Thursday, 21 July 2016

மணலியில் அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் முல்லை ஞானசேகர் வெட்டிக் கொலை 

திருவொற்றியூர்,ஜூலை 9: மணலியில் சென்னை மாநகராட்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முல்லை ஆர்.ஞானசேகர் (58) சனிக்கிழமை மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர் திருவொற்றியூர் பகுதி அவைத் தலைவராகவும் உள்ளார். 
    சென்னை மாநகராட்சி 21-வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருப்பவர் முல்லை ஆர்.ஞானசேகர். இவர் மணலி பேரூராட்சி தலைவராக இருமுறையும், நகர்மன்றத் தலைவராக ஒரு முறையும் ஏற்கனவே பதவி வகித்துள்ளார். மணலி நகரம் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதையடுத்து கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் 21-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் சென்னை மாநகராட்சி வரிவிதிப்பு நிலைக்குழு உறுப்பினராாகவும் உள்ளார். 
    சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் மணலி பேருந்து நிலையம் அருகே உள்ள  தனது நண்பரின் அடகுக் கடையில் ஞானசேகர் அமர்ந்திருந்துள்ளார். இங்குதான் அவர் வழக்கமாக அமர்ந்திருப்பாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஞானசேகரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஞானசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில்  கொலையாளிகள் தப்பிச் சென்றனர்.       
      இதனையடுத்து தகவல் அறிந்த மணலி போலீஸார் ஞானசேகரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அடகுக் கடையில் இருக்கும் கண்காணிப்பு கேமராவைக் கைப்பற்றி தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன ஞானசேகருக்கு யசோதா என்ற மனைவியும், 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 

No comments:

Post a Comment