திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்
74 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோடியது
திருவொற்றியூர், நவ.29:திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலில் 1941-ஆம் ஆண்டு கடைசியாகத் தேரோட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதிய தேர் அமைக்க கடந்த 2013 ஆண்டு
தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். மேலும் இதற்கென ரூ.46 லட்சம் நிதியும் ஒதுக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக புதிய தேர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தேர் அமைக்கும் பணி முழுமையடைந்ததையடுத்து புதிய தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 8 மணியளவில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தேரோட்டம் தொடங்கியது. அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் எம். கவிதா, இணை ஆணையர் பரஞ்ஜோதி, திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிறுனியம் பலராமன் உள்ளிட்டோர் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரடி வழியாகப் புறப்பட்ட தேர் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தெற்கு, மேற்கு, வடக்கு மாடவீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் லதா தலைமையில் கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
பெட்டிச் செய்தி:
74 ஆண்டுகளுக்குப் ஓடிய தேர் ஓடியது
தேரோட்டம் குறித்து கோயில் தலைமை அர்ச்சகர் மணி கூறியது,
1941-ம் ஆண்டு கடைசியாக தேர் ஓடியது. பின்னர் அப்போதிருந்த தேர் சேதமடைந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டதாகவும், இதனையடுத்து சுதந்திரப் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியதால் புதிய தேர் அமைப்பதில் யாரும் கவனம் செலுத்த வில்லை. பின்னர் நாடு சுதந்திரம் பெற்ற பிறகும் சேதமான தேர் புதுப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு
பழைய தேரின் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய தேரை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
மீண்டும் தேரோட்டம் வரும் மாசிப் பெருவிழா ஏழாம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் நடைபெறும். 74 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றார் மணி
No comments:
Post a Comment