எண்ணூர் அனல் மின் நிலையத்தை மூட எதிர்ப்பு: தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவொற்றியூர், ஜூலை 18: எண்ணூர் அனல் மின் நிலைய மூடுவதற்கான முயற்சிகளைக் கைவிட வேண்டும் எனக்கோரி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் எண்ணூரில் திங்கள்கிழமை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியது,
தமிழகத்தின் முக்கிய அனல் மின் நிலையங்களில் ஒன்றான எண்ணூர் அனல் மின் நிலையம் 1970-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதனை தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம் (TANGEDCO) நிர்வகித்து வருகிறது. இதில் உள்ள ஐந்து அலகுகள் (Units) மூலம் சுமார் 450 மெகாவாட் மின்னுற்பத்தி நடைபெற்று வந்தது. மேலும் இதன் அருகிலேயே 660 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் வகையில் புதிய அனல் மின் நிலையம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.3,960 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இப்புதிய மின்நிலையத்தின் கட்டுமானப் பணிகளை லான்கோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையி்ல் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் உள்ள ஐந்து அலகுகளில் மூன்று அலகுகள் இரு வாரங்களுக்கு முன்பு திடீரென மூடப்பட்டு விட்டன. இதனையடுத்து இங்கு பணியாற்றி வந்த ஊழியர்களை தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு பணியிடமாற்றம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய மின் நிலையம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையாத நிலையில் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் பழைய அலகுகளை மூடுவதற்கான காரணம் என்ன?. தற்போது எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 1,070 நிரந்தர தொழிலாளர்கள், சுமார் 300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். இதனால் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிப்பு உள்ளாவார்கள். எனவே எண்ணூர் அனல் மின் நிலையத்தை மூடும் முடிவைக் கைவிட வேண்டும். ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது எனத் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் 12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் நானூறுக்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment