Thursday, 21 July 2016

மணலி மாநகராட்சி கவுன்சிலர் கொலை வழக்கில் 6 பேர் கைது

திருவொற்றியூர்,ஜூலை 16: மணலி அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் கொலை வழக்கில் ஜெபகுமார் (28), ராஜேஸ் (25), ராஜீவ் பகதூர் (23), பிரபு (22), குமாரவேல் (24), முத்துராஜ் (35) ஆகிய 6 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
   மணலியைச் சேர்ந்த ஞானசேகரன் சென்னை மாநகராட்சி 21-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். கடந்த ஜூலை 9 அன்று மணலியில் உள்ள ஒரு கடையில் அமர்ந்திருந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பின்னர் கொலையாளிகள் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஆனால் கொலை நடைபெற்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொலைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தது. இதனை போலீஸார் உடனடியாகக் கைப்பற்றினர்.  மணலி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பேரூராட்சி, நகராட்சி தலைவராகவும், மாநகராட்சி கவுன்சிலராகவும் இருந்த ஞானசேகர் பொதுமக்கள் நடமாடும் பேருந்து நிலையம் அருகிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
     இதனையடுத்து கொலை வழக்கினைப் பதிவு செய்த மணலி போலீஸார் ஐந்துக்கும் மேற்பட்ட போலீஸ் சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக
தீவிரமாகத் தேடுதல் வேட்டை, விசாரணைகள் நடைபெற்றன. மேலும் கொலைக்கான பின்னணி காரணங்கள் குறித்தும் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இவ்வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல் துணை ஆணையர்கள் ராஜேந்திரன், ஜெயக்குமார் ஆகிய இருவரும் தங்களது நேரடி பார்வையில் விசாரணையை கண்காணித்து வந்தனர். 
    இந்நிலையில் இவ்வழக்கில் ஜெபகுமார் (28), ராஜேஸ் (25), ராஜீவ் பகதூர் (23), பிரபு (22), குமாரவேல் (24), முத்துராஜ் (35) ஆகிய 6 பேரையும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் மணலி, மாத்தூர் பகுதியில் வசிப்பவர்களே. கைது செய்யப்பட்ட அனைவரும் சனிக்கிழமை திருவொற்றியூர் குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) ஓம்பிராகாஷ் முன்பு  ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

No comments:

Post a Comment