Saturday, 2 July 2016

அடைத்துக் கிடக்கும் கால்வாய்கள்: போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்படுமா?

திருவொற்றியூர், ஜூலை 1: கனமழை பெய்தால் சென்னை மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள முக்கிய கால்வாய்களில் வெள்ளநீர் வெளியேற முடியாத நிலையில் பெரும்பாலான இடங்களில் அடைத்துக் கிடக்கின்றன.  எனவே இக்கால்வாய்கள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தூர்வார வேண்டும் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
      இந்தியாவில் பரப்பளவில் 5-வது இடத்திலும், மக்கள் தொகையில் 4-வது இடத்திலும் உள்ள சென்னை மாநகரம் உலக அளவில் அதிகம் பேர் வசிக்கும் நகரங்களில் 35-வது (Worldatlas கணக்கெடுப்பின்படி)இடத்தில் உள்ளது. ஏறக்குறைய சுமார் ஒரு கோடி பேர் வசிக்கும் சென்னையின் மக்கள் தொகைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மழைநீர் வடிகால் வசதிகள் உள்ளிட்டவை போதிய அளவில் அமைக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள கால்வாய்களும் முறையாகப் பராமரிக்கப்படுவவில்லை.  ஒவ்வொரு ஆண்டும் இக்கால்வாய்களைத் தூர்வார்வதற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கேப்டன் காட்டன் கால்வாய், கூவம், பக்கிங்காம், அடையாறு உள்ளிட்டவைகள் பிரதான நீர்வழிப்பாதைகளை  பொதுப்பணித் துறையும், சிறிய கால்வாய்களை மாநகராட்சியும் பராமரித்து வருகின்றன.
நான்கு தொகுப்புகளாக பராமரிப்பு:
   சென்னையிலுள்ள முக்கிய வடிகால் வசதி கால்வாய்கள் நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளன. வடக்குத் தொகுப்பில் கொளத்தூர், கேப்டன் காட்டன், ஓட்டேரி நுல்லா ஆகிய கால்வாய்களும், மத்திய தொகுப்பில் மாம்பலம் மற்றும் நந்தனம், கூவம், விருகம்பாக்கம் மற்றும் அரும்பாக்கம் ஆகிய கால்வாய்களும், கிழக்கில் ராயபுரம், வடக்கு பக்கிங்காம், சென்ட்ரல் பக்கிங்காம், தெற்கு கால்வாய் ஆகியனவும், தெற்கு தொகுப்பில் அடையாறு, வேளச்சேரி நீராதாரத் தொகுப்பு உள்ளிட்டவைகள் அடங்கியுள்ளன. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 1860 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்றதில் சுமார் 6,200 மெட்ரிக் டன் அளவுக்கு கழிவு மண் வெளியேற்றப்பட்டது. 
அடைந்து கிடக்கும் கால்வாய்கள்:
      இந்நிலையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றிருந்தாலும் முக்கிய கால்வாய்கள் கோரைப் புற்கள், ஆகாயத் தாமரைகளால் முக்கிய கால்வாய்கள், இணைப்புக் கால்வாய்கள் அடைத்துக் கிடக்கின்றன. வடசென்னையின் முக்கிய கால்வாயான கேப்டன் காட்டன் கால்வாயில் எம்.கே.பி நகர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கு ஏற்பட்டுள்ள திட்டுக்கள் நீரோட்டத்தை தடுத்து நிறுத்துகின்றன. இதேபோல் வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி வழியே செல்லும் இணைப்புக் கால்வாய்கள் கால்வாயின் போக்கே தெரியாத வகையில் புதர் மண்டிக் கிடக்கிறது.  பக்கிங்காம் கால்வாய் சமீபத்தில்தான் தூர்வாரப்பட்டிருந்தாலும் எண்ணூர் முதல் சென்ட்ரல்வரை ஆங்காங்கு ஏராளமான இடங்களில் கால்வாயில் தடுப்புகள் ஏற்பட்டுள்ளன. 
பிளாஸ்டிக் கழிவுகளே முக்கிய காரணம்:
    கால்வாய்களின் பெரும்பாலான இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாக்கெட்டுகள், பைகள் அடைத்துக்கொண்டு மிதக்கின்றன. இணைப்புக் கால்வாய்களில் பொதுமக்களால் தூக்கியெறியப்படும் இவ்வகை பிளாஸ்டிக் கழிவுகள் பிரதான கால்வாய்களுக்கு சிறிது சிறிதாக வந்து சேர்கின்றன. இதற்கிடையில் ஆங்காங்கு வளர்ந்துள்ள கோரைப்புற்கள், ஆகாயத் தாமரைகளால் தடுக்கப்பட்டு படிப்படியாக திட்டுக்களாக மாறுகின்றன. பங்கிங்காம் கால்வாயில் சென்ட்ரல் அருகே மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் சாணங்கள், குப்பை, கூழங்களால் அடைப்புகள் ஏற்படுத்தப்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. மேலும் சில இடங்களில் சிறிய வகை மரங்கள், சீமைக் கருவேல் மரங்கள் அடைத்துள்ளன. திருவொற்றியூர் பகுதியில் 
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் ஆயில் கழிவுகள் கனமழையின் போது பக்கிங்காம் கால்வாயில் புகுந்து கால்வாயில் படிகின்றன. இதனால் ஆற்றின் கொள்ளளவு பாதிக்கப்பட்டு மழைக்காலங்களில் நீரோட்டத்தின் வேகத்தில் தடை ஏற்பட்டு கரையில் உடைப்புகள் ஏற்படுகின்றன. 
போர்க்கால நடவடிக்கை தேவை:
இது குறித்து நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகி என்.துரைராஜ், திருவொற்றியூர் சமூக சேவை சங்க நிர்வாகி கே.சுப்பிரமணி உள்ளிட்டோர் கூறியது,
      கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சென்னை மாநகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதிலிருந்து அதிகாரிகள் பாடம் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியதோ அதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். கால்வாய் அடைப்புகளை நீக்க வேண்டும். ஆண்டு முழுவதும் தொடர் பராமரிப்பில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு கால்வாய்கள் கண்காணிக்கப்படவேண்டும். தற்போது தினக்கூலி அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு தினசரி வேலைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மாநகராட்சி சார்பில் சம்பளம் வழங்கப்படும் இவர்களை பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள கால்வாய்களைக் கண்காணிக்க அறிவுறுத்தலாம். காரணம் சிறிய அளவில் புற்கள் வளரும்போதோ அல்லது பிளாஸ்டிக் கழிவுகள் வந்தாலோ அவற்றை உடனடியாக அகற்றி விட்டால் பிறகு
கோடிக்கணக்கில் செலவு செய்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய
அவசியம் இருக்காது. எனவே பொதுப்பணி, மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு போர்க்கால அடிப்படியில் செயல்பட்டால் 
இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்குப் பருவமழையால் சென்னைக்கு
அச்சுறுத்தல் இருக்காது என்றனர்.
     தற்போது ஆங்காங்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தாலும் ஒட்டுமொத்தமாக மழைநீரை சென்றடைவதற்கான காரணங்களை இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை என்பதே தற்போதைய நிலை. காரணம் இணைப்புக் கால்வாய்கள் மாநகராட்சி வசமும், பிரதான கால்வாய்கள் பொதுப்பணித் துறை வசமும் உள்ளது. எனவே தற்போதைய உடனடித் தேவை கூட்டுப் பணிதான்.  
வருமுன் காப்போம் மக்களுக்கு மட்டுமல்ல... அதிகாரிகளுக்கும்தான்....

No comments:

Post a Comment