Saturday, 2 July 2016

சமூக விரோதிகளின் பிடியில் திருவொற்றியூர் மாநகராட்சி பூங்கா 

எம்.எல்.ஏ-வுடன் தகராறு செய்த போதை ஆசாமிகள்  

திருவொற்றியூர், ஜூலை 1:சமூக விரோதிகளின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் பொதுமக்களின் புகார்களின் பேரில் திருவொற்றியூர் மாநகராட்சி பூங்காவை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது அங்கு மதுக் குடித்துக் கொண்டிருந்த போதை ஆசாமிகள் அவருடன் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் பூங்காவிற்கு வந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர். 
    சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகே மாநகராட்சி பூங்கா உள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது சுமார் ரூ. 40 லட்சம் செலவில் இப்பூங்காவில் நீச்சல்குளம், பறவைகள் தங்கும் வசதிகள், நீரூற்றுகள், மரங்கள், பூச்செடிகள், நடைபாதைகள், ஓய்விடங்கள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டிருந்தன. மேலும் நீச்சல்குளத்தைப் பராமரிக்க பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இப்பூங்கா முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதனையடுத்து பொதுமக்களின் வருகை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. 
ஒரு கட்டத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக பூங்கா மாறிவிட்டதாக பொதுமக்கள் 
புகார் தெரிவித்தனர். 
எம்.எல்.ஏ.வுடன் தகராறு செய்த போதை ஆசாமிகள்:
    இந்நிலையில் பொதுமக்களின் புகாரையடுத்து திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி.சாமி வெள்ளிக்கிழமை பூங்காவை ஆய்வு செய்தார். அப்போது அங்கு மூன்றுபேர் மது குடித்துக்கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களை அழைத்தபோது வந்திருப்பது எம்.எல்.ஏ. என்பது கூட தெரியாமல் அவரை எதிர்த்து
வாக்குவாதம், தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து மண்டல அலுவலர் பெஞ்சமினைச் சந்தித்த கே.பி.பி.சாமி,  பூங்காவை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். பராமரிப்பதை தனியாரிடம் அளிப்பதை நிறுத்திவிட்டு மாநகராட்சியே பராமரிக்க வேண்டும். மேலும் உடனடியாக நீச்சல்குளத்தைச் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். 
போலீஸார் அதிரடி:
    இது குறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் அங்கு வந்த திருவொற்றியூர் போலீஸார் பூங்காவில் சுற்றித் திரிந்தவர்களை விரட்டிப் பிடித்தனர். அவர்களில் ஜோடியாக அமர்ந்திருந்த சிலரை அழைத்து விசாரித்தபோது அவர்கள்  பள்ளி மாணவ, மாணவிகள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கடும் எச்சரிக்கை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இன்னும் சிலரை துரத்தியடித்தனர். இருப்பினும் சாமி எம்.எல்.ஏ-வுடன் தகராறு செய்த போதை ஆசாமிகள் போலீஸார் வருவதற்குள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இனி,சந்தேகத்திற்குரிய நபர்களை பூங்காவிற்குள் அனுமதிக்கக் கூடாது. மீறினால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்  என பூங்கா காவலாளியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் உத்தரவிட்டார். 
     மண்டல அலுவலகம் அருகிலேயே அமைந்துள்ள பூங்காவைக்கூட மாநகராட்சியால் முறையாகப் பராமரிக்க முடியவில்லையா? என்பதே வெள்ளிக்கிழமை சம்பவங்கள் மூலம் பொதுமக்கள் எழுப்பும் கேள்வியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment