திருவொற்றியூர்,மணலியில் 12 ஆயிரம் பேருக்கு உணவு, பால் விநியோகம்
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.
திருவொற்றியூர், டிச.5: திருவொற்றியூர், மணலி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 12 ஆயிரம் பேருக்கு உணவு, பால் உள்ளிட்டவைகளை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை வழங்கினார்.
திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சத்தியமூர்த்தி நகர், கார்கில் நகர், சார்லஸ் நகர், ஜோதிநகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள், மணலியை சடையன் குப்பம், விச்சூர், மணலி புதுநகர், ஆண்டார்குப்பம் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு, கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் கடந்த ஐந்து நாள்களுக்கும் மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இப்பகுதியே தீவு போல் காட்சியளித்தது. இந்நிலையில் மழை குறைந்துள்ளதையடுத்து வெள்ளநீர் படிப்படியாகக் குறைந்து வருகிறது. படகுகள் மூலம் சென்ற பகுதிகளில் தற்போது நடந்து செல்லும் அளவிற்கே தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனையடுத்து தற்போது நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் பேருக்கு பால்,
உணவு வகைகளை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், மாவட்டச் செயலாளர் பலராமன், மண்டலக்குழு தலைவர் தனரமேஷ் உள்ளிட்டோர் வீதிவீதியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர். மேலும் தேங்கியுள்ள நீரை மோட்டார் பம்புகள் மூலம் விரைவில் அகற்ற அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
மணலி விரைவு சாலையில் தண்ணீரின் அளவு குறைந்ததையடுத்து
கடந்த ஐந்து நாள்களுக்குப் பிறகு திருவொற்றியூரிலிருந்து மீஞ்சூர் வழித்தடத்தில்
போக்கவரத்து தொடங்கியது.
முகாம்களில் 10 ஆயிரம் பேர்:
இப்பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட முகாம்களில் சுமார் 10 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி சார்பில் மூன்று வேளையும் உணவு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாள்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் வீடு திரும்புவார்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment