Thursday, 21 July 2016

வழிப்பறி கொள்ளையனை தீரமுடன் மடக்கிப் பிடித்த போலீஸ் ஏட்டு

திருவொற்றியூர், ஜூலை 17: திருவொற்றியூரில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி ப
ணம் பறித்த வழிப்பறி கொள்ளையனை திருவொற்றியூர் காவல் நிலைய போலீஸ் ஏட்டு விஜயகுமார் கட்டிப்புரண்டு தீரமுடன் மடக்கிப்பிடித்தார்.
    சனிக்கிழமை பிற்பகல் திருவொற்றியூர் காய்கறி மார்க்கெட்டிற்கு வந்திருந்த பொதுமக்களிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி பணம் பறித்துள்ளார். அப்போது பார்த்தசாரதி என்பவரிடம் ரூ. 900 -தை பறித்த அந்த கொள்ளையன் வியாபாரிகளையும், பொதுமக்களையும் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இது குறித்து அவசரப் போலீஸூக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த திருவொற்றியூர் காவல் நிலைய ஏட்டு விஜயகுமார் அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சித்தபோது அவரையும் கத்தியால் வெட்ட மர்ம நபர் முயன்றுள்ளான். இருப்பினும் விஜயகுமார் தொடர்ந்து போராடி அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தார். 
பட்டப்பகலில் போலீஸும், ரவுடியும் கட்டிப் புரண்டு சண்டைபோட்ட சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் மீண்டும் காவல்த்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
   இதனையடுத்து கூடுதல் போலீஸார் வந்தனர். பின்னர் போலீஸ் ஏட்டு மடக்கிப் பிடித்திருந்த கொள்ளையனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவன் திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்த விசுவநாதன் (35) என்பதும், இவன் மீது ஏற்கனவே ராயபுரம், எண்ணூர் காவல் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து விசுவநாதனைக் கைது செய்த போலீஸார் திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
  கத்தியுடன் போராடிய கொள்ளையனை தீரத்துடன் மடக்கிப் பிடித்த போலீஸ் ஏட்டு விஜயகுமாரை காவல்த்துறை இணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டினர். 

No comments:

Post a Comment