மணலி, எண்ணூர் பகுதியில் கோடிக் கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தப் பணிகள்
மாமூல் பிரச்னையால் அமைதிக்கு பங்கம்: முதல்வரின் கவனத்தை எட்டுமா?
மணலியில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருந்த முல்லை ஆர்.ஞானசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இக்கொலைக்கான பின்னணியில் மணலி, எண்ணூர் பகுதியில் நடைபெற்று வரும் கோடிக்கணக்கான ரூபாய்க்கான ஒப்பந்தப்பணிகள், இதன் ஒப்பந்ததாரர்களிடமிருந்து மாமூல் வசூலித்தல், பணம் மற்றும் வேலை தராத ஒப்பந்ததாரர்கள் மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசயங்கள் போலீஸாரின் கவனத்திற்கு வந்துள்ளது. இது குறி்த்து விரிவான நடவடிக்கைகளுக்கு அரசுக்கு
விசாரணை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்), எண்ணூர் பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம்,எண்ணூர் அனல் மின்நிலையம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட ஏராளமான கனரக நிறுவனங்கள் உள்ளன. இங்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்க்கு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்பந்த வேலைகளை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இதனால் தங்கள் வசதிக்கு ஏற்ப வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்களை அழைத்து வந்து வேலையில் ஈடுபடுத்துகின்றனர்.
உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை:
இதனையடுத்து உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை தர வேண்டும் என வற்புறுத்திய இங்குள்ள அரசியல் பிரமுகர்கள் படிப்படியாக ஒப்பந்ததாரர்களை மிரட்டி
மாமூல் வாங்கும் நிலைக்கு வளர்ந்தனர். மேலும் கட்டுமானப் பொருள்களை பணிகள் நடைபெறும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனில் ஒரு லாரிக்கு இவ்வளவு பணம் தந்தாக வேண்டும். இதற்கென சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாமூல் தராத ஒப்பந்ததாரர்களின் தொழிலாளர்கள் ஆலைக்குள் சென்று வேலை செய்ய முடியாத வகையில் இவர்கள் அச்சுறுத்துகின்றனர். இதனை உள்ளூர் போலீஸாரும் கண்டுகொள்வது இல்லை. எனவே சுமூகமாக பணிகள் நடைபெற வேண்டும் எனில் முக்கிய பிரமுகர்களுக்கு மாமூல் அளித்தே ஆக வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. இதில் ஆள்பலம், பணபலம் உள்ள ஆளும்கட்சி, எதிர்கட்சிகளை அதிகார வர்க்கத்தினர் கூட்டாகவே செயல்படுவதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குடிசை மாற்று வாரிய வீடுகளில் வெளிமாநில தொழிலாளர்கள்:
இப்பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளுக்காக அழைத்துவரப்பட்ட தொழிலாளர்கள் எர்ணாவூரில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளில் தங்கியுள்ளனர். இங்கு வீடுகளை ஒதுக்கீடு பெற்றவர்கள் வாடகைக்கு விட்டுவிட்டு பழைய இடங்களுக்குச் சென்றுவிட்டதாகவும், வாடகை குறைவாக இருப்பதால் வடமாநிலத் தொழிலாளர்கள் இங்கு பெருமளவில் தங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்பகுதியில் நடைபெறும் திருட்டு, கொள்ளை, கொலை, வழிப்பறி சம்பவங்களையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் இத்தொழிலாளர்களை விசாரிக்கும் போது அவர்களிடம்
எவ்வித அடையாள ஆவணங்களும் இல்லை, பிறகு சந்தேகத்தை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது சிரமமாக உள்ளது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
உளவுப் பிரிவினர் மீது புகார்:
சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கும் பல்வேறு உளவுப் பிரிவுகள் இப்பகுதியில் இயங்கி வந்தாலும் ஒப்பந்தப் பணிகளில் உள்ள அச்சுறுத்தல்கள் குறித்தோ, இதனால் ஒருவருக்கொருவர் பலமாக மோதிக்கொள்வது, தாக்குதல் நடத்துவது குறித்தோ முன்னெச்சரிக்கை தகவல்களை அளிப்பதில் சமீப காலமாக தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உளவுபிரிவு போலீஸார் சிலர் உள்ளூர் போலீஸார், அரசியல் முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அரசின் கவனைத்தை எட்டுமா?
சென்னை மாநகரத்தை ஒட்டிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக, நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும் இதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே இங்கு தொழில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் காவல்த் துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். எனவே இப்பிரச்னையில் தொடர்புடைய அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றாலே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வழி ஏற்பட்டுவிடும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.


