பேரழிவு வெள்ளப்பெருக்கு ஏற்பட முக்கிய காரணங்கள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் குறைபாடா?
நீரியல் நிபுணர் விளக்கம்
திருவொற்றியூர், டிச.6:சென்னையில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்திற்கு ஆறுகளின் முகத்துவாரம் தூர்வாரப்படாதது, கால்வாய்கள் சீரமைக்கப்படாததே முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது. மேலும் உபரி நீர் திறந்து விடப்படும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் பொதுமான அளவில் செயல்படவில்லை என நீரியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகரைப் பொருத்தவரை போதுமான நீரியல் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாகவே உள்ளன. ஆனால் இவற்றைப் பராமரிப்பதில்தான் குறைபாடு இருந்து வருகிறது. இம்மாநகரம் சிறிய ஊராக இருந்த 200 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த ஆறுகள்தான் தற்போதும் உள்ளன.
3 ஆறுகள், பக்கிங்காம் மற்றும் 31 சிறிய கால்வாய் கட்டமைப்பு:
தற்போது தென் சென்னையில் அடையாறு, மத்திய சென்னையில் கூவம், வடசென்னையில் குசஸ்தலை ஆறு, இவை மூன்றையும் இணைக்கும் பக்கிங்காம் கால்வாய், இது தவிர நகர்ப்புரமாக மாறிய போது ஓட்டேரி நல்லா, கேப்டன் காட்டன், கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட 31 கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கால்வாய்களின் மொத்த நீளம் சுமார் 1660 கி.மீ. ஆகும். இக்கால்வாய்களில் வழிந்தோடும் தண்ணீர் அனைத்தும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள மூன்று ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் மூலம் கடலில் பாய்கிறது. மேலும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 21 அடி (அதிகபட்சம் 200 அடி) உயரத்தில் சென்னை மாநகரம் அமைந்துள்ளது. இதனைக் கொண்டு தற்போதைய வெள்ள அளவு உயரத்தை
கணக்கிட்டுக் கொள்ளலாம்.
பாதுகாப்பான சென்னை மாநகரம்:
சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்காக பொதுப்பணித் துறை சார்பில் பராமரிக்கப்படும் ஏரிகளான செம்பரம்பாக்கம் (கொள்ளளவு-3645 மில்லியன் கனஅடி), பூண்டி (3,231),
செங்குன்றம் (3,300), சோழவரம் (881) ஆகிய நான்கு ஏரிகளில் மொத்தக் கொள்ளளவு 11,057 மில்லியன் கன அடி ஆகும். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி இந்த நான்கு ஏரிகளிலும் 9,122 மி.கன அடி தண்ணீர் உள்ளன. இந்த ஏரிகள் நிரம்பும் போது ஏற்படும்
திறக்கப்படும் உபரி நீர் அனைத்தும் மேலே குறிப்பிட்ட மூன்று ஆறுகள் வழியாகவே கடலில் கலக்கிறது. எனவே ஒட்டுமொத்தமாக அனைத்து விசயங்களையும் ஆய்வு செய்து பார்த்தால் சென்னையைப் பொருத்தவரை பாதுகாப்பானதாகவும், வெள்ளப்பாதிப்பில் சிக்குவதற்கான காரணிகள் மிகக் குறைவாக உள்ள மாநகரமாகவும் உள்ளது. பிறகு எப்படி பேரழிவு வெள்ளத்தில் சிக்கியது சென்னை மாநகரம்?
பெருமழை, கால்வாய் பராமரிப்பு:
இது குறித்து பொதுப்பணித் துறையில் அணை, ஏரிகள் பாதுகாப்பு இயக்குனராக இருந்து ஓய்வு பெற்ற மதுரையைச் சேர்ந்த நீரியல் பொறியாளர் வி.முத்துவிஜயன் கூறியது,
தொடர்ந்து கனமழை பெய்துவந்த நிலையில் திடீரென கடந்த நவ.30, டிச.1 தேதிகளில் கொட்டிய பேய்மழை தான் முக்கிய காரணம். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் இரு நாள்களில் சராசரியாக 80 செ.மீ மழை பெய்தது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் அபாய கட்டத்திற்கு ஒரே நாளில் உயர்ந்தது. நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அவரசகதியில் உபரி நீர் திறந்துவிடப்பட வேண்டிய
அவசியம் ஏற்பட்டது. ஏனெனில் ஏரியோ, அணையோ அதன் கொள்ளளவை எட்ட 2 அடி உயரம் இருக்கும்போது நீர்வரத்துக்கு ஏற்ப உபரி நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்பது பொதுவான விதியாகும். இல்லையெனில் ஏரி உடைந்துவிடும அபாயம் உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறந்துவிடப்பட்டது என்பதில் விதிமீறல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஏரிகள், அணைகள் எதுவாக இருந்தாலும் இவற்றிலிருந்து திறந்துவிடப்படும் கால்வாய்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும். திறந்து விடப்படும் அதிகபட்ச தண்ணீரின் அளவுக்கு ஏற்பவே கால்வாய்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இவை முறையாகத் தூர்வாரி பராமரிக்கப்பட வேண்டும். இக்கால்வாய்கள் மூலம் வெளியேற்றப்படும் உபரி நீர் அருகில் உள்ள ஆறுகளைச் சென்றடையும் வகையில்தான்
சென்னை ஏரிகள் உள்ளன. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அடையாறுவரை அமைக்கப்பட்டுள்ள தந்தி கால்வாயில்தான் உபரி நீர் செல்கிறது. ஆனால் தாம்பரம், வேளச்சேரி உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு கனமழையால் ஏரிகளின் மட்டம் உடனடியாக உயர்ந்து உபரி நீர் திறக்கப்பட்டதும், இந்த அளவு உபரி நீர் செல்லும் அளவுக்கு தந்தி கால்வாய் போதுமானதாக இல்லை என்பதே முக்கிய காரணம் ஆகும். மேலும் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளுக்கு மேல் பகுதியில் உள்ள ஏரிகள் சில உடைந்து வெளியேறிய வெள்ள நீரும் பல்வேறு வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இன்னொரு முக்கிய காரணம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதா?:
ஆனால் பேரிடர் காலத்தில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை தவிர்க்க வேண்டுமானால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்திருக்க வேண்டும். ஏனெனில் செம்பரம்பாக்கம் ஏரியில் சுமார் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி திறக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க அதிக வாய்ப்பு இல்லை என்றாலும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு ஏற்படப் போகும் தாக்கம் நன்றாகவே தெரியும். கடந்த திங்கள்கிழமையிலிருந்தே உபரி நீர் திறப்பதால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து ஊடகங்கள், ஒலிபெருக்கிகள், எச்சரிக்கை ஒலிப்பான்கள் (Emergency Sirens) மூலம் தொடர்ந்து எச்சரி்த்திருக்க வேண்டும். தயார் நிலையில் மீட்பு படையினரை வைத்திருக்க அரசுக்கு உயர் அதிகாரிகள் தகவல் அனுப்பியிருக்க வேண்டும். இவையெல்லாம் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறக்கப்படும்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாகச் செய்தார்களா? எனத் தெரியவில்லை.
முகத்துவாரங்கள்:
பொதுவாக ஆறுகளின் முகத்துவாரங்களில் தண்ணீர் பரவலாகவே சென்று கடலில் கலக்கும். இப்பகுதியில் ஆற்றுப் போக்கின் வேகமும் குறைவாகவே இருக்கும். இதேபோல்தான் குசஸ்தலை, அடையாறு, கூவம் ஆறுகளின் முகத்துவராங்களும் உள்ளன. இவற்றைத் தூர்வாரி தொடர்ந்து பராமரித்திருந்தால் ஆறுகளில் ஓடும் வெள்ளநீரின் வேகம் அதிகரித்திருக்கும். அதிக அளவிலான வெள்ளப்பெருக்கைச் சமாளித்திருக்க முடியும். இந்த தற்போதைய வெள்ளப்பெருக்கை கணக்கிடும்போது இந்த மூன்று ஆறுகளின் முகத்துவாரங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டதா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளன. இனிமேலாவது இப்பகுதிகளில் படிந்திருக்கும்
மணல்திட்டுக்களை உடனடியாக அகற்ற வேண்டும். கால்வாய்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். தேவையான இடங்களில் வலுவான தடுப்புச் சுவர்கள் கட்டப்பட வேண்டும் என்றார் முத்துவிஜயன்.
முதல்வர் சாட்டையை எடுப்பாரா?:
இவர் கூறும் விசயங்களைப் பார்க்கும்போது தற்போதைய நிலைமைக்கு நிகழ்வில் உள்ள ஆட்சியாளர்களை மட்டும் குறைகூறிவிட முடியாது. காலம் காலமாக பொதுப்பணி. நெடுஞ்சாலை, உள்ளாட்சி உள்ளிட்ட முக்கிய துறைகளின் திட்டப்பணிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு வகையான முறைகேடுகளையும் ஒழித்துக் கட்டினால் மட்டுமே ஏரிகள் பலமாக இருக்கும், முறைான கால்வாய்கள் அமையும், முகத்துவாரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மக்கள் அவதிக்கு உள்ளாவது தவிர்க்கப்படும் என்பதே சென்னைப் பேரிடர் வெள்ளம் அனைவருக்கும் சொல்லும் பாடமாக உள்ளது. மக்கள் வீறு கொண்டு எழும் முன்பு
அரசும், அதிகாரிகளும் விழித்தெழ வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா சாட்டையை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பெட்டிச் செய்தி.....
கடமை, பொறுப்புணர்வு குறைந்து போய்விட்டது...
நீரியல் பொறியாளர் வி.முத்துவிஜயன் மேலும் கூறியது,
நான் 1972-ல் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராகச் சேர்ந்தேன். ஒரு பதினைந்து ஆண்டுகள் முன்புவரை அதிகாரிகள் மிகவும் பொறுப்புணர்வோடும், தங்களை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் தங்களைக் கடிந்து கொள்வதையோ, குறை சொல்லுவதையோ விரும்பமாட்டார்கள். ஆட்சி அதிகாரங்களில் எந்த கட்சியும் இருக்கலாம். ஆனால் அதே அதிகாரிகள்தான் பொறுப்பில் இருப்பார்கள். மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவதன் அவசியம், அவசரம் குறித்தெல்லாம் அதிகாரிகள்தான் ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் ஆட்சியாளர்களைக் குறைகூற முடியாது. தற்போது கீழ்நிலையிலிருந்து தலைமை அதிகாரிகள்வரை நேர்மை, கடமை, பொறுப்புணர்வு குறைந்து கொண்டேதான் வருகிறது. சென்னை மாநகர் பேரிடருக்கும் இதுவே மூல காரணமாக உள்ளது என்றார் முத்துவிஜயன்.
No comments:
Post a Comment