மணலி, எண்ணூர் பகுதியில் வளரும் அரசியல் மாஃபியாக்கள்
அச்சத்தில் தொழில் முனைவோர்: அரசு கவனத்தை எட்டுமா?
மணலியில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பதவியில் இருந்த முல்லை ஆர்.ஞானசேகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் போலீஸாரிடம் சிக்கியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதற்கு காரணம் கொலையாளிகள் கூறும் காரணங்கள் போலீஸார் நம்பும்படியாக இல்லை. இவர்களின் பின்னால் பலம் வாய்ந்த நபர்கள் நிச்சயம் இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் மணலி, எண்ணூர் பகுதியில் தொழிற்சாலைகளில் தொடர்ந்து ஒப்பந்ததாரர்களிடமிருந்து மாமூல் வசூலிக்கும் போக்கு வளர்ந்து வருவதாக பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மணலியில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்), எண்ணூர் பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம், தேசிய அனல் மின் நிலையம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட ஏராளமான கனரக தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இங்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்க்கு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இவற்றை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலும் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் எனக் கூறப்படுகிறது. இதனால் வடமாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களை மட்டுமே அழைத்து வந்து வேலை செய்கின்றனர்.
வளரும் மாஃபியாக்கள்:
இதனையடுத்து உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை தர வேண்டும் என வற்புறுத்திய இங்குள்ள அரசியல் தலைவர்கள் படிப்படியாக ஒப்பந்ததாரர்களை மிரட்டி
மாமூல் வாங்கும் நிலைக்கு உயர்ந்தனர். மேலும் கட்டுமானப் பொருள்களை பணிகள் நடைபெறும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனில் ஒரு லாரிக்கு இவ்வளவு பணம் தந்தாக வேண்டும். இதற்கென சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாமூல் தராத ஒப்பந்ததாரர்களின் தொழிலாளர்கள் ஆலைக்குள் சென்று வேலை செய்ய முடியாத வகையில் இவர்கள் அச்சுறுத்துகின்றனர். இதனை உள்ளூர் போலீஸாரும் கண்டுகொள்வது இல்லை. எனவே சுமூகமாக பணிகள் நடைபெற வேண்டும் எனில் அரசியல் மாஃபியாக்களுக்கு மாமூல் அளித்தே ஆக வேண்டும் என்ற நிலைதான் உள்ளது. இதில் ஆள்பலம், பணபலம் உள்ள ஆளும்கட்சி, எதிர்கட்சிகளை அதிகார வர்க்கத்தினர் கூட்டாகவே செயல்படுவதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கவுன்சிலர் கொலையின் பின்னணி என்ன?
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ள ஞானசேகர் மணலியின் பேரூராட்சி தலைவராக இருமுறையும், நகராட்சி தலைவராக ஒரு முறையும் தற்போது மாமன்ற உறுப்பினர், அ.தி.மு.க திருவொற்றியூர் பகுதி அவைத்தலைவராகவும் இருந்துள்ளார்.
ஞானசேகரின் சொந்த ஊர் ஆமுல்லைவாயல். ஆமுல்லைவாயல், வைக்காடு1, வைக்காடு 2 ஆகிய மூன்று கிராமங்களையும் அப்புறப்படுத்திதான் சுமார் 1,800 ஏக்கர் நிலத்தை சி.பி.சி.எல். நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதில் ஆலைக்கு ஆதரவாக
ஞானசேகர் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதேபோல் சி.பி.சி.எல். ஆலையின்
நடைபெற்று வரும் அனைத்து ஒப்பந்தப் பணிகளும் ஞானசேகருக்கு அத்துப்படிாம். இதனால் அரசியல் மாஃபியாக்கள் ஒப்பந்ததாரர்கள் மிரட்டி மாமூல் வசூலிக்க ஞானசேகரை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏதேனும் ஒரு காரணத்தால் இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் நம்புகின்றனர். இதே போல் எண்ணூரிலும் ஒப்பந்தங்கள் அடிக்கடி மோதல் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில் நடைபெற்று வந்த சில பணிகள் அரசியல் மாஃபியாக்களின் மிரட்டல்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செயலிழந்த உளவுத் துறை:
ஒவ்வொரு பகுதியிலும் சட்டவிரோத செயல்கள் எது நிகழ்ந்தாலும், காவல்த் துறைக்கு
தெரிவிக்காமல் அரசுக்கே நேரடியாகத் தெரிவிக்கும் வகையில் பல்வேறு உளவுப் பிரிவுகள் காவல்த்துறையில் இயங்கி வருகின்றன. ஆனால் மணலி, எண்ணூர் பகுதியில் நடைபெற்று வரும் மாஃபியாக்கள் குறித்தோ, ஆலைகளின் ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து மிரட்டப்படுவது குறித்தோ இதுவரை உளவுத் துறையினர் அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இவர்களின் சிலர் உள்ளூர் போலீஸாருடன் இணைந்து
முறைகேடுகளின் ஈடுபடுவதாகவும், இவர்கள் காவல் நிலைய ஆய்வாளர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் கூறப்படுகிறது. காரணம் ஆய்வாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டாலும் உளவுத் துறையினர் கண்டுகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது.
அரசின் கவனைத்தை எட்டுமா?
சென்னை மாநகரத்தை ஒட்டிய பகுதிகளான இப்பகுதியால் ஏராளமான தொழிற்சாலைகள் வந்தவண்ணம் உள்ளன. எனவே இங்கு தொழில் அமைதி இருந்தால் மட்டுமே தொழில்முனைவோர்கள் அச்சமின்றி வந்து செல்லமுடியும். மாஃபியாக்களின் அச்சுறுத்தல் காரணமாக இப்பகுதியில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும்
புகார் தெரிவிக்கின்றனர். எனவே இப்பகுதியில் நடைபெற்று வரும் சட்டவிரோத அச்சுறுத்தல்கள் குறித்து அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இப்பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க இயலும் என்பதே எதார்த்தநிலையாக உள்ளது.
No comments:
Post a Comment