வெள்ளநீர் சூழ்ந்த பெட்டக நிலையங்கள்: துறைமுகங்கள் முடங்கின
திருவொற்றியூர், டிச.3:தொடரும் வெள்ளப்பெருக்கால் சென்னை மற்றும் புறநகரில் அமைந்துள்ள சரக்குப் பெட்டக நிலையங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. மேலும் சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்கள் கடந்த இரு நாள்களாக முற்றிலும் முடங்கியுள்ளன.
சென்னைத் துறைமுகத்தின் வர்த்தகத்துடன் இணைந்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட தனியார் சரக்குப் பெட்டக நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஏற்றுமதிக்காகன சரக்குகள் பெரும்பாலும் இங்குதான் கண்டெய்னர்களில் ஏற்றி சுங்கத்துறை முத்திரையிடப்பட்டு பின்னர் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்படும். மேலும் இறக்குமதியாகும் கண்டெய்னர்களும் இங்கு வந்துதான் எடுத்துச் செல்லமுடியும்.
இந்நிலையில் தற்போதைய வெள்ளப்பெருக்கால் பெரும்பாலான சரக்குப் பெட்டக நிலையங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மேலும் துறைமுகத்திற்கு வரும் முக்கிய சாலையான மணலி விரைவு சாலையில் மார்பளவு வெள்ளநீர் செல்கிறது. இதனால் லாரிகள் இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களாக இச்சாலையில் அனைத்து வகையான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியூர்களிலிருந்து வரும் லாரிகள் முற்றிலுமாகக் குறைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர்.
முடங்கிய துறைமுகங்கள்:
சென்னைத் துறைமுகத்தில் இரண்டு சரக்குப் பெட்ட முனையங்கள் உள்ளன. இவைகளில் செவ்வாய்க்கிழமை முதல் கண்டெய்னர் லாரி போக்குவரத்து
முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும் இரும்புத் தகடு உள்ளிட்ட இதரவகை சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சென்னைத் துறைமுகத்தின் ஒட்டு மொத்த பணிகளும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதேபோல் எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி உள்ளிட்ட துறைமுகங்களிலும் கடந்த இரு நாள்களாக எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலைக்கு வர இன்னும் ஒரு வாரத்திற்கும் மேல் ஆகும் என்பதால் வெளியூர்களைச் சேரந்த லாரிடிரைவர்களில் பெரும்பாலோனோர் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
No comments:
Post a Comment