Thursday, 21 July 2016

மணலி கவுன்சிலர் கொலை வழக்கு: 4-வது நாளாகத் தொடரும் விசாரணை

திருவொற்றியூர்,ஜூலை 12:மணலியைச் சேர்ந்த அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில் இதுவரை 6 பேர் சிக்கியுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நான்கு நாள்கள் ஆகியுள்ள நிலையில் கொலையாளிகளை உறுதி செய்த பின்பும் கொலைக்கான காரணங்களைக் கண்டறிவதில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
   மணலியைச் சேர்ந்த ஞானசேகரன் சென்னை மாநகராட்சி 21-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். கடந்த சனிக்கிழமை மணலியில் உள்ள ஒரு கடையில் அமர்ந்திருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஞானசேகரை வெட்டிக் கொலை செய்தனர். இதனையடுத்து ஜெபகுமார், ராஜேஸ், ராஜீவ் பகதூர், பிரபு ஆகிய நால்வரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பிடித்து வைத்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை குமாரவேல், முத்துராஜா ஆகிய இருவரையும் போலீஸார் விசாரணைக்காக பிடித்து வைத்துள்ளனர். சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 
பெறப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் சிக்கியுள்ள அனைவரும் 
உண்மையான கொலையாளிகள்தான் என்பதை முதற்கட்ட விசாரணையில் போலீஸார் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் கொலைக்கான காரணங்கள், பின்னணியில் 
செயல்பட்டுள்ள நபர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் பிடிபட்டுள்ள நபர்கள் மூலம் படிப்படியாக தெரிய வருவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து 
ஆர்.கே.நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் இருவர், மற்றொரு நபர் ஆகியோருக்கு கொலையில் தொடர்புடையதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவர்களைத் 
தேடி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
       பிடிபட்டவர்களை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாதது ஏன் என இவர்களது உறவினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. யாரும் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றக் காவலுக்கு ஒப்படைக்கப்படுவார்கள். முக்கிய வழக்கு என்பதால் விசாரணையை காவல்த்துறை உயர் அதிகாரிகளே நேரடியாக நடத்தி வருகின்றனர். இதனால் உளவுப் பிரிவு போலீஸார்கூட அறிந்து கொள்ள முடியாதவகையில் இவ்வழக்கில் ரகசியம் காக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
இருப்பினும் புதன்கிழமை விசாரணையில் முக்கிய கட்டத்தை எட்டிவிடுவோம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment