம், பிச்சாட்டூர் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி வழிவதையடுத்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மணலி புதுநகர், சடையங்குப்பம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
    தொடர்மழையால் ஏரிகள் நிரம்பி வருவதையடுத்து ஒவ்வொரு ஏரியிலிருந்தும் ஏரிக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப உபரி நீர் திறந்து விடப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பிச்சாட்டூர் ஏரி திறந்து விடப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் நீர்மட்டும் கொள்ளளவை எட்டியதையடுத்து சுமார் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த உபரி நீர் அனைத்தும் செங்குன்றம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து செங்குன்றம் ஏரியில் சுமார் விநாடிக்கு 6 ஆயிரம்
கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் செங்குன்றம் ஏரி அருகே அமைந்துள்ள சோழவரம் ஏரியின் உபரி நீரால் கொற்றலையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணலி புதுநகர், சடையங்குப்பம், பர்மா நகர் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 
    இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் வசிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் அருகில் உள்ள குழந்தை ஏசு ஆலையம், இடையன்சாவடி தொடக்கப்பள்ளி மற்றும் சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். செங்குன்றம் ஏரி கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர், விச்சூர், ஆண்டார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. 
திருவொற்றியூரில் பேருந்து கவிழ்ந்தது:
   தொடர்மழையால் திருவொற்றியூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கார்கில் நகர், சத்தியமூர்த்திநகர், ராஜாஜி நகர், பெரியார் நகர், அம்பேத்கார் நகர், சிவசக்தி நகர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நகர் பகுதிகளில் வெள்ளநீர் சுமார் இரண்டி உயரத்திற்கு தேங்கியுள்ளது. தேங்கியுள்ள நீர் ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் உரிஞ்சப்பட்டு பங்கிங்காம் கால்வாயில் வெளியேற்றும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் விம்கோ நகரிலிருந்து அஜாக்ஸ் பேருந்து நிலையம் வரை சுமார் மூன்றடி உயரத்திற்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் எண்ணூரிருந்து திருவான்மியூர் செல்லூம்  1சி பேருந்து இச்சாலை வழியே வந்தபோது 
பொன்னியம்மன் கோயில் அருகே வந்தபோது பேருந்தின் இடது புற டயர்கள் அனைத்தும் பள்ளத்தில் சிக்கியது. இதனையடுத்து பேருந்து கவிழத் தொடங்கியது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு கிழே இறங்கி தப்பினர்.
தூண்களால் கூவம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு இல்லை:

மதுரவாயல் உயர்மட்ட பாலத் திட்டத்திற்கு ஒத்துழைக்க தமிழக அரசை வலியுறுத்துவோம்

சென்னைத் துறைமுகத் தலைவர் எம்.ஏ. பாஸ்கராச்சார்

திருவொற்றியூர்,நவ.30:மதுரவாயல்-சென்னைத்துறைமுகம் உயர் மட்ட மேம்பாலத் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட தூண்களால் கூவம் ஆற்றில் வெள்ளத் தடுப்பு ஏதும் ஏற்படாததால் இத்திட்டத்தை மீண்டும் நிறைவேற்ற ஒத்துழைப்பு அளிக்கும் படி மாநில அரசை வலியுறுத்துவோம் என சென்னைத் துறைமுகத் தலைவர் எம்.ஏ.பாஸ்கராச்சார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
    சென்னைத் துறைமுகத் தலைவராக எம்.ஏ.பாஸ்கராச்சாரும், துணைத் தலைவராக் சிரில் ஜார்ஜும் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இந்நிலையில் துறைமுகத்தின் பல்வேறு செயல்பாடுகள், பிரச்னைகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்த செய்தியாளர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  
அப்போது பாஸ்கராச்சார் அளித்த பேட்டி
விபரம்:
    மதுரவாயல்-சென்னைத் துறைமுகம் உயர்மட்ட மேம்பாலத்திட்டத்திற்காக கூவம் ஆற்றில் அமைக்கப்பட்ட தூண்களால் தடுப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இத்திட்டம் தற்போது கிடப்பில் உள்ளது. தற்போது கனமழை பெய்ததால் புறநகர் பகுதிகள் எல்லாம் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோதும் கூவம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படவில்லை. எங்கும் உடைப்பு ஏற்பட்டு நகருக்குள் தண்ணீர் புகுந்துவிடவில்லை. இதன் மூலம் பாலத்திற்காக அமைக்கப்பட்ட தூண்களால் வெள்ளத் தடுப்பு ஏற்படாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தை மீண்டும் நிறைவேற்றுவதற்கு ஒத்துழைக்குமாறு தமிழக அரசுக்கு விரிவான வேண்டுகோள் கடிதம் விரைவில் அனுப்பப்படும். ஏற்கனவே இத்திட்டத்தை நிறைவேற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  
கட்டமைப்பு குறைவே நெரிசலுக்குக் காரணம்:
     துறைமுகத்தின் முக்கிய பிரச்னையான கண்டெய்னர் போக்குவரத்து 
நெரிசல்தான் முக்கிய இடம் வகிக்கிறது. துறைமுகத்தில் உள்ள இரண்டு முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான கண்டெய்னர்களைக் கையாள முடியும். தற்போது ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் கண்டெய்னர்கள் தான் கையாளப்படுகின்றன. இருப்பினும் நெரிசல் தொடர்கிறது. லாரிகள் நிறுத்துவதற்கு போதுமான நிறுத்துமிடங்கள் இல்லாதது, முனையங்களில் கிரேன்கள்  பற்றாக்குறை உள்ளிட்டவைகளே இப்பிரச்சினைக்கு மூல காரணமாக உள்ளது. இது தவிர மேலும் சில காரணங்களும் உள்ளன.
      ரேடியோ அலைகளால் அடையாளம் காணும் சாதனம் (RFID-Radio Frequency Identified Device) மூலம் கண்டெய்னர் லாரிகளை ஆவணப் பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டம் இன்னும் ஒரு மாதத்திற்குள் நடைமுறைக்கு வரும். எனவே இப்பிரச்னையை ஒட்டு மொத்தமாகத் தீர்ப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். 
ஸ்ரீபெரும்புதூர் உலர் துறைமுகம்:
    ஸ்ரீபெரும்புதூரில் உலர் துறைமுகம் அமைக்கத் திட்டமிடப்பட்டு இதற்கென தமிழக அரசிடமிருந்து சுமார் 100 ஏக்கர் நிலத்தை துறைமுகம் வாங்கியது. மதுரவாயல் உயர்மட்டப் பாலத் திட்டம் முடங்கியது உள்ளிட்ட சில காரணங்களால் உலர் துறைமுகத்திட்டத்தில் பங்கேற்க தனியார் நிறுவனங்கள் தயக்கம் காட்டின. எனவே இத்திட்டமும் முடங்கியது. இதனையடுத்து 100 ஏக்கர் நிலத்தையும் தமிழக அரசிடம் மீண்டும் ஒப்படைப்பது என முன்னர் முடிவு செய்திருந்தோம். ஆனால் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவை ஒத்திவைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
ஒளிமயமான எதிர்காலம்:
   நாட்டின் பழமையான துறைமுகமான இத்துறைமுகத்திற்கென பல்வேறு சாதகமான 
அம்சங்கள் உள்ளன. இதனால்தான் இப்பிராந்தியத்தில் தனியார் துறைமுகங்கள் வந்தும்கூட அதிக அளவு சரக்குகளைக் கையாள்வதில் சென்னைத் துறைமுகம் முதலிடம் வகிக்கிறது. எனவே இங்கு நீண்டகாலமாக இருந்துவரும் முக்கிய பிரச்னைகளைத் தீர்க்க தற்போதைய நிர்வாகம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. மேலும் சென்னைத் துறைமுகம் குறித்து அனைத்து வகை ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள், முகவர்கள், தனியார் நிறுவனங்கள் அறிந்து கொள்ளும் வகையில் வரும் ஜனவரி மாதம் சிறப்பு மாநாடு நடத்த உள்ளோம். எனவே சென்னைத் துறைமுகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. 
மீண்டும் நிலக்கரி கையாள திட்டமா?:
    நிலக்கரி கையாள்வதற்கான தடையை நீக்குமாறு  துறைமுகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவுக்கு மார்ச் 31, 2016 வரை கெடுவிதிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முடிவே இறுதியானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி கையாள்வது துறைமுகத்தின் வருவாய்க்காக மட்டுமல்ல, மின்னுற்பத்தியைப் பெருக்குவதற்கான அவசியத் தேவையாகவும் உள்ளது.
பெங்களூருவுக்கு நேரடி சரக்கு ரயில்:
   துறைமுகம்-திருவொற்றியூர் கான்கார் சரக்குப் பெட்டக நிலையம் இடையை  கண்டெய்னர்களை சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லும் திட்டம் கான்கார் நிறுவனம் மூலம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது டிஎல்ஐ என்ற தனியார் நிறுவனம் மூலம் சென்னைத் துறைமுகம்-பெங்களூரு இடையே கண்டெய்னர் சரக்கு ரயிலை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் 2 ஆயிரம் கண்டெய்னர்களை எடுத்துச் செல்ல முடியும் என பாஸ்கராச்சார் தெரிவித்தார். 
    பேட்டியின்போது துறைமுகத் துணைத் தலைவர் சிரில் ஜார்ஜ், துறைமுக டிரஸ்டி செந்தில்குமார், துறை தலைவர்கள் லலிதா கணபதி, மதபாவி, ஹரிகிருஷ்ணன், பிஎஸ்ஏ சரக்குப் பெட்டக முனைய பொது மேலாளர் சிவகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 
திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்

74 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோடியது

திருவொற்றியூர், நவ.29:திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
     திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலில் 1941-ஆம் ஆண்டு கடைசியாகத் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதிய தேர் அமைக்க கடந்த 2013 ஆண்டு
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் இதற்கென ரூ.46 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிய தேர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தேர் அமைக்கும் பணி முழுமையடைந்ததையடுத்து புதிய தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
     காலை 8 மணியளவில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தேரோட்டம் தொடங்கியது. அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் எம். கவிதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்  சிறுனியம் பலராமன் உள்ளிட்டோர் தேர் வடம் பிடித்து இழுத்தனர். 
     தேரடி வழியாகப் புறப்பட்ட தேர் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாடவீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் லதா தலைமையில் கோயில் நிர்வாகம் செய்திருந்தது. 
 
பெட்டிச் செய்தி:

74 ஆண்டுகளுக்குப் ஓடிய தேர் ஓடியது
தேரோட்டம் குறித்து கோயில் தலைமை அர்ச்சகர் மணி கூறியது,
    1941-ம் ஆண்டு கடைசியாக தேர் ஓடியது. பின்னர் அப்போதிருந்த தேர் சேதமடைந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டதாகவும்,  இதனையடுத்து சுதந்திரப் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியதால் புதிய தேர் அமைப்பதில் யாரும் கவனம் செலுத்த வில்லை. பின்னர் நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் சேதமான தேர் புதுப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு 
பழைய தேரின் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய தேரை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. 
மீண்டும் தேரோட்டம் வரும் மாசிப் பெருவிழா ஏழாம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் நடைபெறும். 74 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றார் மணி